கந்து வட்டி : மாற்று என்ன?

கடந்த ஆண்டு சின்னஞ்சிறு குழந்தைகள் இருவரும் அவர்களின் பெற்றோருமாய் நான்கு பேர் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கரிக்கட்டையாய் எரிந்து போனதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து போயிருக்க முடியாது. கந்து வட்டிக்கு எதிராக அன்று பலரும் பேசினார்கள். கடுமையான சட்டம் வேண்டும் என்பதில் தொடங்கி, ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளருமே காரணம் அவர்களை தண்டிக்க வேண்டும் என்பது வரை மக்களின் கோரிக்கைகள் நீண்டன.

அதே நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அதே கந்து வட்டிக் கொடுமை, மீண்டும் ஒரு தீக்குளிப்பு முயற்சி. இந்த முறை மேலக் கருங்குளத்தைச் சேர்ந்த அருள்தாஸ், மாரியம்மாள், குழந்தைகள் இசக்கிராஜா, சூரியப்பிரகாஷ், தனலட்சுமி ஆகியோர். குழந்தைகள் தினம் என கொண்டாடப்படும் நவம்பர் 14. தீக்குளிக்கும் முன்பே காப்பாற்றப் பட்டார்கள் என்றாலும், அந்த பதைபதைப்பு நீங்கி விட்டதா?

ஒன்றல்ல, இரண்டல்ல, தோராயமாய் இந்தியாவில் ஆண்டுக்கு நூறு கந்து வட்டி தற்கொலைகள் நடக்கின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்கடத்தல், மிரட்டல், தாக்குதல், பாலியல் வன்கொடுமை, உடலுறுப்புகளை விற்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது என கந்து வட்டியின் கொடூரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்தக் கொடூரங்களிலிருந்தும், கந்து வட்டிக்கு கடன் வாங்குவதிலிருந்தும் மக்களைக் காக்க முடியாதா?

விலைவாசி உயர்வு, வேலையின்மை, கிடைத்த வேலைக்கும் போதிய ஊதியமின்மை, குறைந்த ஊதியத்துக்கே 14 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயம் என மக்கள் அன்றாடம் சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலையில் தான் கோடிக்கணக்கான மக்களை அரசு வைத்திருக்கிறது. வெளிநாட்டு கம்பனி தொழில் தொடங்க வந்தால் லாபத்துக்கு உத்திரவாதம் தருவதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் அரசு, மக்கள் ஒருவேளை சாப்பாட்டுக்காவது உத்திரவாதம் கொடுத்திருக்கிறதா?

நூறுநாள் வேலைத் திட்டம் என்று ஒன்றை கொண்டு வந்தார்கள். அதில் வேலையும் ஒதுக்கப்படுவதில்லை, கூறப்படும் குறைந்த கூலியும் முழுதாக கிடைப்பதில்லை. இதனால், மக்களே தற்போது அதில் வேலைக்கு செல்ல மறுக்கிறார்கள். மக்களுக்கு எளிதாக கடன் கிடைக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு முத்ரா வங்கித் திட்டம் என கொண்டு வந்தார்கள். அது மக்களுக்கு கடன் கொடுப்பதற்குப் பதிலாக கந்து வட்டி கொடுப்பவர்களுக்கு கடன் கொடுக்கிறது. இது கந்து வட்டி கொடூரத்தை கடுமையாக அதிகரித்ததைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. இது போன்ற சமூகத் திட்டங்களில் செலவிடப்படும் 100 ரூபாயில் 15 ரூபாய் தான் மக்களுக்கு கிடைக்கிறது. 85 ரூபாய் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும் சென்று விடுகின்றன என்று அரசே தெரிவிக்கிறது.

யாருக்கு கடன் தேவையாக இருக்கிறதோ அவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதே இல்லை. எளிய உழைக்கும் மக்கள் வங்கிகளுக்குச் சென்றால் வங்கி மேலாளர்கள் முதலில் அவர்களை தீண்டத் தகாதவர்களைப் போல் தான் பார்க்கிறார்கள். என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை முறையாக பொறுமையாக சொல்வதில்லை. பலமுறை அழைக்கழித்த பின்னர் வேண்டா வெறுப்பாக கேட்டதில் பாதித் தொகையோ அல்லது அதற்கு சற்று அதிகமாகவோ கிடைக்கும். தவணை தவறி விட்டால் ஆள்வைத்து மிரட்டுவது வரை வங்கிகள் செல்லும். அப்படி மிரட்டியதால் தற்கொலைகளும் நிகழ்ந்திருக்கின்றன. எளிய மக்களிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்றால், அவர்கள் திருப்பி கட்டும் திறனை சோதிக்கிறோம் என்கிறார்கள். ஆயிரங்கள், சில லட்சங்கள் வரை தான் இப்படி கோடிகளில் தொடங்கி கடன் வாங்குகிறவர்கள் பெரும்பாலும் திருப்பிக் கட்டுவதே இல்லை. அவர்களின் திருப்பிக் கட்டும் திறனை வங்கி மேலாளர்கள் சோதிப்பதே இல்லை. கட்டாவிட்டால் இருக்கவே இருக்கிறது வாராக்கடன் எனும் சொல். இந்த நடைமுறைகள் தான் மக்களை கந்து வட்டி கும்பல்களிடம் நெட்டிச் சென்று சேர்க்கிறது.

அரசு வறுமை ஒழிப்பு என்ற பெயரில் கொண்டு வரும் அனைத்து திட்டங்களுமே கார்ப்பரேட்டுகளை வளர்ப்பதற்கான திட்டங்களாக இருக்கிறதேயன்றி, மக்களை வாழ வைப்பதாக இல்லை. அப்படியும் கடன் வாங்கி பெட்டிக்கடையாவது வைத்து வாழ்ந்து விடுவோம் என்று முயற்சித்தாலும், திடீரென்று ஒரே இரவில் பணத்தை செல்லாது என்று அறிவித்து பிச்சைக் காரர்கள் போல் சாலையில் நிற்க வைக்கிறார்கள். ஆயா சுட்டு விற்கும் இட்லிக் கடைக்கும் கூட ஜிஎஸ்டி வரி போட்டு கண்ணீர் விட வைக்கிறார்கள். வேறு வழியே இல்லாத நிலையில் கந்து வட்டியானாலும் பரவாயில்லை என்று கிடைக்கும் இடத்தில் கடன் வாங்குகிறார்கள். இதைத் தவிர மக்கள் உயிர் வாழ வேறு என்ன தான் வழி இருக்கிறது?

மறுபக்கம், இவ்வாறு கந்து வட்டிக்கு பணம் கொடுப்பது யார்? சமூகத்தில் மக்களை அடக்கியாள நினைக்கும் திடீர் பணக்கார ரவுடிகள், போலீசின் லஞ்சப் பணத்தை கந்து வட்டி முதலீடாக்கும் பினாமிகள் ஆகியோர் தாம். இவ்வளவு நடந்தும் காவல்துறை கந்து வட்டி கொடூரங்களை கண்டு கொள்ளாத மர்மம் இதில் தான் இருக்கிறது. பெரிதாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கெடுபிடி காட்டுவது போல் நடிப்பதும், பின்னர் கள்ள மௌனம் சாதிப்பதும் இதிலிருந்து தான் வருகிறது. 1967ல் கந்து வட்டிக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தார்கள். பின்னர் 2003ல் திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் அண்ணன் ஜிவி என அழைக்கப்படும் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஷ் கந்து வட்டி பிரச்சனையால் தற்கொலை செய்தார். உடனே அந்த சட்டத்தை கொஞ்சம் திருத்தி, இனிமேல் கந்து வட்டி மரணங்களே நடக்காது என்றார்கள். ஆனால் நடப்பது என்ன? கந்து வட்டிக்கு எதிரான சட்டத்தினால் இதுவரை தண்டனை அடைந்தது யார்? ஒருவருமில்லை. எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கைதுகள் அவர்களும் பின்னர் ஜாமீனில் வந்து மீண்டும் கந்து வட்டியை மீட்டர் வட்டி, ரன் வட்டி, ஹவர் வட்டி, கம்யூட்டர் வட்டி என்று தொழிலை மேம்படுத்திக் கொண்டு விடுகிறார்கள்.

கந்து வட்டியிடம் செல்லுங்கள் என்று அரசு கழுத்தைப் பிடித்து தள்ளுகிறது. கந்து வட்டிக்காரார்களோ பணத்தைக் கொடுத்து விட்டு அதற்கு பத்து மடங்காக திரும்ப வசூலிக்கிறார்கள் அல்லது தலையைத் திருகி கொல்கிறார்கள். இதை அரசும், அதன் உறுப்பான போலீசும், நீதி மன்றங்களும் வேடிக்கை பார்க்கிறது. இதற்கு மாற்று என்ன?

முதலில், கந்து வட்டி கொடூரம் என்பது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் விளைவுகளில் ஒன்று. உற்பத்தி என்று எதுவும் மக்களிடம் இருக்கக் கூடாது. அனைத்து உற்பத்தியையும் பெரிய அளவில் இயந்திரங்களின் உதவியுடன் லாபத்தை குறிக்கோளாகக் கொண்டு தனிநபர்கள் நடத்த வேண்டும். அரசு இதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் எல்லாத் தேவைகளுக்கும் தாங்கள் உற்பத்தி செய்து குவிக்கும் பொருட்களை நுகர்வதை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். இது தான் முதலாளித்துவத்தின் எளிய வடிவம். நுகர் பொருட்களை வாங்குவதற்கு முதலாளித்துவ நிறுவனங்களில் வேலை செய்து கிடைக்கும் ஊதியத்தை பயன்படுத்துவதை தவிர வேறு வழி எதுவும் மக்களுக்கு இருக்காது. அதையும் உற்பத்திச் செலவைக் குறைப்பது எனும் பெயரில் குறைத்துக் கொண்டே செல்வார்கள். பின் எப்படி மக்களிடம் வாங்கும் ஆற்றல் இருக்கும்? இது முதலாளித்துவத்தின் முரண்பாடு. இது தான் பொருளாதார நெருக்கடிக்கும் முதல் விதையாக இருக்கிறது. இந்த முரண்பாடு தான் மக்களை கந்து வட்டியை நோக்கி தள்ளுகிறது. இந்தப் பொருளாதாரக் கொள்கையை குப்பைக் கூடைக்குள் தள்ளினால் தான் மக்களை விடுவிக்க முடியும். ஆனால், அதை இப்போதிருக்கும் அரசுகள் செய்யுமா? ஏனென்றால் இவர்கள் அனைவரும், இந்த ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் இந்த பொருளாதாரக் கொள்கையின் அடிமைகள் தாம்.

மக்கள் தங்கள் வாழும் பகுதிகள் சார்ந்து குழுக்களாக இணைந்து சிறுசிறு பொருளாதார கட்டுமானங்களை ஏற்படுத்த வேண்டும். சிறிய அளவிலான (தேவையான பொருட்கள் அனைத்துக்குமான) விற்பனைக் கூடங்கள் முதல், சிறு நிறுவனங்கள் வரை கூட்டு முதலீட்டில், கூட்டு நிர்வாகத்தில் செய்யத் தொடங்க வேண்டும். இதற்கு அந்தந்தப் பகுதிகளில் செயல்படும் புரட்சிகர கட்சிகள் எல்லா வகையிலான (கவனிக்கவும் எல்லா வகையிலான) ஒத்துழைப்பையும் வழங்கி நிலை நிறுத்த வேண்டும். ஒரு மாற்றுப் பொருளாதார வடிவமாக இதை வளர்த்தெடுக்க வேண்டும். பகுதியளவில் சிறு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலிருந்து அரசுக்கு இணையான ஒரு மினியேச்சர் மாற்றாக இதை வளர்த்தெடுத்துச் செல்ல முடியும். இது தான் கந்து வட்டியிலிருந்து மட்டுமல்லாது, பாசிச வலதுசாரிகளிடமிருந்தும் மக்களைக் காக்கும்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s