வரம்பு மீறும் நீதிமன்றங்கள்

நீதி மன்றத்தின் அல்லது நீதிபதியின் ஆளுமை வரம்பு என்ன? எந்த அடிப்படையில் தீர்ப்பு கூறப்படுகிறது? கூறப்படும் தீர்ப்பிற்கு வழிகாட்டலாக இருக்கக் கூடியது என்ன? இதுபோன்ற கேள்விகளெல்லாம் நீதிபதிகளுக்கு எழுமா? எழாதா? நீதிபதிகள் தங்களைத் தாங்களே கடவுள்களாக கருதிக் கொள்ள முடியுமா? அவ்வாறாக கருதிக் கொள்ளும் நீதிபதிகளின் தீர்ப்புகள் சட்டங்களாக ஆகுமா? நீதிபதிகளின் தீப்புகள் சட்டங்களுக்கான விளக்கங்களா? அல்லது சட்டங்களை மேலாதிக்கம் செய்யும் அளவுக்கு ஆற்றல் கொண்டவையா?

அண்மையில் நீதி மன்றங்களின் தீர்ப்புகள் தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றன. வெளிப்படையாகச் சொன்னால் பார்ப்பனிய கருத்தாக்கங்களுக்கு ஏற்ப, சட்டங்களுக்கு திருகலான விளக்கங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன நீதி மன்றங்கள். எடுத்துக்காட்டாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டத்துக்கு எதிரான வழக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் தீர்ப்பை கூறலாம். அர்ச்சகர் ஆளெடுப்பு ஆகமத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும் எனும் பொருளில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகமம் என்பது என்ன? அரசியல் சாசனத்தில் அதற்கு சட்ட மதிப்பு ஏதும் இருக்கிறதா? பின் ஏன் அன்றிலிருந்து இன்று வரை நீதி மன்றங்கள் ஆகமங்களை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றன?

அரசியல் சாசனம் வகுத்திருக்கும் தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பதை விட பார்ப்பனிய மேலாதிக்க எண்ணமே உயர்வானது எனும் எண்ணத்தைத் தவிர ஆகமங்களை பிடித்து தொங்குவதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்க முடியுமா? இந்து மதம் தொடர்பாக இருக்கும் அனைத்தும் பித்தலாட்ட தன்மை கொண்டவையே என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்ட பின்பும் நீதி மன்றங்கள் இவ்வாறு செயல்படுவதற்கு என்ன காரணம் இருந்துவிட முடியும்?

நீதி மன்றம் குறித்தும் அதன் தீர்ப்புகள் குறித்தும் இந்த அளவுக்கு இங்கு கூறுவதற்குக் காரணம் நேற்று அளிக்கப்பட்டிருக்கும் ஒரு உத்தரவு. “எந்த ஒரு மதத்தினராக இருந்தாலும் அவர் சார்ந்த மத முறைப்படி, சடங்கு சம்பிரதாயப்படி திருமணம் நடந்தால்தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும். அப்படி நடைபெறாமல் நேரடியாக திருமணம் நடந்தால் அந்த திருமணத்தை பதிவு செய்ய முடியாது. அது திருமண அங்கீகாரம் அளிக்காது. ஒரு திருமணத்தைப் பதிவு செய்வதற்கு முன்பு, அவர்களுக்கு அவரவர் முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது, பதிவுத் துறை அதிகாரிகளின் கடமை. திருமணச் சடங்குகள் நடைபெற்றிருக்கிறதா என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இரு தரப்பினரும் அளிக்கும் திருமணப் பதிவு விண்ணப்பங்களை வெறுமனே இயந்திர கதியில் பதிவு செய்யக் கூடாது. ஒரு வேளை, எந்த திருமணச் சடங்கும் நடைபெறாமல், ஒரு தம்பதிக்கு திருமணப் பதிவு சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தால், அந்த சான்றிதழ் போலி திருமணப் பதிவுச் சான்றிதழாகவேக் கருதப்படும்” இவ்வாறு உயர்நீதி மன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஆர். விஜயகுமார் ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு என்னவென்றால், ஒரு பெண் தன்னுடைய விருப்பம் இல்லாமல் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் அந்த திருமணத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரி வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த வழக்கில் தான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது 2014ல் தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, என்னுடைய தாயாருக்கு உடல்நலமில்லை எனக் கூறி கல்லூரியிலிருந்து அழைத்து வந்து பதிவாளர் அலுவலகத்தில் வைத்து மிரட்டி கையெழுத்து வாங்கி பதிவுத் திருமணம் நடத்தி விட்டனர் என்பது வழக்கு. இதில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால் மணமக்களின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தப்படுகிறார்களா என்பது குறித்து பதிவாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் விண்ணப்பத்தை மட்டும் வைத்துக் கொண்டு இயந்திர கதியில் பதிவு செய்யக் கூடாது. அவ்வாறு பதிவு செய்திருந்தால் அது செல்லாததாக கருதப்படும் என்றல்லவா உத்தரவிட்டிருக்க வேண்டும். இதில் மதமும், சடங்குகளும் எங்கிருந்து வந்தன?

“அவரவர் முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது, பதிவுத் துறை அதிகாரிகளின் கடமை” என்று இருப்பதன் பொருள் என்ன? அவரவர் முறைப்படி என்றால் என்ன? கிருஸ்தவர் என்றால் கிருஸ்தவ முறைப்படி (சில பிரிவுகள் இருந்தாலும்), இஸ்லாமியர் என்றால் இஸ்லாமிய முறைப்படி (சில பிரிவுகள் இருந்தாலும்), ஆனால் இந்து என்றால் .. ..? இப்படி அடைப்புக்குறிக்குள் (சில பிரிவுகள் இருந்தாலும்) என்று போட முடியாதே. அவரவர் ஜாதி முறைப்படி என்று தானே பொருள்படும். வழக்கு விருப்பத்துக்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று. கொடுக்கப்பட்டிருக்கும் உத்தரவோ திருமணச் சடங்குகள் முறையாக செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை பதிவாளரே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று. ஒருவேளை சடங்குகள் முறைப்படி செய்திருந்து மணமக்கள் விருப்பமின்றி கட்டாயத் திருமணம் செய்திருந்தால் அதை பதிவு செய்யலாமா? கூடாதா? இது என்ன நோக்கத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அதற்கு எதிராக அல்லவா இருக்கிறது. வழ்க்கில் நோக்கத்துக்கு பொருத்தமில்லாத இது தான் உத்தரவு என்றால், சுயமரியாதை திருமணம் செல்லாது என்பது தானே இதன் பொருள்?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் எனும் கனவு பெரியார் நெஞ்சில் தைத்த முள் என்று கூறுவார்கள். ஆனால் பார்ப்பனர்களின் நெஞ்சில் தைத்த முள் என்று ஒன்று உண்டென்றால் அது, 28.11.1967 அன்று அண்ணாவால் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதை திருமணச் சட்டம் தான். அதற்கு முன்புவரை சடங்குகள் இல்லாமல் அர்ச்சகர் தாலி எடுத்துக் கொடுக்காமல் நடத்தப்படும் திருமணங்கள் சட்டப்படி செல்லாத திருமணங்களே. சுயமரியாதைத் திருமணச் சட்டம் தான், எந்த வித சடங்குகளும் இல்லாமல், தாலி கூட இல்லாமல் திருமணம் செய்தாலும் அது செல்லும் என்று சட்ட மதிப்பை வழங்கியது.

கலப்பு திருமணங்களை இந்தச் சட்டம் தான் ஊக்குவித்தது. பெரியார் மொழியில் சொன்னால், மனுசனுக்கும் மனுசனுக்கும் தானே திருமணம், மனுசனுக்கும் மாட்டுக்குமா திருமணம் செய்கிறோம் பிறகு எப்படி இது கலப்பு திருமணம் ஆகும்? என்று கேட்டாரே, அந்த சட்டத்தைத் தான் இந்த உத்தரவு கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறது. சட்டப்படி நடந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டிய நீதிபதி, சட்டப்படி நடந்து கொள்ள வேண்டியதில்லை சடங்குகள் நடந்திருக்கிறதா என்று உறுதிப்படுத்துங்கள் என்கிறார். இதை வேறு எப்படி புரிந்து கொள்வது?

ஒரு பொறியாளர் கட்டும் கட்டடத்தில் அல்லது கருவியில் சிக்கல்களோ எதிர் விளைவுகளோ ஏற்பட்டால் அந்தப் பொறியாளர் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தகுந்த தண்டனை வழங்கப்படும். மருத்துவர் என்றாலும், வேறு யாராக இருந்தாலும் இந்த பொறுப்பேற்கும் முறை செல்லுபடியாகும். ஆனால் நீதிபதிகளுக்கு .. ..? எத்தனை எத்தனை தீர்ப்புகள், உத்தரவுகள், கருத்துகள் இங்கு கூறப்பட்டிருக்கின்றன? அவைகளுக்கு யார் பொறுப்பேற்பது? நீதிபதிகளும் அவ்வாறான பொறுப்பேற்கும் முறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற தான்தோன்றித்தனமான தீர்ப்புகளை உத்தரவுகளை கருத்துகளை தடுக்க முடியாது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வழக்கை தொடுத்திருப்பது ஒரு இஸ்லாமியப் பெண். இஸ்லாமியப் பெண் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் உத்தரவு அவரவர் சடங்கு முறைப்படி திருமணம் னடைபெற்றிருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பதிவாளருக்கு இருக்கிறது என்று. 2009 திருமணச் சட்டத்தின் படி பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது. இனி இந்த உத்தரவின் படி ஒரு திருமணத்தை பதிவு செய்யக் கோரி விண்ணப்பம் வந்தால் அந்தந்த சாதி முறைப்படி திருமணம் நடந்திருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டியது பதிவாளரின் கடமை. ஏனோ மகாபாரதத்தை எழுதிய வியாசர் ஒரு மீனவர் என்பது நினைவிற்கு வருகிறது.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்