
செய்தி:
எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதி துர்கா, தருமபுரி மாணவர் ஆதித்யா ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன் என்பவரின் மகன் மோதிலால் (21) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மோதிலால் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத உள்ளார். இன்று தேர்வு நடக்க உள்ள நிலையில், தேர்வு பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.தமிழகத்தில் நீட் தேர்வினால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து உள்ள சம்பவம் பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியின் பின்னே:
‘நீட்’டுக்கு எதிராக, கல்வியாளர்களும், மருத்துவர்களும், சமூக முன்னேற்றத்தில் ஊக்கம் கொள்வோரும் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருக்கும் போதிலும் ..
போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதிலும் ..
மாணவர்களின் உயிர்கள் தொடர்ந்து பறி போய்க் கொண்டிருக்கும் போதிலும் ..
என்ன நடந்தாலும் ‘நீட்’ தேர்வை நடத்தியே தீர்வோம் என்று கொடூரம் காட்டுவதன் காரணம் என்ன?
‘நீட்’ என்பது தகுதித் தேர்வா?
12 ஆண்டுகளாக படிக்கும் ஒரு மாணவனுக்கு அதுவரை படித்திராத புதிய பாடங்களையும், அதுவரை தேர்வாக எழுதியிருக்காத புதிய வடிவத்திலும் ‘நீட்’ தேர்வை நடத்துவது தான் தகுதிக்கான அளவுகோலா?
ஒரு மாணவரின் கற்றலோடு, பெற்றோரின் பொருளாதார மேம்பாடு, பெற்றோரின் கல்வி அறிவு, பெற்றோரின் சமூகப் படி நிலை, குறிப்பிட்ட படிப்பின் மீதான ஈர்ப்பு – அதாவது இதை படித்தால் எளிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் எனும் நம்பிக்கை – மாணவர்கள் மீதான அரசின் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு விதயங்கள் தொடர்பு கொண்டிருக்கின்றன.
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் எந்த அக்கரையும் கொண்டிருக்காத அரசு,
அனைவரையும் பொருளாதார மேம்பாடு அடையச் செய்ய வேண்டும் என்பதில் எந்த அக்கரையும் கொண்டிருக்காத அரசு,
சமூக படிநிலையாக ஜாதியும் தீண்டாமையும் இன்னமும் இருந்து கொண்டிருக்கிற நாட்டில், அதற்கு எதிராக துருமையும் கிள்ளிப் போடாத, ஆனால், ஜாதியப் படிநிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்கு நயவஞ்சகமாக அனைத்தையும் செய்கின்ற அரசு,
வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும், அனைவருக்கும் வேலை கொடுப்பது அரசின் கடமை எனும் எண்ணமே இல்லாமலிருக்கும் அரசு,
மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தேர்வை நடத்துவது தகுதிக்காகத் தான் என எண்ணினால், எருமை ஏரோப்பிளேன் ஓட்டுவதை நம்புவதை விட அறுவெறுக்கத்தக்கது, கொடூரமானது, மனிதத் தன்மையற்றது.
அன்று, நீங்களெல்லாம் படிக்கக் கூடாது தீட்டு என்றார்கள் பார்ப்பனிய பயங்கரவாதிகள், இன்று அதையே ‘நீட்’டு என்கிறார்கள். வேறு ஒரு வெங்காயமும் அதில் இல்லை.
அதாகப்பட்டது, “பழகுன மாடு கொம்ப தூக்குனா, வயலையும் பாக்காது, பயலையும் பாக்காது” அம்புட்டுதேன்
செய்திகள் சுவாசிப்பது: 14/2020
சரி நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டு விட்டாலும் பிரச்சனை தீர்ந்து விடுமா ? இன்று 1.7 லட்சம் மாணவ மாணவிகள் நீட் தீா்வு எழுதுகின்றார்கள். 12 ம் வகுப்பு தோ்ச்சி அடிப்பைடயில் அனுமதி அளிக்கலாம் என்றால் அதே வேளையில் மொத்த எம்பிபிஎஸ் முதலாண்டுக்கான மொத்த இடம் 5000தானே. ஆக 1.7 லட்சம் மாணவர்களில் வெறும் 5000 பேருக்குதானே இளம் மருத்துவா் சீட் வழங்க முடியும். மீதம் உள்ள பேர்களுக்கு என்ன பதில் சொல்வது ? அவர்களில் சிலா் தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வீா்கள் ?
பிரச்சனை நீட் தோ்வில் இல்லை.இல்லை.நாம் படித்த பாடங்களில் இருந்து வினாக்களை எந்த கோணத்தில் எப்படிக் கேட்டாலும் பதில் அளிக்கும் தகுதியைப் பெறுவதுதானே உண்மையான கல்வி -தோ்ச்சி.அதை ஏன் குற்றம் சொல்வது நியாயமானது அல்ல. தற்கொலையை ஊக்கு விக்கின்றது நமது அரசும் எதிா் கட்சியும். அதுதான்உண்மை.
நண்பர் அன்புராஜ்,
இது உங்கள் கூற்று தானே, \\ நாம் படித்த பாடங்களில் இருந்து வினாக்களை எந்த கோணத்தில் எப்படிக் கேட்டாலும் பதில் அளிக்கும் தகுதியைப் பெறுவதுதானே உண்மையான கல்வி// நீங்கள் கூறும் இந்த உண்மையான கல்வி, படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறதா? இல்லையா? இல்லை என்றால் தேர்வை மட்டும் எப்படி ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறது அரசு?
முதலில் அந்த ஏற்பாட்டை செய்யுங்கள். பின்னர் நீட் தேவையா என்பது குறித்து பின்னர் ஆலோசிக்கலாம்.