போக்குவரத்து வேலைநிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?

transport-workers-strike

நேற்று அரசுப் பேரூந்து நடத்துனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். 15ம் தேதி தொடங்கிய வேலை நிறுத்தம் தொழிலாளர்களுக்கு உவப்பான முடிவை எட்டாமலேயே ஒத்தி வைக்கப்பட்டது குறித்து அவருக்கு உளச் சோர்வு இருந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோருக்கு இதே எண்ணம் தான் இருக்கக் கூடும். ஒரு போராட்டம் வெற்றியடைவது அல்லது சரியான திசையை நோக்கிச் செல்வது என்பது, போராடும் பிரிவினருக்கு அப்பால் சமூகத்தின் பிற மக்கள் அந்தப் போராட்டம் குறித்து என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. இந்தப் போராட்டத்தைப் பொருத்த வரை மக்கள் வேலை நிறுத்தத்தின் காரணத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், அது சரியானது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்பது போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வலிமை.

அதேநேரம் மக்களுக்கு ஓர் ஆதங்கமும் இருக்கிறது. 15 தேதி வேலை நிறுத்தம் என்று அறிவித்து விட்டு 14ம் தேதியே தொடங்கி விட்டார்கள் என்பது தான் அந்த ஆதங்கம். பேரூந்து ஓட்டுனர்கல் நடத்துனர்கள் வேலை நேரம் குறித்த புரிதல் மக்களுக்கு வேண்டும். பொதுவாக பேரூந்து ஓட்டுனர் நடத்துனர்களுக்கு மூன்று ஷிப்டில் வேலை நடக்கு, ஒரு ஷிப்ட் என்பது 24 மணி நேர வேலையைக் குறிக்கும். வேலை தொடங்கும் நேரத்தை கணக்கில் கொள்வது, வேலை முடியும் நேரத்தை கணக்கில் கொள்வது என்று இரண்டு முறை பின்பற்றப்படுகிறது. வேலை முடியும் நேரத்தை கணக்கில் கொள்ளும் பிரிவில் உள்ள தொழிலாளர்களுக்கு 15ம் தேதி வேலை என்பது 14ம் தேதி மதியம் தொடங்கி 15ம் தேதி மதியம் முடிவடையும். வேலை தொடங்கும் நேரத்தை கணக்கில் கொள்ளும் பிரிவில் 14ம் தேதி வேலை என்பது 14ம் தேதி மதியம் தொடங்கி 15ம் தேதி மதியம் முடியும். 15ம் தேதி வேலை நிறுத்தம் என்பதால் 14ம் தேதி மதியமே வேலையை நிறுத்தி விட்டார்கள் என்பது போக்குவரத்து ஊழியர்களைப் பொருத்தவரையில் சரியான நேரம் தான். அதேவேளையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மற்றொரு பிரிவினர் 15ம் தேதி மதியம் வரை வேலை பார்த்தனர். 15ம் தேதி வேலை நிறுத்தம் என்பதால் 15ம் தேதி காலையிலேயே பேரூந்தை நிறுத்தி விட்டு இறங்கி விடவில்லை. 15ம் தேதி மதியம் வரை பணியில் இருந்தார்கள். இதே போன்று தான் 14ம் தேதி மதியம் பேரூந்தை நிறுத்தியவர்களும் 14ம் தேதி வேலையை முடித்து விட்டே பேரூந்திலிருந்து இறங்கியிருக்கிறார்கள். இதை புரிந்து கொள்ள வேண்டும்.

இருந்த போதிலும் இந்தப் போராட்டம் வெற்றியைப் பறித்தெடுக்காமல் மூன்று மாதம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இது ஓரளவுக்கு சரியான முடிவு தான். ஏற்கனவே, மூன்று முறை போராட்ட தேதி அறிவிக்கப்பட்டு போராட்டம் தொடங்குவதற்கு முன்பே தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது. இப்போது அறிவித்து, போராட்டம் நடத்தி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் இவ்வாறு தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன?

பொதுவாக எந்த அரசும் தனக்கெதிரான போராட்டங்களை ஏற்பதில்லை. நசுக்கவும், ஒற்றுமையை சிதறடிக்கவுமே முயற்சிக்கும். அந்த வழியில் எடப்பாடி அரசாங்கம் இந்தப் போராட்டத்தை முறியடிக்க செய்த முயற்சிகள் கேவலமானவை.

முதலில், போராட்ட தேதி அறிவித்த பிறகும் முறையாக அவர்களுடன் பேசி, கோரிக்கைகளை ஏற்க அல்லது நிலைகளை விளக்க எந்த முயற்சியையும் துறைசார் அமைச்சர் செய்யவில்லை. கீழ்நிலை அலௌவலர்களை கொண்டு பேசுவதும் காலம் கடத்துவதுமாகவே இருந்தார்.

இரண்டாவதாக, இந்த போராட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவளிக்கவில்லை, எதிர்க் கட்சிகளின் தூண்டுதலில் தான் போராட்டம் நடக்கிறது என்பதாக அரசாங்கம் மக்களிடம் பதிய வைக்க முயற்சித்தது. மொத்தமுள்ள 47 சங்கங்களில் 37 போராட்டத்தை ஏற்கவில்லை, கலந்து கொள்ளவில்லை. 10 சங்கங்கள் மட்டுமே போராட்டத்தை நடத்துகின்றன என போக்குவரத்துத் துறை அமைச்சர் ஊடகங்களில் கூறினார். வேலை நிறுத்தங்களை முன்வைத்து நடக்கும் பேச்சுவார்த்தைகளில் 50 விழுக்காடு தொழிறங்ககங்கள் ஆதரவளித்தாலே பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக கொள்ளப்படும் என தொழிற்தாவா சட்டம் கூறுகிறது. ஆனால் 78 விழுக்காடு தொழிற்சங்கங்களின் ஆதரவு இருந்தும் அதே போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை தோல்வி என்கிறார். எப்படி? தொழிலாளர்கள் இல்லாத பெயர்ப் பலகை தொழிற்சங்களை எல்லாம் அழைத்து வைத்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் எண்ணிக்கை கணக்கு காட்ட முயற்சித்திருக்கிறார் என்பதைத் தவிர இதில் வேறேதாவது இருக்கிறதா?

மூன்றாவதாக, போக்குவரத்து தொழிலாளர்களிடம் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 14ம் தேதியிலிருந்தே பணிமனைகளில் காவல்துறையைக் கொண்டு வந்து குவித்திருக்கிறார்கள். போராட்டம் தொடங்கிய பிறகு அதை ஒடுக்குவதற்காக ஓய்வு பெற்ற ஓட்டுனர்கள், தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்கள், ஓட்டுனர் உரிமம் வைத்திருந்து வேலையில்லாமல் இருப்போர், சில இடங்களில் தானி(ஆட்டோ) ஓட்டுனர்களைக் கூட அரசு பேரூந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்து இயக்கினார்கள். அதாவது வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை, போதுமான எண்ணிக்கையில் பேரூந்துகள் இயங்கின என கணக்கு காட்டுவதில் தான் குறியாக இருந்தார்கள். இந்த முயற்சியின் மூலம் அரசாங்கம் மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன? நாங்கள் என்ன எண்ணுகிறோமோ அதை எவ்வளவு கீழ்த்தரமான வழிகளிலும் செயல்படுத்துவோம். மக்களைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பது தான் அந்தச் செய்தி. அரசு, அரசாங்கங்கள் மக்களுக்கு விடுக்கும் இந்தச் செய்தியை போராட்ட காலங்களில் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. எந்த நகரப் பேரூந்தில் ஏறினாலும், ஓட்டை உடைசலான, பராமரிப்பு எனும் சொல்லையே கண்டிராத அந்தப் பேரூந்துகள் நமக்கு சொல்லுவது மேற்கண்ட செய்தியைத் தான். பல பணிமனைகளில் அதிகாரிகள் ஓட்டுனர்களை மிரட்டி, குறிப்பாக ஓய்வு பெறும் வயதை நெருங்கிய தொழிலாளர்களை முறையாக ஓய்வு பெற விடமாட்டோம் என மிரட்டி பேரூந்துகளை இயக்க வைத்திருக்கிறார்கள். இன்னும் ஏராளமான செய்திகள் புகைப்பட, காணொளி, கேளொலி ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. மெரீனா போராட்டத்தின் இறுதி நாளன்று காவல் துறையே கலவரம் நடத்தி விட்டு மாணவர்கள் இளைஞர்கள் மீது பழி போட்டதோ அதே போல பொருளாதார இழப்பை உங்களுக்கு ஏற்படுத்துவோம் என மிரட்டி பேரூந்துகளை இயக்க வைத்து விட்டு வேலை நிறுத்தத்தை ஆதரிக்காமல் தொழிலாளர்கள் பேரூந்துகளை இயக்குகிறார்கள் என மக்களுக்கு காட்டியது போக்குவரத்துத் துறை.

இந்த கீழ்த்தரமான செயல்பாடுகள் ஒருபுறம் என்றால் நீதி மன்றம் மறுபுறம் தன் கோரப் பற்களைக் காட்டியது. மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஒரு பொது நல(!) வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு போராடும் தொழிலாளர்களை எஸ்மா சட்டத்தில் சிறையிலடையுங்கள் என்று கட்டப் பஞ்சாயத்து செய்தது.

எதை அவசர வழக்காக எடுத்துக் கொள்வது என்பதற்கு ஏதாவது வரையறை இருக்கிறதா? திரைப்பட வெளியீட்டில் சிக்கல் என்றால் அதை அவசர வழக்காக எடுத்துக் கொள்கிறது. மும்பையில் ஒரு நடிகனுக்கு மதியம் 1 மணிக்கு தண்டனை விதித்து விட்டு பிணை வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு மாலை ஐந்து மணிக்கு பிணை வழங்கி தீர்ப்பளிக்கிறது. ஆனால் காவிரி, முல்லைப் பெரியாறு குறித்த எந்த வழக்கும் அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதை எப்படிப் புரிந்து கொள்வது? இவைகளை நீதி மன்றங்களின் அல்லது நீதிபதிகளின் உரிமை என எடுத்துக் கொள்ள முடியுமா?

தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக முறையாக அறிவிப்பு செய்து விட்டு போராட்டம் நடத்தலாம் என்பது மக்களுக்கு சட்டம் வழங்கியிருக்கும் உரிமை. இந்த உரிமையை மறுப்பது போல் சேவைத் துறையில் இருப்பவர்கள் போராட்டம் நடத்தக் கூடாது என்று ஒரு சட்டம் போட முடியும் என்றால், சட்டத்தின் நிலை தான் என்ன? சேவைத்துறையில் இருப்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க அந்த சட்டத்தில் ஏதாவது வழி வகை இருக்க வேண்டாமா? அப்படி எதுவும் இல்லை என்பது எதைக் காட்டுகிறது? சட்டத்துக்கு மக்களைப் பற்றி எந்த அக்கரையும் இல்லை என்பதை இந்த ஒரு சட்டத்தை மட்டுமே வைத்து கூறி விட முடியும். இதன் மூலம் மக்களை மதிக்காத சட்டங்களை மக்கள் ஏன் மதிக்க வேண்டும் எனும் கேள்வியையும் எழுப்புகிறது.

எஸ்மா என்றொரு சட்டம் இருக்கிறது. சட்டங்களை மட்டுமே நாங்கள் பார்ப்போம் வேறு எதைப் பற்றியும் எங்களுக்கு அக்கரை இல்லை என்று நீதிமன்றங்களும் நீதிபதிகளும் கூறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பொருளாதார பலன்களையும், ஓய்வூதியத்தையும் குறித்த காலத்திற்குள் முறையாக வழங்க வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு குறித்து திட்டமிட வேண்டும், வழங்க வேண்டும் போன்றவைகளும் சட்டம் தானே. ஒரு வழக்கு வருகிறது என்றால் அதன் தன்மை, வழக்கு குறித்த அனைத்து சட்டங்களையும் உள்ளடக்கித்தானே தீர்ப்பு அமைய வேண்டும். அவ்வாறன்றி ஒரு பக்க சட்டங்களை மட்டும் பார்த்து தீர்ப்பு சொன்னால் அதன் பெயர் கட்டப் பஞ்சாயத்து தானே தவிர தீர்ர்பு அல்ல. மக்களை பாதிக்கும் அத்தனை வழக்குகளையும் எடுத்துக் கொண்டு பார்த்தால் அவைகள் பக்கம் பார்த்து சொன்ன கட்டப் பஞ்சாயத்துகளாக இருக்கின்றனவேயன்றி தீர்ப்புகளாக இருப்பதே இல்லை. இந்த வழக்கிலும் அது தான் நடந்திருக்கிறது. எங்கள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை எங்களிடம் திருப்பித் தர வேண்டும் என்று கேட்டு போராடுகிறார்கள். அது குறித்த வழக்கில் அவர்களை தூக்கி உள்ளே போடுங்கள் என்று ஒரு நீதிபதி சொல்ல முடியும் என்றால், இது சட்டத்தின் மீதான ஆளுமை அல்ல, மக்களின் மீதான திமிர்த்தனம்.

ஊடகம் என்றொன்று இருக்கிறது. என்ன சொற்களைப் போட்டு வசை மொழிந்தாலும் அந்த சொற்கள் போதாமையால் திணறிப் போகும் அளவுக்கு ஊடகங்களின் நிலை இருக்கிறது. அரசுக்கு மாமா வேலை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட விசித்திர விலங்குகள் போல அவை செயல்படுகின்றன. வெறிச்சோடிய சாலைகள், பேரூந்து நிலையங்களை படம் போட்டு மக்கள் பாதிப்பு என்ற ஒன்றைத் தவிர வேறெதுவும் இல்லை என்றே மக்களிடம் திணிக்கின்றன. எந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு போக வேண்டும் எந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு போகாமல் மறைக்க வேண்டும் என்ற நிலையையும் தாண்டி எப்படியான உணர்ச்சியை மக்களிடம் உருவாக்க வேண்டும் எப்படியான உணர்ச்சியை மக்களிடம் உண்டாக்கக் கூடாது எனும் நிலைக்குச் சென்று விட்டன. எனக்கு நேர்முகத் தேர்வு இருக்கிறது நான்கு மணி நேரமாக பேரூந்தே வரவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று சொல்லச் சொல்லி பதிவு செய்கின்றன. மாற்றிச் சொன்னால் அதை வெளியிடுவதில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயா சிறையிலடைக்கப்பட்ட போது ஒற்றைப் பேரூந்து கூட இயக்கப்படாமல் இரண்டு நாட்களாய் தமிழகம் முடங்கியது. அப்போது மக்கள் பாதிப்பு எனும் சொல்லை மிகக் கவனமாக தவிர்த்ததும் இதே ஊடகங்கள் தான்.

இந்த மூன்று முதன்மையான காரணிகளால் தான் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தள்ளி வைக்கப்படும் நிலைக்குச் சென்றிருக்கிறது. மீண்டும் போராட்டங்கள் வலுப்பெறும், மக்களின் பேராதரவுடன் கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அரசு ஒருபோதும் போராட்டங்களின் நியாயங்களை உணர்வதே இல்லை. அரசின் நிலையை அரசாங்கங்கள் தாண்டிப் போவதும் இல்லை. அரசு நிதி நெருக்கடியில் தள்ளாடும் போது .. .. போக்குவரத்துக் கழகம் கடன் சுமையில் தவித்துக் கொண்டிருக்கும் போது .. .. என்றெல்லாம் நீட்டி முழக்க வேண்டிய தேவை இல்லை. எதனால் இவ்வளவு கடன் சுமை ஏற்பட்டதோ அதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை செய்ய மறுத்து விட்டு – இன்னும் தெளிவாகச் சொன்னால் அவ்வாறு கடன் சுமையில் தள்ளுவதையே அரசினுடைய கொள்கையாக செயல்படுத்தி விட்டு – கடன் சுமை என்று புலம்புவதில் பொருளில்லை. எங்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டாம் என்று எத்தனை நாட்கள் போராடினார்கள் மக்கள். இன்று அவர்கள் கடப்பாரையை கையில் எடுத்த பிறகு தான் விடிவு வந்திருக்கிறது.  எங்களால் எதையும் மக்களுக்கு வாழ்வளிக்கும் விதத்தில் செய்ய முடியாது என்று தங்கள் செயல்கள் மூலம் சொல்லி நிற்கிறது அரசு. மக்கள் கடப்பாரையை எடுக்க வேண்டியது மட்டும் தான் மிச்சமிருக்கிறது.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

One thought on “போக்குவரத்து வேலைநிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?

  1. //ஒரு வழக்கு வருகிறது என்றால் அதன் தன்மை, வழக்கு குறித்த அனைத்து சட்டங்களையும் உள்ளடக்கித்தானே தீர்ப்பு அமைய வேண்டும். அவ்வாறன்றி ஒரு பக்க சட்டங்களை மட்டும் பார்த்து தீர்ப்பு சொன்னால் அதன் பெயர் கட்டப் பஞ்சாயத்து தானே தவிர தீர்ர்பு அல்ல.// This is what happens so far …

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s