ஒரு தோழரின் கரு மாற்றம்

கடந்த இரண்டு நாட்களாக என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறாகவும் இழிவாகவும் செ.கார்கி எனும் முனைவர் செ கார்த்திகேயன் என்பவர் எழுதி வருகிறார். மட்டுமல்லாமல் தோழர் தமிழச்சி குறித்தும், சாரதா அவர்கள் குறித்தும் கூட கீழ்த்தரமாக பதிவிட்டு வருகிறார்.

செ.கார்கி என்பவர் முகநூலிலும், கீற்று தளத்திலும் தொடர்ச்சியாக எழுதி வருபவர்.  மார்க்சிய பார்வையில் நிகழ்வுகளை எழுதுபவர் எனும் அடிப்படையில் அவர் கட்டுரைகளை படித்திருக்கிறேன். முகநூல் பதிவுகளில் தொடர்ந்திருக்கிறேன். வெகு சில பதிவுகளில் பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். இவை தவிர எனக்கும் அவருக்கும் இடையில் எந்த வித தொடர்புகளும் இல்லை. ஒரே ஒரு முறை சென்னையில் நேரில் சந்தித்ததை தவிர. அந்த சென்னை சந்திப்பு தொடர்பாகத் தான் இப்போது அவர் அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்.

தன்னை ஒரு கம்யூனிஸ்டாக, எதற்கும் அடிபணியாத, விலைபோகாத புரட்சியாளனாக காட்டிக் கொள்ள விரும்பும் செ. கார்கி என்பவர், தான் எப்படி பார்க்கப்பட வேண்டும் என விரும்புகிறாரோ அந்த அடிப்படைக்கு ஆட்பட்டு இருக்க வேண்டும் அல்லவா? கம்யூனிஸ்ட் என்பவன் தரவுகள் அடிப்படையில், சான்றுகள் அடிப்படையில் மட்டுமே பேச வேண்டும். பொருள் இல்லாமல் கற்பனையாக பேசிக் கொண்டு செல்பவன் கருத்துமுதல்வாதியாகத் தானே இருக்க முடியும். மட்டுமல்லாது, அதுவரை அவருடைய முகநூல் நட்பு வட்டத்தில் இருந்த எங்கள் மூவரையும் தடுத்து பார்க்க முடியாமல் செய்து விட்டு பின் இது போன்ற அவதூறுகளைச் செய்திருக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களாக கார்கி முகநூலில் எழுதும் அவதூறுகளுக்கு என்ன சான்றுகளை வைத்துள்ளார்? இது குறித்து எந்த வெளியிலும், ஊடகம் என்றாலும் நேரில் என்றாலும் விவாதிக்க ஆயத்தமாக இருக்கிறேன். கார்கி அவ்வாறு ஆயத்தமாக இருக்கிறாரா? இது ஒன்று தான் என்னுடைய கேள்வி.

அவர் எழுதி இருப்பது போன்ற இழிவான நடையிலோ, பொருத்தமற்ற விவாதங்களோ செய்வதற்கு நான் ஆயத்தமாக இல்லை. தனிப்பட்ட முறையில் அவ்வாறு எழுதிக் கொண்டிருப்பது ஒரு கம்யூனிஸ்டின் வேலையும் அல்ல. மாறாக இவ்வாறு அவர் எழுதி இருப்பதன் பின்னணி என்ன? சூழல் என்ன? அந்த உளவியல் என்ன? அவை மக்களுக்கு ஊறு விளைவிக்கும் தன்மையில் இருக்கிறதா? என்பதையே முதன்மையாக பார்க்க விரும்புகிறேன்.

பொதுவாக, சமூக ஊடகங்களில் எழுதிக் கொண்டிருக்கும் சிலர், இதுபோன்ற சில்லறைத்தனமான கவன ஈர்ப்புகளில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள். இதற்கு இரண்டு காரணங்களை இருக்கலாம். 1. எதையாவது சொல்லி, செய்து தங்கள் மீது கவனத்தை குவிக்கச் செய்வது. 2. தங்களைத் தாங்களே மேதைகளாக கருதிக் கொள்வோர், மக்களை விட தங்களை உயர்வானவர்களாக கருதிக் கொள்வோர், தமக்கு சமமாக இல்லாதவர்கள் என்பவர்கள் தங்களுக்கு எதிராக ஏதேனும் விமர்சனம் செய்து விட்டால், அதற்கு எதிராக செய்யும் நேர்மையற்ற செயல்கள்.

கார்கி இதில் இரண்டாவது வகையில் வருகிறார். தொடர்ச்சியாக அவருடைய முகநூல் பதிவுகளை கவனித்து வருவோர்க்கு இது எளிதில் புரியும். பலநூறு கட்டுரைகள் எழுதியும் அதற்கு ஈடான ஏற்பை இந்த சமூகம் எனக்கு வழங்கவில்லை எனும் ஏக்கம் அவரின் அத்தனை பதிவுகளிலும் வழிந்தோடும். இதற்கு மறுபக்கம் சமூகத்தின் நிகழ்வுகளுக்கான எதிர்வினை என்ற பெயரில் வசைச் சொற்களை அள்ளி வீசுவது. அதன் மூலம் சமூகக் கோபம் கொண்டவனாக தன்னை முன்னிருத்திக் கொள்வது. இவை அனைத்துமே அவரின் உருவை கட்டமைக்க அவர் செய்யும் எத்தனங்கள். இதிலிருந்து தான் தன்னை விமர்சனம் செய்வோர் மீது ஏற்படும் நேர்மையற்ற கோபம் உருவாகிறது.

என்மீதும், தோழர் தமிழச்சி, சாரதா ஆகியோர் மீதும் கார்கி செய்துள்ளவை முழுக்க முழுக்க அவதூறுகள். இதற்கு ஏற்கனவே இருவரும் முகநூல் நேரலையில் தங்கள் மறுப்பை பதிவு செய்துள்ளார்கள். இந்தப் பதிவின் மூலம் நானும் பதிவு செய்கிறேன். இதுகாறும் தன்னை பொருள்முதல்வாதியாக காட்டிக் கொள்ள பெருமுயற்சிகள் செய்து கொண்டிருந்ததை கண்டிருக்கும் அவருடய நட்பு வட்டத்தில் இருப்போர் அவரை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும். பொருத்தமற்று, சான்றுகளின்றி, குறிப்பான விவரங்கள் இன்றி இத்தனை இழிவாக, இத்தனை வன்மமாக, இத்தனை ஆணாதிக்க திமிருடன் ஒரு கம்யூனிஸ்ட் பேச எழுத முடியுமா? என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

இது வரையிலான கீற்று போன்ற தளங்களில் வெளியான கார்க்கியின் கட்டுரைகள், மார்க்சிய பார்வையிலான மக்களுக்காக பேசுப்படுபவை எனும் கோணத்தில் தான் வாசிக்கப்பட்டிருக்கும். அப்படியல்லாமல் தன்னைக் குறித்த பிம்பமாக்கல் தொனியில் தான் அவை எழுதப்பட்டிருக்கின்றன எனும் உள்ளீட்டை கார்கி தன் செயலின் மூலம் தன்னம்பலப்படுத்திக் கொண்டார்.

சுயவிமர்சனம் என்பது அத்தனை கடினமானது. கம்யூனிஸ்டுகளால் மட்டுமே செய்ய முடிகின்ற பணி அது. ஒரு நட்பு முரணாகவே கார்கியை அணுகி, இந்த கோரிக்கையை வைக்கிறேன்.  சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள். சொல்லில் ஒன்றாகவும் செயலில் வேறொன்றாகவும் இருப்பது கம்யூனிஸ்டுகளுக்கான இலக்கணம் அல்ல. தவிரவும் இது மக்களுக்கான பணியும் அல்ல. தனிப்பட்ட அவதூறுகளின் பின்னே உழன்று கொண்டிருப்பது செய்ய வேண்டிய பணிகளுக்கான தடைக்கல் என்பதால் கடக்கிறேன்.

இனி இவைகளையும் கவனம் கொண்டு எங்களின் பணி தொடரும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்