கட்டாயத் தடுப்பூசி: ஒரு விவாதம்

கொரொனா எனும் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அலோபதி மருத்துவத்துக்கு எதிராக நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். அரசின் பெருந்தொற்று நடவடிக்கைகளின் உச்சகட்டமாக தடுப்புசி போடாதவர்கள் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்க வேண்டும் எனும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று அறிவிக்கிறார்கள். கேரளாவிலோ முதல்வரே அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடாதவர்களுக்கு இடமில்லை என்று அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நேற்று தடுப்பூசி நோயைத் தடுக்கவா மக்களைத் தடுக்கவா? என்றொரு பதிவை இட்டிருந்தேன். அது தொடர்பாக முகநூலின் நடந்த உரையாடலே இந்தப் பதிவு.

கேரள அரசின் இம்முடிவு சரிதான். தடுப்பூசியை சொந்த விருப்பத்தின் பேரில் மறுப்பவர்கள் சொந்த செலவில் மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே? தடுப்பூசி விஞ்ஞானபூர்வமான கண்டுபிடிப்பு. அதை சந்தைப்படுத்துபவர்கள் வேண்டுமானால் லாப நோக்கம் கொண்ட கார்ப்பரேட் கம்பெனிகளாக இருக்கலாம், அதற்காக தடுப்பூசியை கூட எதிர்ப்பது பிற்போக்குதனமே.

தடுப்பூசி எந்த அளவுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தடுப்பூசியை நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டாயப்படுத்துவது ஏன்? என்பது தான் முதன்மையான கேள்வி. இன்னொரு முதன்மையானது என்னவென்றால் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பதும் சொந்தச் செலவில் மருத்துவம் பார்ப்பது தான். மக்களின் வரி தானே அரசு மருத்துவமனையாகவும் இன்னபிறவாகவும் ஆகிறது. இதில் இடைக்கால நிர்வாக தலைமையில் இருக்கும் ஒருவர் தன் சொந்த முடிவை கொண்டு மக்களின் உரிமையை மறுக்கலாமா? இது என்ன விதமான பிற்போக்குத்தனம்?

தோழர் குழாயடி விவாதத்திற்கு நேரமில்லை. என்னுடைய கேள்வியின் நோக்கம் உங்கள் பதிவு அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்பான தடுப்பூசி க்கு எதிராக உள்ளது. அது பிற்போக்குதனமானது என்பதுதான். அதை பற்றி பேசுங்கள். ஒரு மருத்துவரிடம் நீங்கள் மருத்துவம் பார்க்க சென்றால் மருத்துவரின் பயிசிக்கு நீங்கள் உங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த மருத்துவரை நிராகரிப்பது உங்கள் ஜனநாயக உரிமை. அத விடுத்து அவர் எடுக்க சொல்லும் மருந்துகளை நிராகரித்து விட்டு அவரிடமே உங்கள் நோய்க்கு மருத்துவம் பார்ப்பது என்ன வகை ஜனநாயகம்?

தற்போது இங்கு கேள்வியாக முன்நிற்பது, கட்டாயத் தடுப்பூசி என்பது சரியா? என்பது தான். இதற்கு உங்கள் பதில் என்ன? தடுப்பூசி அறிவியல் பூர்வமானதா? என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முகநூல் பதிவர்கள் மட்டுமல்ல, பல அலோபதி ஆய்வாளர்களும் கூட. கிருமி தியரி என்பதே அற்வியல் முறைப்படி சரியானதா எனும் கேள்வி இன்னும் பதிலளிக்கப்படாமல் தொக்கி நிற்கிறது. இவை குறித்து உங்களுக்கு கருத்து ஏதேனும் இருக்கிறதா? தடுப்பூசி போடப்பட வேண்டியதன் அறிவியல் வழிமுறைகளே இங்கே எதுவும் பின்பற்றப்படவில்லை. இது குறித்து நீங்கள் எதுவும் கருத்து வைத்திருக்கிறீர்களா? ஆனால் அரசு தடுப்பூசி என்று சொன்னவுடன் அதை கண்ணை மூடிக் கொண்டு நம்பி விட வேண்டுமா? கேள்வி எழுப்பி விட்டாலே அறிவியலுக்கு எதிரானவன் என்று முத்திரை குத்த வேண்டுமா? எந்த வழிகாட்டலும் இல்லாமல், கட்டாயமாக தடுப்பூசி கூடாது என நீதி மன்ற தீர்ப்பு இருக்கும் நிலையில், உலக அளவில் தடுப்பூசி கட்டாயமல்ல என்பது சட்டபூர்வமாக ஏற்கப்பட்டிருக்கும் நிலையில், இங்கே மறைமுகமாக அதை திணிக்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன? அலோபதி தவிர வேறு எந்த மருத்துவ முறைக்கும் மக்கள் உயிர் குறித்தோ வளர்ச்சி குறித்தோ எந்த எண்ணமும் இல்லை என்றா கருதுகிறீர்கள்? தடுப்பூசி போடாவிட்டால் பொது இடங்களுக்கு வரக் கூடாது, அரசின் உதவியைப் பெறக்கூடாது. மருத்துவமனைக்கு செல்லக் கூடாது. உட்காரக் கூடாது நடக்கக் கூடாது. இதில் என்ன நியாயம் இருக்கிறது? இதை எந்த விதத்தில் நீங்கள் ஆதரிக்கிறீர்கள்? பதில் சொல்லுங்கள். அதன்பிறகு இது குழாயடி விவாதமா இல்லையா என்று முடிவு செய்து கொள்ளலாம்.

தடுப்பூசி கட்டாயம்தான் தோழர். அதில் மாற்று கருத்து இல்லை. ஒரு மாநிலத்தின் முதல்வர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் கொரோனா நோய் தொற்றுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடையாது என்று சொல்வது புரோக்கர் வேலை கிடையாது. இதை என் முதல் பதிலிலேயே கூறிவிட்டேன். தடுப்பூசி போடாவிட்டால் வெளிநாடுகளில் அனுமதிப்பது இல்லை. பெரும்பாலான நிறுவனங்களில் பணி புரிய தடுப்பூசி அவசியம் என்ற நிலை உள்ளது. இது ஒன்றும் தவறான நிலைபாடு இல்லை. இதில் நியாயம் தர்மம் என்பதை விட ஒரு பேரிடர் மேலாண்மை என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டும். அந்த மேலாண்மையில் தடுப்பூசிகள்தான் தற்போதைக்கு அறிவியல்பூர்வமான ஒரே முன்னேற்றம். ஊகங்களை வைத்துக் கொண்டு அரசுகள் செயல்படுமா? பாட்டாளி வர்க்கம் நாளை ஆட்சியை கைப்பற்றினாலும் கூட அன்றைய அறிவியல் முன்னேற்றம் என்னவோ அதைத்தானே பயன்படுத்தும்?

நீங்கள் குறிப்பிட்ட செங்கொடி வலைப்பதிவில் உள்ள கீழ்கண்ட கேள்விகள் எந்தவித ஆய்வுமின்றி எழுதப்பட்டுள்ளது தோழர். அடையாள குறியீடு என்பதெல்லாம் நாம் தமிழர் இலுமினாட்டி ரேஞ்சில் மிகவும் நகைபிற்கு உரியதாக உள்ளது.

4. கொரோனா தடுப்பூசி என்பதன் மூலம் தோலுக்கடியில் நிரந்தரமாக வைக்கப்படும் அடையாள குறியீடு என்று செய்தி அதிகாரபூர்வமாகவே தடுப்பூசி நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டதே, இதற்கு அரசின் பதில் என்ன?

5. உலகளாவிய அளவில் எந்த ஒரு தடுப்பூசியும், அதன் விளைவுகளைக் கூறி அனுமதி பெற்ற பிறகே போடப்பட வேண்டும் என்று நெறிமுறை இருக்கும் போது, இந்தியாவில் அது குறித்த விழிப்புணர்வோ, அனுமதியோ பெறப்படவில்லையே ஏன்?

தோழர் சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். தடுப்பூசி கட்டாயம் என்பது சட்ட நிலைப்பாடா? ஆம் என்றால் அறிவித்து விட வேண்டியது தானே, ஏன் அறிவிக்க மறுக்கிறார்கள்? மாறாக தடுப்பூசி கட்டாயமல்ல என்று நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும். தடுப்பூசி கட்டாயம் என்றால் எந்த அடிப்படையில் அது கட்டாயம் என்பதை விளக்குங்கள். பெருந்தொற்று என்றால் அலோபதிக்கு மட்டும் தான் பெருந்தொற்று குறித்த அக்கரை இருக்கிறதா? ஏனைய மருத்துவ முறைகளுக்கு இல்லையா? அலோபதி என்றாலே அறிவியல் முறை ஏனையவை எல்லாம் அறிவியலுகு எதிரானவை என்று அந்த அறிவியல் அடிப்படையில் முடிவு செய்கிறீர்கள் தோழர்? கார்ப்பரேட்டுகளுக்கு ஒத்துவருவது எல்லாம் அறிவியல் அதற்கு எதிராக உள்ளதெல்லாம் அறிவியல் இல்லை எனும் அடிப்படையிலா? தடுப்பூசி என்பது எந்த விதத்தில் அறிவியல் என்பதை விளக்குங்கள். அலோபதி மருத்துவமே அறிவியலுக்கு எதிரானது என்று அலோபதி மருத்துவ ஆய்வாளர்களாலே நிரூபிக்கப்பட்டிருக்கின்றனவே. குறைந்தபட்சம் அதற்கு பதிலாவது கூறப்பட்டுள்ளதா? நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முறைகளில் அலோபதியைத் தவிர ஏனைய அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டு அலோபதி தான் அறிவியல் என்று கூறுவது உள்நோக்கமுடையது. தடுப்புசி போடுவதும் மறுப்பதும் என்னுடைய உரிமையா இல்லையா? அதேபோல் தான் பொது இடங்களுக்கு போவதும் மருத்துவமனைகளுக்கு செல்வதும் செல்லாமல் இருப்பதும் என்னுடைய உரிமை. இது அரசியல் சாசன அடிப்படையிலான உரிமை. இதை தடுப்பூசி போடாதவர்களுக்கு கிடையாது என்று கூறும் அதிகாரம் முதலமைச்சருக்கோ, அதிகாரிகளுக்கோ எங்கிருந்து வந்தது? இது தான் கேள்வி. இதற்கு பதில் தந்தால் நன்றாக இருக்கும்.

பெருந்தொற்று என்பதால் கண்ணை மூடிக் கொண்டு அப்படியே ஏற்க வேண்டும் என்றால், ஒரு பாசிச அரசு நெருக்கடி நிலையை அறிவித்து, இந்த நெருக்கடி நிலையில் இப்படித்தான் மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒழுங்குமுறைகளை அறிவித்தால் அவைகளை ஏற்க முடியுமா?

அலோபதி தான் சரியானது என்று அரசு ஏற்று அதை நடைமுறைப்படுத்துகிறது என்பது வேறு, இதை பின்பற்றாவிட்டால் உங்கள் உரிமைகளைப் பறிப்பேன் என்பது வேறு. அரசின் முடிவின் படி தான். ஏற்பில்லை என்றாலும் ஊரடங்கை ஏற்றுக் கொண்டோம். காரணம் மக்களுக்கு பெரும் அச்சம் விதைக்கப்பட்டிருந்தது. என்றாலும் அதற்கு எல்லை இருந்தது. மக்கள் உழைக்க வாய்ப்பில்லை என்றால் வாழும் வாய்ப்பும் இல்லாமல் போகும் என்பதால் ஊரடங்கை தளர்த்துவதை தவிர வேறு வழியில்லை. ஆனால், ஊரடங்குக்கு அரசு கண்டுபிடிக்கும் குறுக்குவழிகளையும் ஊரடங்கைப் போலவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது முட்டாள்தனம் இல்லையா?

எனவே, குறைந்தளவு நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்ய முதல்வரின் கவனத்துக்கு கீழ்காணும் மனுவை அனுப்புங்கள்.

கட்டாயத் தடுப்பூசியைத் தடுத்திடுக. பின்வரும் செய்தியை தமிழக முதல்வருக்கு cmcell@tn.gov.in மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடத்தில் அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளதாக கலைஞர் செய்திகள் facebook பக்கத்தில் வெளியாகியுள்ளது. லிங்க்

(facebook dot com/486711508472217/posts/1263291944147499/)

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழும் சுதந்திரம், தேர்வு செய்யும் உரிமை எல்லாவற்றையும் இதுபோன்ற உத்தரவுகள் பறிக்கின்றன. கட்டாயத் தடுப்பூசியைத் தடுத்திடுங்கள் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.

தடுப்பூசி போட்ட பலர் மரணிக்கிறார்கள். அவர்களது குடும்பங்களுக்கு நஷ்டஈடு இல்லை. ஆனால் இதுபோன்ற மரணங்களுக்கு தடுப்பூசி காரணமில்லை என்று எளிதில் நம்ப வைக்கப்படுகிறது.

அதிகார மேல் மட்டத்தில் உள்ளோர் சொல்வதை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அறமல்ல. நன்றி. வணக்கம்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்