அஸ்ஸாம் ஆட்டங்கள்

நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஆளாளுக்கு முகாம்களுக்கு சென்று போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்கள், எல்லாம் சரியாகிவிட்டது என்று அறிவித்தார்கள். ஆனாலும் அஸ்ஸாம் அவ்வப்போது எரிந்துகொண்டே இருக்கிறது. குழு மோதலாக தொடங்கி, இனக் கலவரமாக மாறி உயிருக்கும் உடமைகளுக்கும் பேரிழப்பாக தொடர்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரசே ஆட்சியில் இருந்தாலும் ஒன்றை ஒன்று மாற்றி மாற்றி குற்றம் சுமத்திக் கொள்கின்றன. நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் வாயில் நுழையாத ஏதாவது இஸ்லாமிய அமைப்பை காரணமாகக் கூறும் பாஜக, அதே போல் இந்தக் கலவரத்தையும் வங்க தேச ஊடுறுவல் காரணம் என்று அலறியது. செய்தி ஊடகங்கள் வழக்கம் போலவே எங்கு தொடங்கியது? எப்படி தொடங்கியது? இனக்கலவரத்திற்கான பின்னணி என்ன? யார் தூண்டியது? யார் தாங்கி நிற்பது? என்பது போன்ற எந்த விபரங்களும் இல்லாமல் வெறுமனே இழப்புகளையும், பாதிப்புகளையும் பெரிதுபடுத்திக் காட்டியும், உப்புச் சப்பற்ற கேள்விகளைக் கொண்டு பேட்டிகள் எடுத்துக் காட்டியும் தங்கள் வியாபார நோக்கை உறுதிப்படுத்திக் கொண்டன.

 

இந்தக் கலவரம் இப்போது புதியதாக தொடங்கி ஒன்றல்ல, ஏற்கனவே சில முறைகள் இது போன்ற கலவரங்கள் இந்தப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. அதாவது, இந்தக் கலவரம் இரண்டு சமுதாயத்தினரிடையேயான மோதலோ, ஊடுருவல் பிரச்சனையோ, தீவிரவாதக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கையோ அல்ல. மாறாக இக்கலவரத்தின் வேர்கள் தேசியப் பிரச்சனைக்குள் ஆழ்ந்திருக்கின்றன.

 

இந்தியா எனும் எல்லைக்குள் இருப்பவர்கள் பெருமையுடனும் பூரிப்புடனும் அச்சொல்லை உச்சரித்துக் கொண்டிருப்பதாக யாருக்கேனும் எண்ணமிருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தியா எனும் நிலப்பரப்போடு மரபு கலாச்சார ரீதியாகவோ, இயற்கையான புவி அமைப்பு ரீதியாகவோ தொடர்பே இல்லாத மக்கள், பல காலமாக வெள்ளையர்கள் காலனியாக பிடித்து வைத்திருந்தார்கள் எனும் ஒரே காரணத்திற்காக இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரிகளைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் பீரங்கிகளுக்கு எதிராக கல் வீசுவது பொழுதுபோக்கிற்காக அல்ல. அது போலத்தான் வட கிழக்கு மாநிலங்களும். வடகிழக்கு மாநிலங்களிலும், நேபாளத்திலும் வாழும் போடோக்கள் இந்திய அரசை எதிர்த்து 80களில் உபேந்திரநாத் பிரம்மா தலைமையில் போராடத் தொடங்கினர். அனைத்து போடோ இன மக்களையும் உள்ளடக்கிய தேசியப் போராட்டமாக வளர்ந்திருக்க வேண்டிய இது இந்திய அரசியல் பெருச்சாளிகளால் வன்முறைக் கும்பலாக உருமாறியது.

 

அந்தப் பகுதியின் பழங்குடியினரான போடோக்கள் முன்னர் ‘பாத்தூயிசம்’ என்னும் மூதாதையர் வழிபாட்டு முறையை பின்பற்றினர். ஆனால் அந்த மூதாதை வழிபாட்டை பார்ப்பனிய பாசிசங்கள் இந்துத்துவத் திணிப்பால் இடம்மாற்றி விட்டன. இன்று போடோக்கள் பெரும்பான்மையினர் இந்து(!)க்களே. பார்ப்பனீயம் எப்போதுமே எதிரியை உருவகப்படுத்திக் காட்டுவதன் மூலமே பழங்குடிகளையும், தாழ்த்தப்பட்டவர்களையும் தம்முடைய பட்டிக்குள் அடைத்து வந்திருக்கிறது, அந்த வகையில் அந்தப் பகுதியிலுள்ள முஸ்லீம்கள் எதிரிகளாக அடையாளம் காட்டப்பட்டார்கள்.

 

அதுவரை வங்காளிகளாக இருந்தவர்கள், காலனியாதிக்க பிரித்தாளும் சூழ்ச்சியினால் மத அடிப்படையில் கிழக்கு மேற்கு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு பின்னர் இந்தியா பாகிஸ்தானாக மாறி பின்பு வங்கதேசிகள் எனும் தனி தேசியமாக ஆக்கப்பட்டார்கள். இன்றைய உலகமய சூழலில் ஒப்பீட்டளவில் வங்க தேசத்தைவிட சற்று மேம்பட்டிருந்த இந்தியாவிற்குள் அவர்கள் எல்லை கடந்து ஊடுருவினார்கள். இதை தங்களுக்கு வசதியாக பயன்படுத்திக் கொண்ட இந்துத்துவவாதிகள் அனைத்து இஸ்லாமியர்களையுமே ‘வங்கதேச வந்தேறிகள்’ என்று கூறி போடோக்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான இனப்பகையாக மாற்றினார்கள். இந்தியாவோடு கலாச்சார ரீதியாக தொடர்பு கொண்டிருந்த வங்காள முஸ்லீம்கள் அன்னியர்களாகவும், கலாச்சார தொடர்பற்ற போடோக்கள் இந்தியர்களாகவும் உருமாறிய கதை இது தான்.

 

இதையே வேறொரு கோணத்தில் காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. சட்டவிரோத குடியேற்ற சட்டம் ஒன்றை உருவாக்கி இஸ்லாமியர்களுக்கு சில சலுகைகளை கொடுத்ததன் மூலம் அவர்களை தனது வாக்கு வங்கியாக தக்க வைத்துக் கொண்டது. மற்றொருபுறம் வடகிழக்கு மாநில மக்கள் உணர்வு ரீதியாக இந்தியாவுடன் ஒன்றவே இல்லை. அதனால் அன்றிலிருந்து இன்றுவரை இராணுவத்தின் பலத்தைக் கொண்டே அவர்களை இந்தியர்களாக இருத்தி வைத்துக் கொண்டிருக்கிறது. அரசுக்கு விரோதமாக மக்கள் கிளர்ந்தெழும் போது அதை நீர்த்துப் போகவைக்க அரசுகள் பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று தேசிய இனப் பிரச்சனைகளை விசிறி விடுவது. அந்த வகையில் அந்தப் பகுதிகளில் இந்திய இராணுவம் நிகழ்த்திவரும் அடக்குமுறைகளை மறைக்கவும் தேசிய முரண்பாடுகள் உயிர்ப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றன.

 

ஆனால் இவைகலையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் யாரோ இரண்டு குழுக்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்து கொண்டது தான் கலவரத்துக்கான காரணம் என்றால் அதைவிட அபத்தம் வேறொன்று இருக்க முடியாது. இஸ்லாமியர்கள் இதை மதத்திற்கு எதிரான அநீதியாக பிரச்சனையாக உருமாற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். மறுபக்கம், அதிகார வர்க்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனோநிலையை நாட்டின் அனைத்துப் பகுதி மக்களிடமும் வதந்திகள் மூலம் நுணுக்கமாக ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களிடம் எந்நேரமும் இஸ்லாமியர்களால் தாக்கப்படக்கூடும் எனும் பொய்ச்செய்தியை பரப்புவதன் மூலம் பல பலன்களை அடைந்திருக்கின்றன. அமைச்சர்கள் இரயில் நிலையத்திற்கே சென்று திரும்புமாறு கோரிக்கை விடுப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட பணிப்பாதிப்பை சரிக்கட்ட முயலும் அதேநேரம் தங்களை மக்களுக்காக செயல்படுபவர்கள் போல காட்டிக் கொள்வது. இஸ்லாமியர்களால் தாக்கப்படுவோம் எனும் அச்ச உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மெய்யான காரணங்களிலிருந்து மக்களை திசை திருப்புவது. வதந்தியை பரப்பினார்கள் என்று சமூகத் தளங்களை முடக்குவதன் மூலம் பின்னர் நிரந்தரமாக இணையத் தடை ஏற்படுத்துவதற்கு முன்னோட்டம் பார்ப்பது என்று பல பலன்களை ஆளும் வர்க்கங்கள் அடைந்திருக்கின்றன.சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மைகள் தெள்ளென விளங்கும்.

 

ஆளும் அதிகார வர்க்கங்கள் தங்கள் நலனை சாதித்துக் கொள்வதற்கு எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றன என்பது ஏறகனவே பலமுறை நிருவப்பட்டிருக்கிறது. இனிமேலும் மக்கள் இதை உணராமலிருக்க முடியாது. இன மோதல்கள் தொடங்கி மத மோதல்கள் வரை தங்களைப் பிரிக்கும் அனைத்து பேதங்களையும் கடந்து வர்க்க அடிப்படையில் ஒன்றிணவதைத் தவிர இவைகளை முறியடிப்பதற்கும் முன்னேறுவதற்கும் வேறுவழியில்லை. 

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

One thought on “அஸ்ஸாம் ஆட்டங்கள்

  1. நன்றி. இந்த விவரம்
    இந்த கட்டுரையை
    படித்தபிறகு தான்
    விளங்கியது

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s