தத்துவம்

மக்களியம். பகுதி – 3

நாம் ஏன் இயற்கை, அறிதல், அறிவு, அறிவியல், சமூகம், தத்துவம் இவைகளை தெரிந்து கொள்ள வேண்டும்? ஏனென்றால் இதன் வழியாகத் தான் நாம் வளந்து வந்தோம். நாம் வளர்ந்து வந்த, கடந்து வந்த வழியில் ஏதோ பிழை இருக்கிறது என்பதையும், ஏதோ ஒரு விதத்தில் புரிந்து வைத்திருக்கிறோம். ஏதோ ஒரு விதத்தில் தான் அது பிழை என புரிந்து வைத்திருக்கிறோமே அல்லாது துல்லியமான விதத்தில் அந்தப் பிழையை நாம் புரிந்து கொண்டிருக்கவில்லை. அது என்ன பிழை? அது எப்படி நேர்ந்தது? எங்கு நேர்ந்தது? என்பன போன்ற எந்த விவரங்களும் அந்த பிழை குறித்து நமக்கு தெரியாது. அதை புரிந்து கொள்ளும் பயணம் என்றால் அது தொடக்கத்திலிருந்து தானே இருக்க முடியும்.

தொடக்கத்தில் இருந்து என்றால், எதன் தொடக்கத்தில் இருந்து? மனித குலத்தின் தொடக்கத்தில் இருந்தா? மனித அறிவின் தொடக்கத்தில் இருந்தா? ‘மனிதன்’ பிறந்த போதே மனித அறிவும் பிறந்து விட்டது என்பதால் இரண்டின் தொடக்கமும் ஒன்று தான். எனவே, என்று மனிதன், மனித அறிவு குறித்த வகைப்படுத்தும் விதங்களை சிந்திக்கத் தொடங்கினானோ அதிலிருந்து தொடங்கலாம்.

தன்னுடைய பயன்பாட்டுக்காக உள்ள கருவிகளை மனிதன் மேம்படுத்தத் தொடங்கியது மனித வளர்ச்சியின் பாதையில் தவிர்க்க முடியாத ஒன்று. அதிலிருந்து தான் மனிதனின் சிந்தனை கூர்மையடையத் தொடங்கியது. காட்சியாக தெரிவதை எல்லாம் வகைப்படுத்தத் தொடங்கினான். பொருட்கள் இயற்கையாகவும் செயற்கையாகவும் பிரிந்தன. இயற்கையான பொருட்கள் மீது மனிதன் தன் உழைப்பைச் செலுத்தினான், செயற்கையான பொருட்கள் கிடைத்தன. இயற்கையான பொருட்கள் மீது மனிதன் தன் கேள்விகளைச் செலுத்தினான், தத்துவங்கள் பிறந்தன. ஆம், இயற்கையாக இருக்கும் பொருட்கள் ஏன் அப்படி இருக்கின்றன எனபன போன்ற கேள்விகள் எழுப்பியதன் விடைகளாகத்தான் தத்துவங்கள் உருவெடுத்தன. தத்துவம் என்பது எளிமை, தத்துவம் என்பது பொதுத்தன்மை, தத்துவம் என்பது விளக்கம். ஆனால் இன்று அப்படி இல்லை, தத்துவம் என்றால் குழப்பம்.

மனிதனின் பார்வை விரிவடைந்தது. பூமியும், சந்திரனும், சூரியனும், விண்மீன்களும் எப்படி வந்தன எனும் கேள்வி பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. ஒவ்வொரு பகுதியிலும், அந்தந்த பகுதியின் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, புரிதல்களுக்கு ஏற்ப, கற்பனை நிரப்பல்களுக்கு ஏற்ப தத்துவங்கள் தனித்துவங்களாக கிளைத்துப் படர்ந்தன. பலப்பல தத்துவங்களாக இருந்தவை ஒன்றுதிரளத் தொடங்கின. எதிரெதிர் தத்துவங்களாய் தம்மை தகவமைத்துக் கொண்டன. இயற்கையின் மீது, வானின் மீது இன்னும் தனக்குக் தெரிந்த ஆனால் தனக்குப் புரியாத அத்தனையின் மீதும் கற்பனையான விடைகளைப் பொருத்தி விளக்கமளிக்க முயன்ற அத்தனை தத்துவங்களும் கருத்துமுதல்வாத தத்துவங்களாக ஆகின. தனக்கு புரியாத அத்தனையின் மீதும் ஏற்கனவே தனக்கு தெரிந்த பொருட்களைக் கொண்டு, அதன் புரிதல்களில் இருந்து விளக்கமளிக்க முயன்ற அத்தனை தத்துவங்களும் பொருள்முதல்வாத தத்துவங்களாக ஆகின.

சுருக்கமாகச் சொன்னால், ஆன்மீகத்தோடு கடவுட் கொள்கையோடு தொடர்புடையதாக கருத்துமுதல் வாதம் செழித்தது. அறிவியலோடு கடவுள் மறுப்போடு தொடர்புடையதாக பொருள்முதல் வாதம் வளர்ந்தது. ஆனால், தட்டையாக இப்படி சொல்லிவிட முடியாது. ஆன்மீகம் நாத்திகத்தோடு மட்டுமல்லாது எல்லா பிரிவுகளோடும், எல்லா வகைகளோடும், தொடர்பு கொண்டவை தான் தத்துவங்கள். ஆனாலும் கூட முதன்மையாக, கருத்துமுதல் வாதம் ஆத்திகத்தின் சாரத்துடனும், பொருள்முதல் வாதம் அறிவியலின் சாரத்துடனும் தொடர்பு கொண்டிருப்பதால் கடவுளோடும், கடவுள் மறுப்போடும் அடையாளப் படுத்துவது ஏறக் குறைய சரியானது தான்.

உடல்நலக் குறைவுக்கு ஆட்பட்டிருக்கும் ஒருவர் மருத்துவரைக் கண்டு உரிய மருத்துவம் செய்து கொள்கிறார். அவருக்கு உடனடியாக குணம் கிடைக்கலாம். சற்றே காலம் எடுத்துக் கொண்டு மெதுவாக குணமடையலாம். அல்லது குணமடையாமல் உடல்நலக் குறைவிலேயே நீடிக்கலாம். எதுவாக இருந்தாலும் இதில் அவருடைய சிந்தனைப் போக்கு எப்படி இருக்கும்? நாம் மருத்துவம் செய்வது என்பது ஒரு நடப்பில் இருக்கும் வழிமுறை. குணம் கிடைப்பதும், நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வதும், கிடைக்காமலேயே போய்விடுவதும் கடவுளைச் சார்ந்தது, கடவுளின் செயல். கடவுள் எப்போது குணம் கிடைக்க வேண்டும் என்று நாடி இருக்கிறானோ அப்போது தான் குணம் கிடைக்கும். இப்படி அவருடைய சிந்தனை இருந்தால் அது கருத்துமுதல்வாத சிந்தனை முறை. ஏனென்றால் இங்கு மருத்துவம், மாத்திரை மருந்துகள் போன்ற பொருட்கள் பொருட்டாக இல்லை. இரண்டாம் இடத்துக்கு சென்று விட்டது. மாறாக, கடவுள் எனும் கருத்து (கடவுள் என்பது பொருளாகவோ அல்லது வேறு ஒன்றாகவோ நிரூபிக்கப்படவில்லை. அப்படி நிரூபிக்கப்படாதவரை அதை பொருளாக ஏற்றுக் கொள்ள முடியாது.) முதன்மைப் படுத்தப்படுகிறது. ஆகவே, இது கருத்தை முதன்மைப்படுத்தும் வாதம். கருத்து முதல் வாதம்.

இதற்கு நேர்மாறாக, உடனடியாக குணம் கிடைத்தால், உடல்நலக் குறைவுக்கு சரியான பொருத்தமாக மருத்துவமும் மருந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், குணமடைய காலம் எடுத்துக் கொண்டால் உடல்நலக் குறைவு ஆழமானதாகவும், மருந்து அதனைக் குணமாக்க போராடுகிறது என்றும், குணம் கிடைக்கவில்லை என்றால் மருத்துவம் சரியாக வேலை செய்யவில்லை, அல்லது பொருத்தமற்ற மருந்து என்றும் அவருடைய சிந்தனை இருந்தால் மருத்துவம், மருத்துவர் என்று பொருட்களை முதன்மைப்படுத்தி கருத்துக்கு இடமில்லாமல் செய்த சிந்தனை முறையாக இருப்பதால் இது பொருளை முதன்மைப்படுத்தும் வாதம். பொருள்முதல் வாதம்.

ஒருவர் கருத்து முதல் வாதியாக இருப்பதும், பொருள் முதல் வாதியாக இருப்பதும் அவரவர் சமூக சூழல்களை உள்வாங்கும் விதங்களுக்கு ஏற்ப அமையும். கருத்து முதல் வாதமோ, பொருள் முதல் வாதமோ இரண்டுமே ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணவே எனும் போது அது தெளிவைத் தானே தரும். ஆனால், இன்று தத்துவம் என்றாலே குழப்பம் என்று அறியப்படுகிறதே இது ஏன்?

கருத்துமுதல் வாதம் தான் தரும் தீர்வுகளுக்கு சான்றுகள் எதையும் முன்வைப்பதில்லை. கற்பனையான முன்யோசனைகளிலிருந்தே தீர்வை தேடுகிறது. முன்னர் சொன்ன எடுத்துக்காட்டையே கொள்வோம். ஏன் உடல்நலக் குறைவு சரியாகவில்லை என்பதற்கு கடவுளின் விருப்பம் என்றொரு பதிலை கூறுகிறது. ஆனால் உடல்நலக் குறைவு நீடிக்க வேண்டும் என்று கடவுள் விரும்பினாரா என்பதற்கு எந்த சான்றும் இல்லை. எனவே, சான்றில்லாத குறையை போக்குவதற்காக பல்வேறு கிளைக் கேல்விகளை எழுப்புகிறது. உடலுக்குள் இந்தக் கணத்தில் என்ன நடக்கிறது என்று உனக்குத் தெரியுமா? பேரண்டத்தின் பொருட்கள் என்றாலும் உடலுக்குள் இருக்கும் சின்னஞ்சிறு உறுப்பு என்றாலும் எந்த அடிப்படையும் இல்லாமல் இயங்கிவிட முடியுமா? ஆகவே, உடல்நலக் குறைவு சரியாகாததற்கு கடவுளின் விருப்பமே காரணம். இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் பல்வேறு கிளைக் கேள்விகள் பதில்களுடன் பலவாறாக இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது.

பொருள்முதல் வாதம் தான் தரும் தீர்வுகளுக்கு தெளிவான சான்றுகளை முன் வைக்கிறது. உடல்நலக் குறைவின் காரணம் என்ன? கொடுக்கப்படும் மருத்துவமும், மருந்தும் என்னென்ன விதத்தில் உடலில் வினையாற்றுகிறது என்று முன்னர் நிகழ்ந்த பட்டறிவுடனும், உடல் இயங்கும் விதம் குறித்த புரிதல்களுடனும் விடை தருகிறது. என்றாலும், கருத்துமுதல்வாதம் முன் வைக்கும் பல்வேறு வகைப்பட்ட கேள்விகளுக்கும் விடைகளுக்கும் சேர்த்து விளக்கம் தரவும் செய்கிறது. இவ்வாறு கொடுக்கப்படும் விளக்கங்களும் எதிர்வினைகளும் இணைந்து விரிவுபடுத்தப்படுவதால் தெளிவான தன்மை நீர்த்துப் போய் குழப்பம் ஏற்படுகிறது. சரி பொருள் முதல் வாதம் தன்னுடைய விளக்கங்கள் சான்றுகளோடு நிறுத்திக் கொள்ளலாமே, ஏன் கருத்துமுதல் வாதத்தின் குழப்பங்களுக்கும் சேர்த்து விளக்கம் தர வேண்டும்? அப்படி நிறுத்திக் கொண்டால் அதில் வளர்ச்சி இல்லாமல் போகும். சமூகத்தில் நிகழும் ஒவ்வொன்றுக்கும் சரியான, பொருத்தமான விளக்கமளிப்பது தத்துவத்தின் கடமை என்பதிலிருந்து பொருள்முதல் வாதத்தின் விளக்கங்கள் உருப்பெறுகின்றன. எனவே, விவாதங்களும், விளக்கங்களும் தவிர்க்க முடியாதவை ஆகின்றன.

தத்துவங்களில் எவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் அது நோக்கர்களுக்குத் தான். நோக்கர்கள் எந்த அளவுக்கு தெளிவாகவும் நுணுக்கமாகவும் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு தத்துவங்கள் எளிமையாக, குழப்பங்களுக்கு தீர்வு சொல்பவையாக இருக்கும். இந்த வகையில் தத்துவங்கள் தங்கள் நீண்ட மரபுகளுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவைகளில் செர்மானிய தத்துவம், கிரேக்கத் தத்துவம், இந்தியத் தத்துவம் போன்றவை பன்னாட்டளவில் செல்வாக்குப் பெற்றவை.

மக்களியம் தொடரின் முந்திய பகுதிகள்:

  1. மக்களியம்
  2. மீள் தொடக்கம்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s