பொருளாதாரத் தடைகள் உலகை மாற்றுமா?

செய்தி:

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு நம்பி இயங்கி வந்த நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு, Nors Stream என்னும் எரிவாயு பைப்லைன்-ஐ பராமரிப்பு பணிகளுக்காக மொத்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் எரிவாயு இல்லாமல் மக்களும், நிறுவனங்களும் எரிவாயு இல்லாமல் குளிர் காலத்தில் முடங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பா பல முறை விநியோகத்தை அதிகரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாத நிலையில் தற்போது ஐரோப்பா தனது எரிவாயு தேவைக்காக ஜப்பான், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளை மட்டுமே நம்பியிருக்கிறது. இதில் எந்த ஒரு நாட்டில் இருந்து எரிவாயு வராமல் போனால் கட்டாயம் பெரிய நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும். ஐரோப்பாவில் தேவை மூலம் சர்வதேச சந்தையில் எரிவாயு மற்றும் நிலக்கரி தேவை அதிகரித்துள்ளதால் இதன் விலையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதற்கிடையில் சீனா ஒருபக்கம் தைவான் நாட்டைக் கட்டம் கட்டி அடிக்கத் துவங்கியிருக்கும் வேளையில், ரஷ்யா ஐரோப்பா-வை வைச்சுச் செய்து வருகிறது. இதனால் அடுத்த 3 மாதம் சர்வதேச பொருளாதாரம் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் உற்பத்தி இன்ஜின் ஆக விளங்கும் சீனா, அமெரிக்கா ஆதரவில் இருந்து வரும் தைவான் நாட்டைச் சீனா தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. தைவான்-ஐ கைப்பற்ற ரஷ்யா-வை போல் சீனாவும் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்திக் கைப்பற்றவும் சீன தயாராக இருக்கிறது. அப்படிச் சீனா தைவான் நாட்டைப் போர் மூலம் கைப்பற்றினால் ரஷ்யா மீது வல்லரசு நாடுகள் விதித்த தடையைத் தான் சீனா மீது விதிக்கும். சீனா மீது உலக நாடுகள் தடை விதித்தால் கட்டாயம் உலக நாடுகள் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும். இந்தியப் பாதிப்பு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஆப்பிரிக்கா என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்து நாடுகளும் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும்.

குட்ரிட்டன்ஸ் செய்தி

செய்தியின் பின்னே:

உலகின் எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டை ஆக்கிரமிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத மனித இனத்துக்கு எதிரான செயல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அமெரிக்கா செய்யும் ஆக்கிரமிப்புகளை ஜனநாயகத்தை மீட்பதற்கான போர் என்றும் ரஷ்யா சீன செய்தால் அது ஆக்கிரமிப்பு என்றும் வகைப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

எத்தனை முறை லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ளே புகுந்து குழப்பம் ஏற்படுத்தி இருக்கிறது அமெரிக்கா. ஈரான் ஈராக் எனும் இரண்டு நாடுகளை ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறது அமெரிக்கா. லிபியாவை சீரழித்திருக்கிறது. இன்னும் எத்தனை எத்தனை நாடுகள். உலக பொருளாதார வர்த்தக மன்றங்களோ, ஐநா அவையோ, கூட்டமைப்பு நாடுகளோ ஒருமுறையேனும் அமெரிக்காவுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்திருக்கின்றனவா? இல்லையே.

உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்பது தான் இந்த செய்தியின் சாராம்சம். ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகள் ஐரோப்பாவை கடுமையாக பாதித்டிருக்கிறது. இனி சீனா மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் அது இன்னும் உலகப் பொருளாதாரத்தை சீரழிக்கும். உலகை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைப்பதற்கு அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதம் இன்று உலக மக்களை அச்சுறுத்தத் தொடங்கி இருக்கிறது. ஈரான் ஈராக் தொடங்கி வெனிசூலா, ரஷ்யா வரை பொருளாதாரத் தடைகளை விதிக்கும் போது அட்டியின்றி அதை ஆதரித்த நாடுகள் இன்று ஏற்படப் போகும் பொருளாதார பாதிப்புகளை சீர்படுத்த அமெரிக்காவை நோக்கி விரல் நீட்டுமா?

எந்த நாடும் தங்களின் பொருளாதார சீர்படுத்த வேண்டும் என்றால் மறைமுக வரிகளை கூடுதலாக்கும் உத்திகளைத் தான் கடைப்பிடிக்கின்றன. இது உழைக்கும் மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இன்று ஐரோப்பிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும், நாளை உலக மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகளுக்கு ரஷ்யா, சீனா மட்டும் காரணமில்லை. அமெரிக்காவே முதன்மையான காரணம் என்று மக்கள் தங்கள் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டிய சூழல் அமைந்திருக்கிறது.

அதாகப்பட்டது, “ஓடமும் ஒரு நாள் வண்டியில ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்துல ஏறும்லே” அம்புட்டுதேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்