
மும்பை – பாந்த்ராவில் நேற்று நடைபெற்றிருக்கும் தடியடி, சிதறிக் கிடக்கும் செருப்புகள், ஏழைத் தொழிலாளிகளின் கண்ணீர் – இவற்றைக் காணச் சகிக்கவில்லை.
“யாரோ ஒருவர் சோறுபோடுவார் என்று நாங்கள் எப்படி கையேந்தி நிற்க முடியும்?” என்று கேட்கிறார் ஒரு தொழிலாளி.
“சோறு போட வக்கில்லாத அரசுக்கு எங்களைத் தடுத்து வைக்க என்ன உரிமை இருக்கிறது?” என்று அந்த அப்பாவி மக்களுக்கு கேட்கத் தெரியவில்லை.
எல்லோருக்கும் வேலை போய்விட்டது. “தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடு” என்று சொல்வதற்கோ கட்டாயப்படுத்துவதற்கோ அல்லது அரசின் சார்பில் அந்த ஊதியத்தை கொடுப்பதற்கோ மோடி அரசு தயாரில்லை.
இப்படி ஒரு உரிமையை அரசிடம் கேட்பதற்கும் இந்த தொழிலாளிகளுக்குத் தெரியவில்லை. “நாங்கள் ஊருக்குப் போகிறோம். அதற்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சுகிறார்கள்.
கிராமங்களில் என்ன வாழ்கிறது? எதுவும் கிடையாது. அங்கேயும் பட்டினிதான். “சாவதென்றாலும் குடும்பத்துடன் இருந்து சாகிறோம்” என்பதுதான் அந்த தொழிலாளிகளின் கோரிக்கை.
அம்பானி முதல் மூன்று நான்கு மாதங்களுக்கு வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் வாய்ப்பு கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் வரையிலான அனைவரையும் தொற்று நோயிலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த உழைப்பாளிகளும் அவர்களது பெண்டு பிள்ளைகளும் பட்டினியில் சாக வேண்டுமா?
இந்தப் புலம்பெயர் தொழிலாளிகளாக இருக்கட்டும், தாராவியில் தொடங்கி இந்திய நகரங்கள் முழுதும் நிறைந்திருக்கும் சேரிகளின் மக்களாக இருக்கட்டும், 500 ரூபாய் காசுக்காக வங்கிகளின் வாசலிலும், ரேசன் கடைகளிலும் அலைமோதிக் கொண்டிருக்கும் மக்களாக இருக்கட்டும், தமது அன்றாடப் பிழைப்புக்காக கோயம்பேட்டிலும் இன்ன பிற சந்தைகளிலும் அலை மோதும் சிறு வியாபாரிகளாக இருக்கட்டும் – இவர்கள் யாரும் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை. அவர்களால் பின்பற்ற முடியாது. இது கண் முன்னால் அனைவருக்கும் தெரிகின்ற உண்மை.
எந்த நகரத்தின் குடிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியும்? தெருவில் ஆறடிக்கு ஒரு சுண்ணாம்பு வட்டம் போட்டு ஒழுங்கை நிலைநாட்டும் உத்தமர்கள், எந்தக் குடிசைக்குள்ளேயாவது ஒரு வட்டத்துக்கு மேல் போட முடியுமா?
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களை கொரோனா கொல்லும் என்பது உண்மையானால், மேற்சொன்ன அடிப்படை உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரையும் அது கொன்றே தீரும்.
நோயிலிருந்து தப்பவே முடியாது என்று தெளிவாகி விட்ட பின்னால் அவர்கள் பட்டினி கிடந்து சமூகத்தொற்றைத் தடுக்க வேண்டுமா? தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள் மேட்டுக்குடி சமூகத்தின் உயிரைக் காப்பாற்றுவதற்காக குழந்தைகளுடன் பட்டினி கிடக்கவேண்டுமா?
ஊரடங்கை மீறி அவர்கள் கிராமத்துக்குச் சென்றால் அங்கே வேலை கிடைக்கும் என்றோ, சோறு கிடைக்கும் என்றோ எந்தவித உத்திரவாதமும் இல்லை என்பது உண்மைதான்.
சாகிறவர்கள் குடும்பத்துடன் இருந்து சாகட்டும். இரக்கமற்ற ஆளும் வர்க்கத்தின் நலனுக்காகவும் மேட்டுக்குடியின் நலனுக்காகவும் அவர்கள் பட்டினி கிடந்து எதற்காக சாகவேண்டும்?
இன்று அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சைக்கக்கி வரும் சங்கி மனச்சாட்சி, நாளை தாராவி முற்றி வெடித்து, மும்பை இன்னொரு நியூயார்க்காக மாறத் தொடங்கிவிட்டால், அந்தச் சேரி மக்களுக்கு எதிராகவும் நஞ்சைக் கக்கத் தொடங்கும்.
முஸ்லிம் வெறுப்பின் உட்கிடையாகக் கனன்று கொண்டிருப்பது பார்ப்பன ஆதிக்க சாதி மனோபாவத்தின் உழைக்கும் வர்க்க வெறுப்பு என்பது அப்போது தெரியவரும்.
ஊரடங்கிற்கு கட்டுப்பட்டு உழைக்கும் வர்க்கத்தினர் பட்டினியால் செத்தால் அந்த செய்தி கூட வெளியே வரப்போவதில்லை. அதனை இருட்டடிப்பு செய்வதற்கு ஊடகங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கும். மீறினால் வாரணாசி பத்திரிகையாளர் மீதும், வயர் இணையப் பத்திரிகை ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீதும் வழக்கு பாய்ந்திருப்பது போல அனைவர் மீதும் பாயும்.
சமூக ஊடகங்களில் இத்தகைய செய்தி வெளிவரத் தொடங்கினால், எழுதுவோர் மீது சைபர் கிரைம் போலீசு ஏவப்படும். காஷ்மீரைப் போல இணையமும் கூட முடக்கப்படலாம்.
செத்தாலும் அந்த மரணத்தால், சக உழைக்கும் மக்களுக்கு ஏதேனும் பயனிருக்க வேண்டும். பட்டினிச்சாவினால் ஒரு பயனுமில்லை.
உழைக்கும் வர்க்கம் கொரோனாவுக்கு பலியாகத் தொடங்கினால், அது ஆளும் வர்க்கம் முதல் நடுத்தர வர்க்கம் வரையிலான அனைவரையும் மரணபீதிக்கு உள்ளாக்கும். காலரா தோற்றுவித்த மரணபீதிதான் பொது சுகாதாரம் குறித்த சிந்தனையையே பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளிடம் தோற்றுவித்தது என்பதை மறந்து விடக்கூடாது.
இன்று நோயாளிகளைக் குணமாக்குவதற்கு உயிரைப் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்களையும், நர்சுகளையும், மருத்துவப் பணியாளர்களையும் தீண்டத்தகாதவர்களாக நடத்தும் செய்திகளும், வீட்டைக் காலி செய்யச் சொல்லும் செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன.
கொரோனா நோயாளிகளை குவாரன்டைன் செய்து வைப்பதற்கு எந்த குடியிருப்பு பகுதியிலும் யாரும் அனுமதிக்காத காரணத்தால், துப்புறவுப் பணி செய்யும் தூய்மைப்பணியாளர்கள் குடியிருப்புக்குப் பக்கத்தில் கொரோனா நோயாளிகளைக் குடியமர்த்திய கொடுமையை (ஊர் நினைவில்லை) தொலைக்காட்சி செய்தியில் கண்டோம்.
சமூகத்தைக் காப்பாற்றப் பணி செய்வர்களையே நோயைப் பரப்பும் கிருமிகளாக (vectors) கருதி நடத்தும் மனோபாவம் கொண்ட சமூகத்திடம் இரக்கத்தை எதிர்பார்க்கக் கூடாது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பால் ஆதிக்க சாதி மனோபாவம் இரண்டு விதமான உணர்ச்சிகளை மட்டுமே கொண்டிருக்கிறது. ஒன்று அசூயை, இரண்டாவது அச்சம்.
இந்த பார்ப்பனிய சாதிய மனோபாவத்துக்கும் உழைக்கும் வர்க்கத்தின்பால் முதலாளிவர்க்கம் கொண்டிருக்கும் மனோபாவத்துக்கும் பாரிய வேறுபாடில்லை. இரண்டின் கலவைதான் சங்கி மனோபாவம்.
அசூயையை அவர்கள் கைவிட மாட்டார்கள். அச்சம் மட்டும்தான் அவர்களைப் பணிய வைக்கும், திருந்தும்படி நிர்ப்பந்திக்கும்.
உழைக்கும் மக்கள் பட்டினியால் சாவது குறித்து கவலைப்படும் அரசாக இருந்தால், பரிதாபத்துக்குரிய மக்கள் மேல் இந்த அரசு தடியடி நடத்தியிருக்காது. சூரத்தில் அதுதான் நடந்தது. மும்பையில் அதுதான் நடந்தது. இனி எங்கும் அதுதான் நடக்கும்.
போலீசுக்குப் பதிலாக இராணுவம் வருமேயன்றி, சோறு வராது.
உழைக்கும் வர்க்கம் பட்டினிக்கு பலியாக முடியாது என்று எதிர்த்து நிற்க வேண்டும். அதைவிட கொரோனாவுக்கு பலியாவது மேலானது, அது எஞ்சியுள்ள பிறரின் பட்டினிச் சாவையாவது தடுத்து நிறுத்தும்.
–மருதையன்
முதற்பதிவு: இடைவெளி