இதற்குப் பெயர் தான் என்கவுண்டரா?

வட கிழக்கு மாநிலங்களில், காஷ்மீரில், குஜராத்தில் என்று தனித்து குறிப்பிடும்படி இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் நிறைந்திருக்கிற அரச பயங்கரவாதத்தின் கோர முகம் கடந்த நவம்பர் 27ம் தேதி மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது. அன்றுதான் தோழர் கிஷன் ஜி கொல்லப்பட்டார். வழக்கம் போல போலீஸை சுட்டார், அதனால் நாங்கள் திருப்பி துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று கட்டுக் கதைகள் பரப்பிவிடப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து போலீஸ் வெறிநாய்களால் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. அரசுக்கு எதிராக போராடுபவர்கள் யாரானாலும் அவர்களை கடித்துக் குதறி கிழித்துப் போடுவது தான் அரசின் இலக்காகி இருக்கிறது. மக்களுக்காக போராடுபவர்கள் இது போன்ற கொடூரங்களைக் கண்டு ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். தொடர்ந்து அவர்கள் மக்களைத் திரட்டி முன்னேறுவார்கள். அதிகாரங்கள் மக்களின் கைகளில் மலரும் அந்த நாளில் இது போன்ற கொடூரங்களுக்கெல்லாம் ஒட்டு மொத்தமாக ஈவிரக்கமின்றி பழிவாங்கப்படுவார்கள்.

வீர வணக்கம் தோழர் கிஷன் ஜி

 ****************************************************************

33 ஆண்டுகளாக பெற்ற தாயைக் கூட பார்க்க நேரமின்றி, ஏழைகள் மற்றும் பழங்குடியினரின் வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பங்கேற்கும் உரிமை என சகல உரிமைக்காகவும் போராடிக் கொண்டே இருந்தார் கிஷன் ஜி.

 

ஒரு மூதாட்டி கிஷன் ஜியிடம் கேட்டள்”இப்படி ஊர் ஊராக போய் போராடிக் கொண்டிருக்கிறாயே, உன் வயதான அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டமா?” என்று. அதற்கு கிஷன் ஜி சொன்னார் “என் தாய்க்கு மூன்று பிள்ளைகள் …… ஒருவர் வீட்டுக்கு இருவர் நாட்டுக்கு” என்று. கிஷன் ஜியின் தம்பியும் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) இயக்கத்தில் தான் இருக்கிறார்.

 

சுதந்திரப் போராட்ட தியாகியும், சுத்ந்திரத்திற்குப் பின் ஆந்திர மாநில துணை காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்தவருமான வெங்கையா மதுரம்மா தம்பதிகளுக்கு மகனாக 26-11-1956ல் ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டம், பெடப்பள்ளி என்ற சிற்றூரில் பிறந்தார் கிஷன் ஜி. இவரது இயற்பெயர் மல்லோஜுல கோடீஸ்வர ராவ். பள்ளிப் பருவத்திலிருந்தே குற்றங்களைக் கண்டால் சிங்கமெனச் சீறுவது அவரது பிறவிக் குணமாக இருந்திருக்கிறது.

1970 களில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “மக்கள் போர்க்குழு” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். கரீம் நகர் மாவட்டத்தில் மட்டும் 60000 பேர் மபோகுழுவில் உற்ப்பினர்களாக இணைந்தனர். இக்குழு தெலுங்கானா ஆதரவுப் போராட்டங்களில் தீவிரப் பங்காற்றியது. இந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்ஸியின் போது சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கிஷன் ஜி.

 

1974ல் தனது மபோகுழுவை புரட்சிகர மார்க்ஸிய லெனினிய இயக்கத்தில் இணைத்து 1986 வரை ஆந்திர மக்களுக்காக போராடினார். அவரது வீரம் கண்டு மேற்கு வங்க புரட்சிகர இயக்கங்கள் தங்களுக்கு தலைமை தாங்க அழைத்தன. வங்காளம் பீஹாரில் சிதறுண்டு கிடந்த பல புரட்சிகர இயக்கங்களை ஒன்றாக்கி, ‘மாவோயிஸ்ட்’ என்ற வலிமையான அணியை உருவாக்கியதில் கிஷன் ஜியின் பங்கு முக்கியமானது.

 

மேற்கு வங்கத்தில் சுரங்கம் தோண்டுவதற்காக பழங்குடியின விவசாயிகளின் நிலங்களை இரும்பு கம்பனிகள் பங்குபோட முயன்றபோது வெகுண்டெழுந்த கிஷன் ஜியின் படையில் பழங்கிடியின பெண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். நந்திகிராம், லால்கர், சிங்கூர் நிலமீட்பு போராட்டங்களை திறம்பட நடத்தி வெற்றிபெற்று, மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் என்று சொல்கின்ற பொய்ப் பிரச்சாரத்தை தகர்த்து தவிடு பொடி ஆக்கினார் கிஷன் ஜி. அவரது கால்கள் படாத கிராமமே வங்கத்தில் இல்லை.

 

“ஆயுதங்களை கைவிட்டு வந்தால் மாவோயிஸ்டுகளுடன் சமாதான பேச்சு வார்த்தை” என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற கிஷன் ஜி ”பேச்சுவார்த்தை நடைபெறும் 72 நாட்களுக்கும் துப்பாக்கிப் போராட்டம் நிறுத்திவைப்பு” என்று அறிவித்தார். சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தவந்த இடத்தில் கிஷன் ஜி போலீஸ் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும், அதனால் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும் சி.ஆர்.பி,எஃப் டைரக்டர் ஜெனரல் விஜயகுமார் கூற, சீறி எழுந்த ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு சங்கம், ஆந்திர மாநில குடியுரிமைச் சங்கம், பந்தி முத்தி கமிட்டி, டெல்லி ச்.உ.மக்கள் இயக்கம், ஆர்.எஸ்.வி.பி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 22 பிரதிநிதிகள் ஒன்றாகச் சேர்ந்து என்கவுண்டர் நடந்த இடத்தை டிசம்பர் 1 அன்று ஆய்வு செய்தனர்.

 

ஆய்வுக்குப் பின் நம்மிடம் பேசிய ஆந்திர மாநில குடியிரிமை சங்கத்தைச் சேர்ந்த சி.ஹெச். சந்திர சேகர் “30 நிமிடம் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது அப்படி என்றால் எந்தப் போலீஸாரும் உயிரிழக்காதது ஏன்? கிஷன் ஜி மீது துப்பாக்கிச் சூடு நடந்திருந்தால் அவரது உடல் கிடந்த இடத்தில் இருந்த உயரமான கரையான் புற்றின் மேல் ஒரு குண்டு கூட பட்டிருக்காதா? அந்த புற்று சிதையாமல் அப்படியே இருப்பது எப்படி? மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குண்டு பட்ட காயங்களை மட்டுமே குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது. இந்தப் படங்களைப் பாருங்கள், இது என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற உடலா? அவரை தனியாக அழைத்துக் கொண்டு போய் சித்திரவதை செய்து கை கால்களை முறித்து காலில் தீவைத்து எரித்து, தாடையை உடைத்து மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்திருக்கிறார்கள். எனவே இது என்கவுண்டர் இல்லை…. திட்டமிட்ட படுகொலை தான்” என்று ஆவேசத்துடன் கூறினார்.

 

அடித்து நொறுக்கப்பட்ட தாடை
தீவைத்து எரிக்கப்பட்ட பாதம்
உடைக்கப்பட்ட கால்

 

33 வருடங்களாக மகனைப் பார்க்காமல் இருந்த கிஷன் ஜியின் தாயார் இந்தக் கோலத்தில் தான் வெட்டி இணைத்தது போல் இருந்த கிஷன் ஜியின் சிதைந்த கருகிய உடலின் மேல் “என் மகனே கிஷன் ஜி” என்று கதறினார் தாய் மதுரம்மா. ஆறு மொழிகள் தெரிந்த, ஆறு புனைப் பெயர்கள் கொண்ட கிஷன் ஜியை பன்னிரு முறை கொன்றிருக்கிறது கொடூர போலீஸ்.

–    28/12/2011 நக்கீரன் இதழிலிருந்து.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

2 thoughts on “இதற்குப் பெயர் தான் என்கவுண்டரா?

  1. அரசின் வன்முறையை மட்டும் எப்போதும் இந்த ஜன நாய் வாதிகள் ஒப்புக் கொள்வதில்லை.
    எவ்வளவுக்கு விரைவில் எதிரியை வீழ்த்துவோமோ அவ்வளவுக்கு நல்லது.
    வீர வணக்கம் தோழர் கிஷன் ஜி

  2. //33 ஆண்டுகளாக பெற்ற தாயைக் கூட பார்க்க நேரமின்றி, ஏழைகள் மற்றும் பழங்குடியினரின் வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பங்கேற்கும் உரிமை என சகல உரிமைக்காகவும் போராடிக் கொண்டே இருந்தார் கிஷன் ஜி.//

    //மேற்கு வங்கத்தில் சுரங்கம் தோண்டுவதற்காக பழங்குடியின விவசாயிகளின் நிலங்களை இரும்பு கம்பனிகள் பங்குபோட முயன்றபோது ………..//

    கிஷன் ஜி யை எல்லாவற்றையும் அகற்றி மனிதனாகப் பார்த்தால், அவர்தான் உண்மையான மேன்மையான மனிதன். அப்படி பட்ட மனிதனை சட்டத்தின்முன் நிறுத்தினால் மனிதமிருகங்களின் அடையாளம் வெளி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் இந்த என்கவுண்டர் படுகொலை.
    விடப்பட்ட எச்சரிக்கை- மக்களுக்காக போராடினால் அரசாங்கத்தால் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படுவார்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s