
கடந்த 15.9.2022 வியாழனன்று சங்கரன் கோவில் அருகே சிறுவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த தீண்டாமைக் குற்றம் நிகழ்ந்தது. தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தியவர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். மட்டுமல்லாது ஆறு மாதத்துக்கு அவர்கள் ஊருக்குள் வரக் கூடாது எனும் சிறப்புச் சட்டத்தையும் பயன்படுத்தி இருப்பது வரவேற்கத் தக்கது. இந்தப் பிரிவைப் பயன்படுத்துவது இந்தியாவிலேயே இது தான் முதன்முறையாக இருக்கக் கூடும் என எண்ணுகிறேன்.
சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் ஆ.ராசா வேதங்களில் சூத்திரர்கள் குறித்து கூறப்பட்டிருப்பதை விரித்துரைத்தார். உடனேயே அவருக்கு எதிராக இந்துக்களை இழிவுபடுத்தி விட்டதாக பொங்கிய பாஜக உள்ளிட்ட பயங்கரவாதிகள் கூப்பாடு, போராட்டம், கடையடைப்பு என்று இறங்கினார்கள். கேள்வி கேட்டோரின் கடைகளை தங்களின் வழக்கப்படி சூறையாடினார்கள்.
மேற்கண்ட இந்த இரண்டு நிகழ்வுகளில் இந்துக்கள் எனப்படுவோர் எதில் இழிவுபடுத்தப்பட்டார்கள்? கடந்த சில நூற்றாண்டுகளாக இந்துக்கள் என்று கருதப்படுவோரையே தாழ்த்தப்பட்டவர்களாக்கி பொதுவெளிகளில் புழங்க விடாமல் தடுத்து, சொத்து சேர்க்கும் உரிமையில்லை என்று முடக்கி, கல்வி கற்கும் உரிமையில்லை என்று வேரறுத்து, வழிபடக்கூட உரிமையில்லை என்று வாசலில் நிறுத்தி இழிவுபடுத்தி; அதை விடுதலை அடைந்து விட்டோம் என்று மார் தட்டி எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து அதை செய்து கொண்டிருப்பது இழிவு படுத்துவதா அல்லது வேதத்தில் இவ்வாறெல்லாம் உங்களை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று எடுத்துக் கூறுவது இழிவு படுத்துவதா?
மனு சாத்திரத்தில் இருப்பதை எடுத்துச் சொன்னது இந்துக்களை இழிவுபடுத்தி விட்டது என்று கூப்பாடு போட்டவர்கள், தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக கூப்பாடு போடவேண்டாம் குறைந்தளவு முனங்கக் கூட இல்லையே ஏன்? இதை இந்துக்கள் கேட்க மாட்டார்களா?
ஒரு சுவரொட்டி ஒட்டியதற்குக் கூட ஒன்பது இடத்தில் வழக்கு தொடுக்கும் இந்த பயங்கரவாதிகள், ஆ.ராசா இழிவுபடுத்தி விட்டார் என்று ஒரு இடத்தில் கூட வழக்கு தொடுக்கவில்லையே ஏன்? நீதிபதிகள் அணி வைத்திருக்கக் கூடிய இந்த பயங்கரவாதிகள் வழக்கு தொடுக்க அஞ்சுவதன் பொருள் என்ன? இதை இந்துக்கள் கேட்க மாட்டார்களா?
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ஒருவர், மனுநீதியில் தாசி என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது. தாசி என்பதற்கு அடிமை என்று தான் பொருளேயன்றி விலைமகள் என்று பொருளல்ல என்கிறார். யார் அடிமை? அடிமைகள் மீது ஆண்டைகளுக்கு இருந்த உரிமைகள் என்ன? அடிமைகளை பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளும் உரிமை ஆண்டைகளுக்கு இருந்ததா? இல்லையா? சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கேரளாவில் நம்பூதிரிகளுடன் தான் முதல் இரவை பகிர்ந்து கொள்ள வேண்டும் அதன் பிறகே கணவன் என்று இருந்ததா? இல்லையா? இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன படிநிலை கொடுக்கப்பட்டது? பார்ப்பனன் என்றா? இன்று வசைச் சொல்லாக தெரியாமல் பயன்படுத்தப்படும் சண்டாளன் எனும் சொல்லின் பொருள் என்ன என்று அந்த ஏகாம்பரத்துக்கு தெரியுமா?
மறுபக்கம், கல்வி தொடங்கி பொதுத்துறை நிறுவனங்களை விற்பது ஊடாக மக்கள் வளங்களை சூறையாடும் போக்குக்கு எதிராக போராடாமல், போராட்டத்துக்கு அணி திரட்டாமல் செத்துப்போன மனுநீதிக்கு எதிராக கம்பு சுற்றுவது ஏன்? என்றொரு கேள்வி எழுப்பப்படுகிறது. மனு நீதி செத்துப் போய்விடவில்லை என்பதற்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கும், அதற்கான தீர்ப்புமே சான்று கூறும். அரசியல் சாசனத்தின் வடிவில் மனு நீதிக்கு எதிராக செய்யப்பட்ட சிற்சில சீர்திருத்தங்களைக் கூட செல்லாக் காசாக்கிவிட வேண்டும் என்று அந்த பயங்கரவாதிகள் முயன்று கொண்டிருக்கும் வேளை இது. இந்த சூழலில் பயங்கரவாதிகளுக்கு எதிராக, மனுநீதிக்கு எதிராக, இந்து என்று சொல்லப்படும் ஒன்றுக்கு எதிராக மக்களிடம் அம்பலப்படுத்த கிடைத்த வாய்ப்பை கைக் கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் அரசியல் நேர்மையாக இருக்கும்?
இந்து எனும் கட்டமைப்பைப் பயன்படுத்தியே அந்த பயங்கரவாதிகள் தேர்தல் வெற்றி தொடங்கி அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சனாதன பெருமை பேச அவர்கள் தயங்குவதே இல்லை. பிள்ளையார் தான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி என்று கூறுவதற்குக் கூட அவர்கள் வெட்கப்படுவதில்லை. மனுநீதியில் உள்ளதைச் சொன்னால் இந்துக்களை இழிவுபடுத்துகிறான் என்கிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்றால் இந்துக்களின் உரிமையில் தலையிடாதே என்கிறார்கள். எதிர்த்துக் கேள்வி கேட்டால் இந்து விரோதி என்கிறார்கள். இதன் தாக்கம் எதுவரை நீண்டிருக்கிறது என்றால், பாஜக அல்லாத பிற கட்சிகள் கூட தாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என மெய்ப்பித்துக் கொண்டே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவே, இந்து எனும் கட்டமைப்பை உடைக்க வேண்டிய தேவை இன்றைக்கு இன்றியமையாததாக ஆகி இருக்கிறது.
இந்து என்பது யார்? அரசியல் சாசனப்படி யார் கிருஸ்தவன் இல்லையோ, யார் யூதன் இல்லையோ, யார் முஸ்லீம் இல்லையோ, யார் பார்சி இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்களே என்று இருக்கிறது. இது யாருடைய நிலைப்பாடு? சாவர்க்கரின் நிலைப்பாடு. அவர்தான் இந்து என்பவர் யார் என்று வரையறுக்கிறார் அந்த வரையறுப்பைத் தான் இந்திய அரசியல் சாசனமும் கொண்டிருக்கிறது. அவர் தான் மதம் என்பதை நிலம் சார்ந்ததாக வரையறை செய்கிறார். மதம் வணக்க வழிபாடு சார்ந்தது இல்லை என்கிறார். அதன்படி சமணம் பௌத்தம் உட்பட அனைத்தும் இந்தியப் பகுதியில் தோன்றிய மதங்கள். இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்த யூதம் கிருஸ்தவம், இஸ்லாமியம், பார்சியம் போன்றவை புற மதங்கள். எனவே, அவை தவிர ஏனைய அனைத்து மதங்களையும் பின்பற்றுகிறவர்கள் இந்துக்கள் என்று சாவர்க்கர் எழுதி வைத்ததைத் தான் அரசியல் சாசனத்தில் வைத்திருக்கிறார்கள். இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
மறுபக்கம், யார் இந்து என்பதை வரையறை செய்யாமல் பொதுவாக வைத்திருப்பதால் தான் பார்ப்பனர்கள் தங்களுக்கான நலனை எல்லாம் இந்துக்கள் நலன் என உருட்ட முடிகிறது. எல்லாப் பிரிவும் இந்து மதத்துக்குள் அடக்கம். எல்லா வழிபாட்டு முறையும் இந்து மதத்துக்கு உண்டு என பூசி மொழுக முடிவதன் மூலம் தான் சாதியப் படிநிலையை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாகள். பார்ப்பன ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும் என்றால் இந்து எனும் கட்டமைப்பை உடைக்க வேண்டியது முன்தேவையாக இருக்கிறது. இந்து எனும் மதம் எப்படி உருவானது என்று நாம் சொல்லத் தேவையில்லை. ஆவாள்களே விரிவாக எழுதி வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து தான் தொடங்க வேண்டும்.
இந்தியாவைப் பொருத்தவரை அடையாள அரசியல் சிக்கல்கள் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கின்றன. வர்க்க ஒழிப்பா? சாதி ஒழிப்பா? எது முதன்மையானது எனும் கேள்வியே தவிர்க்கப்பட வேண்டும். இரண்டுக்கான போராட்டங்களும் அக்கம் பக்கமாக நடக்க வேண்டும். உலகெங்கும் அடையாள அரசியல் கம்யூனிசத்துக்கு எதிராக இருப்பதைப் போல் இந்தியாவிலும் அடையாள அரசியல் கம்யூனிசத்துக்கு எதிராக இருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் சாதியப் படிநிலை இந்தியாவில் மட்டுமே ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஆளும் வர்க்கங்கள் சாதியப் படிநிலையை பாதுகாக்க விரும்புகின்றன. ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டமும், சாதியப் படிநிலைக்கு எதிரான போராட்டமும் ஒன்றுகொன்று எதிராய் இருப்பதை விரும்புகின்றன. இதற்கு எதிராக இரண்டையும் ஒன்றிணைத்து போராட வேண்டும். அடையாள அரசியல் கம்யூனிசத்துக்குள் மட்டுமே கரையும், வேறெங்கும் கரையாது.
எனவே, அரசியல் சாசனத்தில் இருக்கும் இந்து என்பதற்கான அயோக்கியத்தனமாக வரையறையை நீக்க வேண்டும் என போராடுவதும், மக்களிடம் இந்து மதம் என்று கூறப்படுவதன் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவதும் தவிர்க்கவே முடியாத தேவையாக இருக்கின்றன. இதனை ஆ.ராசா போன்றோரை ஆதரிப்பதிலிருந்து தொடங்குவதில் தவறொன்றுமில்லை.
செங்கொடி தளத்தின் ஆயிரமாவது கட்டுரை இது