தீபாவளியை என்ன செய்வது?

இன்று தீபாவளித் திருநாளாம், வழக்கமான உற்சாகம் இல்லாமலும், வெடிச்சத்தம் குறைவாகவும் இருக்கிறது. இதற்கு சமூகம், பொருளாதரம் உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம். போகட்டும். தீபாவளி கொண்டடலாமா? கூடாதா?

தமிழ்நாட்டில் பெரியாரியவாதிகள் தொடங்கி இடதுசாரிகள் வரை தீபாவளி கொண்டாடுவதில்லை. காரணம் அது பொங்கலைப்  போலன்றி இந்து மதத்தின் திருநாளாக இருப்பதால் தான். இந்து மதத்தின் திருநாட்கள் கொண்டாட்டத்துக்கு உரியவைகள் அல்ல. ஏனென்றால் இந்து மதம் என்பதே பார்ப்பன மேலாதிக்கத்தின் திணிப்பு. ஆகவே, அவை  கொண்டாட்டத்திற்கு உரியவையல்ல. இதையும் மீறி தீபாவளியின் மீது சொல்லப்படும் கதைகள் வன்மத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

அதேநேரம், கிருஷ்ணன், பூமாதேவி, நரகசுரன் என சுற்றப்படும் கதைகள் எல்லாம் புராணங்கள் தானே தவிர வரலாறல்ல. இந்த அடிப்படையில் இந்து எனப்படும் மதத்தின் அத்தனை கொண்டாட்டங்களும் அடிபட்டுப் போகும். ஆனால், மதங்களையும் புராணங்களையும் ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் தீபாவளியை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதால் அதன் வரலாறு குறித்து ஆராய வேண்டியதிருக்கிறது. ஏனென்றால் மக்கள் தங்களுக்கு எதிரான, வெற்று புனைகதைகளை நீண்ட காலத்துக்கு ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இந்து எனப்படும் மதத்துக்கு வெளியே பௌத்தம், சமணம் உள்ளிட்ட மதங்களிலும், இந்தியா மட்டுமல்லாது இலங்கை, பர்மா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொண்டாடப்ப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தீபாவளி இங்கு பெருவிழாவாக இருந்து வந்திருக்கிறது. இது நாயக்கர்கள் காலம். நாயக்கர்கள் பார்ப்பனியப் பண்பாட்டையும், பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் தமிழ்நாட்டில் திணிப்பதில் பெரும் பங்காற்றியவர்கள். சாதியக் கொடுங்கோன்மையும், தீண்டாமையுமாய் பார்ப்பனியத்தை எதிர்த்தவர்கள் முறியடிக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்ட காலம். இந்தக் காலகட்டத்தில் பெருங்கொண்டாட்டமாக கொண்டாடப்பட்ட திருநாள் என்பதால் உறுதியாக இது உழைக்கும் மக்களுக்கு எதிரான கொண்டாடமே.

அதேநேரம் பார்ப்பனர்களின் வெற்றியே புதிதாக ஒன்றை கொண்டு வருவதில் இல்லை, ஏற்கனவே மக்களிடம் வழக்கத்தில் இருக்கும் ஒன்றை மறு உருவாக்கம் செய்வதிலேயே அடங்கி இருக்கிறது. இல்லையென்றால் தீபாவளி மட்டுமல்ல, எதுவும் இவ்வளவு நீண்ட காலம் நீடித்து இருந்துவர முடியாது. எனவே, தீபாவளியும் மக்களிடம் வழக்கத்தில் இருந்த ஆனால் பெருங்கொண்டாட்டமாக இல்லாதிருந்த ஒரு கொண்டாட்டம் எனக் கொள்ளலாம்.

பூலாங்குறிச்சி கல்வெட்டு

தமிழ்நாட்டில் களப்பிரர் காலம் குறித்து பல்வேறு முரண்பாடான கருத்தாக்கங்கள் நிலவுகின்றன. களப்பிரர் காலம் இருண்ட காலம் என்றும் பொற்காலம் என்றும் முரண்பட்ட கருத்துகள் இருக்கின்றன. களப்பிரர்கள் குறித்து ஐயமற அறிந்துகொள்ள சான்றுகள் அதிகம் கிடைக்கவில்லை. ஆனால் பார்ப்பனர்களுக்கு நிலமானியம் அளித்ததில், தெளிவாகச் சொன்னால் பிரம்மதேயங்களைத் தொடங்கி வைத்தவர்கள், பார்ப்பன மேலாதிக்கத்தை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர்கள் களப்பிரர்களே என்பதற்கு யாப்பருங்கலாலக் காரிகை, ஆச்சாரக் கோவை போன்ற நூல்களும், பூலாங்குறிச்சி கல்வெட்டும் சான்றுகளாக இருக்கின்றன. களப்பிரர்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர் மயிலை சீனி வேங்கடசாமி கருத்துகளும் இவ்வாறே இருக்கின்றன. இந்த அடிப்படையில் பார்ப்பன மேலாதிக்கத்தை நிருவுவதற்காக மக்கள் மீது பல கொடூரங்களை கட்டவிழ்த்து விட்டு கொலைகளைச் செய்தவன் பரசுராமன் என்பவன். இவன் இறந்த நாளை கொண்டாடும் மரபு தான் தீபாவளியாக தமிழர்களிடம் கொண்டாட்டமாக இருந்தது. இதைத்தான் பின்னர் வந்த நாயக்கர் கால பார்ப்பனர்கள் நரகாசுரன் கதையை உருவாக்கி தீபாவளியை பெருங் கொண்டாட்டமாக மாற்றினார்கள் என்றொரு கதையும் இங்கு இருக்கிறது. நரகாசுரன் கதை போலவே பரசுராமன் கதைக்கும் சான்று எதுவும் இல்லை.

சுற்றுச் சூழல் மாசுபாடு, வெடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் போன்றவைகளெல்லாம் தீபாவளியைப் பொருத்தவரை முதனமையானவைகளே. என்றாலும் அவைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், எத்தனை கோடி மக்கள் இதைக் கொண்டாடுகிறார்கள், அவர்களின் நம்பிக்கையை குலைக்கலாமா என்று கவலைப்பட முடியுமா? இது அப்பட்டமான அப்பட்டமான கருத்துமுதல் வாதம். இன்றைய முதலாளித்துவ நுகர்வு வெறி கலாச்சாரத்தில் மதக் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல, வார இறுதிக் கொண்டட்டங்கள் கூட முதலாளித்துவத்தின் வெறிநாய்களாகத் தான் பயன்படுகின்றன. இதில் தீபாவளிக்கென்று எந்த தனித்துவமும் கிடையாது. என்றாலும் இந்தியக் கொண்டாட்டங்கள் குறிப்பாக தீபாவளி முதலாளித்துவத்தின் வேட்டை நாயாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பார்ப்பனியத்தின் வேட்டை நாயாகவும் இருக்கிறது என்பதை உணராமல் இருக்க முடியாது.

இஸ்லாமிய மதத்தின் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் போன்றோ, கிருஸ்தவ மதத்தின் கிருஸ்துமஸ் போன்றோ தீபாவளியை கருத முடியாது (அவைகளும் மதக் குப்பைகளே என்ற போதிலும்). ஏனென்றால் அரேபிய மேலை நாட்டு வரலாறுகளைப் போல இந்தியாவின் வரலாறு தெளிவாக இல்லை. இந்திய வரலாறு மாற்றியும் திரித்தும் புனைவுகளாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மட்டுமல்லாது இந்திய வரலாற்றை எழுதியவர்கள் இந்தியர்களும் அல்லர். எனவே, இந்தியக் கொண்டாட்டங்களை குறிப்பாக இந்து மதம் என்று சொல்லப்படுவதின் கொண்டாட்டங்கள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து அதன் பின்னுள்ள வரலாறுகளை வெளிப்படையாக கொண்டு வர வேண்டும். அதுவரை தீபாவளி போன்ற கொண்டாட்டங்களை விலக்கி வைப்பதும், இவைகளை மக்களுக்கு புரிய வைப்பதுமே மக்களை நேசிப்பவர்களின் வழியாக இருக்குமேயன்றி, மக்களுக்கு வால் பிடித்துக் கொண்டு பின் தொடர்வதாக ஒருபோதும் இருக்க முடியாது.

15 thoughts on “தீபாவளியை என்ன செய்வது?

 1. அரேபிய பண்டிக்கைக்கான வரலாறுகள் தெளிவாக இருப்பதாக சொல்லி விட்டு அவைகள் குப்பைகள் என்றும் சொல்கிறீர்கள்
  ஏன் இந்த முரண்பாடு?

 2. நண்பரே,
  முகம்மது என்று ஒருவர் இருந்தார் என்பதிலோ,
  அவர் ஒரு மாதம் பகலில் பட்டினி கிடந்து மாதம் முடிந்ததும் கொண்டாடுங்கள் என்று சொன்னதிலோ,
  இஸ்மாயில் நினைவாக ஆடறுத்துக் கொண்டாடுங்கள் என்று சொன்னதிலோ,
  எந்தக் குழப்பமும் இல்லை தெளிவாகத்தான் இருக்கின்றன. ஆனால் தெளிவாக இருக்கிறது என்பதனால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லையே. ஒரு நம்பிக்கையை முன் வைத்து அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்வது ஏற்புடையது இல்லையே. ஒருவர் வாழ்ந்தார் என்பதும் அவர் இன்னின்ன சொன்னர் என்பது வரலாறு. அவர் சொன்னதில் அறிவியல் அடிப்படையில் பொருத்தமாக இல்லை என்பதால் அவை குப்பை. இதில் என்ன முரண்பாடு இருக்கிறது?

 3. திருவள்ளுவர் வாழ்ந்த தற்கு எந்த அறிவியல் ஆதாரத்தை வைத்து நம்புகிறீர்கள்

 4. நண்பரே,
  ஒவ்வொன்றையும் அறிவியலில் உரசிப்பார்த்து விட்டுத் தான் ஏற்க வேண்டும் என்றால் நாம் வானாள் முழுதும் அதை மட்டும் தான் செய்து கொண்டிருக்க வேண்டும். அவ்வாறன்றி எங்கு ஐயம் எழுகிறதோ, எங்கு குழப்பம் ஏற்படுகிறதோ, எங்கு தேவை ஏற்படுகிறதோ அங்கு மட்டும் ஆய்வு செய்தால் போதுமானது. வள்ளுவரைப் பொருத்தவரை திருக்குறள் மட்டும் தான் அவர் வள்ளுவராக இல்லாதிருக்கும் வாய்ப்பில் கிள்ளுவராக இருந்து விட்டுப் போவதில் சிக்கல் ஒன்றுமில்லை. குறள், குறளின் கருத்து, அதன் பொருத்தப்பாடு என சிந்தித்து ஏற்கவோ மறுக்கவோ செய்து விடலாம். இதில் சிக்கல் ஒன்றுமில்லை.

  சரி இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

 5. வள்ளுவரை நாம் யாரும் பார்த்ததில்லை
  ஆனால்
  அவர் எழுதிய குறள்கள் மூலம் அவர் வாழ்ந்து இருப்பதை நம்பதானே செய்கிறோம்
  அப்படி தானே
  குரான் வேதமும்
  அது இறைவனின் வார்த்தைகள் என்பதற்கு அந்த வார்த்தைகளே ஆதாரமாக இருக்கிறதே
  அதை எந்த அடிப்படையில் நம்ப மறுக்கிறீர்கள்

 6. மதத்தின் அடிப்படயில் எழுதப்படும் அனைத்து வரலாறுகளுமே குப்பை கூளமாகத்தான் இருக்கும். இந்த மதம் சரி அந்த மதம் தவறு என்பது எல்லாம் காலனிய வியலாளர்கள் ,அவர்களின் எடுபிடிகளான பெரியார் அம்பேத்கர் கருத்துக்கள் ஆகும். சரி ஒரு பண்டிகையை கொண்டாடுவதை தடுக்க முடியுமா? அப்படி தடுத்து நாம் வரலாற்றில் என்ன முற்போக்கு பாத்திரமாற்ற போகிறோம்

 7. நாடோடி மன்னன் நண்பரே,

  ஒரு நன்னெறி நூலும் வேதமும் ஒன்றல்ல. ஒன்றை நம்புவதற்கும் ஏற்பதற்கும் வேறுபாடு உள்ளது. திருக்குறளில் பலவற்றை ஏற்கலாம், சிலவற்றை மறுக்கலாம். அது உள்ளடக்கத்தைப் பொருத்தது. ஆனால் குறளை ஏற்பதன் மூலம் வள்ளுவர் சொன்னது, செய்தது, நம்பியது என அனைத்தையும் ஏற்க முடியுமா? நான் ஒரு கடவுற்றூதன் என வள்ளுவர் சொல்லியிருந்தால் அதையும் புறந்தள்ளியிருப்போம். இதில் ஐயம் ஒன்றுமில்லை.

  முகம்மதை அல்லது குரானை கடவுள் எனும் அடிப்படையில் தான் ஏற்க மறுக்கிறோம். அதற்குத்தான் சான்றுகளில்லை. அது தான் அறிவியலுக்கு எதிரானதாக இருக்கிறது. மற்றப்படி குரான் எனும் நன்னெறி நூலில் சரியாக இருக்கும் எதையும் ஏற்பதில் தயக்கம் ஒன்றும் இல்லை. எ.கா உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரையம் செய்யாதீர்கள் என்றொரு வசனம். இதை ஏற்பதில் தயக்கம் ஒன்றும் இல்லையே. ஆனால் இதை ஏற்பதால், அவர் சொன்ன கடவுளையும் ஏற்க வேண்டும் என்று எந்த தேவையும் இல்லை.

 8. R Chandrasekaran R Chanrasekaran தோழர் ஒரு பண்டிகையை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதால் மட்டுமே அதை நாமும் ஏற்று ஒழுக வேண்டுமா? அவர்கள் எதை எப்படி நம்புகிறார்களோ, அதை அப்படியே விட்டுவிடுவது முற்போக்கு பாத்திரமாற்றி விடுமா? அவர்களை அணுவதற்கு நெழிவு சுழிவுகளை கைக் கொள்ளலாம். அதேநேரம் அவர்களின் மத கொண்டாட்டங்களின் வரலாற்றை புரியவைக்க முயல்வது பிற்போக்கு பாத்திரமாற்றவா செய்யும்? காட்டை அழித்து விவசாயம் செய்ய முயலும் போது காட்டு விலங்குகளின் தொந்தரவை தீர்ப்பதற்காக தீயையும் சத்தத்தையும் பயன்படுத்தியது தான் தீபாவளியின் தொடக்கமாக இருக்கலாம் என புரிய வைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே தோழர்.

 9. தீபாவளியை மறுப்பது ஒரு அடையாள அரசியல் அதை கொண்டாடுவதாலோ கொண்டாடாமல் இருப்பதாலோ மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழ போவதில்லை.நாம் மக்களிடம் பேசவேண்டியது அவர்களின் வாழ்வாதார சிக்கலை எப்படி தீர்ப்பது என்பது குறித்தே பெரியாரிய அடையாள அரசியலை அல்ல தோழர் . கொண்டாடுவோருக்கு வாழ்த்து தெரிவிப்பதால் எதுவும் சிக்கலா?தோழர்

 10. தீபாவளியை மறுப்பது என்றாலே அது பெரியாரின் அடையாள அரசியலாகிவிடுமா தோழர்? தீபாவளியை மட்டுமல்ல எல்லா மத பண்டிகைகளையும் கொண்டாட தேவையில்லை. ஆனால் நடப்பில் தீபாவளி ஏன் முன்னிருத்தப்படுகிறது என்றால் அதை முன்வைத்து இந்துத்துவ அரசியல் கட்டி எழுப்பப்படுகிறது என்பதால் தான். நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தீபாவளி மீது இந்துத்துவ அரசியல் படிந்திருக்கிறது. அதோடு இணைந்து தான் தீபாவளி கொண்டாடப் படுகிறது. தீபாவளி கொண்டாடும் பெரும்பான்மையோர் நரகாசுர உருவகத்தில் இருந்து தான் கொண்டாடுகிறார்கள். ஒரு ஆய்வை நடத்தினால் 90 விழுக்காட்டினர் தீபாவளியை நரகாசுர வதத்துடன் தான் தொடர்புபடுத்துவார்கள். இதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்கிறீர்களா தோழர்.

  புரிதலுள்ளவர்கள், பொதுவாக வாழ்த்து சொல்வது சிக்கலானது என்று தான் எண்ணுகிறேன். அணுகுவதில் தனிப்பட்ட முறையில் நெழிவு சுழிவுகள் இருக்கலாம். ஆனால் அதை பொதுவாக்குவதில் சிக்கல் இல்லை என்று கூற முடியாதே.

  நீங்கள் தீபாவளி கொண்டாடினீர்களா தோழர்? கொண்டாடினீர்கள் என்றால் ஏன் கொண்டாடினீர்கள்? கொண்டாடவில்லை என்றால் ஏன் கொண்டாடவில்லை? காரணத்தை பொதுவில் பகிரலாமா? நான் ஏன் கொண்டாடக் கூடாது என்பதை தான் கட்டுரை வடிவில் பகிர்ந்திருக்கிறேன். இது அடையாள அரசியல் இல்லை. தீபாவளியின் மீது படிந்திருக்கும் இந்துத்துவ அரசியலை விலக்கும் ஒரு சிறு முயற்சி. இது எப்படி தவறாகும்? வாழ்வாதாரச் சிக்கல்களையும் பேச வேண்டும், கலாச்சார சிக்கல்களையும் பேச வேண்டும். இரண்டில் ஒன்றை மட்டும் தான் பேச வேண்டும் இன்னொன்றை பேசக் கூடாது என்பது எந்த விதத்தில் சரி?

 11. எந்த விழாவில் மதச்சாயல் இல்லை.மதத்தை ஒழிக்க விரும்பினால் மத்சார்பின்மையை முன் மொழிய வேண்டும். தோழர்

 12. இல்லை தோழர் இங்கு நீங்கள் மட்டுமல்ல யாருமே மதசார்பின்மையை முன் மொழிவதில்லை. மதத்தை திட்டியும் மத விழாக்களை புறக்கணித்தும் மதத்தை ஒழித்து விட விரும்புகிரார்கள் .அது மதவெறியை அதிகப்படுத்தவே உதவும்

 13. உங்கள் கருத்தோடு நான் சற்று முரண்படுகிறேன் தோழர். மதசார்பின்மை என்பது என்ன? மதத்தை அலட்சியப்படுத்துதல் அல்லது கண்டும் காணாமல் செல்லுதலா? மதங்களை விமர்சிப்பதும், மதக் கொண்டாட்டங்களை புறக்கணிப்பதும் மதங்களை ஒழித்து விடுவதற்காக அல்ல. தனியுடமை நீடிக்கும் வரை மதங்களை ஒழிக்க முடியாது. தவிரவும் அது மேலிருந்து கீழாக செய்ய வேண்டியது, கீழிருந்து மேலாக அல்ல.
  இங்குள்ள சூழல் ஒரு மதத்தை முன்னிலைப்படுத்துவதாக இருக்கிறது. மேலோட்டமாக, மத அடிப்படையில் ஒன்றுதிரட்டப்படும் மக்களை அரசியலுக்கு பயன்படுத்தும் போக்கு குறிப்பாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு எதிர்வினையாகவும், மதங்கள் அறிவியலுக்கு எதிராக இருப்பதோடு, மக்களின் நல்வாழ்வுக்கும் எதிராக இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகத்தான் விமர்சனங்களும் புறக்கணிப்பும் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக மத நம்பிக்கையுடன் இருப்பவர்களின் ஒரு பகுதியினர் மதவெறியின் பக்கம் செல்லக் கூடும். (இதிலும் மதவிமர்சனம் மட்டுமே காரணமாக இருக்காது) இன்னொரு பகுதியினர் புரிந்து கொள்ளவும் கூடும். இந்த மத விமர்சனங்களை எப்படிச் செய்வது என்பதில் கலந்துரையாடல் செய்து பொருத்தமான வழியை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் மத விமர்சனம் செய்யக் கூடாது, மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் தவறில்லை என்பதெல்லாம் தவறாகவே முடியும்.

 14. மத சார்பின்மை என்றால் என்னவென்று புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் தோழர்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s