சிபிஐ எனும் ஸ்டெர்லைட்

பத்திரிக்கை செய்தி:

மே.19, 2022: மோடி அரசின் நண்பர் அனில் அகர்வாலின் ஏவல்படையாக செயல்பட்ட காவல்துறையினரைக் காப்பாற்றும் சிபிஐ விசாரணையை கண்டிக்கிறோம்!

நிராகரிக்கிறோம்! நீதி வேண்டும்!

உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறு விசாரணை வேண்டும்!

****************************************************

மே 22, 2018 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின் தனது மூன்றாவது இறுதி குற்றப் பத்திரிகையை மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது.

ஸ்டெர்லைட் நிர்வாகம், காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகள், எடப்பாடி அரசு ஆகியோர் இணைந்து நடத்திய இந்தப் பச்சைப் படுகொலையை, “விசாரிக்கிறோம்” என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே நூற்றுக்கணக்கான பொய் வழக்குகளைப் போட்டு சிறையிலடைத்தது அன்றைய தமிழக காவல்துறை. தமிழக காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது என்ற நிலையில்தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

சிபிஐ விசாரணையில் மேற்கண்ட குற்றவாளிகளில் சிலராவது தண்டிக்கப்படுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. கொல்லப்பட்ட தூத்துக்குடி மக்கள்தான் குற்றவாளிகள் என்றும், காவல்துறை, வருவாய்த்துறையினர் நிரபராதிகள் என்றும் சித்தரிக்கிறது இந்தக் குற்றப்பத்திரிகை.

“விக்னேஷ்குமார் முதல் மாரிஸ்பாபு வரையிலான 101 பேர் சட்டவிரோதமாகக் கூடி பயங்கரமான ஆயுதங்களால் போலீசாரையும், ஸ்டெர்லைட் குடியிருப்பையும் தாக்கினார்கள், கொலை மிரட்டல் விடுத்தார்கள், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தார்கள், பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்தார்கள்” என்று 16 குற்றப்பிரிவுகளின் கீழ் மக்கள் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறது சிபிஐ. ஸ்டெர்லைட் நிர்வாகமே தயாரித்துக் கொடுத்ததைப் போன்ற அப்பட்டமான ஒரு சார்பான இந்த குற்றப் பத்திரிகையில், சிபிஐ- யாலேயே கூட சில உண்மைகளை மறைக்கவோ மறுக்கவோ முடியவில்லை.

“ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கம் எல்லா அரசியல் கட்சிகள், வணிகர்கள், மாணவர்கள், மீனவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் ஆதரவு பெற்ற பிரம்மாண்டமான இயக்கமாக இருந்தது. இதை மாநில நிர்வாகம் கணிக்கத் தவறிவிட்டது.

100 வது நாள் போராட்டம் பற்றி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பேரணி தொடங்குவதற்கு வெறும் 4 மணி நேரத்துக்கு முன் 144 தடையுத்தரவு பிறப்பித்து பெரும் குழப்பத்துக்கு வழி வகுத்து விட்டது“ என்றெல்லாம் ஒப்புக் கொள்கின்ற சிபிஐ, “கூட்டத்தினர் காவல்துறையினரை விரட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தள்ளியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு துப்பாக்கி சூட்டைத் தவிர வேறு வழியில்லாத நிலை உருவாகி விட்டதாக” நெஞ்சறிய பொய்க்கதை சொல்கிறது.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு கலகக் கொடி உயர்த்துதல், முறையான அறிவிப்பு, தடியடி, தண்ணீர் பீச்சி அடித்தல், வானத்தில் சுட்டு எச்சரித்தல் உள்ளிட்ட எவ்வித நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பதை நாடே அறியும். ஆனால் இந்தக் கேள்விகள் எதையும் சிபிஐ எழுப்பவில்லை. தொடர்புடைய வருவாய்துறை , காவல்துறை அதிகாரிகள் மீது அதற்கான குற்றப்பிரிவுகளில் கூட வழக்கு பதிவு செய்யவில்லை.

“துணை தாசில்தார் சேகர், தனது அதிகார வரம்பை மீறி துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டுள்ளார்” என வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் சிபிஐ, “இருந்தாலும் அவர் மீது குற்றமில்லை” என்று அவருக்கு சான்றிதழ் தந்திருக்கிறது.

ஸ்னோலின் உள்ளிட்ட 13 போராட்டக்கார்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடம், சூழல் என்ன? எந்த அதிகாரி யாரை, எதற்காக சுட்டார்? ஸ்னைப்பர் வகை துப்பாக்கி ஏன் பயன்படுத்தப்பட்டது? தப்பி ஓடியவர்களை முதுகில் ஏன் சுட்டனர்? அவர்கள் எவ்வளவு தூரத்திலிருந்து சுடப்பட்டனர்? தடயவியல் – மருத்துவக் கூறாய்வு அறிக்கைகள் சொல்வதென்ன? இரண்டு போராட்டக்காரர்களை ஏன் அடித்தே கொன்றனர்? மறுநாள் ( மே.23) ஏன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது? கலெக்டர் அலுவலகம் தாண்டி மற்ற இடங்களில் ஏன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது? சம்பவத்தின்போது இருந்து – கண்ணுற்ற சாட்சிகளான – போராட்டத்தை முன்னின்று நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளை சிபிஐ விசாரிக்காதது ஏன்? மக்களை கைது செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது போல் காவல்துறையினரை கைது செய்து விசாரிக்காதது ஏன்?

ஒரு உயிர் போய் விடும் என்றால் மட்டுமே சட்ட முறைகளைப் பின்பற்றி துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய காவல்துறை “கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, மக்கள் போலீசை விரட்டினர்” என்று கூறி துப்பாக்கி சூட்டை எப்படி நியாயப்படுத்த முடியும்?

இந்தக் கேள்விகள் எதற்கும் சிபிஐ இன் குற்றப்பத்திரிகையில் விடை இல்லை. மேற்கண்ட குற்ற இறுதி அறிக்கையை விட மோசமான, பொறுப்புணர்வற்ற, புலனாய்வே இல்லாத ஒரு குற்றப் பத்திரிக்கையை நாடு இதற்கு முன் கண்டிருக்காது. இந்திய வரலாற்றிலேயே, மோசமான குற்றப் பத்திரிக்கை என இதைச் சொல்லலாம். குழந்தைகள் எழுதுவது போன்று கதை எழுதப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தின் நான்கு சுவர்களுக்குள் நடந்த ஜெயராஜ் – பென்னிக்ஸ், கொலையில் தொடர்புடைய காவல்துறையினர் இன்றுவரை சிறையில் உள்ளனர். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த “ இரண்டாம் ஜாலியன் வாலாபாக் படுகொலை” அறைக்குள் நடக்கவில்லை. உலகமே பார்க்க, பட்டப்பகலில்,தொலைக் காட்சி கேமராக்கள் முன்பு நடந்தது. இரண்டு வழக்குகளையும் சிபிஐ தான் விசாரித்திருக்கிறது. ஸ்டெர்லைட் படுகொலை வழக்கு ஒரு சார்பாக முடிக்கப்பட்டதன் காரணம், அனில் அகர்வால் மோடி அரசுக்கு நெருக்கமானவர் என்பதுதான். அன்று அந்த துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப் பேசிய ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்பதையும் இங்கே நினைவு படுத்துகிறோம்.

தூத்துக்குடி படுகொலை எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டதோ, அதே போல இந்த குற்றப் பத்திரிகையும் திட்டமிட்டே ஸ்டெர்லைட்டுக்கும் அதன் கையாட்களுக்கும் ஆதரவாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.

மாநில – ஒன்றிய அரசுகளையும், மாசு கட்டுப்பாட்டுத் துறையையும், வருவாய்த்துறை, காவல்துறையையும் கைக்குள் போட்டுக் கொண்டு, தூத்துக்குடியை நஞ்சாக்கிய அனில் அகர்வாலின் கைக்குள் சிபிஐ யும் அடக்கம்” என்ற உண்மை இந்த குற்றப்பத்திரிகையிலிருந்து தெரியவருகிறது.

சிபிஐ இன் கடுகளவும் நேர்மையற்ற உண்மைக்குப் புறம்பான இந்தக் குற்றப்பத்திரிகையை நாங்கள் நிராகரிக்கிறோம். நேர்மையான விசாரணை கோருகிறோம். நீதிக்கான எங்களது போராட்டத்தை அனைத்துக் கட்சிகளும் தமிழக மக்களும் ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

முதற்பதிவு : முகநூல்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s