நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல

ஐந்தாம் கட்டுரை : நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல.

ம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவின் முக்கியக் கூறுகளை நீக்கி, அச்சட்டப்பிரிவைச் செயலற்றதாக்கிவிட்ட மோடி அரசின் நடவடிக்கையை ஆதரிக்கும் வலதுசாரிகள் அனைவரும், அச்சட்டப் பிரிவின் காரணமாகத்தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர நேரிட்டதாகவும் ஏறத்தாழ 40,000 பேர் இறந்து போனதற்கும் அச்சட்டப் பிரிவுதான் காரணமென்றும்” வாதாடி வருகிறார்கள்.

காஷ்மீரின் ஒரு பகுதியை இந்தியாவுடன் இணைக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370 செயல்பாட்டுக்கு வந்த நாளிலிருந்தே அங்கே தீவிரவாதம் இருந்து வருவதைப் போல வலதுசாரிகள் சித்தரிக்க முயலுவது வடிகட்டிய பொய். மாறாக, ஜம்மு காஷ்மீரில் 1989-க்கு பிறகுதான் ஆயுதப்போராட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் ஆரம்பமாகின. இதற்குக் காரணம்கூட 370-வது சட்டப்பிரிவு அல்ல. மாறாக, அச்சட்டப் பிரிவை மெல்லமெல்ல நீர்த்துப்போகச் செய்த காங்கிரசின் சதித்தனம், அதற்கு உடந்தையாக நடந்துகொண்ட தேசிய மாநாட்டுக் கட்சியின் துரோகம் – இவை காரணமாகத்தான் அம்மாநில மக்களிடம் இந்தியாவிற்கு எதிரான அரசியல் உணர்வும், முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளின்  செயல்பாடுகளும் வளரத் தொடங்கின.

இதனையடுத்து, தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் அம்மாநிலமே, குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியே இராணுவமயமாக்கப்பட்டது. இராணுவத்தின் அத்துமீறல்களுக்குச் சட்டரீதியாகப் பாதுகாப்பு கொடுக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஜம்மு காஷ்மீரில் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் அம்மாநிலத்தில் பெருந்திரள் மக்கள் படுகொலைகளும் (massacres), கணக்கிலடங்காத போலி மோதல் கொலைகளும் நடைபெறத் தொடங்கின. 40,000-க்கும் மேற்பட்டோர் இறந்து போனதற்குப் பின்னுள்ள அரசு பயங்கரவாத நடவடிக்கைகளின் பங்கை மறைத்துவிட்டு, 370 பிரிவின் மீது பழியைப் போடுவது வரலாற்றைத் திரிக்கும் மாபெரும் மோசடியாகும்.

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் காஷ்மீர்

1990 தொடக்கத்தில் காஷ்மீரின் சிறீநகரிலுள்ள பிஜ்பெஹரா பகுதியில் பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள். (கோப்புப் படம்)

2016-ம் ஆண்டில் வெளியான ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்திய இராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீசு படை உள்ளிட்ட துணை இராணுவப் படைகளைச் சேர்ந்த 6,71,000 சிப்பாய்கள் துப்பாக்கிச் சனியன்களோடு காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். 370 பிரிவின் கூறுகளைச் சதித்தனமான முறையில் ரத்து செய்யும் முன்பாக, மேலும் 30,000 துருப்புகளை காஷ்மீரில் இறக்கியது, மோடி அரசு. இதன்படி, உலகிலேயே காஷ்மீர் பள்ளத்தாக்குதான் மிக அதிக எண்ணிக்கையில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் பகுதி எனலாம்.

தெருவில் பத்து போலீசுக்காரன்கள் லத்தியோடு நிறுத்தப்பட்டிருந்தாலே, சாதாரண பொதுமக்களிடம் அது கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் என்பதை யாரும் மறுக்கவியலாது. எனில், காஷ்மீரின் நிலையை எண்ணிப் பார்ப்பதே கொடுங்கனவைப் போன்றது. உண்மையில் அம்மாநிலத்தில் நடந்து வருவது அறிவிக்கப்படாத இராணுவ ஆட்சிதான் என்பதற்குத் துருப்புக்களின் எண்ணிக்கையும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமுமே சாட்சி.

அம்மாநிலத்தின் எந்தவொரு பகுதியையும் கலவரப் பகுதியாக அறிவிக்கும் உரிமையை அம்மாநிலத்தின் ஆளுநருக்கும் மைய அரசிற்கும் அளிக்கிறது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம். கலவரப்  பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரிகூட எவ்வித எச்சரிக்கையுமின்றிப் பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட முடியும். சந்தேகப்படும் யாரையும் வாரண்டு போன்ற சட்டபூர்வ முறைகள் எதுவுமின்றிக் கைது செய்து விசாரணைக்கு இழுத்துச் செல்ல முடியும். பொதுமக்களின் குடியிருப்புகளைச் சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டை நடத்தும் அதிகாரம் மட்டுமின்றி, பொதுமக்களின் வீடுகள், கடைகள், அரசின் பொதுச் சொத்துக்கள் உள்ளிட்டு எந்தவொரு சொத்தையும் தீவிரவாதிகளைத் தேடுவது என்ற பெயரில் இடித்தோ, தீவைத்தோ அழித்துவிட முடியும். இராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் அத்துமீறிய குற்றங்கள் என மாநில அரசே கருதினாலும், மைய அரசின் முன் அனுமதியின்றி, இக்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய்களின் மீதோ, அதிகாரிகளின் மீதோ வழக்குப் பதிய முடியாது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வழங்கியிருக்கும் இச்சட்டபூர்வ பாதுகாப்பைப் பயன்படுத்திக்கொண்டு 1990 முதல் ஐந்தாறு ஆண்டுகளுக்குள்ளாகவே காவ் கதால் படுகொலை (Gaw kadal massacre), ஹந்த்வாரா படுகொலை (Handwara massacre), ஜகூரா மற்றும் தெங்போரா இரட்டைப் படுகொலை (Zakoora and Tengpora massacre), ஹவால் படுகொலை (Hawal massacre), சோபூர் படுகொலை (Sopore massacre), பிஜ்பெஹரா படுகொலை (Bijbehera massacre) ஆகிய பெருந்திரள் படுகொலைகளை இராணுவமும் துணை இராணுவப் படைகளும் நடத்தின. இப்படுகொலைகளில் ஒன்றுகூட ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளின் மீது நடத்தப்பட்டவையல்ல. மாறாக, தெருக்களில் அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்களின் மீது நடத்தப்பட்டவையாகும்.

இந்திய இராணுவத்திற்கு எதிராகக் கல்லெறியும் காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்திய இராணுவம்
அகமது தர் என்ற காஷ்மீரியை ஜீப்பின் முன்பகுதியில் கட்டி வைத்து ஊர்வலம்விட்ட காட்சி. (கோப்புப் படம்)

பெருந்திரள் படுகொலைகள்

ஜம்மு காஷ்மீர் ஆளுநராக ஜக்மோகன் பதவியேற்ற இரண்டாவது நாளில் காவ் கதால் படுகொலை நடந்தது. மத்திய ரிசர்வ் போலீசு படை தேடுதல் வேட்டை என்ற பெயரில் பெண்களை மானபங்கப்படுத்தியதையும், வகைதொகையின்றி இளைஞர்களைக் கைது செய்து இழுத்துப் போனதையும் கண்டித்து ஜனவரி 21, 1990 அன்று சிறீநகரின் காவ் கதால் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

காவ் கதால் படுகொலை நடந்த நான்காவது நாளிலேயே ஹந்த்வாரா படுகொலை அரங்கேற்றப்பட்டது. காவ் கதால் படுகொலையைக் கண்டித்து குப்வாரா மாவட்டத்திலுள்ள ஹந்த்வாரா நகர்ப்பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது எல்லைப் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

மார்ச் 1, 1990 அன்று சிறீநகரைச் சேர்ந்த ஜகூரா மற்றும் தெங்போரா ஆகிய இரு பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 47 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் எனக் கோரி சிறீநகரில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்று ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தினர் தங்கள் வாகனத்திற்கு வழிவிட மறுத்தனர் என்ற காரணத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு ஜகூரா பகுதியில் இந்திய இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

அதே நாளில் தெங்போரா பகுதியில் பேருந்துகளில் சென்றவர்கள் மீது இந்திய இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பெண்கள் உள்ளிட்டு 21 பேர் கொல்லப்பட்டனர். பேருந்தில் இருந்த சிலர் இந்தியாவிற்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து இப்படுகொலையை நடத்தியது இந்திய இராணுவம்.

மே 21, 1990 அன்று காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லீம் மத குருவான மிர்வாயிஸ் முகம்மது பரூக் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது படுகொலையை காஷ்மீர் தேசத்தின் தியாகமாக அடையாளப்படுத்திய காஷ்மீர் மக்கள், அவரது இறுதி ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். அந்த இறுதி ஊர்வலத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

பத்ரிபால் போலிமோதல் படுகொலையை நினைவுகூர்ந்தும்,
அதற்கு நீதி கேட்டும் நடந்த ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

ஜனவரி 6, 1993 அன்று சோபூர் நகர மக்கள் மீது எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 55 பேர் கொல்லப்பட்டனர். இக்கொலைகளுக்கு அப்பால் அப்பகுதியைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கடைகளும் 50-க்கும் மேற்பட்ட வீடுகளும் சிப்பாய்களால் தாக்கப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

சிறீநகரில் உள்ள பிஜ்பெஹரா மசூதியை இந்திய இராணுவம் சுற்றிவளைத்ததைக் கண்டித்து அக்டோபர் 1993 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியக் குடியரசு நாளான ஜனவரி 1994 அன்று, அதனைப் புறக்கணிக்கும் விதமாக குப்வாரா நகரில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்குத் தண்டனை கொடுக்கும் விதத்தில், மறுநாள் இந்திய இராணுவம் குப்வாரா நகரப் பேருந்து நிலையப் பகுதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

சித்திரவதை என்ற ஆயுதம்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு இணையாகப் பொது பாதுகாப்புச் சட்டம் என்ற மற்றொரு கருப்புச் சட்டம் அம்மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. முன்னது இந்திய இராணுவத்திற்கு அதிகாரமளிக்கிறதென்றால், பிந்தைய மாநில அரசின் சட்டம் மாநில போலீசுக்கு வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கிறது. இப்பொது பாதுகாப்புச் சட்டம் சந்தேகத்திற்குரிய நபர்களை இரண்டாண்டுகள் வரை விசாரணையின்றிச் சிறையில் தள்ளும் அதிகாரத்தை போலீசிற்கு அளிப்பதால், அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் இளைஞர்களைக் குறிவைத்து இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1989 தொடங்கி 2011 முடியவுள்ள 22 ஆண்டுகளில் ஏறத்தாழ எட்டாயிரத்திலிருந்து இருபதாயிரம் பேர் வரை பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கிறது, அம்னெஸ்டி இண்டர்நேஷனல். இச்சட்டத்தின் கீழ் 18 வயதுக்கும் கீழான சிறுவர்களைக் கைது செய்யக்கூடாது என விதிகள் இருந்தாலும், அதனை காஷ்மீர் போலீசு பொருட்டாகக் கருதுவதில்லை எனக் குறிப்பிடும் ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பு, செப். 2011 தொடங்கி ஏப்ரல் 2017 முடியவுள்ள ஆறாண்டுகளில் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 1,086 பேரில் 623 பேர் பதின்வயதுச் சிறுவர்கள் என்ற உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறது.  

ஜம்மு காஷ்மீரைக் கட்டுப்படுத்தும் கருவியாகக் கொட்டடிச் சித்திரவதைகள் பயன்படுத்தப்படுவதை அம்பலப்படுத்தி அக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசுப் படைகளால் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட 432 பேரின் நேரடிச் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 432 பேரில் 238 பேர் தாங்கள் மின்சாரத்தைக் கொண்டு சித்திரவதை செய்யப்பட்டதையும், அவர்களுள் 127 பேர் தமது பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதையும் வாக்குமூலங்களாக அளித்திருக்கிறார்கள். அமெரிக்க இராணுவம் போலவே இந்திய அரசுப் படைகளும் தண்ணீருக்குள் அமுக்கிச் சித்திரவதை செய்திருப்பதை 125 பேர் சாட்சியமாக அளித்திருக்கிறார்கள்.

2002- 2009- இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் மட்டும் 225 அப்பாவிகள் கொட்டடிச் சித்திரவதைகளால் கொல்லப்பட்டிருப்பதை இவ்வறிக்கை பதிவு செய்திருக்கிறது. கைது செய்யப்படுவோரைப் பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கட்டாய ஓரினப் புணர்ச்சி உள்ளிட்ட பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதை இந்திய இராணுவமும் காஷ்மீர் போலீசும் வகைதொகையின்றிக் கையாண்டு வருவதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

2009 அக்டோபரில் கல்லெறியும் போராட்டத்தில் கலந்து கொண்டதாகப் பதியப்பட்ட குற்ற வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட 11 சிறுவர்களை ஒருவரோடு ஒருவர் கட்டாய ஓரினப் புணர்ச்சிக்கு ஆளாக்கியதைச் சாட்சியமாகப் பதிவு செய்திருக்கும் இவ்வறிக்கை, அதனை அரசுப் படையினர் புகைப்படமாக எடுத்து வக்கிரமாக நடந்துகொண்டதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

இக்கூட்டமைப்பிற்குச் சாட்சியம் அளித்திருக்கும் 24 பெண்களுள் 12 பெண்கள் தாங்கள் இந்திய இராணுவச் சிப்பாய்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைச் சாட்சியமாக அளித்திருக்கிறார்கள்.

பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுப் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டவர்களின் சடலங்கள் மறு உடற்கூறு ஆய்வுக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்படுகின்றன. (கோப்புப் படம்)

போலிமோதல் கொலைகள்

கடந்த முப்பது ஆண்டுகளில் காஷ்மீரில் மட்டும் ஏறத்தாழ 8,000 பேர் வரை காணாமல் போயிருப்பதைப் பல்வேறு சமூக அமைப்புகளின் ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. காஷ்மீர் மாநில அரசும்கூட 4,587 பேர் காணாமல் போயிருப்பதாக அறிக்கை அளித்திருக்கிறது.

உள்ளூர்வாசிகளைக் கடத்திக் கொண்டுபோய் சுட்டுக்கொன்றுவிட்டு, அவர்களை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் என்றோ, பாக்.தீவிரவாதிகள் என்றோ கூறிப் புதைத்துவிடும் அரசுப்படையினரின் மோசடிகளை சித்திசிங் போரா படுகொலை அம்பலப்படுத்தியது. காஷ்மீரில் இப்படி அடையாளம் தெரியாமல் புதைக்கப்பட்ட 2730 சடலங்கள் குறித்து காஷ்மீர் மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணையில், அப்படிப் புதைக்கப்பட்டவர்களுள் 574 பேர் உள்ளூர்வாசிகள் என்பதும், அவர்கள் அரசுப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதும் அம்பலமானது.

தீவிரவாதிகளைச் சுட்டுக் கொல்லும் சிப்பாய்களுக்கு பரிசுத் தொகையும் பதவி உயர்வும் அளிக்கப்படுவதைக் கேடாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய இராணுவம் எல்லைப் பகுதிகளில் நடத்திவரும் போலிமோதல் கொலைகள், தாளிப்பு நடவடிக்கைகள் என்ற சங்கேதச் சொல்லால் அழைக்கப்படுகின்றன. இத்தாளிப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகள் 2004- அம்பலமாகி, இந்திய இராணுவம் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரசுப் படைகள் காஷ்மீரில் நடத்திய/நடத்திவரும் இப்பச்சைப் படுகொலைகள் சர்வதேச அளவில் அம்பலமானதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பதிலாக சிறிய ரக பெல்லட் குண்டுகளைச் சுடும் உத்திக்கு மாறியது இந்திய அரசு. ஆனால், கடந்த ஆண்டு வெளியான காஷ்மீர் குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையோ, பெல்லட் குண்டுகளைப் பீச்சியடிக்கும் துப்பாக்கிகளை ஆகப் பெரும் அபாயகரமான ஆயதமாகச் சித்தரித்திருக்கிறது. ஜூலை 2016 ஆகஸ்டு 2017 இடைப்பட்ட ஒரே ஆண்டில் மட்டும் பெல்லட் குண்டுகள் தாக்கி 17 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதையும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் உடலெங்கும் பெல்லட் ரவைகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்ததையும் அவ்வறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. பெல்லட் ரவைகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்தோரில் பெரும்பாலோர் தமது பார்வையைப் பகுதியளவிற்கோ அல்லது முழுமையாகவோ இழந்து குருடாகிவிட்டதை குடிமைச் சமூக அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.

போலி மோதலில் அல்லது கொட்டடியில் இரகசியமாகக் கொல்லப்பட்டு, அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு 574 உள்ளூர்வாசிகள் புதைக்கப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீர் மனித உரிமை ஆணையம் கூறியிருக்கிறது.

காஷ்மீரில் நடந்துவரும் இந்த மறைமுகமான இராணுவ ஆட்சி பொதுமக்கள் தெருவில் இறங்கி நடப்பதையே அச்சமூட்டக்கூடியதாக, உயிருக்கு உத்தரவாதமற்றதாக மாற்றிவிட்டது. கிரிக்கெட் விளையாடச் சென்ற ஜாஹித் பரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டான். வாமிக் பரூக் என்ற 14 வயது சிறுவன் கண்ணீர்ப் புகைக்குண்டால் தாக்கப்பட்டு இறந்துபோனான். அதிகாலை நேரத்தில் தமது ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்ற ஷோபியான் நகரைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் மறுநாள் ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்கள். அவ்விரு பெண்களும் அரசுப் படைகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சுமத்தினர், காஷ்மீர் மக்கள்.

மறுக்கப்படும் நீதி

51 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட காவ் கதால் பெருந்திரள் படுகொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், இப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, இவ்வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

21 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட ஹந்த்வாரா படுகொலையில் சம்மந்தப்பட்ட சிப்பாய்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற அயோக்கியத்தனமான காரணத்தைக் கூறிக் குற்றவாளிகளை இதுநாள் வரையிலும் பாதுகாத்து வருகிறது, மைய அரசு.

51 பேர் கொல்லப்பட்ட பிஜ்பெஹரா படுகொலை நடந்து மூன்று ஆண்டுகள் கழித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் அப்போதைய தலைவர் தேசிய மனித உரிமை கமிசனுக்கு எழுதிய கடிதத்தில், இப்படுகொலைக்குக் காரணமான எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 12 சிப்பாய்கள் மீது விசாரணை நடைபெற்று, அதன் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக”க் குறிப்பிட்டிருந்தார். இதன் பின் இந்திய அரசு, தேசப் பாதுகாப்பு கருதி இவ்விசாரணையின் முடிவைத் தேசிய மனித உரிமை கமிசனுக்கு அளிக்க முடியாது” எனத் தெரிவித்ததன் அடிப்படையில், அக்கமிசன் தனது விசாரணையைக் கைவிட்டது. 

1991-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் குப்வாரா மாவட்டத்திலுள்ள குனான்-போஷ்போரா பகுதியை இந்திய இராணுவம் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டை நடத்தியது. அந்நடவடிக்கையின்போது 100 பெண்கள் வரை வயது வேறுபாடின்றி இந்திய இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இச்சம்பவம் நடந்து 28 ஆண்டுகள் கழிந்த பிறகும் இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு முறையான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்த இந்திய அரசு மறுத்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில அரசு 50 மனித உரிமை மீறல் வழக்குகளில் தொடர்புடைய அரசுப் படையினரை விசாரிப்பதற்கு மைய அரசிடம் அனுமதி கோரிய நிலையில், அவற்றுள் 47 வழக்குகளில் விசாரணை நடத்துவதற்கு அனுமதி மறுத்துவிட்ட மைய அரசு, மூன்று வழக்குகளில் முடிவெடுப்பதைத் தள்ளிப் போட்டிப்பருப்பதாக அறிவித்து, நீதி வழங்குவதைக் குழிதோண்டிப் புதைத்தது.

1994 தொடங்கி 2018 முடியவுள்ள 24 ஆண்டுகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய இராணுவத் தலைமையிடம் 1,037 முறையீடுகள் செய்யப்பட்டதில், 992 முறையீடுகளைப் போலியானவை எனத் தள்ளுபடி செய்தது, இந்திய இராணுவம். வெறும் 31 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஜம்முவைச் சேர்ந்த பார்ப்பன பண்டிட்டுகள் தமது வாழ்விடத்திலிருந்து வெளியேறியதைக் காட்டியே, பள்ளத்தாக்கு முஸ்லீம்கள் மீது இழைக்கப்பட்டு வரும் எல்லா அநீதிகளையும் நியாயப்படுத்தி வருகிறார்கள், இந்து தேசியவாதிகள்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் தமக்கு நீதி வேண்டும் என்று கோரித்தான் போராடி வருகிறார்களேயொழிய, வளர்ச்சி வேண்டும் என மைய அரசிடம் கெஞ்சிக் கொண்டிருக்கவில்லை. காஷ்மீரில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை நீக்க வேண்டும் என்பதுதான் அவர்களது உடனடி அரசியல் கோரிக்கைகளாக இருந்து வருகின்றன.

மோடி அரசோ பெயரளவில் 370 நீடிப்பதைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல், அதனைச் செயலற்றதாக்கிவிட்டது. மென்மேலும் துருப்புக்களை இறக்கியும் தகவல் தொடர்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறித்தும் காஷ்மீரைத் திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவருகிறது. மாநிலத் தகுதியைப் பறித்து, யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரை மாற்றியதன் மூலம், அப்பகுதியை இந்திய அரசின் காலனியாக்கியிருக்கிறது.

இந்திய இராணுவத்தின் பெருந்திரள் படுகொலைகளின் சில புகைப்படப் பதிவுகள்

காணச் சகிக்காத கொடுஞ் சித்திரவதைகளின் சில புகைப்பட பதிவுகள்

போலி மோதல் கொலையில் கொல்லப்பட்டோர்கள் / காணாமல் ஆக்கப்பட்டோர்களில் சிலர்

முதற்பதிவு : வினவு

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s