மின்சார தூக்குக் கயிறு

அண்மையில் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தது. இதற்கு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர், ஒன்றிய அரசு மின் கட்டண உயர்வை அறிவிக்கச் சொல்லி எங்களை கட்டாயப்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் சொல்வது உண்மை தான் என்று கடந்த எட்டாம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மின்சாரத் திருத்தச் சட்டம் 2022 வெளிப்படையாக அறிவித்து விட்டது.

தற்போது மின் பகிர்மானம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை தனியாருக்கு மாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்த மின்சாரத் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சட்டம் குறித்து விரிவாக பார்ப்பதற்கு முன்னால் மின்சார உற்பத்தி, பகிர்மானம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வது இன்றியமையாதது.

1947 ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மின்சாரப் பரவல் நாடுமுழுவதும் சீராக இருந்ததில்லை. பெரும்பாலான கிராமங்களுக்கு மின்சாரம் கற்பனையாகவே இருந்தது. அண்மையில் குடியரசுத் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட முர்முவின் கிராமத்துக்கு அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் மின்சாரம் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கடந்த 75 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 95 விழுக்காடு பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து கடைக்கோடி கிராமம் வரை கொண்டுசெல்வதற்கு ஏற்ப துணை மின் நிலையங்களும், மின்மாற்றிகளும், மின் கோபுரங்களும் நாடு முழுவதும் பெரும் பொருட் செலவிலும், மிகக் கடும் உழைப்பினாலும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு இதில் வெகுவாக முன்னேறி இருக்கிறது. மின் உற்பத்தி, பகிர்தல், கட்டமைப்புகளை உருவாக்குதல் என அனைத்தும் அரசிடம் இருந்ததால் இதை சாதிக்க முடிந்திருக்கிறது. இதற்கான கட்டண விகிதங்களும் நிறுவனப் பயன்பாடு, விவசாயப் பயன்பாடு, வீட்டுப் பயன்பாடு என்று பிரித்து விதித்து சீரான நிலமை ஏற்படுத்தப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் 2000மாம் ஆண்டுவரை அரசுக்கு ஆண்டுக்கு 300 கோடி லாபம் ஈட்டிக் கொண்டிருந்த துறை மின்சாரத் துறை.

2003ல் மின்சாரச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு மின் உற்பத்தியில் தனியாரும் பங்கெடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதிகரிக்கும் மின்சாரத் தேவையை காரணம் காட்டி தனியார் மின் உற்பத்தி மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. மின் பற்றாக்குறைக்கு ஏற்ப தனியார்களிடமிருந்து மாநில அரசு மின்சாரம் வாங்கி பயன்படுத்திக் கொள்ளும். ஆனால் அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலைக்கும், தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலைக்கும் இடையே மிகப்பெரும் ஏற்றத்தாழ்வு இருந்தது. தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை பத்து மடங்கு வரை அதிகம் இருந்தது. மட்டுமல்லாமல் 2003 சட்டத் திருத்தத்தின் விதிகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. எடுத்துக்காட்டாக மாநில அரசு தனியாரிடம் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யும் போது ஆண்டுக்கு என்ன அளவு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்படுகிறதோ, அந்த அளவு (தேவை குறையும் போதோ, அல்லது அரசு மின் உற்பத்தி நிலையங்களின் அதிக உற்பத்தியைப் பொறுத்தோ) குறையும் போது, வாங்கும் மின்சாரத்தின் அளவுக்கான விலையை அல்ல ஒப்பந்தத்தின் படி என்ன அளவு போடப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கான விலையை கொடுக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தத்தை விட அதிகம் வாங்கும் போது அதற்கான விலையை கூடுதலாக கொடுக்க வேண்டும். இது போன்ற முறையற்ற விதிகளால் மாநில அரசு பகிர்மான நிறுவங்களின் லாபம் மெல்ல மெல்லக் குறைந்து நட்டம் ஏற்படத் தொடங்கியது. தனியாரிடம் மின்சாரம் வாங்க வேண்டும் என்பதற்காகவே அரசு மின் உற்பத்தி நிலையங்கள் சீரழிக்கப்பட்டது தனி வரலாறு. இதன்படி தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு தற்போது இருக்கும் கடன் தொகை ஒரு லட்சம் கோடிக்கும் அதிகம்.

இதனிடையே கடந்த 2015ல் உதய் என்றொரு மின்சாரத் திட்டம் கொண்டு வரப்படது. அதாவது தனியாரிடம் மின்வாரியங்கள் கடனுக்கு மின்சாரம் வாங்குவதால் தனியார் நிறுவனங்கள் வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாமல் போகின்றன. இது வாராக்கடன் தொகையை அதிகரிக்கிறது. எனவே, மின்வாரியங்களின் கடனை மாநில அரசே செலுத்த வேண்டும் என்பது தான் உதய் திட்டம். அதாவது தனியார் நிறுவனங்களுக்கு இருக்கும் கடன் தொகையை வசூலித்துத் தருவதற்காக ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டம் இது. முதலில் இத்திட்டத்தில் தமிழ்நாடு (ஜெயலலிதா முதலவராக இருக்கும் போது) இணைய மறுத்தது. ஆனால், எடப்பாடி முதல்வராக இருக்கும் போது சத்தமே இல்லாமல் இந்த திட்டத்தில் இணைந்து கொண்டார்கள்.

இதில் முதன்மையாக கவனிக்க வேண்டியது, மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் போது அதை ஈடுகட்டத் தேவையான உற்பத்தியை செய்ய அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு மாறாக, தனியார் நிறுவனங்கள் இதில் ஊக்குவிக்கப்பட்டன. அதேநேரம் அரசு நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டன. இதன் விளைவாகவே, லாபத்தில் இயங்கிய மாநில மின் வாரியங்கள் கடும் நட்டத்தை அடைந்ததன. இப்போது நட்டத்தை காரணம் காட்டி மின் பகிர்மானத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கப் போகிறார்கள். அதற்குப் பெயர் தான் மின்சார சட்டத் திருத்தம் 2022.

இந்த திருத்தத்தின் படி, மாநில மின்வாரியங்கள் மட்டுமே செய்து கொண்டிருக்கும் மின்பகிர்மானத்தை இனி தனியார் நிறுவனங்களும் செய்யும். மக்கள் தங்களுக்கு பிடித்தமான நிறுவனங்கள் மூலம் மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம். மின்சாரத்துக்கு வாரியங்களை மட்டுமே நம்பி இருக்காமல் மக்கள் விருப்பபட்ட நிறுவனங்களை தேர்தெடுத்து இணைந்து கொள்ளலாம், அல்லது மாற்றிக் கொள்ளலாம். இந்த இடத்தில் ஒரு ஐயம் ஏற்படுகிறது. மின்வாரியங்களிடம் மின்சாரத்தைக் கொண்டு செல்ல அனைத்து கட்டமைப்புகளும் இருக்கின்றன. அதாவது கிராமம் கிராமமாக துணை மின் நிலையங்கள், எல்லாப் பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மின் கோபுரங்கள், ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் மின் கம்பங்கள் என மிகப்பெரிய மின்பகிர்மான வலைப்பின்னலை மின் வாரியங்கள் கொண்டிருக்கின்றன. புதிதாக உள்ளே வரும் தனியார் நிறுவனங்கள் (வேறு யார்? அதானி அம்பானி போன்றோர்கள் தான்) எதன் மூலம் மின்சாரத்தை வழங்கும்? அரசு உருவாக்கி வைத்திருக்கும் இதே கட்டமைப்பைத் தான் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும். இதை மறுக்கக் கூடாது. மறுத்தால் யார் மறுக்கிறார்களோ அவர்களுக்கு கோடிக்கணக்கில் தண்டத் தொகை விதிக்கப்படும். கடந்த 75 ஆண்டுகளாக அரசு பெரும் பொருட் செலவிலும், மிகக் கடும் உழைப்பினாலும் ஏற்படுத்தி வைத்திருக்கும் கட்டமைப்பு வசதிகளை நோகாமல் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும். அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதற்கு மறுப்பு தெரிவித்தால் மாநில அரசு கோடிக்கணக்கில் தண்டம் செலுத்த வேண்டும். இது எப்படி இருக்கிறது?

தற்போது மாநில அரசுகள் மானிய விலையில் மக்களுக்கு மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கிறது. இனி அவ்வாறு வழங்க முடியாது. சந்தை விலையிலேயே மின்சாரம் வழங்க வேண்டும். இதற்கு ஒன்றிய அரசு ஒரு விளக்கமும் கொடுத்திருக்கிறது. அது என்னவென்றால், மானியம் வழங்கத் தடையில்லை. ஆனால் அந்த மானியத்தை நேரடியாக பயனர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் இன்று மக்கள் கட்டிக் கொண்டிருக்கும் மின்சாரத்துக்கான கட்டணத்தை விட தோராயமாக ஐந்து மடங்கு அதிகம் கட்ட வேண்டியதிருக்கும். அது படிப்படியாக உயர்ந்து கொண்டே இருக்கும், வங்கியில் போடப்படுவதாக கூறப்படும் மானியம் குறைந்து கொண்டே வந்து இல்லாமல் ஆகிவிடும் எரிவாயு மானியத்தைப் போல.

தற்போது இந்த மானியம் எப்படி வழங்கப்படுகிறது என்றால், வணிக நிறுவனங்கள், உற்பத்தி நிலையங்கள், உள்ளிட்ட பெரு நிறுவனங்களுக்கு உற்பத்தி விலையை விட அதிக விலைக்கு விற்றும், இதில் கிடைக்கும் லாபத்தை விவசயத்துக்கும் வீட்டு பயன்பாட்டுக்கும் மானியமாக வழங்கும். இதை இப்படியே தொடரலாமே ஏன் மானியத்தை வங்கியில் போட வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள்? சிந்தித்துப் பாருங்கள், இந்த நடைமுறை இப்படியே தொடர்ந்தால் யாராவது தனியார் மின் பகிர்மான நிறுவங்களில் சேர்வார்களா? தனியார் நிறுவனங்கள் மானியம் கொடுக்குமா? தனியார் நிறுவனங்கள் மானியம் கொடுக்கவும் கூடாது, அதேநேரம் மக்கள் தனியார் நிறுவனங்களை நாடி வந்து சேரவும் வேண்டும். அதற்கு ஒரே வழி மாநில மின் வாரியங்கள் கொடுக்கும் மானியத்தை தடுத்து நிறுத்தி அவர்களை சந்தை விலைக்கே வழங்க வைக்க வேண்டும். அதற்காகத் தான் இந்த ஏற்பாடு.

தனியார் நிறுவனங்கள் யாருக்கு மின்சாரம் வழங்க முன்வரும்? நகரப் பகுதிகளில், உற்பத்தி நிலையங்கள் இருக்கும் பகுதிகளில், லாபம் வரும் இடங்களில் விரைவாகவும் சிறப்பாகவும் மின்சாரம் வழங்கும். கிராமப் பகுதிகளில், பெரிய அளவில் மின் நுகர்வு இல்லாத பகுதிகள், லாபம் குறைவாக வரும் பகுதிகளில் விரைவாகவும், சீராகவும் மின்சாரம் வழங்குவார்களா? ஆக, லாபம் மிகையாக வரும் இடங்களில் தனியாரும், அவ்வாறில்லாத கிராமப் பகுதிகளில் மின் வாரியமும் மின்சாரம் வழங்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் மின்வாரியங்களால் எங்கிருந்து மானியம் வழங்க முடியும்? எனவே, மின்வாரியங்கள் மேலும் சீரழியும்.

மின் உற்பத்தி பகிர்மானம் என்பது பொதுப் பட்டியலில் (கன்கரண்ட் லிஸ்ட்) இருக்கும் ஒன்று. அதாவது மாநில அரசுக்கு தேவையான முடிவு எடுத்துக் கொள்ளும் அதிகாரம் இருக்கிறது. ஆனால் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் ஒன்றிய வாரியமே அனைத்தையும் தீர்மானிக்கும் இடத்தில் இருக்குமேயன்றி மாநில வாரியங்களுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. பொதுப்பட்டியலில் இருக்கும் மின்சாரம் ஒன்றிய பட்டியலுக்குச் செல்லும் என்பதைத்தான் இந்த சட்டத் திருத்தம் சுற்றி வளைத்துச் சொல்கிறது. இனி மாநில அரசுகள் மின் கட்டணத்திலோ, மானியங்களிலோ, அல்லது வேறு ஏதோ ஒரு வகையிலோ மின் உற்பத்தி, பகிர்மானத்தில் தலையிட முடியாது. வரி விதிப்பை ஒன்றிய அரசு பறித்துக் கொண்டதைப் போல் மின்சாரத்தையும் மாநிலத்திலிருந்து ஒன்றிய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் அடுத்து காவல் துறை சேரவிருக்கிறது. கடைசியில் மாநில உரிமைகள் என்று எதுவுமே மிஞ்சாது.

மாநில அரசுகளின் கையில் லாபமீட்டும் நிறுவனன்மாக இயங்கிக் கொண்டிருந்ததை தனியார்களுக்கு அளித்ததன் மூலம் நட்டமடைய வைத்து இன்று மொத்தமாக தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கப்படுகிறது. இதனால் மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இழப்பு என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஒன்றிய அரசின் நிலை என்ன? ஒன்றிய அரசுக்கும் மின்சார சட்டத் திருத்தத்தால் நேரடியாக எந்தப் பலனும் இல்லை. (மறைமுகமாக இருக்கக் கூடும்)

இந்தியாவில் மின் உற்பத்தி பெரும்பாலும் நிலக்கரி மூலமே செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டுக்காக அதானியைக் கொள்வோம். வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதியை அதானியே செய்கிறார். ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க நாடுகளில் நிலக்கரிச் சுரங்கம், அதைக் கொண்டு வருவதற்கான ரயில் தடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அதானி வைத்திருக்கிறார். இந்தியாவின் துறைமுகங்கள் அதானி கையில் இருக்கின்றன. இந்த அதானி தான் மின் உற்பத்தி, பகிர்மானத்திலும் இறங்குகிறார். ஏற்கனவே நிலக்கரி சுரங்கத்திற்காக அதானிக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. (பன்னாட்டு வங்கிகள் அதானிக்கு கடன் வழங்க மறுத்து விட்டநிலையில் இந்திய வங்கிகளே 60,000 கோடி கடன் வழங்கியுள்ளன. ஆனால், எந்த வங்கி கொடுத்தது எனும் தரவு இல்லை, நிதி உதவி கிடைத்தது என அதானி ஒப்புக் கொள்கிறார்) மின் உற்பத்தி பகிர்மானம் என்ற பெயரிலும் கடன் வழங்கப்படும். அதானி நிறுவனம் இந்த கடன்களைக் கொண்டு ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள தன் நிலக்கரியை தன்னுடைய துறைமுகங்கள் மூலம் இறக்குமதி செய்து தானே மின்சாரம் உற்பத்தி செய்து தானே நேரடியாக பகிர்ந்தளிக்கவும் செய்யும். இவை அத்தனை நிலைகளிலும் அதனதற்கான கட்டணங்களை அதானி நிருவனமே முடிவு செய்து அரசிடமிருந்தும், மக்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ளும். ஆனால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்குமா? கடவுள் எப்போது வருவார் என்பதைப் போன்ற கேள்வி இது.

எந்த அரசு வந்தாலும் இதைத் தான் செய்யும். இதில் பாஜக மிகத் தீவிரம் காட்டுகிறது என்பது தான் வேறுபாடு. மின்சார சட்டம் மட்டுமல்ல இது போன்ற இன்னும் பல சுருக்குக் கயிறுகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்கள் தங்கள் தலைகள் சிக்கிக் கொள்ளாமல் காக்க வேண்டும் என்றால், இந்த அரசு எனும் எந்திரத்துக்கு மாற்று என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s