இந்திய சீனப் போர்

இந்தியாவும் சீனாவும் எல்லைகளில் படையை குவித்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 1962ல் நடந்த இந்திய சீனப் போர் குறித்து அறிந்து கொள்வது தேவையாக இருக்கிறது. இன்று இரு நாடுகளிடையே இருக்கும் முறுகலான இந்த சூழலில் ஊடகங்களில் இரண்டு பக்க செய்திகளும் இடம்பெறுகிறதா என்றால் கேள்விக்குறிதான். அது மட்டுமல்ல, சீனா பக்க செய்தியை வெளியிட்டால் அது தேச விரோதமான செய்தியாக தேச விரோத ஊடகமாக பார்க்கப்படும் அளவுக்கு இங்கு சூழல் திட்டமிட்டு கெடுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களின், உயர் அலுவலர்களின் உணர்ச்சியேற்றும் பேச்சுக்களே வரலாறுகளாக, வெளியுறவுக் கொள்கைகளாக ஊடகங்களால் பரப்பப்படுகிறது. பெரும்பாலான மக்கள் அதை மட்டுமே படிக்கும் படியான, அதை மட்டுமே தெரிந்து கொள்ளும் வழியாக ஆக்கி வைத்திருப்பது மக்களின் துயரமே.

இந்த சூழலிலிருந்து மாறுபட்டு ஓரளவுக்கு தரவுகளின் அடிப்படையில் 1962 இந்திய சீனப் போர் குறித்து பேசும் நூல் இது. ஓரளவுக்கு என்றால் ஓரளவுக்குத் தான். சீனா குறித்த தரவுகள் தனக்கு அதிகம் கிடைக்கவில்லை என்று ஆசிரியரே குறிப்பிட்டிருக்கிறார். இந்த நூலின் தலைப்பே India’s china war என்று தான் இருக்கிறது. அதாவது இந்தியாவின் சீனப் போர். ஆனால் அதே நேரம் சீனாவின் பக்கமுள்ள தரவுகளும் தவறவிடப்படாமல் இடம் பெற்றிருகின்றன. குறிப்பாக மெக்மக்கன் எல்லையை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோடு சீனப் பிரதிநிதிகள் யாரும் மெக்மக்கன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதும் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூலின் ஆசிரியர் நெவில் மாக்ஸ்வெல், இங்கிலாந்தில் பிறந்த ஆஸ்திரேயரான இவர் தி டைம்ஸ் இதழில் போர்க்கால இதழியலாளராக இருந்தவர். இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்து, லண்டன் பல்கலைக் கழகத்தின் ஆப்பிரிக்க கிழக்காசிய பிரிவுத் துறையுடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த நூல் ஜனனி ரமேஷ் அவர்களின் மொழிபெயர்ப்பில் கிழக்கு வெளியீடாக வெளிவந்திருக்கிறது.

படியுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்.

மின்னூலாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்