ஞான்வாபி: ‘எச்’ராஜா மன்றங்கள்

நீதி மன்றங்களின் உத்தரவுகள் எந்தவித திடுக்கிடலையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், அவை பெயரில் மட்டுமே நீதி மன்றங்கள் எனும் புரிதல் உண்டு. ஊடகங்கள் .. .. இந்தச் சொல்லை உச்சரிக்காமல் இருப்பதே நம்மை தாழ்த்திக் கொள்ளாமல் இருக்கும் வழி. ஆனால், அரசியல் கட்சிகள் ..? இந்தியாவிலிருக்கும் எந்த அரசியல் கட்சியும் இந்த அநீதியான, அராஜகமான, அறுவெறுப்பான, அலட்சியமான இந்த நீதிமன்ற உத்தரவுகள் குறித்து எந்தவித கருத்தையும் சொல்லாமல், முணுமுணுக்கக் கூட இல்லாமல் அசிங்கமான அமைதியைக் காக்கின்றனவே ஏன்?

சில மாதங்களுக்கு முன்னர் வாரநாசியில் ஞான்வாபி எனும் பள்ளிவாசலின் சுற்றுச் சுவரில் இந்துக் கடவுளின் உருவம் தெரிகிறது எனவே, அதை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தில்லியைச் சேர்ந்த சில பெண்கள் வாரநாசி நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுக்கிறார்கள். இந்த வழக்கை நீதி மன்றம் முதல் பார்வையிலேயே தள்லுபடை செய்ய வேண்டும். ஏனென்றால் 1991ல் நிறைவேற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த சட்டம் தெளிவாக, ‘15 ஆகஸ்ட் 1947 அன்று வழிபாட்டுத் தலங்கள் எந்த மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருக்கிறதோ அதை, அதில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தொடர வேண்டும், பாபர் பள்ளிவாசலைத் தவிர’ என்று கூறுகிறது. இதை உச்ச நீதி மன்றமும் பாபரி பள்ளிவாசல் குறித்த தீர்ப்பில் ஏற்று அங்கீகரித்திருக்கிறது. ஆகவே, எடுத்த எடுப்பிலேயே அந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாக மனுதாரருக்கு அபராதம் கூட விதித்திருக்கலாம். ஆனால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது நீதி மன்றம்.

வழக்கின் மையம், சுற்றுச் சுவரில் இந்துக் கடவுளின் உருவம் தெரிவது தான். என்றால் அவ்வாறு உருவம் தெரிகிறதா என்று பார்க்கச் சொல்ல வேண்டும். ஆனால் நீதி மன்றம் சுற்றுச் சுவரை ஆய்வு செய்யுங்கள், அதையும் காணொளியாகப் பதிவு செய்து நீதி மன்றத்தில் அளியுங்கள் என்று ஒரு குழுவை அமைத்து உத்தரவிடுகிறது. அதற்கும் மூன்று நாட்கள் என்று காலவரம்பும் குறிப்பிடுகிறது. மட்டுமல்லாமல் அந்தக் குழுவில் பள்ளிவாசல் சார்பாக யாரும் இல்லை. சுவற்றில் உருவம் தெரிகிறதா என்று பார்ப்பதற்கு எதற்கு மூன்று நாட்கள்?

உடனடியாக, பள்ளிவாசலின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் ஆய்வை தடை செய்யுமாறு கோரி மணு அளிக்கப்படுகிறது. உச்சநீதி மன்றமோ, வழக்கு குறித்த விவரங்கள் எங்களுக்கு தெரியாது, எனவே அவசர வழக்காக கொள்ள முடியாது, ஒரு நாள் கழித்து எடுத்துக் கொள்கிறோம் என்கிறது. ஆய்வுக்கு தடை விதியுங்கள் என்று கோரினால் வழக்கு குறித்த முழு விவரமும் தெரிய வேண்டியது இல்லை. பின்னர் விசாரணையின் போது நீதிபதிகள் தங்கள் ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் தடை கோரும் போது கீழ் நீதி மன்றம் அந்த ஆய்வை செய்வதற்கு சட்டத்தில் இடமிருக்கிறதா? ஆய்வுக் குழு அமைப்பதற்கு கீழ் நீதி மன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா? என்று மட்டுமே பார்க்க வேண்டும். ஆனால் அவசரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறது.

முதல் நாள் ஆய்வுக்கு வரும் போதே சுற்றுச் சுவரை விட்டு விட்டு பள்ளிவாசலுக்கு உள்ளே சென்று ஆய்வு செய்ய முற்படுகிறார்கள். இதற்கு பள்ளிவாசலில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே முதல் நாள் ஆய்வேதும் செய்யாமலேயே திரும்புகிறது ஆய்வுக் குழு. மறுநாள் காவல் துறையின் பெரும்படையுடன் சென்று ஆய்வு செய்கிறார்கள். அதில் ஆய்வுக் குழுவாக நீதி மன்றம் தெரிவு செய்திருந்தவர்களில் ஒருவர் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அவருடைய மகன் கலந்து கொள்கிறார். இப்படி ஆள் மாறி கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து யாரும் – நீதிமன்றம் உட்பட – கண்டு கொள்ளவில்லை. ஆய்வை காணொளியாக பதிவு செய்யச் சொல்லியிருப்பதாலோ என்னவோ ஆய்வாளர்கள் செல்லிடப் பேசியை பயன்படுத்த அனுமதி இல்லை என்று உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது நீதி மன்றம். ஆனால், ஆள மாறி கலந்து கொண்டவர் என் தந்தைக்கு உடல்நலமில்லை என்று கூறி அங்கிருந்த வேறொருவரின் தொலைபேசியிலிருந்து படங்கள் எடுத்து ஆய்வுக்குழு உறுப்பினரான தன் தந்தைக்கு அனுப்புகிறார். அவர் மறுநாள் அந்தப் படங்களை நீதி மன்றத்தில் காட்டி சிவலிங்கம் போல் தெரிகிறது என்கிறார். இதற்கு பள்ளிவாசல் சார்பில் வாதாடும் வழக்குறைஞர் மறுப்பு தெரிவிக்கிறார். அவரின் மறுப்பு புறந்தள்ளப்பட்டு அந்த இடத்தை யாரும் செல்ல முடியாதபடி சீல் வைத்து மூடுமாறும், 20 பேருக்கு மேல் தொழுகை நடத்த அனுமதி இல்லை என்றும் உத்தரவிடுகிறது நீதி மன்றம்.

நீதி மன்றம் கேட்டிருக்க வேண்டிய எதையும் கேட்கவே இல்லை. நாங்கள் நியமிக்காத ஒருவர் எப்படி ஆய்வுக் குழுவில் கலந்து கொண்டார்? என்பதை நீதி மன்றம் கேட்கவே இல்லையே ஏன்? செல்லிடப் பேசியை பயன்படுத்த நாங்கள் அனுமதிக்காத போது ஏன் செல்லிடப் பேசி பயன்படுத்தப்பட்டது? எனும் கேள்வி நீதி மன்றத்தால் எழுப்பப்படவே இல்லையே ஏன்? காணொளி பதிவு செய்து நீதி மன்றத்தில் அளிக்க வேண்டும் என்று தான் உத்தரவு. ஆனால் காணொளிப்பதிவு எதையுமே நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருக்காத போது, தாங்கள் அனுமதிக்காத செல்லிடப் பேசியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டுமே பார்த்து இடத்தை சீல் வைக்குமாறு உத்தரவிட்டது ஏன்? பள்ளிவாசலின் சார்பாக வாதிட்ட வழக்குறைஞர் அது சிவலிங்கம் இல்லை. ‘ஒலு’ எடுக்கப் பயன்படும் தண்ணீர் தொட்டியின் நீரூற்றுக் கல் என்று கூறியதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் அது சிவலிங்கம் தான் என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என எந்த விளக்கமும் நீதி மன்றம் கொடுக்க வில்லையே ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாராவது பதில் கூறுவார்களா?

ஆய்வுக்கு தடை கோரி செய்யப்பட்ட மனுவில் உச்ச நீதிமன்றமும் இதையே கூறியிருக்கிறது. 20 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்பதற்கு மட்டும் விலக்கு அளிக்கிறார்களாம். என்ன கருணையா? அவர்கள் எதிர்பார்த்துச் சென்றது நீதியை, இவர்கள் அளிப்பதோ கருணை எனும் பெயரிலான பிச்சையை. இதற்கு பெயர் நீதி மன்றம் என்று யாரேனும் கூற முடியுமா?

இந்த வழக்குக்கு அப்பாற்பட்ட களத்திலிருந்தும் சில உண்மைகளைப் பார்க்கலாம். இந்து மதம் என்று தவறாக குறிப்பிடப்படும் பார்ப்பனிய மதத்தின் வேதங்கள் எதிலும் கடவுள் உருவங்களோ, கோவில் கட்டி வழிபடும் முறையோ இல்லை. மாறாக, பெண் கடவுளர்களை வணங்குவதையும், கோவில் கட்டி வழிபடும் முறையையும் இழிவாக பேசுகிறது. அப்படி இருக்கும் போது, சுற்றுச் சுவற்றில் பெண் கடவுள் உருவம் தெரிகிறது எனவே, அதை வணங்க அனுமதிக்க வேண்டும் கேட்பதே தவறு. அதை நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதும் தவறு.

1991ல் போடப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த சட்டம் பார்ப்பனிய மதத்துக்கு ஆதரவாகவே இயற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பழமையான எந்தக் கோவிலும் பார்ப்பனிய மதத்துக்கு சொந்தமானதல்ல. அத்தனையும் சமண பௌத்த மத கோவில்களை கைப்பற்றியும் அழித்தும் உருவாக்கப்பட்டவைகளே. இன்னும் தெளிவாகச் சொன்னால் ஆசீவக மதத்தின் கோவில்களே. கோவில்கள் என்ன இங்கு வணங்கப்படும் கடவுளர்களில் எவரும் பார்ப்பனிய மதக் கடவுளர்கள் அல்லர். சிவனும் முருகனும் விட்டுனுவும் துர்க்கையும் மீனாட்சியும் இன்னும் பலரும் ஆசிவகக் கடவுளர்களே. அந்தக் கடவுளர்கள் மீது ஆபாசக் கதைகளை கட்டிப் பரப்பி கணவன் மனைவி பிள்ளை என குடும்பமாக ஆக்கியது மட்டுமே பார்ப்பனியம். இதை இங்குள்ள பண்டைய மதங்கள் குறிப்பாக ஆசீவக மதம் உரிமை கோரினால் இந்த நீதி மன்றங்கள் அப்போது அந்த உரிமை கோரலை எவ்வாறு எடுத்துக் கொள்ளும்? எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி யாரும் உரிமை கோரினால்  பார்ப்பனிய மதத்துக்கு சிக்கல் ஏற்படும் என்பதாலேயே வழிபாட்டுத் தலங்கள் சட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியுமா?

சுற்றுச் சுவரில் உருவம் தெரிகிறது, பக்கச் சுவற்றில் படம் தெரிகிறது என்று பார்ப்பனியக் கோவில்களுக்கு எதிராக யாரேனும் கிளம்பி வந்தால், ஞான்வாபி பள்ளிவாசலுக்கு வழங்கிய இதே முதன்மைத் தனத்தை நீதி மன்றங்கள் வழங்குமா? ஆனால் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக பார்ப்பனியர்கள் கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள். பாபரி பள்ளிவசல் சிக்கல்  1948ல் இரண்டு சாமியார்களால் ஒரு இராமர் பொம்மை திருட்டுத் தனமாக உள்ளே வைக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது. தாஜ்மஹால் எங்கள் பாட்டன் சொத்து என்று ஒரு பா.உ கிளம்பி இருக்கிறார். பாபர் இடித்தார், ஔரங்கசீப் இடித்தார் என்று இங்கே ஆயிரம் கதைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எதற்கும் ஆதாரம் என்று ஒன்று இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஔரங்கசீப் இடித்தார் என்று கூறிக் கொண்டு இப்போது எதையும் உரிமை கொண்டாட முடியுமா? அது மன்னர்கள் காலம், முடியரசு. அவர்கள் எது செய்கிறார்களோ அது தான் அங்கே சட்டம். ஒரு வாதத்துக்காக கோவிலை இடித்தார் என்று கொண்டாலும் அது சட்டப்படி செய்யப்பட்டது என்று தான் பொருள். அன்று சட்டப்படி செய்த ஒன்றை இன்று தவறு என்று சொல்ல முடியுமா? அது மன்னர் காலம், அதன் பிறகு காலனிய காலம் ஒன்று கடந்து தற்போது முதலாளித்துவ ஜனநாயக காலம் நடந்து கொண்டிருக்கிறது. அன்று இடித்தார்கள் எனவே இன்று நாங்கள் உரிமை கோருகிறோம் என்பது எந்த சட்டத்தின் அடிப்படையில் சரி?

பாஜகவின் தேர்தல் வெற்றியானது பாபர் பள்ளி சிக்கலோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. பார்ப்பன மத அரசியல், கற்பனையாக உருவாக்கப்பட்ட இந்து மதம் எனும் ஒன்றைக் கொண்டு அதற்கு உட்பட்டிருப்பவர்களை சாதிய கண்ணோட்டத்தில் பிரித்து தங்களின் மேலாதிக்கத்துக்காக பிற அனைத்து சாதிகளையும் அடிமைகளாக பார்ப்பதில் அடங்கி இருக்கிறது. தாங்கள் அடிமைகளே என்பதை உணர்ந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான் இஸ்லாமியர்களை பொது எதிரிகளாக கட்டமைக்கின்றனர். இந்த அடிப்படையில் அறிவுவயமாக சமூக, அரசியல் தெளிவை பெற்றுவிடக் கூடாது என்பதற்காக உணர்ச்சிவயமாக இஸ்லாம் எனும் மதத்திற்கு எதிராக இந்து மதம் என்று தங்களை நம்பிக் கொண்டிருப்பவர்களை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிறது. தங்களின் தேர்தல் வெற்றிக்காகவும், தங்கள் நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காகவும் பார்ப்பனியம் இதை தெளிவாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தெரிந்திருந்தும் கூட எந்த அரசியல் கட்சிகளும் இந்த அநீதி குறித்து வாய் திறக்க மறுக்கிறதே ஏன்?

ஆக, எந்த அடிப்படையிலும் சரியாக இல்லாத ஒன்றை நீதி மன்றம் என்று சொல்லிக் கொள்ளும் ஒன்று செய்திருக்கிறது என்பது தான் ஞான்வாபி பள்ளியில் நடந்திருப்பது. இதற்கு எதிராக எழும்பியிருக்கும் குரல்கள் அனைத்தும் முஸ்லீம்களின் குரலாக மட்டுமே இருப்பது தான் இதில் உச்சகட்ட வேதனை. இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்புங்கள். அப்போது தான் நீங்கள் அநீயில் முழ்கடிக்கப்படாமல் காத்துக் கொள்ள முடியும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்