பிரபலமான குசு

ஒரு பிரபல மனிதருக்கு
எப்போதாவது தான்
குசு விடவேண்டும் போலிருக்கிறது
அப்போது அவர்
எல்லோருக்கும் கேட்கும்படியாக
ஒரு குசு விடுகிறார்
அது நகரத்திற்கு மேலாக
‘டமாரெ’ன்று வெடிக்கிறது
போன மாதம்
இன்னொரு பிரபலமான மனிதர் விட்ட குசுவை விட’
இந்தக் குசு பெரிதாக இருந்தது.

நகரவாசிகள் அனைவரும்
அந்த சத்தைக் கேட்கிறார்கள்
அவர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள்
அந்த குசு வெடித்த இடத்தில்
ஒரே புகை மண்டலமாக இருக்கிறது
சத்தம் கேட்டு நிறையக் கேமிராக்கள்
சில நொடிகளில் வந்துவிட்டன
ஒரு குசுவை படம் பிடிப்பதில்
அங்கு ஒரே தள்ளு முள்ளு நடக்கிறது

அவர் ஏன் இப்போது
குசு விடுகிறார் என்று கேட்கப்படுகிறது
இதற்கு முன் அவர் ஏன் குசு விடவில்லை
என்று கூட கேட்கப்படுகிறது
ஒரு பிரபல மனிதருக்கு எப்போது
அஜீரணம் உண்டாகும் என்று
யாருக்குத் தெரியும்
ஒரு கெட்டுபோன பதார்த்தம்
வயிற்றுக்குள் போனால்
பிறகு எதுவுமே அவர் கட்டுப்பாட்டில் இல்லை
மேலும் பிரபல மனிதர்கள் விடும் குசு
அவர்களின் குசு தானா என்பதே சந்தேகத்திற்குரியது.

பிரபலமான மனிதர்
தான் வெறுக்கும்
யாரோ ஒருவர் முகத்தில் தான் குசுவிடுகிறார்
ஆனால் அது ஒரு வரலாற்று தருணமாக
மாறி விடுகிறது.

அந்தக் குசுவின் வாசனை பற்றி
நகரமே விவாதிக்கிறது
அதன் நறுமணங்கள் பற்றி
வேறு வேறு வியாக்கியானங்கள்
பரவிக்கொண்டிருக்கின்றன
சிந்தனையாளர்கள்
அதன் மருத்துவ குணங்களைப் பற்றி பேசுகிறார்கள்
அவநம்பிக்கைவாதிகள்
அது தொற்று நோய்களை உண்டாக்கக்கூடியது
என்கிறார்கள்
சதிக்கோட்பாட்டாளர்கள்
அது ஒரு உண்மையான குசுவே அல்ல
என்று சாதிக்கிறார்கள்
அவரது எதிரிகள்
அவரின் ஆசன வாயிலில்
தார் ஊற்றி மூடவேண்டும் என்கிறார்கள்

மக்களுக்கு மிகவும் அலுப்பாக இருக்கிறது
அவர்கள் வாழ்க்கையில்
எந்த மாற்றமும் நடப்பதில்லை
திடீரெனெ விடப்படும்
ஒரு சப்தமான குசு
ஒரு ஆசுவாசத்தைக் கொண்டு வராதா
என்று ஏங்குகிறார்கள்
குசுக்கள் காற்றில் கலைந்து செல்பவை
என்பதை அவர்கள் நினைக்க விரும்பவில்லை.

மக்கள் தெருக்களில் நின்று
தினம் தினம்
எதெதற்காகவோ போராடுகிறார்கள்
முழக்கங்களை எழுப்புகிறார்கள்
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
அதிகாரத்தால் தாக்கப்படுகிறார்கள்
அவர்களின் குரல்
இந்த நகரத்தில் யாருக்கும் கேட்பதில்லை
ஆனால் ஒரு பிரபலமான குசுவின் சப்தம்
நம் காதையே செவிடாக்குகிறது.

அதிகாரம் துப்பாக்கி முனையில்
பிறந்தது ஒரு காலம்
இப்போது அவை பிரபலமான குசுக்களிடமிருந்து
பிறக்கின்றன.

இந்த நகரத்தில்
மாதத்திற்கு ஒரு முறை
யாரேனும் ஒரு பிரபல மனிதர்
தன் பிரமாண்டமான குசுவை
விடுவதற்கு வருகிறார்.

மனுஷ்ய புத்திரன் 

பின்குறிப்பு: இந்தக் கவிதையை மனுஷ்ய புத்திரன் எப்போது எழுதினார்? எதை முன்வைத்து எழுதினார் என்று நினைவில் இல்லை. ஆனால் இந்த அரசியல் நேரத்தை அப்படியே எதிரொலிக்கக் கூடிய, எள்ளக் கூடிய மிகச் சிறந்த கவிதை என்பதில் ஐயமில்லை. அதற்காக கவிஞருக்கு ஒரு சிறப்பு நன்றி.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s