அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் வெளியிடப்பட்டதற்கு இது 150 -வது ஆண்டு. அந்நூலில் பாட்டாளி வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து மார்க்ஸ் வெளியிட்ட கணிப்பை மெய்ப்பித்தது ரசியப் புரட்சி. அந்த ரசிய சோசலிசப் புரட்சிக்கு இது 100-வது ஆண்டு.
ஆலைகள் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படுமானால், அரசு அதிகாரம் தொழிலாளர்கள், விவசாயிகளின் கைக்கு மாறுமானால் ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த இயலும் என்பதை ரசிய சோசலிசம் நிரூபித்துக் காட்டியது.
பட்டினியும் வேலையின்மையும் உழைப்புச் சுரண்டலும் லஞ்ச ஊழலும் தற்கொலைகளும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் தலைவிரித்தாடும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘‘இதுதான் நியதி” என்று அடங்கிப் போகுமாறு நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். இந்த அநீதிகள் அனைத்தும் முதலாளித்துவ சமூகத்தின் நியதிகள் என்றும் இவற்றைத் தொழிலாளி வர்க்கத்தால் மாற்ற முடியும் என்றும் பிரகடனம் செய்தார் மார்க்ஸ். லெனின் தலைமையில் சமூகத்தை அவ்வாறு மாற்றிக் காட்டினார்கள் ரசிய மக்கள்.
1917 புரட்சிக்குப் பின், மக்களின் உணவு, வீடு, கல்வி, மருத்துவம், வேலை ஆகிய அனைத்துக்கும் சோசலிச அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. அந்தச் சமூகத்தில் அநாதைகள் இல்லை, விலைமாதர்கள் இல்லை, ஆதரவற்ற முதியோர் இல்லை. பெண் கல்வி – சமமான வேலைவாய்ப்பு, பேறுகால விடுப்புகள், அனைவருக்கும் ஓய்வூதியம், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை, இனங்களுக்குப் பிரிந்து போகும் உரிமை – என மேற்குலக நாடுகள் சில நூற்றாண்டுகளில் சாதிக்க முடியாதவற்றையெல்லாம் சில பத்தாண்டுகளில் சாதித்துக் காட்டியது சோசலிசம். அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிகையாளர்கள் முதல் தமிழகத்தின் பெரியார், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் வரையிலான பலரும் நேரில் கண்டு பாராட்டிய உண்மைகள் இவை.
ஆலைகள் முதல் விளைநிலங்கள் வரையிலான உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் சமூகத்தின் உடைமையாக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரம் நிலைநாட்டப்படுமானால், ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்கும் உண்மைகள் இவை.
ரசிய சோசலிச அரசு உலகெங்கும் காலனியாதிக்கத்துக்கு எதிராக மக்கள் நடத்திய விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தது. சுமார் 2 கோடிக்கும் அதிகமானோரை பலி கொடுத்து இட்லரின் பாசிச ஆட்சியிலிருந்து உலகைக் காப்பாற்றியது. சீனா உள்ளிட்ட பல நாடுகளில் புரட்சி வெல்வதற்கும், மூன்றாம் உலக நாடுகள் சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைப்பதற்கும் உதவியது.
இத்தகைய சாதனைகளை நிகழ்த்திய ரசியாவிலும் பிற சோசலிச நாடுகளிலும் மீண்டும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது என்பது உண்மைதான். தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிவர்க்கத்துக்கும் இடையிலான போரின் ஒரு சுற்றில் தொழிலாளி வர்க்கம் தோற்றிருக்கிறது. இத்தகைய தோல்விகள் எதிர்பாராதவையல்ல, இதுவே இறுதிச் சுற்றுமல்ல.
ஆனால் இது தங்களது ‘இறுதி வெற்றி’ என்று கொண்டாடியது உலக முதலாளித்துவம். 1990 -களின் துவக்கத்தில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையைத் திணித்த உலக முதலாளி வர்க்கத்தினர், ‘‘சித்தாந்தங்களின் முடிவு, நாகரிகத்தின் முடிவு” என்று களிவெறிக் கூச்சல் எழுப்பினர். ஆனால், அக்கூச்சல் அடங்குவதற்குள் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கெதிரான மக்கள் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. 2008 சப்-பிரைம் மோசடி, உலக முதலாளித்துவக் கட்டமைப்பே தீர்க்கவியலாத நெருக்கடியில் சிக்கியிருப்பதைக் காட்டியது.
உலக முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டிலேயே ‘‘முதலாளித்துவம் ஒழிக” என்று லட்சக்கணக்கான மக்கள் குரலெழுப்பினர். முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களும் கூட மார்க்சின் மூலதனம் கூறும் கசப்பான உண்மைகளை அங்கீகரித்து விழுங்க வேண்டியதாயிற்று.
‘‘சுரண்டப்படும் உழைப்பின் உபரி மதிப்பு மூலதனமாக எந்த அளவுக்குக் குவிகிறதோ, அந்த அளவுக்குத் தொழிலாளர்களின் ஊதியம் குறையும் – வேலையின்மையும் அதிகரிக்கும்” என்றார் மார்க்ஸ். இன்று தொழிலாளி வர்க்கமே காண்டிராக்ட் தொழிலாளிகளாக மாற்றப்படுகிறது; ஊதியம் வீழ்கிறது; சந்தை சுருங்குகிறது. ‘‘தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பிறகு இந்தியாவில் உருவாகியிருக்கும் பில்லியனர் (கோடீஸ்வரர்) ராஜ்யத்தில்தான், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தைவிட ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகியிருக்கின்றன” என்று கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.
இதுவும் போதாதென்று கார்ப்பரேட்டுகளுக்கு நிலமும், நீரும், மின்சாரமும், கடனும், மானியமும் கொட்டிக்கொடுக்கிறது மோடி அரசு, ஆனால் வேலைவாய்ப்பைக் காணோம். இருக்கின்ற வேலைவாய்ப்பையும் பறிக்கும் வகையில் தொழில்துறை, ஐ.டி துறை ஆகிய அனைத்தும் தானியங்கி மயமாக்கப்படுகின்றன. மோடி அரசின் பணமதிப்பு அழிப்பும், ஜி.எஸ்.டி திணிப்பும் சிறு தொழில்களையும், சிறு வணிகத்தையும் அழித்து, அவற்றை கார்ப்பரேட் மூலதனம் விழுங்குவதற்கு வழி செய்து தருகின்றன.
விவசாயிகளின் தற்கொலை, கந்துவட்டியால் தற்கொலை, கல்விக்கடன் தற்கொலை, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவிகள் தற்கொலை – மதிப்பெண் பெறாத மாணவிகளும் தற்கொலை, விளைச்சல் பொய்த்து விவசாயி தற்கொலை – மிதமிஞ்சி விளைந்தும் விலை கிடைக்காமல் தற்கொலை, வேலையற்றோரின் தற்கொலை – மிகை உழைப்பால் மரணங்கள்… என மூலதனத்தின் பலிபீடத்தில் மக்களின் உடல்கள் குவிகின்றன.
வரிகள், வேலையின்மை, கல்வி – மருத்துவ – ரேசன் மானிய வெட்டுகள், சுற்றுச்சூழல் அழிவு என்று எத்தகைய பிரச்சினைகளைப் பட்டியலிட்டாலும் அவை அனைத்துக்கும் உலக முதலாளித்துவம்தான் மூலகாரணமாக இருக்கிறது. முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க, சுரண்டலை மூர்க்கமான முறையில் நடத்தித் தருவதற்கான கையாட்களாக, மோடி போன்ற பாசிஸ்டுகள் ஆளும்வர்க்கத்தால் முன்தள்ளப்படுகிறார்கள்.
எனினும் முதலாளித்துவத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதென்பது எந்த தேவனாலும் சாத்தானாலும் இயலாத காரியம். அதன் அழிவு தவிர்க்கவியலாதது. அவ்வாறு அழிந்துபடும்போது அது மனிதகுலத்தையும், இந்தப் புவிப்பரப்பையும் தன்னோடு படுகுழிக்குள் இழுத்துச் செல்லுமா, அல்லது அதற்கு முன் முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து மனிதகுலம் தப்புமா என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை ‘‘மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும்” என்றார் மார்க்ஸ்.
தன்னுடைய அரசமைப்பின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதில் முதலாளித்துவத்தால் வெற்றிபெற முடியவில்லை. எனினும் அடைமழை போன்ற பொய்ப்பிரச்சாரத்தின் மூலம் கம்யூனிசத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அந்த அவநம்பிக்கையின் நிழலில் முதலாளித்துவம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் மீதான மக்களின் வெறுப்பை, சோசலிசத்தின் மீதான விருப்பமாக நாம் மாற்ற வேண்டும்.
‘‘இதுகாறும் தத்துவஞானிகள் இந்த உலகத்தை பலவாறாக வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். எனினும் விசயம் என்னவென்றால் உலகை மாற்றியமைப்பதுதான்” என்று தனது 27 வயதில் பிரகடனம் செய்தார் கார்ல் மார்க்ஸ். உலக முதலாளித்துவத்துக்கு எதிரான போரின் அடுத்த சுற்றைத் தொடங்குவதற்கு, மார்க்ஸ் நமக்கு விடுத்திருக்கும் அழைப்பாக இப்பிரகடனத்தை எடுத்துக்கொள்வோம்!
முதற்பதிவு: வினவு