அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்களும் ஆஸ்திரேலியாவை நோக்கி திரும்பியிருந்தன. சில மாணவர்கள் தாக்கப்பட்டதை அனைத்து ஊடகங்களும் திறமையாக மொழிபெயர்த்து இந்தியாவின் பொது வேதனையாக மக்களை உணரச் செய்திருந்தன. அமெரிக்க இந்தியர்களின் வரதட்சனைக் கொடுமைகளும், கண்ணீரும் கூட இந்தியாவில் உழலும் மக்களின் இதயத்தில் ஊடுறுவி நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் இதுபோன்றே எதிர்வினைகளையும் ஆதரவையும் கோரும் வேறுசில செய்திகளோ எவ்வித கேள்விகளையும் நம்முள் எழுப்பாது கடந்துவிடுகின்றன. ஊடகங்கள் இவற்றை முதன்மைப்படுத்துவதில்லை, ஒரு மூலைச் செய்தியாக கடந்துவிடுகின்றன. தம் உளக்கிடக்கையோடு மோதும் பரிசீலனையை கோருவதால் மக்களும் கூட இதுபோன்ற செய்திகளின் கணபரிமாணங்களை நிறுத்துப்பார்க்க விரும்புவதில்லை.

“லிபியாவில் கொத்தடிமைகளாகத் தவிக்கும் 80 தமிழர்கள்” இது நேற்று வந்த செய்தி. நேற்றோ இன்றோ மட்டுமல்ல இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வந்து யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் கரைந்து போய்விடுகின்றன. இதிலிருந்து தப்பி வந்த இளையான்குடியைச் சேர்ந்த ஒருவர் இதை விவரிக்கிறார், “மதுரையில் வில்லியம்ஸ் டிராவல்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. அது லிபியாவில் தங்கும் வசதியுடன் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்தது. இதை நம்பி அந்த வேலையை எப்படியாவது வாங்கிட வேண்டுமென்று அந்த நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் கொடுத்தேன். அவர்களும் சொன்னபடி என்னை லிபியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சொன்னது எல்லாம் பொய் என்று அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. எனக்கு தோட்ட வேலை கொடுத்தனர். இவ்வளவு பணம் கொடுத்து வந்துவிட்டோம் என்ன செய்வது என்று நான் அந்த வேலையைச் செய்தேன். அதிக சம்பளம் என்று சொன்னார்கள் அல்லவா. ஆனால் அங்கு இது நாள் வரை சம்பளமே கொடுக்கவில்லை. என்னைப் போன்று ஏமாந்த சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை , விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் 80 பேர் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சம்பளத்தைக் கேட்டதற்கு எங்களை கட்டிடத்தில் வைத்து பூட்டி வைத்தனர். அங்கிருந்து ஒரு வகையாக தப்பித்து இளையான்குடியில் இருக்கும் என் உறவினர்கள் உதவியால் இந்தியாவுக்கு வந்தேன். அங்கு ஆதரவின்றி அவதிப்படும் தமிழர்களை மீட்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறேன். அவரும் உடனடியாக நடவடிக்கை  எடுப்பதாகக் கூறினார்” மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பு எழுதி முன்நக‌ர்த்தலாம் அல்லது தன்னுடைய பணியில்(!) மூழ்கி மறந்துபோகலாம். நடவடிக்கை கோரிய தப்பிவந்த அந்த இளைஞரேகூட காலத்தின் சக்கரங்களுக்கிடையில் தன்னுடைய கோரிக்கையை நினைவுபடுத்த இயலாமல் போகலாம். ஆனால் புதிது புதிதாய் ஆயிரக்கணக்கான இளஞர்கள் இதுபோன்ற செய்திகளை உருவாக்க மஞ்சள் பையில் பணத்துடன் உள்ளடங்கிய கிராமங்களிலிருந்து புறப்பட்டு வந்துகொண்டே இருக்கின்றனர்.

நாட்டில் ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்த விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழில்களையும் உலகமயமாக்கலின் விளைவாக அரசு புற‌க்கணிக்கத் தொடங்கிய 80களின் பிற்பகுதிக்குப் பிறகு, இனியும் விவசாயம் வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்கப்போவதில்லை என்பது விவசாயிகளுக்குப் புரியத் தொடங்கியது. நிலங்களில் விளைவிப்பது கடினமாகியது, விளைவித்தாலும் அதற்குறிய விலைகிடைப்பது அதனிலும் கடினமாகியது. நிலம் வைத்திருந்தவர்கள் வந்த விலைக்கு விற்றுவிட்டு மாற்றுத்தொழிலில் முடங்கினார்கள், விவசாயக் கூலிகளோ முதலில் தொழில் நகரங்களுக்கும், பின்னர் வெளிநாடுகளுக்கும் நவீன கொத்தடிமைகளாய் தங்களை மாற்றிக்கொண்டனர். வெளிநாடுகளில் என்னவிதமான சிக்கலில் மாட்டிக்கொண்டாலும் தங்களை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு வாங்கிவந்த பெரும்கடன் அவர்களுக்கு தடையாக இருக்கும் என்பதை அறிந்துகொண்ட தரகர்கள், தெரிந்தே, துணிந்தே போலியான விசாக்களிலும், பொய்யான வாக்குறுதிகளிலும் அனுப்பிவைத்துப் பணம் கறந்துவிடுகின்றனர்.

வெளிநாடு செல்லுமுன் விசாரித்துக்கொள்ளவேண்டாமா? பணத்தைக் கட்டுமுன் உரிமம் பெற்ற முகவர்தானா? முறையான ஆவணங்கள் தானா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டாமா? அளவுக்கு விஞ்சிய பேராசையினால்தான் ஏமாந்துபோகிறார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்கள் அவர்களின் நடப்புச் சூழலை கருத்தில் கொள்வதில்லை. அடுத்த நாளை எப்படிக் கடப்பது எனும் சுழலில் சிக்கியிருப்பவர்களின் சஞ்சலங்கள் எதிர்காலம் குறித்த அச்சமில்லாமல் இருப்பவர்களுக்குப் புரிவதில்லை. கடன் சுமை, கடமைகள் என தத்தளிப்பவர்கள் பொய்யாக என்றாலும் சிறு நம்பிக்கை காட்டினாலும் பற்றிக் கொண்டுவிடுகிறார்கள். இதில் அவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்றாலும், சீர்தூக்கிப் பார்க்கவியலா நிலையில் அவர்களைத் தள்ளியிருக்கும் அரசு தான், அவர்களின் நிலைக்கு அவர்களைவிட பெரிய குற்றவாளி.

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது எந்த ஒரு அரசுக்கும் பெரும் கவலையளிக்ககூடிய, மிகுங்கவனம் தேவைப்படக்கூடிய ஒன்று. வேலையில்லா நிலையை அரசுதான் தன் செயல்பாடுகளின் மூலம் ஏற்படுத்துகிறது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்கேனும் சமாளிக்கக்கூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அரசு தானே செய்யலாம் அல்லது முறைப்படுத்தலாம். நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலேயே தயங்காமல் தனியார்மயத்தைப் புகுத்துவதில் ஈடுபடும் அரசு இதுபோன்றவற்றைச் செய்யும் என்று பொய்யாகவேனும் நம்பமுடியுமா?


மக்களின் வாழ்வாதாரங்களை குலைப்பதன்மூலம் அவர்களை வறுமையில் தள்ளுவதும் அரசு, அவர்களின் வறுமைக்காப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்தி அவர்கள் ஏமாந்துபோவதற்கான வழிமுறைகளை அடைக்காமலிருப்பதும் அரசு, அதன்பிறகும் மீட்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதும் அரசு. எல்லாமுனைகளிலும் உழைக்கும் மக்களை வதைக்கும் அரசை விட்டுவிட்டு; ‘எதைத்தின்றால் பித்தம் தெளியும்’ எனும் நிலையிலிருக்கும் தனிப்பட்ட மனிதனை அவன் கவனமாக இல்லாததால் நேர்ந்தது இது எனக்குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் சரியாகும்?

சௌதி அரேபியாவின் ஜித்தா நகரின் ஷரஃபியா பாலத்தின் அடியில் சம்பளமின்றி ஊர் திரும்ப வழியுமின்றி மாதக்கணக்காக சில இந்தியர்கள் பரிதவித்துக்கிடந்தார்கள். எந்தத் தூதரக அதிகாரிகளும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. அண்மையில் சௌதி வந்த மன்மோகன் சிங் அனேக மனமகிழ் மன்றங்களில் மணிக்கணக்கில் உரை நிகழ்த்தினார். ஆனால் மறந்தும் கூட சௌதியில் வதைபடும் தொழிலாளர்கள் நிலை குறித்து ஒரு வார்த்தையும் பேசினாரில்லை. ஆஸ்திரேலிய தாக்குதலுக்கு பிரதமர் தொடங்கி வெளியுறவு அமைச்சர்வரை கண்டனம் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் கைதாகும் குற்றவாளிகளுக்குக் கூட அரசின் சார்பில் பரிந்துபேச ஆளிருக்கிறது. மேற்குலகில் வாழும் சில ஆயிரம் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு என்ன செய்யலாம் என யோசிக்கும் அரசு (வாக்களிப்பதால் பலன் ஒன்றுமில்லை என்றாலும்) வளைகுடாவில் இருக்கும் லட்சக்கணக்கானோர் குறித்து சிந்திப்பதில்லை.

ஏனென்றால் அரசு என்பது எல்லோருக்குமானது அல்ல. எல்லோருக்கும் சமமானது எனும் பாவனையில் இயங்கும் பக்கச்சார்பானது. பணக்காரர்களுக்கான அரசாங்கம் இது என்பதை அது மறைவின்றி வெளிப்படையாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. பணக்கார வர்க்கத்தினருக்கு அரசு யாருக்கானது என்பதில் சற்றும் சந்தேகமில்லை. பாட்டாளி வர்க்கத்தினருக்குத்தான் அரசு என்பது பொதுவானது எனும் மாயை இன்னும் மிச்சமிருக்கிறது. வாருங்கள், பொய்த்திரைகளை விலக்கி உண்மைகளின் வெளிச்சத்தைக் காண்போம்.

6 thoughts on “அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?

  1. ///பணக்காரர்களுக்கான அரசாங்கம் இது என்பதை அது மறைவின்றி வெளிப்படையாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. பணக்கார வர்க்கத்தினருக்கு அரசு யாருக்கானது என்பதில் சற்றும் சந்தேகமில்லை. பாட்டாளி வர்க்கத்தினருக்குத்தான் அரசு என்பது பொதுவானது எனும் மாயை இன்னும் மிச்சமிருக்கிறது.///

    100% TRUE WORDS.

    WELL WRITTEN KEEP IT UP

  2. Each and every unemployed must aware about these truths. Your coverage is very clear about the position of unemployment and govt..s attitudes on the people those who requires care and attention in abroad…kavignar Thanigai.

  3. //அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா? //
    ஆமாம் ! அது மட்டுமல்ல இந்திய அரசாங்கத்தை பொறுத்தவரை தமிழர்கள் இந்தியர்களில் சேத்தி இல்லை.

  4. //ஏனென்றால் அரசு என்பது எல்லோருக்குமானது அல்ல. எல்லோருக்கும் சமமானது எனும் பாவனையில் இயங்கும் பக்கச்சார்பானது. பணக்காரர்களுக்கான அரசாங்கம் இது என்பதை அது மறைவின்றி வெளிப்படையாகவே காட்டிக்கொண்டிருக்கிறது//

    நம்முடைய தூதரகம் வெளிநாட்டில் நம்மை கண்டு கொள்ளாது. மத்திய கிழக்கு நாடுகளில் தண்டனைக்கு ஆட்படுவது அதிகம் இந்தியர்களே. முறையான விசா இல்லாமல் இலட்சக் கணக்கானவர் அங்கே கஷ்டப் படுகிறார்கள். அது தெரிந்தும் தெரியாயது போல் நடந்து கொள்கிறது.

  5. தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
    ஃஃஃஃ…அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்…!!ஃஃஃ
    http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்