ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

பொருளாதார_அடியாளின்_ஒப்புதல்_வாக்குமூலம்

உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது…மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன…நாடுகள் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கின்றன” என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக் கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள்.

 

உலகமயமாக்கல் என்ற பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் அவற்றினுள் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று உலகமயமாக்கல் என்ற ஒரு கோட்பாட்டின் படி நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. நம்புவதற்கு கடினமாக இருக்கின்றது அல்லவா…ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பையும், கட்டுமான வசதிகளையும் தந்து இருக்கும் நிறுவனங்களா எங்களை கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றன என்ற எண்ணம் எழுகின்றது அல்லவா…!!! அங்கே தான் அந்த நிறுவனங்களின்…உலகமயமாக்கல் என்ற கோட்பாட்டின் வெற்றி அடங்கி இருக்கின்றது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்துக் கொண்டு உலாவும் அவைகளின் உண்மையான முகங்களை காண்பது என்பது சாதாரண மக்களுக்கு எளிதான விடயம் அல்ல தான். ஆனால் உலகம் இன்று மிக வேகமாக அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது அதற்கு காரணியாக இருக்கும் ‘உலகமயமாக்கல்’ என்னும் கோட்ப்பாட்டின் முகமூடியை கிழித்து அதன் உண்மையான முகத்தினை உலகிற்கு காட்ட வேண்டிய சூழலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அதிகமாக இருக்கின்றது.” இதுவே ஜான் பெர்கின்ஸ் அவர்களின் கருத்தாகும். இந்நிலையில் அப்படிப்பட்ட முகத்திரையை கிழிக்கும் ஒரு முயற்சியாகவே இந்தப் புத்தகம் வெளி வந்து இருக்கின்றது. இப்பொழுது இந்தப் புத்தகம் கூறும் கருத்தினை நாம் பார்த்து விடலாம்.

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திரமான நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தன. ஒரு சில பெரிய நாடுகளின் கீழேயே உலகின் பல்வேறு நாடுகள் அடிமைத் தளையில் கட்டுண்டு கிடந்தன. அந்த பெரிய நாடுகளும் தமக்கு கீழே இருந்த நாடுகளின் இயற்கை வளங்களையும் சரி மனித வளங்களையும் சரி கேட்பார் யாருமின்றி கொள்ளையிட்டுக் கொண்டு வந்தன.

 

அவ்வாறு கொள்ளையிட்டுக் கொண்டு வந்த நாடுகளின் இடையே நிலவிய பொறாமை போட்டி போன்ற காரணிகளினாலேயே உலகம் அதுவரை கண்டு இராத இரு மாபெரும் யுத்தங்கள் நிகழப் பெற்றன. அவற்றின் முடிவில் அதுவரை அடிமைத்தளையில் கட்டுண்டு கிடந்த நாடுகள் பலவும் சுதந்திரம் அடைய ஆரம்பித்தன. “எங்கள் நாடு இது…எங்களை நாங்களே ஆண்டுக் கொள்கின்றோம்…அந்நியர்களான நீங்கள் வெளி ஏறுங்கள்” என்ற முழக்கங்கள் அனைத்து நாடுகளிலும் கேட்க ஆரம்பிக்க, வேறு வழியில்லாது அந்த நாடுகளை விட்டு விருப்பமில்லாது வெளியேற ஆரம்பித்தன மற்ற நாடுகள்.

 

அவைகள் வெளியேறியதற்கு முக்கியமானதொரு காரணம், அவைகள் வெளியேற மறுத்தால் மீண்டும் ஒரு போர் வெடிக்கலாம்…அந்த போர் எவ்வித முடிவுகளைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது…ஏற்கனவே சப்பானில் நிகழ்ந்த அணுகுண்டு தாக்குதலின் தாக்கத்தினை உலகம் கண்டு இருந்தது. மேலும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகம் இரண்டு அணிகளாக பிரிந்து இருந்தது. ஒரு அணி சோவியத் யூனியனின் கீழ் பொது உடைமைக் கொள்கைக்காக திரண்டு இருந்தது. மற்றொரு அணி அமெரிக்காவின் கீழ் முதலாளித்துவக் கொள்கைக்காகத் திரண்டு இருந்தது. இந்நிலையில் எந்த ஒரு நாட்டின் மேலும் மற்றொரு நாடு நேரடியாகத் தாக்குதல் நடத்தினால் மீண்டும் ஒரு மாபெரும் யுத்தம் வெடிக்கும் அபாயம் இருந்து கொண்டே இருந்தது. எனவே நேரடியான யுத்தம் என்பது அனைத்து நாடுகளினாலும் இயன்ற அளவுத் தவிர்க்கப்பட்டே வந்து கொண்டு இருந்தது.

 

ஆனால் இங்கே தான் நாம் ஒரு விடயத்தினை காண வேண்டி இருக்கின்றது. பல நாடுகள் விடுதலை பெற்று விட்டன. விடுதலை என்றால்… அந்த நாடுகளை அந்த நாட்டினைச் சார்ந்தவர்களே ஆண்டு கொள்ளலாம்…அந்த நாடுகளின் வளங்களை அந்த நாட்டினைச் சார்ந்தவர்களே பயன் படுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு அந்த நாட்டின் மீதோ அல்லது அந்த வளங்களின் மீதோ யாதொரு உரிமையும் கிடையாது. இப்படி இருக்க அது வரை அரசுகளின் உதவியோடு அந்த நாட்டு வளங்களைச் சுரண்டி கொள்ளை இலாபம் ஈட்டிக் கொண்டு வந்த பெரு நிறுவனங்களுக்கு இத்தகைய ஒரு சூழல் இக்கட்டினைத் தரும் தானே.

 

அந்தந்த நாடுகளே அவைகளின் வளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் இந்த நிறுவனங்கள் எந்த வளங்களைச் சுரண்ட முடியும்? பின்னர் எவ்வாறு கொள்ளை இலாபத்தினை ஈட்டிக் கொள்ள முடியும்? முடியாதல்லவா…அங்கே தான் அந்த நிறுவனங்களுக்கு பிரச்சனை தொடங்குகின்றது. எக்காரணத்தினை முன்னிட்டும் அவைகளுக்கு அவைகள் ஈட்டும் இலாபத்தினையும் சரி அவைகளுக்கு உள்ள அதிகாரத்தினையும் இழக்க மனம் கிடையாது. ஆனால் அனைத்து நாடுகளும் சுதந்திரம் அடைந்தப் பின்பு இவர்களால் அந்த நாட்டின் வளங்களின் மேல் பழையக் காலம் போல் உரிமைக் கொண்டாட சட்டப்படி வாய்ப்பு இல்லாது போய் விட்டது. இந்நிலையில் அந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த வளங்கள் மேல் தாங்கள் செல்வாக்கினைப் பெற வேண்டுமானால்,

 

1) அந்த நாடுகளை மீண்டும் அடிமைப்படுத்த வேண்டும். அல்லது

2) அந்த நாட்டினை ஆள்பவர்கள் அவர்கள் நாட்டின் வளங்களை எடுத்துக் கொள்வதற்கு இந்த நிறுவனங்களுக்கு அனுமதியினை வழங்க வேண்டும்.

 

இவ்விரண்டு வழிகள் மூலமாக மட்டுமே அந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த வளங்களை அடைய முடியும்.

 

ஆனால் நாம் முன்னர் கண்டது போல நாடுகளை நேரடியாக யுத்தத்தின் வாயிலாக அடிமைப்படுத்துவது என்பது இயலாத ஒரு காரியமாகவே இருந்தது. காரணம் ஒரு சிறு இராணுவ நடவடிக்கைக் கூட ஒரு மாபெரும் போரினை தொடங்கி வைக்கக் கூடிய வல்லமை பெற்று இருந்தது என்று நாம் கண்டோம். அப்படி இருக்க ஒரு நாட்டினை மீண்டும் நேரடியாக அடிமைப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒரு காரியமாகவே இருந்தது.

 

இந்நிலையில் அந்த நிறுவனங்கள் மற்ற நாடுகளின் வளங்களை அடைய வேண்டும் என்றால் அந்த நாட்டினை ஆள்பவர்களே அந்த நிறுவனங்களுக்கு அவர்கள் நாட்டின் வளங்களைத் தர வேண்டும்…ஆனால் கூறுவதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் இது சாத்தியப்பட கடினமான ஒன்றாகும். காரணம் அந்த நிறுவனங்களின் தன்மையைக் குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்களும் நன்றாக அறிந்து வைத்து இருந்தனர். எனவே அந்த நிறுவனங்களுக்கு மீண்டும் அவர்களின் நாட்டினுள் அனுமதி அவர்கள் வழங்குவது என்பது எளிதில் நடவாததொரு காரியமே ஆகும்.

 

 

நிலைமை இப்படி இருக்க யுத்தங்கள் இல்லாது அந்த வளங்களை அந்த நிறுவனங்கள் அடைய வேண்டும் என்றால் வளம் உள்ள அந்த நாடுகளை ஆள்பவர்கள் இந்த நிறுவனங்களின் பேச்சினைக் கேட்பவர்களாக இருக்க வேண்டும்…அவ்வாறு இல்லாவிடின் அந்த நிறுவனங்களின் பேச்சினைக் கேட்பவர்கள் அந்த நாடுகளின் தலைவர்களாக கொண்டு வரப்பட வேண்டும். இந்த வழிமுறையினைத் தான் அந்த நிறுவனங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டன. இந்த வழிமுறையினை நடைமுறைப்படுத்த அந்த நிறுவனங்கள் அவற்றின் அரசின் உதவியோடு இரு வழிகளைப் பெருன்பான்மையாக கடைபிடித்து இருக்கின்றன என்பதனை வரலாற்றில் இருந்து நாம் காண முடிகின்றது.

 

1) மக்களால் தேர்ந்து எடுத்த தலைவர்களை கொன்றோ, அல்லது ஒரு இராணுவ புரட்சியினையோ கலகத்தையோ தோற்றுவித்து தமக்கு வேண்டாத தலைவர்களை நீக்கி தமக்கு உரித்தான தலைவர்களை ஆட்சியில் அமர வைத்தோ, அந்த நாடுகளின் மேல் தங்களின் பிடியினை அந்த நிறுவனங்கள் உறுதி செய்துக் கொள்கின்றன.

 

2) ஒரு நாட்டிற்கு அதனால் திருப்பித் தர இயலாத வண்ணம் கடனினை வழங்கி, அதனைக் கடன்கார நாடாக்கி பின்னர் அந்த நாட்டில் இருந்து உரிமையாக வளங்களையும் இன்ன பிற சலுகைகள் மற்றும் உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்றன.

 

மேலே உள்ள இரு வழிமுறைகளில் நாம் முதலாவது பற்றி ஓரளவு அறிந்து இருப்போம். அதாவது ஆட்சி மாற்றங்கள், புரட்சிகள் இவற்றைப் பற்றி செய்திகளில் எப்பொழுதாவது செய்திகள் வந்து இருக்கும்…நாமும் கண்டு இருப்போம். ஆனால் அந்த இரண்டாவது வழிமுறைதான் சற்று புதிதாக இருக்கின்றது. கேட்பதற்கு நம் நாட்டில் விளங்கும் கந்து வட்டி முறையினை போன்று தோன்றினாலும் அதெப்படி ஒரு நிறுவனம் ஒரு நாட்டிற்கு கடனினை வழங்கி அந்த நாட்டினை கடன்கார நாடாக்க முடியும்? ஒரு நாட்டினால் அதனால் ஒரு கடனைத் திருப்பித் தர இயலுமா அல்லது இயலாதா என்று அறியாத நிலையிலா கடனினை வாங்க முடியும்? போன்றக் கேள்விகள் எழத் தான் செய்கின்றன.

 

இக்கேள்விகளுக்குத் தான் ஜான் பெர்கின்ஸ் அவரது நூலில் விடையினைக் கூறுகின்றார்.

 

அவரின் கூற்றுப்படி இன்று எந்த ஒரு பேரரசும் மற்ற நாடுகளின் மீது நேரிடியாக தங்களது ஆதிக்கத்தை இராணுவத்தின் மூலம் வெளிப்படுத்த இயலாது இருக்கும் நிலையில், அந்த பேரரசுகள் அவைகளின் வணிக நிறுவனங்களின் மூலமே அவற்றின் செல்வாக்குகளைப் பெருக்கிக் கொள்கின்றன. அதாவது மற்ற நாடுகளின் வளங்களைக் கொள்ளைக் கொள்வதில் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களும் அந்த நாடுகளின் அரசுகளும் ஓரணியில் நின்றே செயல்படுகின்றன. அவற்றிற்கு துணையாக உலக வங்கியும் செயல்படுகின்றது என்பதும் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் முன் வைக்கும் வாதம் ஆகும். அதாவது அரசும் வணிக நிறுவனங்களும் தனித் தனியாக இயங்கிய நிலை மாறி இரண்டுமே ஒன்றாக இயங்கும் ஒரு நிலையே இன்று காணப்படுகின்றது என்று அவர் கூறுகின்றார். வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியலில் பதவிகள் வகிப்பதும், அரசில் பதவியில் இருப்பவர் வணிக நிறுவனங்களின் பங்குதாரராக இருப்பதும், அவர்களே உலக வங்கியிலும் இருப்பதும் அவர்களின் இந்த இயக்கத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது என்றே அவர் கூறுகின்றார்.

 

இத்தகைய நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்குச் சென்று தங்களால் மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு “உங்கள் நாட்டினில் நீங்கள் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என்றால் உங்களின் வளர்ச்சி இத்தனை வருடங்களில் இத்தனை சதவீதமாக உயரும்…மேலும் இந்த திட்டங்களுக்கு உங்களுக்கு கடன் கொடுக்க உலக வங்கியும் தயாராக இருக்கின்றது…இத்திட்டங்களை உங்களுக்காக உருவாக்கிக் கொடுக்கவும் எங்களது நாட்டு நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன” என்ற வாக்கு உறுதிகளைத் தந்து அந்த நாடுகளை கடன் வாங்க வைக்கின்றன. வளரும் அந்த நாடுகளும் அந்த புள்ளிவிவரங்களை நம்பி கடன் வாங்க ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கடன் பெற்றுத் தொடங்கிய அந்தத் திட்டங்களால் கணிக்கப்பட்ட அளவு வளர்ச்சி கிட்டாததால், வாங்கிய கடனை திருப்பித் தர இயலாது வெறும் வட்டியினை மட்டுமே கட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளும் நிலைக்கு அந்த நாடுகள் வருகின்றன என்றும் அந்த நிலையினை பயன்படுத்தி வளர்ந்த நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும் அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக் கொள்ள தொடங்குகின்றன என்றும் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் கூறுகின்றார்.

 

இன்றைய உலகில் நிகழும் நிகழ்வுகளையும், இவர் இவரது நூலினில் குறிப்பிட்டு இருக்கும் வரலாற்று நிகழ்வுகளையும் சற்றுக் கவனிக்கும் பொழுது இவரின் இந்தக் கூற்றானது சரியானதான ஒன்றாக இருக்கக் கூடும் என்றே நாம் எண்ண முடிகின்றது. நிற்க

 

இன்றைய நிலையில் உலகமயமாக்கல் என்றப் பெயரில் என்ன நடந்துக் கொண்டு இருக்கின்றது என்று விரிவாக அறிய விரும்புவோர் நிச்சயமாக இந்த புத்தகத்தினைப் படிக்கலாம். உலகை நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு கோணத்திற்கான சாளரத்தினை இந்தப் புத்தகம் திறந்து வைத்தாலும் வைக்கலாம்.

முன்னுரை முதற்பதிவு: வழிப்போக்கனின் உலகம்

நூலை தரவிறக்க

பின்குறிப்பு: தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் வேண்டுகோளை ஏற்று இந்நூல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. உரியவர்களிடமிருந்து மறுப்பு வந்தால் முன்னறிவிப்பு இன்றி தரவிறக்க இணைப்பு நீக்கப்படும். 

29 thoughts on “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

  1. மிக்க நன்றி தோழரே. முக்கியமான இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துகொண்டேன்.

  2. ஐயா எனக்கு தனிப்பட்ட முறையில் ” பொருளாதார அடியாளின் வாக்குமூலம் ” ஜான் பெர்க்மான்ஸ் எழுதிய நூலின் PDF format அனுப்புங்கள் .
    மிக்க நன்றி…

  3. எனக்கு தனிப்பட்ட முறையில் ” பொருளாதார அடியாளின் வாக்குமூலம் ” ஜான் பெர்க்மான்ஸ் எழுதிய நூலின் PDF format அனுப்புங்கள் .
    மிக்க நன்றி…

  4. நண்பர்களுக்கு,

    தனிப்பட்ட முறையில் அனுப்புமாறு கோரியுள்ளீர்கள். இங்கு தரவிறக்கிக் கொள்வதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தெரிவியுங்கள். சரி செய்கிறேன். மாறாக தனிப்பட்ட முறையில் அனுப்புதல் இயலாது. புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.

  5. மிக்க நன்றி! தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்………

  6. வணக்கம் தோழரே எனக்கும் இந்த புத்தகம் Pdf அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  7. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகம் pdf வடிவில் அளிக்கவும்.

  8. நண்பர்களே,

    இங்கு மின்னூல் (பிடிஎஃப்) வடிவில் தான் இந்த நூல் இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தரவிறக்கிக் கொள்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? இருந்தால் தெரியப்படுத்துங்கள் சரி செய்கிறேன். அல்லது தனிப்பட்ட முறையில் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு தகுந்த காரணம் கூறுங்கள்.

    புரிதலுக்கு நன்றி

  9. எனக்கு தனிப்பட்ட முறையில் ” பொருளாதார அடியாளின் வாக்குமூலம் ” ஜான் பெர்கின்ஸ் எழுதிய நூலின் PDF format அனுப்புங்கள் .

  10. நண்பர்களே,

    மீண்டும் கூறுகிறேன், இங்கு மின்னூல் (பிடிஎஃப்) வடிவில் தான் இந்த நூல் இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தரவிறக்கிக் கொள்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? இருந்தால் தெரியப்படுத்துங்கள் சரி செய்கிறேன். அல்லது தனிப்பட்ட முறையில் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு தகுந்த காரணம் கூறுங்கள்.

    புரிதலுக்கு நன்றி

  11. ஐயா எனக்கு தனிப்பட்ட முறையில் ” பொருளாதார அடியாளின் வாக்குமூலம் ” ஜான் பெர்க்மான்ஸ் எழுதிய நூலின் PDF format அனுப்புங்கள் .
    மிக்க நன்றி…
    novoraja@gmail.com

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்