குடியரசு தினத்தை புறக்கணிப்போம்

இந்த தலைப்பைப் பார்த்ததும், குடியரசு தினத்தை ஏற்றுக் கொள்கிறோமா என்றொரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. அது அரசியல் நிலைப்பாடு சார்ந்தது. பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களின் கட்டாய ஒப்பத்தங்களுக்கு ஏற்பவும், உள்நாட்டு தரகு முதலாளிகள் அல்லது வளர்ந்து வரும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் வாய்ப்புகளுக்கு ஏற்பவும் மனப்பூர்வமாக உழைக்கும் ஒரு அரசை, இறையாண்மையுள்ள குடியரசு என்று ஏற்க முடியாது. அது ஒருபுறம் இருக்கட்டும். இது மாநில அரசுகளின் உரிமை சார்ந்தது. ஒன்றிய அரசின் அத்துமீறல் சார்ந்தது.

எதிர்வரும் ஜனவரி 26 ல் குடியரசு தினம் கொண்டாடப்பட விருக்கிறது. இதற்கு ராஜவீதி(!) என அழைக்கப்படும் வீதியில், மாநிலங்களின் சார்பாக தங்களின் பண்பாட்டு உள்ளடக்கத்துடன், பொம்மைகளால் அழகுபடுத்தப்பட்ட வண்டிகளை வலம் விடுவது, ஒரு சடங்காக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு சார்பாக முன்வைக்கப்பட்ட உள்ளடக்க வண்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த மறுப்பு தமிழ்நாட்டில் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

வ.உ.சி, வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள் கொண்ட உள்ளடக்கத்தைத் தான் ஒன்றிய அரசு ஏற்க மறுத்திருக்கிறது. இதற்கு ஒன்றிய அரசு கூறும் காரணம் இவர்கள் பன்னாட்டு அளவில் தெரிந்த முகங்கள் அல்லர் என்பது.

ஒவ்வொரு ஆண்டும் வலம் வரும் வண்டிகளுக்கான பொதுத்தலைப்பை ஒன்றிய அரசு தான் தேர்ந்தெடுக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆவதை குறிப்பிடும் வகையில் இருக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் பொதுத் தலைப்பு. இந்தத்தலைப்பின் கீழ் தமிழ்நாடு அரசு மூன்று முறை தன்னுடைய உள்ளடக்கத்தை அளித்திருக்கிறது. அதாவது முதலில் ஒரு உள்ளடக்கத்தை அனுப்ப்புகிறது. அது மறுக்கப்பட்டதால் ஒன்றிய அரசின் ஆலோசனையுடன் மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கத்தை இரண்டாம் முறை அனுப்புகிறது. அதுவும் மறுக்கப்பட்டதால் மீண்டும் ஆலோசித்து உள்ளடக்கத்தை மாற்றியமைத்து மூன்றாம் முறையும் அனுப்புகிறது. அதையும் மறுத்து விட்டுத் தான், இந்தமுறை எந்த ஆலோசனையும் செய்யாமல் அனுமதி இல்லை என அறிவித்திருக்கிறார்கள். இதற்கு ஒன்றிய அரசு தெரிவித்திருக்கும் காரணம் தான் இந்தத் தலைவர்கள் பன்னாட்டு அளவில் தெரிந்த தலைவர்களாக இல்லை என்பது.

இதில் அழகுபடுத்தப்பட்ட வண்டிகளை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் என்ன அளவுகோலை வைத்திருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எந்த அடிப்படையில் இந்த ஆண்டு 12 மாநிலங்கள் மட்டும் போதும் என்பதை தீர்மானித்தார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. தென்னிந்தியாவிலிருந்து பாஜக ஆளும் கர்நாடகம் மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. கேரளாவில் நாராயண குருவுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன், மேற்கு வங்கத்தில் சுபாஷ் சந்திர போசுக்கும் அனுமதி  மறுக்கப்பட்டிருக்கிறது. நேதாஜியும் கூட பன்னாட்டளவில் தெரிந்த முகம் இல்லை போலும்.

இந்த ஆண்டு மட்டுமல்ல, எல்லா ஆண்டுகளிலுமே அனைத்து மாநிலங்களுக்குமே அவரவர் பண்பாட்டு போக்குகளைக் குறிப்பிடும் ஒரு வண்டிக்கு ஏற்பளிப்பதில் என்ன சிக்கல்? ஏன் அவ்வாறு செய்யக் கூடாது?

சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றால் வட இந்தியத் தலைவர்கள் சிலருக்கு கிடைக்கும் வெளிச்சமும் வாய்ப்பும் தென்னிந்தியத் தலைவர்களுக்கு கிடைப்பதில்லை. இது நீண்ட காலமாக இருந்து வரும் போக்கு தான். என்றாலும், ஒன்றிய அரசில் பாஜக பொறுப்பேற்றதற்குப் பிறகு குறிப்பாக மோடி தலைமையில் பெரும்பான்மை பெற்றதற்குப் பிறகு இதற்கு காவி வண்ணம் பூசும் வேலை பரந்த அளவில் நடக்கிறது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டு வண்டியில் அய்யனார் பொம்மைக்கு பூனூல் அணிவித்து வலம்வரச் செய்தனர். அய்யனாருக்கும் பூனூலுக்கும் என்ன தொடர்பு?

இன்னும் பொதுவாகப் பார்த்தால் மாநில உரிமைகளைக் கரைத்துக் கரைத்து இல்லாமலாக்கி ஒற்றை இந்திய அரசு எனும் இலக்கை நோக்கி ஆர்.எஸ்.எஸ் பாஜக சென்று கொண்டிருப்பது புரியும். மோடியின் அனைத்து திட்டங்களும் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதில் பெருங்கவனம் எடுத்துக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. மட்டுமல்லாது, பாஜக ஆளாத ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுனர்கள் மூலம் ஒரு நிழல் அரசை நடத்த கடும் முயற்சிகள் செய்கிறது என்பதும், அமலாக்கத் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் அமைப்புகள் மூலம் மாநில நிர்வாகத்தில் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது என்பதும் யாரும் அறியாததல்ல. இன்னும், மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதில் காட்டும் வஞ்சனைகளை விவரிக்க வேண்டியதே இல்லை.

இது போன்ற செயல்பாடுகளால் பல மாநிலங்கள் புழுங்கிக் கொண்டுள்ளன. திட்டங்களும் செயலும் பெரிதானாலும், சிறிதானாலும் மாநிலங்களுக்கென்று தனிப்பட்ட சுயமரியாதையோ, இறையாண்மையோ கிடையாது என்பதை உறுதிப்படுத்துவது தான்  ஒவ்வொன்றிலும் மோடியின் முத்திரையாக இருக்கிறது. இனி மாநிலங்களும் தங்களுக்கு தனித்த இறையாண்மை உண்டு என்பதை உறுதிப்படுத்துவதே இதற்கான பொருத்தமான எதிர்வினையாக அமையும். அதை இந்த குடியரசு தினத்தை புறக்கணிப்பதிலிருந்து தொடங்கலாம்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்