
விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது? இது பற்றி இன்று வெவ்வேறு நாளிதழ்களும் வெளியிட்டிருக்கும் தலைப்புகள், உண்மையில் நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களைப் பிரதிபலிப்பனவாக இல்லை.
காலிஸ்தானி, மாவோயிஸ்டு, காங்கிரஸ், பாக்-சீனா தூண்டுதல்… என்று சங்கிகள் செய்த எந்த அவதூறும் எடுபடாத நிலையில், அவர்கள் உச்ச நீதிமன்றத்தைச் சரண் புகுந்திருக்கிறார்கள்.
National Capital Territory ஐச் சேர்ந்த 20 லட்சம் குடிமக்கள், குறிப்பாக நொய்டா – குர்கான் பகுதிகளைச் சேர்ந்த மிடில் கிளாஸ் குடிமக்கள், இந்தப் போராட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு போகமுடியவில்லையாம். போக்குவரத்து தடையின் விளைவாக விலைவாசி உயரக்கூடுமாம். இந்தக் காரணங்களால் உச்ச நீதிமன்றம் உடனே தலையிட்டு, தங்கள் அடிப்படை உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர்.
அர்னாப் கோஸ்வாமி போன்ற இந்தியக் குடிமகன்களுக்காகவும், இன்னபிற கார்ப்பரேட் குடிமகன்களுக்காகவும் வாதாடும் ஹரிஷ் சால்வே என்ற வழக்கறிஞர் ஆஜராகியிருக்கிறார்.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் சாராம்சமான தொகுப்பினைக் கீழே கொடுத்துள்ளேன். இவை Bar and Bench, Livelaw போன்ற தளங்களிலிருந்தும் பிற பத்திரிகைகளிலிருந்தும் திரட்டப்பட்டவை.
இவற்றைப் படிக்கும் வாசகர்கள், அரசு தரப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மனப்போக்கினைப் புரிந்து கொள்ள முடியும்.
போராட்டத்துக்கு எதிரான வாதங்கள்
ஹரிஷ் சால்வே (மனுதாரருக்காக) : “பேச்சுரிமை நிபந்தனையற்றது கிடையாது. மூடிய சினிமா தியேட்டருக்குள் “ தீ..தீ..” என்று கத்தி பீதியைக் கிளப்புவது பேச்சுரிமையாகாது…. அரசாங்கம் எங்கள் பேச்சைக் கேட்கவேண்டும். இல்லையேல் யாரையும் வாழ விடமாட்டோம்” என்று ஒரு நகரத்தையே பிணைக்கைதி ஆக்குவதை அனுமதிக்க முடியாது. கொரோனா காலத்தில் கூட்டம் கூட்டி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்…”
“போராட்டங்களை அனுமதிப்பதற்கு புதிய நெறிமுறைக்கள் வகுக்கப்பட வேண்டும். போராடுபவர்களின் அடையாளம் திரட்டப்படவேண்டும். போராட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவர்களைப் பொறுப்பாக்க வேண்டும். போராடும் உரிமையின் எல்லை என்ன என்பதை நீதிமன்றம் உடனே வரையறுத்தாக வேண்டும்” – இவை சால்வேயின் வாதங்களில் சில.
தலைமை நீதிபதி: “திரு ஹரிஷ் சால்வே, உங்கள் வாத த்தை யாரும் மறுக்க முடியாது… .. போராட்ட வடிவங்களை என்ன வகையில் மாற்றியமைக்கலாம் என்று மத்திய அரசிடம் நாங்கள் கேட்கிறோம்….”
(“It is high time this court makes a declaration on the contours of the right to protest. Unions who organise large crowds should be held responsible for the acts of the crowds,” he said. The CJI agreed that the right to protest cannot interfere with the rights of others and said the court would consult the Centre to see if the mode of protest can be altered.)
ராகுல் மெஹ்ரா (டில்லி அரசுக்காக) : “மத்திய அரசின் இந்த மனுவே விசமத்தனமானது. அவர்கள் வேண்டுமென்றே டில்லி, பஞ்சாப் அரசுகளை வழக்கில் சேர்க்காமல் அரியானா, உ.பி யை மட்டும் சேர்த்திருக்கிறார்கள். டில்லிக்குள் வருவதற்கு 120 சாலைகள் இருக்கின்றன. (எந்த பாதிப்பும் இல்லை)”
ப.சிதம்பரம் (பஞ்சாப் அரசுக்காக) : “ஜனநாயகத்தில் என்ன செய்யலாம் என்பது குறித்து சால்வே கூறிய விளக்கங்களை ஏற்கவியலாது. வியத்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது அமெரிக்காவிலும் பாரிசிலும் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹாங்காங் போராட்டத்தில் என்ன நடந்தது?”
“விவசாயிகள் டில்லிக்குள் வர விரும்பினார்கள். சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தவே விரும்பினார்கள். . முள் கம்பிகளையும் இரும்புச் சுவர்களையும் கன்டெயினர்களையும் வைத்து சாலையை மறித்தது போலீஸ்தான். விவசாயிகள் அல்ல”
சிங்: (BKU –பானு சங்கத்தின் சார்பாக) “அரசாங்கம் ராம் லீலா மைதானத்தை கொடுக்க வேண்டியதுதானே!”
தலைமை நீதிபதி: “அதையெல்லாம் போலீஸ்தான் தீர்மானிக்க முடியும். எந்த கும்பல் வன்முறையில் இறங்கும் என்று நீதிமன்றத்தால் கணிக்க முடியாது. உங்களுடைய போராடும் உரிமைக்காக மற்ற குடிமக்களுடைய உரிமைகளைப் பறிக்க முடியாது என்பதைத்தான் சால்வே சொல்கிறார்”
ப.சிதம்பரம் : “அவர்கள் கும்பல் அல்ல. அவர்கள் பெருந்திரளான விவசாயிகள்.”
தலைமை நீதிபதி : “நான் அவர்களை சிகாகோ கும்பல் என்ற பொருளில் (ரவுடிகள் என்ற பொருளில்) சொல்லவில்லை…. சாலையை மறித்தால் என்ன நடக்கும்? டில்லி மக்கள் பட்டினிக்குத் தள்ளப்படுவார்கள். விவசாயிகள் கோரிக்கை நிறைவேற வேண்டுமானால் பேசவேண்டும். சும்மா நாட்கணக்கில் உட்கார்ந்திருந்தால் எதுவும் நடக்காது.”
அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் : “சட்டத்தை ரத்து செய்கிறாயா இல்லையா, இரண்டில் ஒன்று சொல்” என்று அவர்கள் கேட்கிறார்கள். அப்படிப் பேச முடியாது. சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் எடுத்துக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தலாம்”
தலைமை நீதிபதி : “இந்த சட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரித்து முடிக்கும் வரை இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு செல்ல மாட்டோம் என்று நீங்கள் அரசு சார்பில் உறுதியளிக்க முடியுமா அட்டார்னி ஜெனரல் அவர்களே?”
அட்டார்னி ஜெனரல் : “முடியாது. அப்படி சொல்லிவிட்டால் அப்புறம் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கே வரமாட்டார்கள். “
தலைமை நீதிபதி: “சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக நாங்கள் சொல்லவில்லை. பேச்சு வார்த்தையை சாத்தியமாக்குவதற்குத் தான் நான் வழி சொல்கிறேன். ஒரு நடுநிலையான சுயேச்சையான கமிட்டியின் முன் இரு தரப்பும் தங்கள் நிலையை சொல்லட்டும். பிறகு, கமிட்டி தன் முடிவைச் சொல்லட்டும். அந்த முடிவைப் பின்பற்ற வேண்டும்”
(CJI: We are thinking of an impartial and independent committee before whom both parties can give its side of story. The committee will give a finding which should be followed.)
அட்டார்னி ஜெனரல் : “விவசாய சங்கங்கள் புறக்கணிப்பார்களேயானால், கமிட்டியால் என்ன பயன்? பேச்சு வார்த்தைக்கு வந்த சங்கங்களின் பட்டியல் எங்களிடம் இருக்கிறது. அவர்களுக்கு அழைப்பு அனுப்பலாம்.”
தலைமை நீதிபதி : அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படவேண்டும் என்று உத்தரவிடுகிறோம்…
“இந்திய அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஒரு பயனுள்ள தீர்வினை எட்டவேண்டும். சுயேச்சையான, நடுநிலையான நபர்களும் விவசாயத்துறை வல்லுநர்களும் அடங்கிய குழுவொன்றை அமைப்பது, நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியம் என்று கருதுகிறோம். எல்லா தரப்பினரும் நிதிமன்றத்தில் தமது கருத்தைக் கூறாதவரை, இது சாத்தியமில்லை. எனவே கமிட்டியில் யார் இருக்கலாம் என்று அனைவரது கருத்தையும் கேட்டு , அடுத்தமுறை நீதிமன்றம் கூடும்போது தெரிவிக்கவும். “
இதுதான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு.
ஷாகின் பாக்கை நசுக்கிய அதே உத்தி!
அரசுக்குப் பணிய மறுக்கும் விவசாயிகளை நீதிமன்றத்துக்கு வரவழைத்துப் பணியவைக்கும் முயற்சி இது. குழுவில் சாய்நாத் போன்றவர்களும் விவசாய சங்கத்தினரும் இடம்பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இவையெல்லாம் குழுவின் மீது நம்பகத்தன்மை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள்.
நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல், கொரோனா சூழலைப் பயன்படுத்திக் கொண்டு கள்ளத்தனமாகவும் முறைகேடாகவும் திணிக்கப்பட்ட இந்த சட்டங்களைக் காப்பாற்றுவதற்கு குறுக்கு வழிகளைக் கண்டுபிடிக்கிறது நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றத்தை விவசாய சங்கத் தலைவர்கள் சரியாகப் புரிந்து வைத்திருப்பதாகவே தெரிகிறது. ஷாகின் பாக் போராட்டத்தைக் கலைப்பதற்கு என்ன உத்தி கையாளப்பட்டதோ அதே உத்தி தான் இப்போது கையாளப்படுகிறது என்று விவசாய சங்கத் தலைவர்கள் கூறியிருக்கின்றனர்.
அன்று, ஷாகின் பாகிற்கு சற்றும் தொடர்பற்ற சாலைகளையெல்லாம் போலீசார் வேண்டுமென்றே மறித்து, டில்லி மக்களை இன்னலுக்கு ஆளாக்கி, பொதுக்கருத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பினர். அதே தந்திரத்தைத் தான் இப்போதும் கையாள்கின்றனர்.
“ராமர் கோயில் கட்டுவதை விரும்பாதவர்கள்தான் போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள்” என்று நேற்று ஆதித்யநாத் பேசியிருக்கிறார். உ.பி மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 111 வது பிரிவின் கீழ், போராட்டம் நடத்தும் விவசாய சங்கத் தலைவர்கள் 50 லட்சம் ரூபாய்க்கு பாண்டு எழுதித் தரவேண்டும்” என்று யோகி அரசு உத்தரவிட்டிருப்பது அம்மாநில விவசாயிகளிடையே கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.
யோகி அரசின் இந்த நடவடிக்கையை நாடு முழுவதற்கும் விரிவாக்கவேண்டும் என்று கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் குரலை உச்ச நீதிமன்றத்தில் ஒலித்திருக்கிறார் ஹரிஷ் சால்வே. அதனை அங்கீகரித்துப் பேசியிருக்கிறார் தலைமை நீதிபதி.
டெமாக்கிள் -இன் வாள் நம் அனைவரின் தலைமீதும் தொங்குகிறது.
கோர்ட்டுக்குப் போகாதே, போராட்டத்தைக் குலைக்காதே!
இத்தகைய சூழலில் பல கட்சிகள், மோடியின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்திருக்கிறார்கள். இது விவசாயிகள் போராட்டத்துக்கு குழி பறிக்கும் நடவடிக்கை ஆகும்.
அரசமைப்பு சட்டத்தின்படி வேளாண்மை மாநிலப்பட்டியலில் வருவதால், இந்த சட்டங்கள் மாநிலத்தின் உரிமையைப் பறிப்பவை என்ற கோணத்தில் சட்டரீதியாக இதனை உச்ச நீதிமன்றத்தில் முறியடிக்க முடியும் என்று இக்கட்சிகள் கருதலாம். இவை தவிர சட்டரீதியாக வேறு பல grounds இருப்பதாகவும் அவர்கள் எண்ணலாம்.
சட்ட நுணுக்கங்களால் எந்தப் பயனும் இல்லை. கல்வி, மருத்துவம் முதல் ஜி.எஸ்.டி வரை மாநிலத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதற்கு, வெவ்வேறு அளவில் உடந்தையாக இருந்தவர்கள்தான் எதிர்க்கட்சிகள். இதை யாரும் மறுக்க முடியாது. மாநில உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ளும் விசயத்தில் நேர்மையற்றவர்களாக மட்டுமின்றி, கையாலாகாதவர்களாகவுமே எதிர்க்கட்சிகள் இருந்திருக்கினர். மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதற்கு ஏதுவாகவே அரசியல் சட்டமும் அமைந்திருக்கிறது.
காஷ்மீரின் சிறப்புரிமையைப் பறித்தது மட்டுமல்ல, அந்த மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலே இல்லாமல், அதனை யூனியன் பிரதேசமாக மாற்றியது மோடி அரசு. அதனை எதிர்த்துப் போராடும் திராணி கூட எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.
இத்தகைய சூழலில் பாசிஸ்டுகளுக்கு சவாலாக எழுந்திருக்கிறது விவசாயிகள் போராட்டம். புதிய தாராளவாதக் கொள்கையை அதன் உயிர்நிலையில் தாக்குவதற்கான கூறுகளை இந்தப் போராட்டம் கொண்டிருக்கிறது. அதானி, அம்பானி என்று இந்திய மக்களின் எதிரிகளை அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களின் அடிமைதான் இந்த அரசு என்பதை வெகு மக்களின் அரசியல் புரிதலுக்கு கொண்டு வந்து, மோடி அரசின் “இந்து” முகத்திரையைக் கிழித்திருக்கிறது.
திகாயத், நஞ்சுண்டசாமி, நாராயணசாமி நாயுடு ஆகியோர் நடத்திய போராட்டங்களாக இருக்கட்டும், விடுதலைப்போராட்ட காலத்தில் நடைபெற்ற பர்தோலி, சம்பரான் போராட்டங்களாக இருக்கட்டும், அவையனைத்தும் குறிப்பட்ட மாநிலம் அல்லது வட்டாரத்தின் எல்லைக்குட்பட்டவையாகவே நடந்திருக்கின்றன. தற்போதைய போராட்டத்தில் பஞ்சாப் விவசாயிகளின் பங்கு முதன்மையானது என்ற போதிலும், அரியானா, உ.பி, ராஜஸ்தான்,ம.பி விவசாயிகளை மட்டுமின்றி மற்ற மாநில விவசாயிகளையும் இது ஈர்த்திருக்கிறது. விவசாயிகள் பிரச்சினை இந்த அளவுக்கு நாடு தழுவியதாக இதுவரை மாறியதில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் குறிப்பிட்ட சில இடதுசாரி கட்சிகள் சார்ந்த விவசாய சங்கங்கள் தவிர மற்ற சங்கங்கள் பெரும்பாலும் கட்சி சார்பற்றவை. இப்படியொரு போராட்டத்தை நடத்துவதற்கான ஆற்றலோ அடித்தளமோ பெரும்பான்மையான கட்சிகளுக்கு இல்லை.
இத்தகைய சூழலில், தங்களது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும், விளம்பரம் தேடுவதற்காகவும் நீதிமன்றத்திற்கு சென்றிருப்பவர்கள், விவசாயிகள்போராட்டத்துக்கு மட்டுமல்ல, பாசிச எதிர்ப்பு முயற்சிகளுக்கும் தீங்கிழைக்கிறார்கள். அம்பானி, அதானியின் ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விவசாயிகளை நீதிமன்றத்துக்குள் இழுத்து வந்து, அவர்களுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறைமுகமாக நிர்ப்பந்திக்கிறார்கள்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, எல்லாத் தரப்பு மக்களையும் திரட்டி ஒரு மாபெரும் அரசியல் எழுச்சியை உருவாக்குவதுதான் மற்றவர்கள் செய்ய வேண்டிய பணி. இயலாதவர்கள் நீதிமன்றத்தை நாடாமல் சும்மாயிருந்தால் போதும். அதுவே அவர்கள் போராட்டத்திற்கு செய்கின்ற பேருதவியாக இருக்கும்.
“நீதிமன்றத்துக்கு வா” என்று போராடுவோருக்கு உத்தரவிட முடியுமா?
உச்ச நீதிமன்றம் மோடி அரசின்பால் எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பல வழக்குகளிலும் பார்த்து விட்டோம். இது குறித்துப் பலரும் எழுதி விட்டனர்.
சில நாட்களுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர் போராட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்து அவர்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற வைத்தது டில்லி உயர்நீதிமன்றம். தமிழகத்தில் தற்காலிக செவிலியர்களின் நியாயமான போராட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஒடுக்கியது. இதுபோல எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.
பல்வேறு கருப்புச் சட்டங்களின் மூலம் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், மாநில அரசுகள், தேசிய இனங்களின் உரிமைகளை அடுத்தடுத்துப் பறிக்கிறது மோடி அரசு. அந்த கருப்புச் சட்டங்களை அங்கீகரித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
நியாயப்படுத்தவே முடியாத சட்டங்கள், பாசிச நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விசாரணையே நடத்தாமல் காலவரையறையின்றி கிடப்பில் போடுவதை ஒரு உத்தியாகவே கையாள்கிறது. அதே நேரத்தில் இத்தகைய சட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடினால் அந்த போராட்டங்களை முடக்குவதற்கான வழக்குகளை மட்டும் உடனுக்குடன் விசாரித்து தீர்ப்பளிக்கின்றன நீதிமன்றங்கள். இப்போது நடந்து கொண்டிருப்பதும் அதுதான்.
உச்ச நீதி மன்றத்தின் அணுகுமுறையை Judicial cannibalism என்று வருணித்து எழுதியிருந்தார் அசோகா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பிரதாப் பானு மேத்தா. தடியடி, கண்ணீர்ப்புகை, துப்பாக்கிக் குண்டுகள் ஆகிய அனைத்தைக் காட்டிலும் வலிமையான வன்முறைக்கருவியாக நின்று, போராட்டங்களை ஒடுக்குகின்றது நீதிமன்றம். இந்த அதிகாரத்தைக் கேள்வி கேட்பாரில்லை.
நீதித்துறை எனும் நிறுவனத்தில் நீதிபதிகளின் பணியாளர்களல்ல வழக்கறிஞர்கள். வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சேர்ந்ததுதான் நீதித்துறை எனும் நிறுவனம். நீதிபதிகள் இவ்வாறு நடந்து கொள்வதை விமர்சிக்கும் உரிமையும் கடமையும் வழக்கறிஞர் சங்கங்களுக்கு உண்டு. ஆனால் அவர்கள் விமர்சிப்பதில்லை. மவுனமாக வேடிக்கை பார்க்கின்றனர்.
விரல் விட்டு எண்ணக்கூடிய சில வழக்கறிஞர்களைத் தவிர வேறு யாரும் பேசுவதில்லை. நீதிக்கான போராட்டம், நீதிமன்ற அறைக்குள் மட்டும்தான் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுவார்களாயின், அது சட்டபூர்வ பாசிசத்தை வழி மொழிவதாகும்.
“நீதிமன்றத்துக்கு வந்தாக வேண்டும்” என்று போராடும் மக்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிபதிகளுக்குஉண்டா? வர மறுக்கும் உரிமை போராடும் மக்களுக்கு இருக்கிறதா இல்லையா?
கருப்புச் சட்டங்களுக்கு கட்டுப்பட மறுப்பது மக்களின் ஜனநாயக உரிமை. போராட்டங்களின் நோக்கமே நிலவுகின்ற சட்டங்களை மாற்றுவதுதான்.
எந்தப் போராட்டமானாலும் “நிலவுகின்ற சட்டங்களின் எல்லைக்கு உட்பட்டுத்தான் நடத்த வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதற்குப் போராடுபவர்கள் பணிகின்றனர். இது தொடர்கதையாகி வருகின்றது. இந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
“உங்கள் முறை வருவதற்கு முன் பேசிவிடுங்கள்” என்று சொல்லி விட்டு சிறைக்குள் சென்றார் தோழர் ஆனந்த் தெல்தும்டெ. கருத்துரிமையைப் பாதுகாப்பதில் முன்நிற்க வேண்டிய வழக்கறிஞர் சமூகம் பேசவேண்டும். பேசுவதற்கு இதைக் காட்டிலும் தகுந்த தருணம் வேறு இல்லை.
மருதையன் – இடைவெளியிலிருந்து