கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..

dc566bee2e17ac7248ca4067e2f1c7d4

 

முன்குறிப்பு: கற்புக் கொள்ளையன் பீஜே எனும் தலைப்பில் கற்பு எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், கற்பு எனும் சொல்லின் பொருளை, அந்தச் சொல் கட்டியமைத்திருக்கும் பண்பாட்டுப் பொருளை ஏற்றுக் கொண்டிருப்பதால் அந்தச் சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதல்ல. கற்பு எனும் சொல் ஆணாதிக்கத்தினால் பெண்களின் மீது பெருஞ்சுமையாக சுமத்தப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இன்று கற்புக் கொள்ளையர்கள் தினம் என்று சுவரொட்டி ஒட்டி, பேசி, எழுதி காதலையும் பெண்களையும் ஒருசேர இழிவுபடுத்திய இயக்கமான த.த.ஜ எனும் இயக்கத்தின் தலைவன், பிறரின் மனைவியரை கொள்ளையிடுபவனாக இருந்திருக்கிறான் என்பதை நினைவூட்டவே அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பி.ஜெய்னுலாப்தீன் எனும் பீஜே என்பவர் மீது பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த பாலியல் குற்றச்சாட்டு, அந்தக் காலம் தொடங்கி நேற்றுவரை அவராலும், அவரின் இயக்கமான த.த.ஜ (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்) வினராலும் மறுக்கப்பட்டு, சமாளிக்கப்பட்டு, முட்டுக் கொடுக்கப்பட்டு வந்த அந்த பாலியல் குற்றச்சாட்டு இன்று மறுக்க முடியாதபடி அவர் வாயாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது இவ்வாறு ஒப்புக் கொண்டிருப்பது என்பது தவறு செய்து விட்டோம் எனும் குற்ற உணர்வினாலோ, அவர்களே சொல்லிக் கொள்வது போல இறை மீதான அச்சத்தினாலோ, குற்றச்சாட்டு வந்து விட்டது என்பதனாலோ, ஆதாரபூர்வமாக வெளிப்பட்டுவிட்டது என்பதாலோ அல்ல. இதற்கு மேலும் நாம் தொடர்ந்து அமைதியாக இருந்தால் இனும் என்னென்ன பூதங்களெல்லாம் ஆதாரபூர்வமாக வெளிவருமோ எனும் அச்சத்தினால் மட்டுமே – அதாவது இன்னும் பல பாலியல் வக்கிரங்கள் ஆதாரபூர்வமாக வெளிப்பட்டு வெளியே தலைகாட்ட முடியாமல் போகும் நிலையை ததஜ வுக்கு ஏற்படுத்தி விடுமோ எனும் அச்சத்தினால் மட்டுமே – ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற பாலியல் ஒழுங்கு மீறல்கள் சமூகத்தில் புதியவை அல்ல. என்றால் இதில் பி.ஜே வை மட்டும் ஏன் குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

முதலில் ததஜவினர் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கலாம். ததஜவில் பாலியல் ஒழுங்கு மீறல் என்பது புதியது அல்ல. பாக்கர் தொடங்கி பக்கிர் வரை தொடர்ந்து கொண்டிருப்பது தான். ஆனால் பாக்கர் தொடங்கி பக்கிர் அல்தாபி வரை எவ்வாறு நடந்து கொண்டார்களோ அதேவிதத்தில் பிஜே தொடர்பில் நடந்து கொள்ளவில்லை. முடிந்தவரை வெளியில் தெரியாமல் முடக்கிவிடவே முயன்றார்கள். எல்லா விதத்திலும் இப்படித்தான் அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் வெளியில் தெரிந்தால் இயக்கத்தின் மதிப்பு பாதிக்கப்படும் என்பதால் வேறு ஏதோ ஒரு கரணத்தைக் கூறி நடவடிக்கை எடுத்து ஒதுக்கி வைக்கிறோம் என்றும் கூறிக் கொள்வார்கள். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இது வெளிவந்து கொண்டே இருக்கிறது. எப்படி வெளிவருகிறது என்றால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே மறைமுகமாக இதை வெளியே கசிய விட்டு விடுவார்கள். ஏனென்றால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வெளியேற்றப்படும் ஒருவர், வெளியில் சென்ற பிறகு உள்ளிருப்பவர்கள் குறித்த உண்மைகளை வெளியிட்டு விட்டால் என்ன செய்வது? அதற்காக, அவ்வாறு வெளியில் தெரியும் முன்னர், வெளியேறுவோரை களங்கப்படுத்தி விட்டால், பின்னர் குற்றச்சாட்டு வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்பதற்காக அவ்வாறு மறைமுகமாக கசிய விட்டு விடுவார்கள். முன்னர் வெளியேறிய பலர் இவ்வாறான களங்கப்படுத்தலுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர, தன்னிலை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்களே தவிர, இப்படி மறைமுகமாய் கசிய விடப்படுவதை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. அதேநேரம் ததஜவினர் வெளியேறியோரை கடுமையாக தூற்றுவார்கள். ததஜவினரின் முகநூல் கணக்குகளை எடுத்துப் பார்த்தால் இவ்வாறு தூற்றுவதில் அவர்கள் புதிய இலக்கணமே படைத்திருப்பதைக் கண்டு கொள்ளலாம்.

ஆனால், இவைகளுக்கு மாறாக பக்கீர் அல்தாபி இயக்கத்தின் உயர்குழுவில் பேசப்பட்ட ஒன்று எப்படி சமூக வலைதளங்களில் வெளிவந்தது? இதற்கு யார் பொறுப்பேற்பது? எப்படி யாரால் வெளிவந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டாமா? என்றெல்லாம் பொங்கியதற்கு இன்றுவரை ததஜவினர் பதில் கூறவில்லை. மட்டுமல்லாமல் முந்தியவர்களைப் போலல்லாமல் அல்தாபி கேள்வி கேட்ட ததஜவின் நிர்வாகத்தில் நடக்கும் ஊழல் உள்ளிட்ட பல முறைகேடுகள் ததஜவினரிடமே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனோடு இணைந்து பிஜே வுக்கு எதிராக வெளியான மூன்று கேட்பொலிகளும் (ஆடியோ) ததஜ வை ஆட்டம் காணச் செய்தது. மட்டுமல்லாது பிஜே மீது தொடக்க காலங்களில் கொலை செய்யத் தூண்டிய குற்றச்சாட்டுகளும் உண்டு. அவைகளெல்லாம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பன தனிக் கதை.

வழக்கமாக இது போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள் வெளிப்பட்டால் தொடர்புடையவரை அழைத்து விசாரிப்பார்கள். மறுத்தால் உண்மையா என சோதித்தறிவார்கள் அப்போதும் மறுக்கப்பட்டால் முபாஹலாவுக்கு அழைப்பார்கள். முபாஹலா என்பது அல்லாவின் சாபத்தைக் கோருதல். அதாவது இறுவேறு நிலைகளில் உண்மையை கண்டறிய முடியாவிட்டால் யார் பொய் சொல்கிறார்களோ அவர்கள் மீது அல்லாவின் சாபம் உண்டாகட்டும் என்று பொது இடத்தில் மக்களைக் கூட்டி இருவரும் சபதம் செய்வது. தெளிவாகச் சொன்னால் பிரச்சனையை அல்லாவின் பக்கம் தள்ளி விடுவது. பிஜே வைப் பொருத்தவரை இவை எதுவுமே நடக்கவில்லை. ஏன்? மட்டுமல்லாது அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கிய காலம் தொடங்கி நேற்று வரை அவ்வாறு குற்றச்சாட்டு கூறுவோரை மிக இழிவாக, ஆபாசமான வசைச் சொற்களை கொட்டி முழக்கினார்கள். தொடர்ச்சியாக மறுக்கவே முடியாத படி கேட்பொலிகள் வெளி வந்தன. மிமிக்ரி என்றார்கள். குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் வெளியானதும் எகிறிக் குதித்தார்கள். எங்களிடம் ஆதரம் இருக்கிறது முடிந்தால் வழக்கு தொடுக்கலாம் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம் என்றதும் மடையை அடைத்தது போல் அமைதியாகி விட்டார்கள். இவைகள் எல்லாமே அந்த கேட்பொலிகள் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்த, அவர் மாபெரும் அறிஞர் அவரை நாங்கள் நம்புகிறோம் என்றார்கள். இப்படி ததஜ வினர் பிஜேவுக்கு முட்டுக் கொடுத்தது முன்வரலாறு இல்லாதது. அந்த இயக்கத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவருக்குமே இவர்கள் இப்படி நடந்து கொண்டதே இல்லை. ஆனால் இன்று தவிர்க்கவே முடியாமல் நடவடிக்கை எடுத்ததும், எங்களுக்கு எல்லாருமே ஒன்று தான் தவறு செய்தால் தூக்கி வீசிவிடுவோம் என்று ‘பஞ்ச் டயலாக்’ பேசுகிறார்கள். இறுதி நபி முகம்மது என்று வாயால் சொல்லிக் கொண்டே பிஜே வை அடுத்த நபியாக நடைமுறையில் காட்டினார்கள்.

மாபெரும் அறிஞர் என்று கூறும் அளவுக்கு அப்படி என்ன மேலோங்கிய அறிவு இருந்தது அவருக்கு? சிறு சிறு வெளியீடுகளாக பல வெளியீடுகளை எழுதியிருக்கிறார். குரானை மொழி பெயர்த்திருக்கிறார். குரானில் அறிவியல் என்பதை தமிழுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் அவ்வளவு தானே. அவருடைய எழுத்துகள் எதிலாவது அவருடைய சொந்த முயற்சியில் ஆய்வு செய்து கண்டடைந்தது என ஏதாவது உண்டா? அத்தனையும் செய்யது குதூப் எனும் எகிப்தியரின் சிந்தனைகள். அவரின் சிந்தனையை, அவரின் முடிவுகளை தன்னுடைய மொழியில் எளிமைப்படுத்திக் கூறியது மட்டுமே பிஜேவின் பணியாக இருந்தது. இதில் அறிவுச் செருக்கு கொள்ள என்ன இருக்கிறது? செய்யது குதூப் எழுதிய நூலை திருக்குரானின் நிழலில் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்த பிஜேவின் அண்ணன் பி.எஸ் அலாவுதீன் அவர்களின் நூலை வாசித்திருந்தால் புரியும். பிஜேவின் தொடக்கப் புள்ளி எது என்று.

இன்றும் பிஜேவுக்கு முட்டுக் கொடுப்பதற்காக “ஆதமின் மக்கள் தவறு செய்யக் கூடியவர்களே .. .. ..” (திர்மிதி 2423)  எனும் ஹதிஸை முன்வைத்து வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தவறு செய்யக் கூடியவர்கள் என்றால் எதுவரை? உலக முடிவு நாள் வரை. என்றால் குரான் ஹதீஸ்களின் பணி என்ன? மக்களை நேர்வழிப் படுத்துவது இல்லையா? எப்போதும் தவறு செய்யும் நிலையிலேயே தான் கடைசி நாள் வரை மனிதர்கள் இருப்பார்கள் என்று முடிவு செய்து விட்டு இஸ்லாம் மக்களை நல்வழிப்படுத்தும் என்பது முரண்பாடாக இல்லையா? இதன் பொருள் என்ன? இஸ்லாம் மக்களை நேர்வழிப் படுத்துவதற்காக வந்ததில்லை, மாறாக அல்லா எவ்வாறு நினைக்கிறானோ அதன்படி மக்களை நடக்கச் செய்வது மட்டுமே இஸ்லாத்தின் பணி என புரிந்து கொள்ளலாமா? இதன் அடிப்படையில் பிஜே செய்த இந்த பாலியல் வக்கிரங்களை எப்படி புரிந்து கொள்வது? இது போன்ற பாலியல் வரம்பு மீறல்கள் குறித்து இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

இஸ்லாம் ஆணாதிக்கப் பார்வையோடு தான் பெண்களை அணுகுகிறது என்பது நேர்மையாக சிந்தித்துப் பார்க்கும் எவருக்கும் புலப்படும். சட்டரீதியாக நான்கு திருமணமும் அதற்கு அப்பாற்பட்டு எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தானே இஸ்லாத்தின் நிலை. பணம் இருந்தால் புகுந்து விளையாடு, இல்லாவிட்டால் நோன்பு நோற்று உன் இச்சையத் தணித்துக் கொள் என்பது தானே ஹதீஸ்களின் வழியாக நாம் அறிவது. இதைத்தானே பிஜே வும் செய்திருக்கிறார். என்ன தற்போது அடிமை முறை கிடையாது என்பதனால், குரானுக்கு விளக்க உரை எழுதிய தகுதி தனக்கு இருக்கிறது என்பதால் உதவி தேடி வரும் பெண்களை தன்னுடைய அடிமைகள் என்பதாக கருதிக் கொண்டார் பிஜே. அவ்வளவு தானே வித்தியாசம். இதற்காகத் தான் பிஜே விலக்கப்பட்டிருக்கிறார் என்றால், இஸ்லாத்தின் வரலாற்றில் எத்தனை பேரை நீக்குவது? ஏன் முகம்மது நபியையே நீக்க வேண்டியதிருக்குமே.

அஷ்ஷவ்த் தோட்டத்தில் நடந்த கூத்தை புஹாரி 5255 விளக்குகிறதே இதன் பொருள் என்ன என்பதை படித்தவர்கள் யாரும் விளக்குவார்களா? முகம்மது தேன் குடித்த கதையை குரான் தஹ்ரீம் அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் விளக்குகிறதே குரானில் கரை கண்டவர்கள் யாரேனும் இதில் ஒழிந்திருப்பதை எடுத்துக் கூறுவார்களா? இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக குரான் வசனம் 33:52 முகம்மது நபியை போதும் நிருத்திக் கொள் என்று கட்டளை இடுகிறதே. எதை நிறுத்தச் சொல்கிறது என்று யாரேனும் ஆய்வு செய்து முடிவை அறிவிப்பார்களா? இன்று பிஜே செய்ததை தானே அன்று முகம்மது நபியும் செய்திருக்கிறார். பிஜேவை நீக்கியவர்கள் முகம்மது நபியை என்ன செய்வார்கள்? தான் உருவாக்கிய தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பிஜேவை நீக்கியவர்கள், முகம்மது உருவாக்கிய இஸ்லாத்திலிருந்தே முகம்மது நபியை நீக்கி விடுவார்களா?

இதை இங்கு கேள்விகளாக எழுப்புவதன் காரணம் பாலியல் வக்கிரங்கள் குறித்து இஸ்லாம் என்ன கருத்து வைத்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு மட்டுமே. படிப்பவர்களை கோபப் படுத்துவதற்காக அல்ல, அவர்களை சிந்திக்கச் செய்வதற்காக மட்டுமே. இஸ்லாத்தை அதன் துயவடிவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு போதித்த, மக்களால் போற்றப்பட்ட பிஜே, எவ்வாறு தனக்குள் இவ்வளவு பாலியல் வக்கிரங்களை சுமந்திருந்தார் என்பதற்கான விடை இதில் தான் இருக்கிறது.

உலகிற்கு ஒழுக்கத்தை போதிக்க வந்ததாக கூறப்படும் அத்தனை மதங்களும் அதனை போதிப்பவர்களும் செய்யும் தவறுகள் எதை உணர்த்துகின்றன? ஆதமுடைய மக்கள் தவறு செய்பவர்களே என்று கடந்து செல்வதையா? அல்ல, மனிதர்களின் ஆணாதிக்கத்துக்கும் வக்கிரங்களுக்கும் வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதையே உணர்த்துகின்றன. மனிதனின் சிந்தனைகள் சமூகத்திலிருந்தே பிறக்கின்றன. இந்த சமூகம் சீரழிவாக இருக்கும் போது, இந்த சமூகம் தனியுடமையில் சிக்கி இருக்கும் போது, இந்த சமூகம் பெண்களை ஆண்களின் சொத்தாக பார்க்கும் போது, இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருக்கும் போது அந்த சமூகத்தின் போக்கில் வளரும் மனிதன் பெண்களை தன்னையொத்த சம பிறப்பாக எண்ணுவது என்பது இயல்பாக இருக்க முடியுமா? அதனால் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லை மீறி விடுகிறான். இது ஆதமுடைய சந்ததிகளாக இருப்பதால் நடக்கவில்லை. மாறாக இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பதால், ஆணாதிக்க சமூகமாக நீடிப்பதால் நடக்கிறது. இதை மதங்கள் போதிக்கும் நீதி போதனைகளால் ஒரு போதும் கட்டுப்படுத்தவோ மாற்றியமைக்கவோ  முடியாது. இதற்கு பிஜேவைத் தவிர வேறு எடுத்துக்காட்டுகள் வேண்டுமா? குரானின் சட்டங்கள், அது அளிப்பதாக கூறும் தண்டனைகள் இன்ன பிறவைகள் எல்லாம் நம்மை விட பிஜேவுக்கு மிக நன்றாக தெரியும். தெரிந்திருந்தும் எவ்வாறு அவரால் துணிந்து இதை செய்ய முடிகிறது? அதை வெறு வழியில்லை என்றாகும் வரை மறைக்க முடிகிறது? தன்னளவில் பிஜே அல்லாவை மறுத்திருக்கிறார் என்பது அல்லவா உண்மை. தேவநாதன்களுக்கு ஒருபோதும் கடவுளின் மீது பயம் இருக்காது. சமூகத்தின் ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவுகளில் தேவநாதன்களே, பிஜேக்களே.

உலகம் முழுவது கணந்தோறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆசிபா போன்ற கொடூரங்கள் மட்டுமே வெளியில் தெரிகின்றன. மலையளவான இந்த கொடூர வக்கிரங்களில் பிஜேவின் வக்கிரம் ஒரு துளி. இந்த சமூகத்தை இந்த சமூக ஒழுங்குகளை அப்படியே வைத்துக் கொண்டு பாலியல் வக்கிரங்களை நம்மால் ஒழித்துவிட முடியாது. மதங்களின் வேத உபநிடதங்களின் நீதி போதனைகள் ஒரு பலனையும் தராது என்பது தான் யதார்த்தம். இந்த இந்த வக்கிரங்களையும் இது போன்ற கொடூரங்களையும் ஒழிப்பதற்கு என்ன தான் வழி? உற்பத்தி முறையை மாற்றுவதன் வழியில் இந்த சமூகத்தை மாற்றுவது ஒன்றே வழி. இது மட்டுமே அறிவியல் பூர்வமான ஒரே வழி. இதற்குப் பெயர் தான் கம்யூனிசம். இந்த சமூகத்தை மனிதர்களை இயற்கையை கனிம வளங்களை அனைவருக்கும் பொதுவான அனைத்தையும் காக்க வேண்டும் என நீங்கள் விருப்பபட்டால் கம்யூனிசத்தை தாண்டி வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்.

முகம்மது நபியை பின்பற்றுவதில் நீங்கள் பற்றார்வம் கொண்டிருப்பவர்கள் என்பதால் இதையும் நீங்கள் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். முகம்மது நபி அழகிய முன்மாதிரி என்றால் அவரிடமிருந்து எதை பின்பற்றுவது? எப்படி முகம் கழுவ வேண்டும்? எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும்? எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிடக் கூடாது? இது போன்ற அன்றாட நடைமுறையின் வெகு சாதாரணச் செயல்களை செய்வதற்கு மட்டும் தான் முகம்மது நபியின் முன்மாதிரி தேவையா? அல்லது வட்டி வாங்காதே, திருடாதே போன்ற நீதி போதனைகள் முகம்மது நபி இல்லாவிட்டால் உங்களால் அறிந்து கொள்ளவே முடியாதா? எந்த அடிப்படையில் அவர் முன் மாதிரி? பசியுள்ள மனிதனுக்கு உணவைக் கொடுப்பதை விட உணவை சம்பாதிப்பதற்கான வழியைக் காட்டுவதே சிறந்தது அல்லவா? என்றால் முகம்மதின் முன்மாதிரி எதில் இருக்கிறது? அவர் செய்ததை அப்படியே செய்வதில் முன்மாதிரி இருக்கிறதா அல்லது அவரின் சிந்தனை முறையை பயன்படுத்தி நாம் சிந்திப்பதில் முன்மாதிரி இருக்கிறதா? தன்னுடைய காலகட்டத்திற்கு எது புரட்சிகரமான சிந்தனையோ அந்தச் சிந்தனையை முகம்மது கொண்டிருந்தார். இஸ்லாமியர்களே! இந்த அடிப்படையில் முகம்மதை முன்மாதிரியாகக் கொள்ள நீங்கள் தயாரா? அது ஆண்டான் அடிமைக் காலகட்டம் என்பதால் அடிமைகளுக்கு அதிகம் தொந்தரவு கொடுக்காத ஒரு அரசு முறை குறித்து அவர் சிந்தித்தார். அதற்கான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தார், அது ஆறாம் நூற்றாண்டு இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு. இது முதலாளித்துவக் காலகட்டம். இந்த முதலாளித்துவ உலகில் கம்யூனிசமே புரட்சிகரச் சிந்தனை. நீங்கள் முகம்மதை பின்பற்ற விரும்புகிறீர்களா? என்றால் நீங்கள் கம்யூனிசம் குறித்து தெரிந்திருக்க வேண்டும். கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?

 

தொடர்புடைய பதிவு:

அல்தாபி பிஜே சாக்கடைகளை விலக்கி .. .. ..

1 thoughts on “கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..

  1. தலையை விட்டு வாலைப் பிடிக்கும் வேலையைத்தான் செய்து இருக்கின்றார்கள். முஹம்மது நபியை விட்டுவிட்டு, PJ இற்கு எதிராக விசாரணை நடத்துவதில் என்ன லாபம்?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்