எது நட்டம் உணவு உண்ணும் அமைச்சரே?

செய்தி:

பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தால், அரசாங்கத்துக்கு சொந்தமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2731.32 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்ததாக நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துதுரறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மின்னம்பலம்

செய்தியின் வழியே:

கடந்த ஓர் ஆண்டாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த காலத்தில் 700 க்கும் அதிகமான விவசாயிகள் இறந்து போயிருக்கிறார்கள். இவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? எனும் கேள்விக்கு விவசாயிகள் போராட்டத்தால் ஒருவர் கூட இறந்ததாக எந்த தகவலும் அரசு பதிவுகளில் இல்லை என்று பதிலளித்திருக்கிறார் ஓர் அமைச்சர். இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறைக்கு 2731.32 கோடி வருவாய் இழப்பு என்று கூறியிருக்கிறார் நிதின் கட்கரி.

எந்த வகையில் நெடுஞ்சாலைத் துறைக்கு நட்டம்? நெடுஞ்சாலைகளை சேதப்படுத்தினார்களா விவசாயிகள்? இல்லை. மாறாக அரசு நெடுஞ்சாலைகளை சேதப்படுத்தியது, குழி தோண்டியது. ஆனால் அமைச்சர் இந்த நட்டத்தைக் குறிப்பிடவில்லை. அவர் குறிப்பிடுவது சுங்கச் சாவடி மூலம் ஏற்பட்ட நட்டம்.

சரி. சுங்கச் சாவடிகள் இயக்கப்படாமல் முடக்கப்பட்டதால் அரசுக்கு எப்படி நட்டம் ஏற்படும்? சாலைகள் போட்டது அரசு. அதை பராமரிப்பதற்காக ஏலம் விடப்பட்டு தனியார் நிறுவனங்கள் ஏலம் எடுத்து அதற்கு ஈடாக சுங்கக் கட்டணம் வசூலித்துக் கொள்கின்றன. இதில் இடையில் ஏற்பட்ட ஒரு முடக்கம் அரசுக்கு எப்படி நட்டத்தை ஏற்படுத்தும்? ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்துக்கு நட்டம் என்பதைக் கூட (நட்டமில்லை, போட்டத்தை விட பலமடங்கு எடுத்து விட்டர்கள். இன்னும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் கூட) வாதத்துக்கு ஏற்றுக் கொள்ளலாம். அரசுக்கு எப்படி நட்டம்? அப்படி என்றால் போராட்டம் போன்ற நிகழ்வுகளால் வசூல் பாதிக்கப்பட்டால் அதை ஈடுகட்ட அரசு அந்தப் பணத்தை வழங்கும் என்று ஒப்பந்தங்களில் விதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா? பதில் சொல்லுங்கள் அமைச்சரே.

இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன.

  1. வாகனங்கள் வாங்கும்போது, அனைத்து வாகனங்களுக்கும் ஆயுள் கால சாலை வரி வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில், எதற்காக சுங்கச்சாவடி வரி?
  2. ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் வசூலைத் தொடரும் சுங்கச் சாவடிகள் எத்தனை? எந்தப் பராமரிப்புப் பணியும் செய்யாமலேயே வசூலிக்கும் சுங்கச் சாவடிகள் எத்தனை?
  3. எந்த சுங்கச் சாவடியை எந்த நிறுவனனம் எவ்வளவு தொகைக்கு, எவ்வளவு காலத்துக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது என்பன போன்ற விவரங்கள் எதுவும் நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படவில்லையே ஏன்?
  4. சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால் எந்த சுங்கச் சாவடியிலும் கட்டணம் குறைக்கப்பட்டதே இல்லை. மாறாக, சுங்கச்சாவடிகள் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணங்களை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், இன்னும் ஃபாஸ்ட்டிராக் வசதி இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்காக வசூலித்துக் கொள்ளலாம் என்றும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது ஏன்?
  5. முழுமையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காத வரை பாதிக் கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. இதை எந்த சுங்கச் சாவடியும் செயல்படுத்துவதில்லை. இதை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது ஏன்?
  6. இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே 60 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ-க்கு அப்பால் சுங்கச்சாவடி இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தச் சாலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு, புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும் போன்ற விதிகள் ஏன் கடைப்பிடிக்கப்படுவதில்லை?
  7. அண்மையில் நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெளியிட்ட ஒரு செய்தியில், தமிழகத்தில் திண்டிவனம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியை ஒப்பந்தம் எடுத்துள்ள எம்.இ.பி (MEP) ஒப்பந்த நிறுவனம் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு வாரந்தோறும் செலுத்தவேண்டிய கட்டண பாக்கி மற்றும் அபராதத் தொகையான 6,68,39,358 ரூபாயை செலுத்தாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது போன்று நாடு முழுவதும் எவ்வளவு தொகை நிலுவை இருக்கிறது? அதை வசூலிப்பதற்கு செய்யப்பட்ட முயற்சிகள் என்ன?

இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வாரா அமைச்சர்? ஆனால் போராட்டம் பண்ணியதால் நட்டமாம். எந்த அளவுக்கு மக்களை முட்டாள்களாக கருதியிருந்தால் இது போன்ற பதில் வெளிப்படும். அதிகார போதையில் ஆடிய பலரை வரலாறு கண்டிருக்கிறது அமைச்சரே.

அதாகப்பட்டது, “ஓடுனவன் மூச்சு வாங்கித் தான் ஆவணும், உப்பைத் திண்ணவன் தண்ணி குடிச்சுத் தான் ஆவணும்” அம்புட்டுதேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்