தேவையற்றவனின் அடிமையே வா

சில நாடகளுக்கு முன் முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாமல் நாத்திக கோமாளிகள் என தொடக்கத்திலேயே விளித்திருந்தார் அந்த பதிவர். அந்த சொல்லினால் உந்தப்பட்டு அவருக்கு பதிலளித்தேன். அது ஒரு விவாதமாக நீண்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வழக்கம் போல பதில் வரவில்லை.

அதையே ஒரு பதிவாக்கி முகநூலில் பகிர்ந்தேன். அவரைக் குறித்த பதிவுக்கு அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல எனும் எண்ணத்தில் அதில் அவரையும் கோர்த்திருந்தேன். அதற்கு அவர் வினையாற்றி இருந்தார். அதன் தொடர்ச்சியாக தனி பதிவு ஒன்றையும் பதிவேற்றி இருக்கிறார்.

கடவுளை கற்பித்தவன் முட்டாள்

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி

அதை பரப்புவன் அயோக்கியன்

இந்த வார்த்தைகள் எல்லாம் நாகரீகமான வார்த்தைகளா?

நான் கோமாளி முட்டாள் என்று

நாத்திகர்களை குறிப்பிட்டது

மட்டும் தான் வசை பாடும் வார்த்தைகளா?

இது தான் அந்தப் பதிவு. இதற்குப் பதிலளிக்காவிட்டால் அவர் கூறிய வசைச் சொற்கள் சரி என்று பொருள்பட்டு விடும் என்பதால், பதிலளிக்கத் துணிகிறேன். அது தான் இந்த கட்டுரையாக விரிகிறது.

பெரியார் முட்டாள், காட்டுமிராண்டி, அயோக்கியன் என்று கூறிய சொற்களை நான் சரியானவை என்று கருதுகிறேன். முதலில் அந்தச் சொற்கள் வினை அல்ல, விளைவு. வினையை உள்ளடக்காமல் விளைவு குறித்து கேள்வி எழுப்புவது அறியாமை. இங்கு நிலவும் சாதியப் படிநிலையும், அதன் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் தீண்டாமைக் கொடுமைகளும் கடவுள் மதம் உள்ளிட்டவைகளைக் கொண்டே நேர்கொள்ளப்படுகின்றன. இந்த வினையின் விளைவாகத் தான் பெரியார் கடவுளை கற்பித்தவனும், வணங்குபவனும், பரப்புபவனும் முட்டாள், காட்டுமிராண்டி, அயோக்கியன் என்கிறார்.

பெரியார் முட்டாள் என்று சொல்லிவிட்டார். எனவே, நானும் முட்டாள் என்று சொல்வேன் என்பவர்கள் எந்த இடத்திலிருந்து யாரை முட்டாள் என்கிறார்கள்? கடவுளை நம்பிக் கொண்டு, கடவுளை வணங்கிக் கொண்டு, கடவுளை பரப்பிக் கொண்டு திரிபவர்கள், அவ்வாறு இல்லாமல், அதற்கு எதிராக இருப்பவர்களை, இந்த சமூகத்தில் நிலவும் சாதியப் படிநிலைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் எதிராக இருப்போரைப் பார்த்து முட்டாள், கோமாளி என்கிறார்கள். இதன் பொருள் சாதியப் படிநிலையை, தீண்டாமைக் கொடுமைகளை ஏற்று நடத்திக் கொண்டிருப்பவர்களின் பக்கம் நிற்கிறார்கள். அதேநேரம் தீண்டாமைக் கொடுமைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்று கூறிக் கொள்வார்கள். பெரியாரே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள போதித்தார் என்பார்கள். ஆனால் உள்ளடக்கத்தில் அவர்கள் எங்கு நிற்கிறார்கள்? இது தான் அவர்களின் இன்றியமையாத இடம்.

ஊறிய விதத்தில் வேண்டுமானால் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாமே தவிர, அனைத்தும் ஒற்றைக் குட்டையின் மட்டைகளே. இப்படிப் பார்ப்போம், பெரியார் யாரை முட்டாள் என்று கூறியிருக்கிறார்? கடவுளின் பெயரால் மனிதனை மனிதனாக நடத்தாதவர்களை அல்லவா முட்டாள் என்கிறார். நாம் அப்படிக் கூறவில்லையே, எங்கள் கடவுள் மனிதரை மனிதராக நடத்த அல்லவா கற்றுக் கொடுத்திருக்கிறார். அப்படியென்றால் நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் மதத்தின் படியே, பெரியார் கூறியது சரி என்றல்லவா பொருளாகிறது. எனவே, பெரியார் கூறியுள்ளார் என்பதற்கு எதிராக நாமும் கூறினால் அது நம்மை நாமே எதிர்ப்பது என்றல்லவா பொருளாகும் எனும் சிந்தனை ஏன் அவர்களுக்கு வரவில்லை. ஏனென்றால் அவர்கள் மதம் எனும் அடிப்படையில் ஒன்றிணைகிறார்கள். இந்தியாவைப் பொருத்தவரை ஒடுக்கும் மதம், ஒடுக்கப்படும் மதம் எனும் அடிப்படையில் வேறுபாடுகள், எதிர்ப்புகள் இருக்கலாம். ஆனால் மதக் கோட்பாடு சரியா என்று உள்நோக்கி சிந்திக்க மறுக்கும் தன்மையில் இருவரும் ஒன்றே அல்லவா?

பெரியார் பயன்படுத்தினார் எனவே, அதுபோன்ற சொற்களை நானும் பயன்படுத்தினால் என்ன? என்று கேட்பவர்கள் பெரியாரை எப்படிப் புரிந்திருக்கிறார்கள்? பெரியார் ஒரு நாத்திகவாதி என்றா? பெரியார் என்றால் உழைப்பு. சாதியப் படிநிலை கூடாது என்று எப்போது உணர்ந்தாரோ அன்றிலிருந்து தள்ளாத வயதில் மூத்திரச் சட்டியோடு அலைந்து, அம்மா என்று வலியோடு அடிவயிற்றை பிடித்துக் கொண்டு, கடைசி சொட்டு வரை சாதியப் படிநிலைக்கு எதிராக உழைத்தவர் பெரியார். பெரியார் எனும் சொல்லின் அடையாளம் அந்த உழைப்பு. அந்த உழைப்பின் நூற்றில் ஒரு பங்கைக் கூட நெருங்க முடியாதவர்கள், முகநூலில் தானும் வெளியில் தெரிகிறேன் என்பதற்காக பெரியார் சொல்லும் போது இனித்தது, நான் சொல்லும் போது கசக்கிறதா என்று கேட்கிறார்கள். தன்னிலை மறந்தவர்களால் மட்டுமே இவ்வாறு கேட்க முடியும்.

கருத்தியல் அடிப்படையில் கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன் தான். இதில் யார் மனது புண்படுகிறது என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கடவுள் இருக்கிறாரா இல்லையா எனும் மிகமிகத் தொன்மையான சொற்போர் இன்றுவரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று எந்த மத ஆத்திகர்களாலும் உறுதியாக நிறுவ முடியவில்லை. அதேநேரம், கடவுள் இல்லை என்று உறுதியாக நிருவினாலும் ஆத்திகர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் நாத்திகர்களால் இயலவில்லை. இந்த நிலையில் கோடிக்கணக்கான மக்கள் கடவுள் எனும் ஏதோ ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதால் கடவுள் எனும் கருத்து உலகில் நிலவிக் கொண்டு இருக்கிறது. சொத்துடமை வடிவ சமூக உறவுகள் நீடிக்கும் வரை கடவுள் உயிருடன் இருப்பார் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

மறுபக்கம் மனிதர்களின் சிக்கல்கள், வாழ்வியல் முரண்கள், அதைத் தீர்ப்பதற்கான போராட்டங்கள் இவை அனைத்துமே இந்த உலகை அடிப்படையாகக் கொண்டவை. ஒருவன் ஏதுமற்றவனாகவும், இன்னொருவன் அனைத்தும் கொண்டவனாகவும் இருப்பதில் தொடங்கி, எந்த இரண்டு பேரின் தனிப்பட்ட விருப்பங்களும் வேறு வேறாய் இருப்பது வரை அனைத்தும் இந்த உலகை அடிப்படையாகக் கொண்டவை. இந்த சிக்கல்களுக்கான விடையாக, இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத மரணத்திற்கு பிறகான உலகத்தை தீர்வாக முன்தள்ளுபவர்கள் அயோக்கியர்களா? இல்லையா? இந்த உலகத்தை விட அந்த உலகம் தான் நீடித்து இருக்கக் கூடியது என்று இந்த உலகத்தின் சிக்கல்களை ஆற்றுப்படுத்துபவர்கள் அயோக்கியர்களா? இல்லையா? இது தான் கேள்வி.

இப்போது கூறுங்கள், பெரியார் பயன்படுத்தினார் என்பதனால் நானும் பயன்படுத்துகிறேன் என்று சொல்வதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா?

பின்குறிப்பு: இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தில் மாறுபட்டு நண்பர் அப்துல் சமத் விவாதிக்க முன்வந்தால் – இந்தத் தலைப்பு என்றாலும், வேறு எந்தத் தலைப்பு என்றாலும் – செங்கொடி தளம் பேருவகையோடு அதனை வரவேற்கிறது.

4 thoughts on “தேவையற்றவனின் அடிமையே வா

  1. சொத்துடைமை வடிவ சமூக உறவுகள் நீடிக்கும் வரை கடவுள் இருப்பார் என்பதை விளக்கமாக கூறுங்கள் தோழர்

  2. வணக்கம் தோழர்,

    இன்றைய அறிவியல், தொழில்நுட்ப தகவல் உலகில் கூட கடவுள் எனும் கருத்தை இல்லாமல் செய்ய முடியவில்லை. மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் படியான கடவுள் எனும் ஒன்று இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இது அறிவியல் சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்பட்டிருக்கும் பிறகும் கூட இது தான் நிலை. கடவுள் நம்பிக்கை வேறு, அறிவியல் தரவுகள் வேறு எனும் நிலை கற்றாய்ந்தவர்களிடமே இருக்கிறது. இது ஏன்? ஏனென்றால் இது உற்பத்தியுடன் தொடர்பு கொண்டது.

    பழைய பொதுமை சமூகத்தில் வேட்டையாடுவதும், வேட்டையிலிருந்து பிழைப்பதுமே ஒரே நோக்கமாக இருந்தது. வேறு எதையும் அவர்களால் சிந்தித்திருக்க முடியாது, சிந்திக்கவும் தெரியாது. ஏனென்றால் சிந்தனை என்பதே வாழ்நிலையிருந்து வரக் கூடியது தான்.

    இதன் பிறகு வேலைப் பிரிவினை ஏற்பட்டு உற்பத்தி முறையில் அளவு மாற்றம் ஏற்படத் தொடங்கிய பிறகு தான், சமூகப் பயனுள்ள ஒரு தனிமனிதனுக்கு மரணத்துக்குப் பின் என்னாகிறது? எனும் கேள்வி எழுகிறது. இதனுடன் இயற்கைச் சீற்றங்கள் குறித்த அறியாமையும் இணைந்து கொள்ள கடவுள் பிறக்கிறார். பின்னர் ஆண்டான் அடிமை உற்பத்தி முறையில் மதங்கள் உருவாகி கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து கொண்டு வளர்ச்சியடைகிறது. நிலவுடமை உற்பத்தி முறையில் மதங்கள் நிறுவனமயமாகின்றன. ஆளும் வர்க்கங்களுடன் இணைந்து எல்லா துறைகளிலும் நிறைகின்றன.

    முதலாளித்துவ உற்பத்தி முறையில் இயல்பாகவே கடவுள் மதம் போன்றவை முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு இன்னலையே ஏற்படுத்துகின்றன. இன்னலை ஏற்படுத்தும் எதையும் முதலாளித்துவம் தகர்க்கவே செய்யும். இந்த அடிப்படையில் தான் மதங்களின் ஆதிக்கத்தை அது தகர்த்திருக்கிறது. ஆனாலும் மதங்கள், கடவுள் நம்பிக்கையின் ஆளும்வர்க்கத்துக்கு ஆதரவான தன்மையினால் முற்றாக அழிந்து போக விடாமல் குறிப்பிட்ட அளவில் பாதுகாக்கவும் செய்கிறது.

    பழைய பொதுமை உற்பத்தி முறையின் பிற்பகுதியில் தொடங்கிய தனியுடமை தான் கடவுள், மதம் உள்ளிட்டவைகளின் உயிர். அதிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறை வரையில் அமைந்த உற்பத்தி முறைகள் எல்லாம் சொத்துடமை வடிவிலான உற்பத்தி முறைகள். இந்த சொத்துடமை உற்பத்தி வடிவங்கள், சோசலிச உற்பத்தி முறையில் வீழ்ச்சியடையத் தொடங்கும். இதுவே கடவுள், மத நம்பிக்கைகளின் வீழ்ச்சியையும் தொடங்கி வைக்கும். அது வரையிலும் சான்றுகளையும், தரவுகளையும் தந்து தனிப்பட்ட முறையில் விவாதம் செய்யலாம், சிந்திக்க வைக்கலாமே தவிர கடவுள் நம்பிக்கையை முற்றாக ஒழித்து விட முடியாது.

  3. நிலவுடைமை உற்பத்தி முறையில் மதங்கள் நிறுவனமயமாகின்றன மற்றும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் கடவுள் ,மதம் இயல்பாகவே முதலாளித்துவத்திற்கு இன்னலை ஏற்படுத்துகின்றன இதையும் விளக்குங்கள் தோழர்

  4. ஏன் பழைய பொதுவுடைமை சமூகத்தில் மனிதனுக்கு இறப்பிற்கு பின்னால் என்னாகிறது என கேள்வி எழவில்லை தோழர்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்