தேர்தல் அல்லாத காலங்களில் எல்லாவிதமான ஜனநாயகமற்ற வழிகளிலும் மக்களை சூறையாடுவதும், சூறையாட துணைபோவதுமாய் இருந்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் மக்களுக்கு ஜனநாயக பாடம் எடுக்க வந்து விடுகிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் வியாதிகள். மக்களும் தாங்கள் வாழ்வதற்காக படும்பாடுகளுக்கு யார் காரணம் என்பதையோ, அதில் ஜனநாயகத்திற்கு ஒட்டும் தொடர்பிருக்கிறதா என்பதையோ அறியாமல், ஓட்டுப் போட மறுப்பது ஜனநயகத்தை மறுப்பது என்பது போன்ற மயக்கத்தில் இழுபட்டு விடுகிறார்கள்.
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மேல்மட்ட அளவிலான பேரளவான ஊழல்களுக்கும், நிர்வாக முறைகேடுகளுக்கும் வழிவகுக்கின்றன என்றால் உள்ளாட்சித் தேர்தல்கள் அடிமட்ட அளவில் அவைகளை பரவலாக்குகிறது.
உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நிர்வாகத்தில் என்ன பங்களிப்பைச் செய்கிறார்கள்? ஒன்றுமில்லை. கமிசன்களைப் பெறுவதும், நடக்கும் பணிகளில் சில ஒதுக்கீடுகளைப் பெறுவதையும் தவிர. பல ஆண்டு காலம் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் கிடந்த போது கிராமப்புறங்களும், நகர்ப்புறங்களும் எந்தப் பணிகளும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தனவா? இப்போது தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளால் அந்தந்த பகுதிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியுமா? என்றால் எதற்கு இந்த மக்கள் பிரதிநிதிகள்? நாம் ஏன் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்?
நகராட்சி, ஊராட்சிப் பணியாளர்கள் என்று முன்னர் பலர் இருந்தார்கள். துப்பறவுப் பணிகள் உட்பட குடிநீர் குழாய்கள் பராமரிப்பு, சுகாதாரப் பணிகள் என பலவற்றை செய்துவந்தார்கள். அரசின் அலட்சியத்தால் இவர்கள் பெருகிவரும் தேவைகளுக்கு ஏற்ப அதிகரிக்கப்படாமலும், போதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படாமலும் விடப்பட்டு, தேவைகளை சரிவர தீர்க்க முடிவதில்லை எனும் பெயரில் அன்னிய நிறுவனங்களை உள்ளே நுழைத்தார்கள். பெருநகரங்களிலிருந்து தொடங்கி இந்த அன்னிய நிறுவனங்களின் பணிகள் சிறுநகரங்கள் வரை விரிவடைந்துவிட்டது. எளிமையாக தீர்க்கப்படமுடியும் பணிகளைக் கூட அன்னிய நிறுவனங்களிடம் தாரை வார்த்து விட்டு எதை நிர்வகிக்க இந்த மக்கள் பிரதிநிதிகள்? இவர்களை நாம் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
கிராமப்புற மக்களின் வாழ்வை தீர்மானிக்கும் விவசாய உற்பத்திக்கு உகந்த எதையும் அரசு செய்யவில்லை. அன்னிய நிறுவனங்களுக்கு சாதகமாக உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலையை அவர்களே விருப்பப்படி உயர்த்திக் கொள்ள அனுமதியளித்தது தொடங்கி, விளைந்த தானியங்களை கொள்முதல் செய்வது, அவைகளுக்கு விலையை முடிவு செய்வது வரை அன்னிய நிறுவனங்கள் செய்கின்றன. இது நாட்டின் பெரும்பகுதி மக்களை நேரடியாக வதைத்து சிதைக்கிறது. இதை எதிர்த்துப் பேசவோ, செயல்படவோ இந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் முடியுமா? பின் ஏன் இவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்?
உள்ளூரின் நேரடியான, உடனடியான பெரும்பாதிப்புகளால் (கேரளாவின் பிளாச்சிமடா, நெல்லை கங்கை கொண்டான்) சில ஊராட்சி பிரதிநிதிகள் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்துப் பேசினால் நீதிமன்றங்களால் அவர்களின் பதவியை பறிப்பது தொடங்கி, குண்டர்களை வைத்து கொலை செய்துவிடும் அளவுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் செல்வாக்கும் பலமும் கொண்டு இயங்க அனுமதித்து விட்டு, இந்த பிரதிநிதிகள் நிர்வாகம் செய்கிறார்கள் என்று கூறுவது யாரை ஏமாற்ற?
சிறப்பாக நடந்து கொண்டிருந்த கைத்தறி நெசவை அதற்கான சிறப்பு ரகங்களை நீக்குதல் எனும் ஒரே உத்தரவின் மூலம் நலிவடையச் செய்தது போல், தீப்பெட்டி தயாரித்தல், பாய்முடைதல் போன்ற கைவினைத் தொழில்களை திட்டமிட்டு நசுக்கிவிட்டது அரசு. இது போன்ற உள்ளூர் பொருளாதாரத்தை திட்டமிட்டு சீர்குலைப்பதற்கு எதிராக அவைகளை பாதுகாப்பதற்கு இந்த உள்ளாட்சி பிரதிநிதிகளால் எதுவும் செய்துவிட முடியுமா? என்றால் ஏன் இவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்?
கடந்த சில பத்தாண்டுகளில் மட்டும் மூன்று லட்சம் விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்து மாண்டு போயிருக்கிறார்கள். இந்த மரணங்களைத் தடுக்க சுட்டுவிரலைக் கூட அசைக்க அதிகாரமில்லாத இந்த உள்ளாட்சிப் பிரதிநிகளை ஏன் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்?
அரசு தன் கொள்கையாக வரித்துக் கொண்டிருக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் பேரளவில் ஊழலுக்கு வழிவகுத்து மக்களை வதைக்கிறது. இதற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிடக் கூடாது என்றும், போராடங்கள் கட்டமைக்கப்பட்டு விடக்கூடது என்பதற்காகவும் சுயஉதவிக் குழுக்களை இறக்கிவிட்டு மக்களை கண்காணித்து தடுக்கிறது. அதே நோக்கத்திற்காக உள்ளாட்சித் தேர்தல்களை முறைப்படுத்தி நிர்வாகத்தில் பங்கு பெறுவது போன்ற மயக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துவதன் மூலம், அவர்களையும் ஊழல்மயப் படுத்தி பொறுக்கித் திண்ண தயார்படுத்துவதற்கும் தான் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதில் மக்களை ஈர்க்கும் ஜனநாயகத் தன்மை இருப்பதற்காக கட்டவே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்றவைகள் இடம்பெறச் செய்யப்பட்டிருக்கின்றன.
யதார்த்தத்தில் கிராமப் புறங்களில் ஊராட்சிப் பகுதிகளில் ஜாதிவெறியே கோலோச்சுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பகுதிகளில் மிரட்டல்களின் மூலமும், ஏலங்களின் மூலமும் ஆதிக்க சாதியினரே அமர்ந்து கொள்கின்றனர். தேர்ந்தெடுக்கப்படுபவர்களோ நீட்டிய இடங்களில் கையெழுத்திடவும், தேநீர் வாங்கி வருவது போன்ற ஏவல்களைச் செய்வதற்கும் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். மீறினால் மேலவளவு முருகேசன் போல் படுகொலை செய்யப்படுவார்கள். பெண்களுக்கான இடங்களில் நிறுத்தப்படுபவர்கள் வெறும் பொம்மைகள் தான். ஓட்டுக் கட்சிகளில் இருக்கும் அவர்களின் கணவனோ, தந்தையோ, அண்ணனோ தான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறார்கள். இன்னும் பல இடங்களில் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாக கூறிக்கொண்டு வெளிப்படையாகவே பணம் விளையாடுகிறது. இதுதான் உள்ளாட்சித் தேர்தல்களின் லட்சணம்.
இப்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் செய்வது என்ன? அவர்கள் வெத்துவேட்டுகள் என்பது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கொஞ்சம் நிதியை ஒதுக்கி, சாக்கடையை தூர்வாறுவது, குடிநீர்குழாய் உடைப்பை சரி செய்வது, தெரு விளக்குகள் போடுவது போன்ற பிசாத்து பணிகளை அவர்களை செய்ய வைப்பதன் மூலம் கமிசன்களை பகிர்ந்து கொள்வது தான். அதாவது, நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் தொகுதிக்கு ஒருவர் ஊழல் செய்வது, ரவுடித்தனம் செய்வது என்றிருக்கும் நிலையை தெருவுக்கு ஒருவர் என்ற அளவில் பரவலாக்குவதைத் தவிர இந்த உள்ளாட்சித் தேர்தல்களால் ஒரு பயனும் இல்லை.
எனவே, நீங்கள் போடும் வாக்கு மக்களை ஊழல்வாதிகளாக ஆக்குவதற்கான அனுமதியாகத்தான் பயன்படுகிறதேயன்றி ஜனநாயகத்திற்கோ நிர்வாகத்திற்கோ சிறிதும் பயன்படுவதில்லை.
மக்களே சிந்திப்பீர்! மக்களுக்கான ஆட்சி மலர வேண்டுமென்றால் அது புரட்சியின் மூலம் மட்டுமே சாத்தியம். அதை நாம் தேர்தலை புறக்கணிப்பதிலிருந்து தொடங்குவோம்.
புரட்சியின் மூலம் மட்டுமே சாத்தியம். அதை நாம் தேர்தலை புறக்கணிப்பதிலிருந்து தொடங்குவோம்.
புரட்சியின் மூலம் மட்டுமே சாத்தியம். அதை நாம் தேர்தலை புறக்கணிப்பதிலிருந்து தொடங்குவோம்.
I am not voting to any political parties