அதிமுக வெற்றி மக்கள் முடிவா?

பாராளுமன்ற முறை, ஜனநாயகம், ஓட்டுக் கட்சிகள் போன்ற விமர்சனங்களையும், யார் வென்றாலும் தோற்கப் போவது மக்கள் தான் போன்ற பொதுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சொல்லுங்கள். கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியை மக்கள் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

 திரு. மணி கேள்வி பதில் பகுதியில்

ele2016

நண்பர் மணி,

பாராளுமன்ற முறை மீது வைக்கப்படும் விமர்சனங்கள், தோற்கப் போவது மக்கள் தாம் என்பதெல்லாம் நாங்கள் கூறுபவை என்பதைத் தாண்டி அவை சமூகத்தில் நிலவும் யதார்த்தம் என்பதே உண்மை.

அதிமுக வெற்றி என்பது மக்கள் அதன் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் அங்கீகரிப்பா? என்றால் இல்லை என்பதே பதில். அதிமுகவின் கொடுங் கொட்டங்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய எல்லைகளை தொட்டுக் கொண்டே இருக்கின்றன. இன்னும் புதிய எல்லைகளைத் தொடும். இதனால் பல லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், இருப்பார்கள். இதை தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கும் மக்கள் மீண்டும் எப்படி அதிமுகவை தேர்ந்தெடுத்தார்கள் என்பது முக்கியமான கேள்வி.

முதலில், தேர்தலில் கிடைக்கும் வெற்றி தோல்விகளை மக்களின் எதிரொலிப்பாக பார்ப்பது தவறான கண்ணோட்டம். ஏனென்றால் மக்களின் எண்ணம் முடிவுகளாக வருவதில்லை. தேர்தலில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மை முறை இரண்டு கட்சிகள் மட்டுமே இருக்கும் நிலையில் மட்டும் தான் பொருத்தமாக இருக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் என்றால் யார் அதிக ஆதரவு கொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் வருமே அன்றி பெரும்பான்மை மக்களின் முடிவு என்பதாக இருக்காது. இந்த தேர்தலில் வாக்களித்தவர்களில் 41 விழுக்காட்டை மட்டுமே அதிமுக பெற்றுள்ளது. 59 விழுக்காடு எதிரான மனோநிலை தான். இன்னும் வாக்களிக்காத 30 விழுக்காடு மக்களின் மனோநிலையையும் சேர்த்தால் இந்த வெற்றி அதிமுகவுக்கான மக்கள் ஆதரவல்ல என்பதே உண்மையாக இருக்க முடியும். அதிமுக மட்டுமல்ல, திமுக வென்றிருந்தாலும் இது தான் நிலை.

இரண்டாவது, இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட உத்திகள். மூன்றாவது அணி என்பது தமிழக தேர்தலுக்கு புதியதல்ல என்றாலும், இந்த முறை தமிழக தேர்தல் களத்தில் போட்டியிட்ட அணிகள் திட்டமிட்ட ஒரு நோக்கத்தை முன்னோக்கியே அமைந்திருந்தன. கட்சிகள் பிரிந்து நிற்பது குறிப்பாக மக்கள் நலக் கூட்டணி என்பது அதிமுக நலனுக்காகவே என்பது முன்பே  பலராலும் கூறப்பட்டது தான் என்றாலும் இப்போது அது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தெளிவாகச் சொன்னால் அதிமுகவுக்கு எதிராக பொது ஓட்டுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அந்த ஓட்டுகள் அதிமுகவுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் சென்று விடக் கூடாது என்னும் தெளிவான திட்டமிடலுடன் முன்னகர்த்திச் செல்லப்பட்ட உத்திகள் தான் இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

மூன்றாவது, அரசிலிருந்து ஊடகங்கள் வரை அனைத்து துறைகளும் அதிமுக குறித்த எந்த தப்பெண்ணங்களும் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முழு மூச்சாக இருந்தன. குறிப்பாக ஊடகங்களை எடுத்துக் கொண்டால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அப்பட்டமாக, அம்மணமாக அதிமுக ஆதரவு நிலையை மேற்கொண்டன. நீதித்துறை அப்பட்டமாக ஜெயாவுக்கு ஆதரவாக வாதாடியது. தேதல் கமிசன் அன்புநாதன், 570 கோடி விவகாரங்களில் நடந்து கொண்ட முறைக்கு என்ன பெயர் வைப்பது? மத்திய அரசும், அமைச்சர்களும், உயரதிகாரிகளும் முழுமையாக அதிமுகவுக்கு உடன்பட்டிருந்தார்கள்.

நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால் இங்கே ஜனநாயகமாக காட்டப்பட்டுக் கொண்டிருந்த தேர்தல் முறைமைகளுக்கு, ஓட்டுக் கட்சிகள் மக்களைச் சார்ந்திருக்கும் நிலை எப்போதோ மாறிவிட்டது. மக்களோடு தொடர்பே இல்லாத ஒரு தேர்தல் முறை தான் இங்கே நிலை பெற்றுக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியானாலும் சுவரொட்டி ஒட்டுவது, பரப்புரை செய்வது போன்றவற்றுக்கு தன் கட்சித் தொண்டனை பயன்படுத்தாமல் நிறுவனங்களின் மூலம் ஆளமர்த்தினார்களோ அப்போதே விலகத் தொடங்கிய மக்களுடனான தொடர்பு இன்று அதன் எல்லையில் மக்களுடன் தொடர்பே இல்லாத தேர்தல் முறையாக வந்து சேர்ந்திருக்கிறது.

இதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறதே தவிர நீங்கள் கூறுவது போன்ற எதுவும் எனக்கு தெரியவில்லை.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

3 thoughts on “அதிமுக வெற்றி மக்கள் முடிவா?

  1. well said

    2016-05-19 14:51 GMT+05:30 “செங்கொடி” :

    > செங்கொடி posted: “பாராளுமன்ற முறை, ஜனநாயகம், ஓட்டுக் கட்சிகள் போன்ற
    > விமர்சனங்களையும், யார் வென்றாலும் தோற்கப் போவது மக்கள் தான் போன்ற
    > பொதுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சொல்லுங்கள். கடந்த ஐந்து ஆண்டு கால
    > அதிமுகவின் ஆட்சியை மக்கள் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்”
    >

  2. வணக்கம் தோழர் நலமா?

    எந்த இணைப்புக்குள் போக முடியவில்லை? விபரம் தாருங்கள். சோதித்துப் பார்க்கிறேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s