
இன்று நவம்பர் ஏழு. உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த நாள் இன்று. அரசு தோற்றம் கொண்ட காலத்திலிருந்து உழைக்கும் வர்க்கம் சுவைத்தறியாத நிர்வாக அதிகாரத்தை சமைத்தறிந்த நாள். மனிதன் உருவாகி வந்த தொடக்கத்திலிருந்து சாதாரண மக்கள் பாவித்திராத வசதிகளையும் வாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தந்த நாள். 102 ஆண்டுகளுக்கு முந்திய அந்த நாளின் தனித் தன்மை இன்றும் மக்களின் உயிரோடு கலந்திருக்கிறது. மீண்டும் அந்த நாள் வாராதா? எனும் ஏக்கத்தை மக்களின் மனதில் ஏற்றிக் கொண்டே இருக்கிறது. ஆம். 1917 நவம்பர் 7 புரட்சியின் பலனை மக்கள் அடைந்தார்கள், மக்கள் மட்டுமே அடைந்தார்கள். மக்களைச் சுரண்டிய மாக்கள் அடைந்தார்களில்லை. இன்று அந்த வெற்றியின் அடையாளங்கள் திட்டமிட்டு பறிக்கப்பட்டிருப்பதால், பறிக்கப்படுவதால் ஏக்கம் மட்டுமே போதுமானதாக இருக்க முடியாது. அந்த ஏக்கங்களை அடுத்த தளத்திற்கு ஏற்ற, இன்றைய இந்திய நிலையை கவனித்தால் .. .. ..
இன்னதென்று பிரித்துச் சொல்ல முடியாதபடி எல்லாப் பக்கங்களிலிருந்தும், அனைத்து விதங்களிலும் துன்பம், வேதனைகளை சகித்துக் கொண்டு வாழ பழகிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
விலைவாசி உயர்வு;
மருத்துவச் செலவுகள் நினைத்துப் பார்க்க முடியாதபடி அதிகரிப்பு;
நம்முடைய குழந்தைகளுக்கு வரும் காலங்களில் கல்வியை கொடுக்க முடியுமா? என கலங்கி நிற்கும் அளவுக்கு தனியார்மயம், புதிய கல்விக் கொள்கை, நீட் போன்ற தேர்வுகளால் கல்வி எட்டாக் கனியாக ஆகியிருப்பது;
ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி, எட்டுவழிச் சாலை, பாரத்மாலா, சாகர்மாலா போன்ற திட்டங்களால் விவசாயம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுமோ என அஞ்சும் நிலை;
ஜி.எஸ்.டி, வரிவிதிப்பு, அன்னிய நிறுவனங்களுக்கு அடிபணியும் வணிகக் கொள்கைகளால் சிறுகுறு வணிகத் துறையே நலிவுற்று பணப் புழக்கமே இல்லாமல் போயிருக்கும் நிலை
என சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு இன்னல்களுக்கும் நடுவே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

மறந்தும் கூட மேற்கண்ட பிரச்சனைகளைப் பற்றி யோசித்து விடக் கூடாது என்பதற்காகவே
ஜாதி, மத வெறிகளை தூண்டி விடுவது,
போராடினால் கைது, சிறை மட்டுமல்லாது சுட்டுக் கொல்வது வரை செல்லும் கொடூரம்,
மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து மக்களை போதையில் மூழ்கடிப்பது,
போலியாக தேசபக்தி கூச்சலிடுவது
என பல்வேறு உத்திகள் மூலம் மக்களைப் பற்றி, வாழும் சமூகம் பற்றி சிந்திக்கவே கூடாது என்று திட்டமிட்டு செயல்படுகிறது அரசு.
நிம்மதியாக, மகிழ்ச்சியாக குடும்பத்தினரோடு கூடிக் குலவி சந்தோசமாக, கவலைகள் இல்லாமல் இருக்கும் நாள் வரவே வராதா? அல்லது சுற்றி இருக்கும் கட்சிகள் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக இன்னும் பலவாறான அரசியல் கட்சிகள் மக்களின் இந்த கவலைகள், பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எதாவது செய்கிறதா? செய்ய முடியுமா? ஆனால் மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக, சிறப்பாக வாழ வைப்பதாக வாக்குறுதி அளித்துத் தான் மக்களிடம் ஓட்டுக்களை வாங்குகிறார்கள். எந்தக் கட்சியாலும் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வாழ வைக்க முடியாது என்பதைத்தான் 1947ல் இருந்து இப்போது வரை பார்த்து, அனுபவித்து வருகிறோம்.

விவசாயத்தில் நாம் விளைவித்த பொருட்களுக்கு போதுமான விலையை நிர்ணயிக்காமல் இருப்பது அரசு தான்.
அந்த விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் இருப்பதற்காக ஆறு, ஏரி, குளம், கால்வாய், வாய்க்கால்களை தூர்வாரி பராமரிக்காமல் பாழாக்குவது அரசு தான்.
ஊக வணிகத்தாலும், பல்வேறு வரிவிதிப்புகளாலும், பெட்ரோல் டீசல் விலைகளை அந்தந்த நிறுவனங்களே தினசரி உயர்த்திக் கொள்ள அனுமதி கொடுத்திருப்பதன் மூலமும் எல்லாப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்வதற்கு வழி வகுத்திருப்பதும் அரசு தான்.
மக்களை வதைக்கும் திட்டங்கள் அனைத்தையும் கொண்டு வந்திருப்பது அரசு தான்.
ஆற்று மணல் கொள்ளை, கனிம வளங்கள் கொள்ளை, கிரானைட் மலைகள் கொள்ளை, உலோகங்கள், பாக்சைட் போன்ற தாது வளங்கள் கொள்ளை என மக்கள் அனைவருக்கும் சொந்தமான அனைத்து இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகளும், திடீர் ரவுடிகளும் தாராளமாய் கொள்ளயடித்து சொத்து சேர்க்க அனுமதி அளித்திருப்பதும் அரசு தான்.
இன்னொரு பக்கம், லட்சக் கணக்கான படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில்லை.
கிடைத்தாலும், வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை.
நாளைக்கு வேலையில் இருப்போமா எனும் பதைபதைபோடு தான் ஒவ்வொரு நாளும் கழிகிறது. வேலை உத்திரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பலநூறு பேர் உயிர்த் தியாகம் செய்து பெற்ற எட்டு மணி நேரம் வேலை என்பது காற்றோடு போய் 14 மணி நேரம், 15 மணி நேரம் என்று வேலை பார்க்க வைக்கும் கொடூரம்.
போனஸ், ஓய்வூதியம், சேம நலம் என போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் படிப்படியாக பறிக்கப்படும் அவலம்.
கழிப்பறைக்குக் போகக் கூட நேரமில்லை,
உற்பத்திச் செலவைக் குறைப்பது என்ற பெயரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இல்லாமல் செய்வதன் மூலம் தினம் தினம் தொழிற்சாலைகளில் விபத்துகள் மரணங்கள், கை கால் உறுப்புகளை இழந்து தெருவில் தள்ளப்படும் குரூரம்.
இவை அத்தனையையும் மவுனமாய் பார்த்துக்கு கொண்டு எதுவும் செய்யாமல் அங்கீகரித்து நிற்பது தான் அரசு.
இப்படி கள்ள மவுனம் சாதிக்கும் அரசு தான், மக்கள் தங்கள் உரிமைகளை கேட்டால் முதல் ஆளாக போலீசை லத்திகளோடும் துப்பாக்கிகளோடும் அனுப்பி வைக்கிறது.
இது தான் டிஜிடல் இந்தியா. பிரதமர்(!) மோடி மக்களுக்கு சொன்ன அச்சே தின் (நல்ல நாள்) இது தான். இந்த அச்சே தினைத் தான், இந்த டிஜிடல் இந்தியாவை தான் முன்னேற்றம் என்று கூறுகிறார்கள். மல்லையா தொடங்கி மெகுல் சோக்சி வரை பல்லாயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டு வெளிநாடு தப்பிச் சென்று சொகுசாக வாழ்கிறார்களே அவர்களுக்குத் தான் இது டிஜிடல் இந்தியா. தொழில் என்ற பெயரில் தில்லு முல்லுகள் வரி ஏய்ப்புகள் செய்து முதல்நிலை பணக்காரர்கள் என்று பெயர் எடுத்துக் கொள்கிறார்களே அந்த அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் தான் இது அச்சே தின். சாதாரண மக்களுக்கு இல்லை.
வேறு வழியே இல்லையா? இந்த அவலங்களுக்குள் வாழ்ந்து, இந்த சுமைகளுக்குள் மூழ்கி நொந்து போய் வாழ்வதைத் தவிர வேறு வழியே இல்லையா? இருக்கிறது. 2019ல் டிஜிடல் இந்தியா என்ற பெயரில் மக்களை நரகக் குழியில் தள்ளுவது முன்னேற்றமா? மக்களுக்கான மெய்யான முன்னேற்றம் 1917ல் நடந்தது.

அடிப்படைக் கல்வி அனைவருக்கும் கட்டாயம்,
எதுவரை விரும்புகிறோமோ அதுவரை உயர் கல்வியை அரசே கற்பிக்கும்.
படித்து முடித்த அனைவருக்கும் அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலையை அரசு உறுதியாக வழங்கும்.
வீடில்லாத யாரும் கிடையாது. அனைவருக்கும் அரசே வீடு வழங்கும்.
குழந்தை வளர்ப்பு, குடும்ப பராமரிப்பு, உணவுத் தேவை என அனைத்தையும் அரசே கவனித்துக் கொள்ளும்.
இத்தனைக்கும் மேலாக 70 ஆண்டுகளாக ஒரு பைசா கூட விலைவாசி ஏறவில்லை.
அரசியல் சாசன சட்ட திட்டங்கள் மக்களிடம் விவாதத்துக்கு விடப்பட்டு மக்கள் கூறிய சரியான திருத்தங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகே சட்ட திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன.
தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் பொறுப்பில் நடந்தன.
துண்டு துண்டான விவசாய நிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டு விவசாயிகள் இணைந்து கூட்டு விவசாயம் செய்தார்கள்.
அவர்களுக்கான கருவிகள் அனைத்தும் கனரக இயந்திரங்கள் வரை அரசு அளித்தது.
அதுவரை மக்களை சுரண்டி சொத்துகளை குவித்து ஊதாரித்தனமாக வாழ்ந்த பெரும் பணக்காரர்கள், பண்ணையார்களின் சொத்துகள் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்யப்பட்டு அவை சாதாரண மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டன.
மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எது முன்னேற்றம்? 1917ல் இரஷ்யாவில் நடந்த புரட்சி முன்னேற்றமா? இல்லை 2019திலும் மக்களை வாழ வழியில்லாமல் செய்யும் டிஜிடல் இந்தியா முன்னேற்றமா? ஒரு நூற்றாண்டுக்கு முன்பே மனித குலம் கண்ட முன்னேற்றங்கள் இந்த 2019திலும் நம்மை வந்து சேரவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது யார்? எது?
இந்த அரசு தான் தடைக்கல்லாக அடைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது பொதுவான பதில். நாம் நம்மளவில் அதற்காக என்ன முயற்சித்தோம்? எனும் எளிமையான கேள்வி நம்முள் எழுந்தால் .. .. .. அது தான் சோசலிசப் புரட்சி எனும் பெருங் கதவைத் திறக்கும் சிறிய திறவுகோல். இந்த நாளை ஒரு புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு மார்க்சியம் பயிலத் தொடங்குவோம். மார்க்சியம் மட்டுமே மக்களின் அனைத்து சிக்கல்களுக்குமான ஒரே மாற்று.