செய்தி:
கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.என் .ரவி பங்கேற்றார். அதில் பேசிய அவர், எந்தவொரு சூழலிலும் வன்முறையை துளியும் ஏற்க முடியாது என கூறினர். நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரான சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், சரணடைய மறுக்கும் எந்த ஒரு ஆயுத குழுவுடனும், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார். தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் கொடுத்தே ஆக வேண்டும் எனவும் ஆர்.என் ரவி பேசினார். மும்பை தாக்குதலால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சி அடைந்ததாகவும், ஆனால், தீவிரவாதத்தால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டதாகக் கூறி, அப்போதைய இந்தியா- பாகிஸ்தான் பிரதமர்கள் கையெழுத்திட்டதாகவும் . காங்கிரஸ் அரசை ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்தார்.
செய்தியின் பின்னே:
ஆளுனராக நியமிக்கப்படுவோர் கட்சி ஆதரவாளர்களாகவே இருப்பர் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆளுனராக ஆன பிறகு நேரடியாக கட்சியின் கருத்துகளை பரப்புரை செய்யக் கூடாது. இது அரசியல் சாசன நிலைப்பாடு. இதுவரையிலான ஆளுனர்கள் சற்றேறக்குறைய அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒன்றியத்தில் பாஜக அதிகாரத்துக்கு வந்த பிறகு இந்த நிலையில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. மாநிலத்தின் ஆளுனர்கள் குறிப்பாக பாஜக ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களில் ஆளுனர்கள் தங்களுடைய வரம்பை மீறி நிர்வாகத்தில் தலையிடுவது, ஆய்வுகள் நடத்துவது, உயர் அலுவலர்களை நேரடியாக அழைத்து கூட்டங்கள் நடத்துவது, சட்ட வரைவுகளை கிடப்பில் போடுவது, காவல் துறையில் குறுக்கீடுகள் செய்வது என்று பல குழப்பங்களைச் செய்கிறார்கள். அதாவது தங்களையல்லாத பிற மாநில அரசுகள் இருக்கக் கூடாது எனும் உட்கிடையிலிருந்து செயல்படுகிறார்கள்.
இப்படி கூறியதும் ஆளுனர் என்ன ரப்பர் ஸ்டாம்பா என்கிறார்கள். ஆம், அரசியல் சாசன அடிப்படையில் மாநில ஆளுனர் மட்டுமல்ல, ஒன்றிய குடியரசுத் தலைவரும் நிர்வாகத்தைப் பொருத்தவரை ரப்பர் ஸ்டாம்ப் தான். அதிகளவாக ஒன்றிய அரசுக்கு அறிக்கை அனுப்பலாம். அதற்கு மேல் நிர்வாகத்தில் தலையிட ஆளுனருக்கு அதிகாரம் இல்லை. ஆனால் ஒன்றிய அரசு என்ன நினைக்கிறது என்றால், ஒரு மாநில அரசால் என்ன செய்துவிட முடியும்? வழக்கு போட்டால் கூட, நீதி மன்றங்களில் பாஜக நீதிபதி அணி இருக்கிறது. அதையும் மீறி வழக்கு நடந்தாலும் முடிவு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதற்குள் நாம் செய்ய வேண்டியதை செய்து விடலாம் இது தான் ஒன்றிய அரசின் எண்ணம்.
தமிழ்நாட்டு ஆளுனர் ரவி, தொடக்கத்திலிருந்தே கட்சிசார் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பாஜக அரசின் கருத்துகளை வெளிப்படையாகவே பேசி வருகிறார். மாநில அரசின் ச்ட்ட வரைவை கிடப்பில் போட்டிருக்கும் அதேநேரத்தில் அதற்கு எதிரான ஒன்றிய அரசின் கருத்தை பொது மேடைகளில் பேசுகிறார். நீட் குறித்து பேசியதும், எழுவர் விடுதலை குறித்து பேசியதும் எடுத்துக்காட்டுகள். ஏன் அரசியல் சாசனத்துக்கு எதிராகக் கூட சனாதன தர்மம் குறித்து பேசியிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது வன்முறை, துப்பாக்கி என்று பேசுவதை எடுத்துக் கொள்ள வேண்டும். நாடெங்கும் அமைதியாக சட்ட உரிமைகளின் படி போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொடங்கி மணிப்பூர் வரை ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. இதற்கு எதிராக மக்கள் துப்பாக்கியை தூக்கலாமா? என்கவுண்டர் என்ற பெயரில் நடந்த படுகொலைகள் எத்தனை எத்தனை? காவல்நிலைய கொலைகள் வன்புணர்வுகள் எத்தனை எத்தனை? இது வன்முறையில் சேராதா?
ரவி கூறுவதன் பொருள் இது தான். அரசு உங்கள் வீடுகளை இடிப்பது தொடங்கி, உங்கள் வாழ்வாதாரங்களை பறிப்பது வரை என்ன வேண்டுமானாலும் செய்யும். அதை எதிர்த்து மக்கள் எதுவும் பேசக் கூடாது, கேட்கக் கூடாது, போராடக் கூடாது. மீறினால் எங்களிடம் துப்பாக்கி இருக்கிறது, உங்களுக்கு துப்பாக்கி ஏந்தும் அதிகாரம் இல்லை. இது தான் ரவி பேசுவதன் பொருள். மக்கள் தான் உணர வேண்டும்.
அதாகப்பட்டது, “ராஜாவோட வாலுக்கு சமதையா குடியானவன் தலையும் ஆடக்கூடாதுலே” அம்புட்டுதேன்.