சிபிஎஸ்இ: தேர்வுக் கேள்வியா? பண்பாட்டுத் திணிப்பா?

செய்தி:

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகின்றன. கடந்த 11ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. அந்த வினாத்தாளில் பிரிவு ’ஏ’ பகுதியில் கீழ்கண்ட சிறுகுறிப்பை படித்துவிட்டு அது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை எழுத வேண்டும் என்றுக் கூறி ஒரு பெரிய பத்தி கொடுக்கப்பட்டது. அதில் ” இருபதாம் நூற்றாண்டில் குழந்தைகள் குறைவாக இருந்ததற்குப் பெமினிசம்தான் காரணம். தந்தை எனும் வார்த்தைக்கு அதிகாரம் இல்லை. திருமணமான பெண்கள் வேலைக்குச் சென்று தங்களுக்கென அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டனர். பெண்களின் விடுதலை குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது. கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்தபோது, இதுபோன்று நடக்கவில்லை. தற்போது அதுபோன்று நடக்காததால், குழந்தைகள் ஒழுங்கீனமாக வளர்கிறார்கள். கணவனின் பேச்சை கேட்டு நடந்தால்தான் குழந்தைகள் கீழ்படிதலை கற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே குழந்தைகளின் ஒழுங்கீனத்துக்கு யார் பொறுப்பு? வீட்டில் ஒழுக்கம் சீர்கெட்டுபோக என்ன காரணம்? வீட்டில் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கான இடம்? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இயின் இந்த சர்ச்சையான கேள்வி ஆணாதிக்கத்தையும், பெண்ணடிமைதனத்தையும் ஊக்குவிக்கக் கூடியதாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியதால் நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மின்னம்பலம்.

செய்தியின் வழியே:

பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் மீது இது போன்ற பண்பாட்டு நச்சை, வரலாற்றுத் திரிப்புகளை திணிக்கும் செயல் நடைபெறுவது இது முதன்முறை அல்ல.

திருவள்ளுவரை பார்ப்பனர் போல் உச்சிக் குடுமி பூனூலுடன் சித்தரிப்பது,

தேசிய இனத்தவர் பற்றி குறிப்பிடுகையில் உயர்த்தப்பட்ட ஜாதியினரின் தோற்றத்தை மட்டும் குறிப்பிடுவது,

காந்தி மாரடைப்பால் இறந்தார் எனக் குறிப்பிடுவது,

சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட வீரர் எனக் குறிப்பிடுவது,

வாஸ்கோ டி காமா வை கடல்வழி கண்டுபிடிப்பாளனாக புகழ்வது,

என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இவை எவையும் தவறி நடந்தவை அல்ல. திட்டமிட்டு திணிக்கப்பட்டவை. எதிர்ப்பு கிளம்பினால் அந்தப் பகுதி நீக்கப்படும் என்று அறிவிப்பதும், கண்டுகொள்ளப்படாமல் கடந்தால் அதையே வரலாறாக மாற்றுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது இங்கே.

பள்ளி பாடத் திட்டங்களில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இது நடக்கிறது. ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் இந்தியில் பதிலளிப்பது தொடங்கி விடுமுறை நாட்களைக் கூட உள்நோக்கத்துடன் அறிவிக்காமல் விடுவது வரை இந்தத் திணிப்புகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

பல்தேசிய நாடான இந்தியாவை ஒற்றை தேசியமாக மாற்றும் திட்டத்தின் ஒரு வடிவமாகத் தான் அரசு உறுப்புகளின், ஒன்றிய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை பார்க்க வேண்டும்.

அதாகப்பட்டது, “ஆடுனாலும் சாடுனாலும் தக்கையில கண்ணு இருக்கட்டும்டே” அம்புட்டுதேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்