மதம் ஜாதியைக் கடந்த மக்களாய் நம் குழந்தைகள்

 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

 

கோடை விடுமுறை கடந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் காலம் வந்துவிட்டது. பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதென்பது பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதை யாரும் தனிப்பட்டு கூறத் தேவையில்லை. ஆனால் மனிதர்களாய் பிறக்கும் நம் குழந்தைகள் மதம் ஜாதி என்றால் என்னவென்றே அறியாமல் பெற்றோர்களின் விருப்பத்தால் மரபால் அதற்குள் திணிக்கப்படுகிறார்கள். விதையிலேயே ஏற்றப்படும் நஞ்சைப் போல் அவர்கள் உருவாகுமுன்னே அவர்களின் சிந்தனை வழியை கைப்பற்றிவிடத் துடிக்கிறோம். ஜாதிகளும், மதங்களுமே எல்லாவற்றையும் வழிநடத்தத் தகுந்ததாகும், அதுவே சரியானதுமாகும் என எந்த மீளாய்வுக்கும் ஆயத்தமின்றி ‘நம்புபவர்களை’ விட்டு விடுவோம். ஜாதி மதங்கள் அபத்தமானவை என்று ஏற்பவர்களும் கூட சமூக அழுத்தங்களால் நீடித்துக் கொண்டு; அந்த அழுத்தங்களின் தயக்கங்களால் தம் குழந்தைகளையும் அவர்கள் அழுந்திக் கிடக்கும் ஜாதி மதங்களுக்குள்ளே அழுத்தி வைப்பது என்ன நீதி?

 

எவரையும், ஏதாவது ஒரு மதத்தின், ஜாதியின் வார்ப்பாய் இருக்க வைப்பதில் நடப்பு கட்டுப்பாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன, குறிப்பாய் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள். தம் குழந்தைகளை ஜாதி மதமற்றவர்களாய் வளர்க்க விரும்பும் யாரும் முதலில் எதிர்கொள்வது இந்த தலைமை ஆசிரியர்களைத் தாம். ஒரு குழந்தையை பயிற்றுவிப்பதில் எந்த அக்கரையும் எடுத்துக் கொள்ளாமல் ஊதியத்துக்கான ஒரு வேலையாய் மட்டுமே ஆசிரியத் தொழிலை கருதுபவர்கள், இந்த சூழலில் மட்டும் நம் மீதும் நம் குழந்தைகள் மீதும் மிகுந்த கரிசனம் கொண்டவர்களாக மாறிப் போவார்கள். குழந்தையின் எதிர்காலம் குறித்த விசயம் என்பதால் உங்களின் சுய விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள் என்பார்கள். அரசின் சலுகைகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டுவார்கள். வளர்ந்த பின் அவர்கள் பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும் என்று எச்சரிப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாய், இதற்கான வழிமுறைகள் எனக்குத் தெரியாது, எதற்கும் நீங்கள் வட்டாட்சியரையோ, வருவாய் அலுவலரையோ சந்தித்து கடிதம் வாங்கி வாருங்களேன் என்று கை கழுவுவார்கள்.

 

சுய விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிப்பவர்கள் யார்? தன் குழந்தை எப்படி சுயநலமாய் இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி கல்லூரியில் என்ன படிப்பு படிக்க வேண்டும்? என்ன வேலைக்கு செல்ல வேண்டும்? யாரை திருமணம் செய்ய வேண்டும்? என்ன வழியில் வாழ வேண்டும்? என்பது வரை அனைத்திலும் தன்னுடைய விருப்பத்தை, ஆசையை, நிறைவேறாத கனவுகளை தன்னுடைய குழந்தைகளின் மீது நேரடியாக திணிப்பவர்கள் நமக்கு அறிவுரை கூறுகிறார்கள், ‘உங்களின் விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள்’ என்று. தன்னுடைய குழந்தைக்கு ஜாதி மதம் வேண்டாம் என தீர்மானிப்பவர்கள் ஜனநாயக பூர்வமாக அனைத்தையும் சிந்தித்து தகுந்த ஆலோசனைகளைப் பெற்றே செய்வார்கள். ஆனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன்னுடைய களிமண் எச்சமாக தன் குழந்தை இருந்தாக வேண்டும் என்பவர்களின் ஆட்சேபங்களை அற்பமாக எண்ணி நாம் கடந்தாக வேண்டும்.

 

நம் குழந்தைகளுக்கு தற்போது அரசு என்ன சலுகைகளை வழங்கி விட்டது? அடிப்படைத் தேவையான கல்வியையும், சுகாதாரத்தையுமே தனியாரிடம் அடகு வைத்துவிட்டு சாராயம் விற்றுக் கொண்டிருக்கும் அரசு நம் குழந்தைகள் மீது என்ன கரிசனம் செலுத்தி சலுகைகளை தந்துவிடப் போகிறது? நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த கல்வியும், சரியான வேலை வாய்ப்புமே தேவை. அதை வழங்குமா இந்த அரசு? நம்மை பிச்சைக் காரர்களாய் மாற்றி நம் தன்மானத்தை விலையாய் கேட்கும், இலவச, விலையில்லாப் பொருட்களுக்கு கூட ஜாதி மதத்தை கூறியாகவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

 

எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று மிரட்டும் எவரையும், நிதானமாய் என்ன பிரச்சனை ஏற்படக் கூடும் என்று கருதுகிறீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்டுப் பாருங்கள். பதில் கூற முடியாமல் விழிப்பார்கள். ஜாதி மதத்தை பதிவு செய்ய மறுப்பதால் ஏற்படப் போவதாக கருதப்படும் ஒரே பிரச்சனை இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜாதி மதத்தை பதிவு செய்வது போன்ற அபத்தம் வேறொன்று இல்லை. கல்வியில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு எனும் சொல்லை பொருளற்ற சொல்லாக மாற்றி நெடு நாட்கள் ஆகி விட்டன. அரசு பள்ளிகள், கல்லூரிகள் போதிய வசதிகளற்று, ஆசிரியர்களின்றி, கவனமின்றி, கவனிப்பின்றி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன. தனியார் கல்லூரிகள், பள்ளிகள் கொள்ளையடிப்பதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் அரசே முன்னின்று செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கல்வியில் இட ஒதுக்கீடு உங்கள் குழந்தைகளின் வாழ்வில் எதைச் செய்து விடும்? வேலை வாய்ப்பு .. .. ..? அரசு துறையில் வேலை வாய்ப்பு என்று ஏதேனும் மிச்ச மிருக்கிறதா? அரசு துறையே மிச்சமிருக்கிறதா என்று உருப்பெருக்கி வைத்து தெடும் நிலை தான் இருக்கிறது. அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலையில் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன. இருக்கும் சிலவும் கூட எப்படி எப்போது கைமாற்றுவது எனும் முடிவை எடுப்பதற்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. தனியாரிடம் இட ஒதுக்கீடு எனும் முழுச் சொல்லை அல்ல ‘இ’ எனும் முதல் எழுத்தைக் கூட உச்சரிக்க முடியாது. இதை முன்வைத்தா சான்றிதழ்களில் அசிங்கங்களைச் சுமப்பது?

 

ஆகவே நண்பர்களே! தயக்கமின்றி சான்றிதழ்களில் ஜாதி மதம் தேவையற்றவன் என்று பதிவு செய்யுங்கள். இதற்கென்று தனியாக எந்த நடைமுறைகளையும், சடங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய குழந்தைக்கு ஜாதி மதம் தேவையில்லை என்று கூறினால் மட்டும் போதுமானது. அப்படி வெறும் வாய் வார்த்தையால் கூறினாலே சான்றிதழில் பெற்றோரின் விருப்பப்படியே பதிவு செய்தாக வேண்டும் என்று அரசாணை இலக்கம்:1210 கூறுகிறது.அதுவும் இந்த அரசாணை வெளியிடப்பட்டு 39 ஆண்டுகள் ஆகி விட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் 1973 ஆம் ஆண்டு அந்த அரசாணை வெளியிடப்பட்டு இன்று வரை நடப்பில் இருக்கிறது. ஆனால் இது குறித்து யாருக்கும் தெரியாது தெரிவிக்கப்படவும் இல்லை. மக்களை கசக்கிப் பிழிந்து விட்டு அதையே சாதனைகளாய், மக்கள் பணத்திலிருந்து பல கோடிகளை விளம்பரம் செய்ய பயன்படுத்தும் அரசுகள், இந்த அரசாணை குறித்து மக்களுக்கு தெளிவிப்பதே இல்லை. அந்த அரசாணை கீழே படமாக இணைக்கப்பட்டுள்ளது. வேண்டியவர்கள் படியெடுத்து பள்ளிகளில் காட்டி ஜாதி மதமற்றவர்களாக பதிவு செய்யுங்கள். மறுத்தால், அவர்களின் மறுப்பை எழுத்து பூர்வமாக கேளுங்கள். நடுநடுங்கிப் போவார்கள். உங்கள் குழந்தைகளை ஜாதி மதம் மறுத்து பள்ளிகளில் சேர்த்து மனிதனாக வளர்க்க வாழ்த்துக்கள்.

 

கடைசியாக ஒரு தகவல்: உலகின் மொத்த மக்கட் தொகையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் எந்த மதத்தையும் சாராதவர்களே. அதாவது உலகில் கிருஸ்தவத்தை பின்பற்றும், இஸ்லாத்தை பின்பற்றும் மக்களுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

 

6 thoughts on “மதம் ஜாதியைக் கடந்த மக்களாய் நம் குழந்தைகள்

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

  2. ஆகவே நண்பர்களே! தயக்கமின்றி சான்றிதழ்களில் ஜாதி மதம் தேவையற்றவை என்று பதிவு செய்வோம் இதற்கென்று தனியாக எந்த நடைமுறைகளையும், சடங்குகளையும் தூக்கிஎறிவோம். நம்முடைய குழந்தைகளுக்கு ஜாதி மதம் தேவையில்லை என்று பயிற்று விப்போம்

  3. அந்தப் புள்ளி விபரம் குறிதது இன்னும் சொல்ல முடியுமா ? குழப்பமாக இருக்கிறது

  4. நன்றி தோழரே. முடிந்தவரை பகிர்ந்துவிட்டேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்