இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?

நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்செய்யும் முடிவில் இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ; இந்தத் திருத்தத்தின்படி, எல்லைத் தாவாவில் இருக்கும் இந்தியப் பகுதிகளையும் உள்ளடக்கும்படி நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இதனால், நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிடும்போல் இருக்கிறது.

சில ஆண்டுகளாகவே ஒலீயின் தேசிய அரசியல் நேபாளத்தை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளிவிடும் என்று அவர்கள் அச்சப்பட்டார்கள். லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி ஆகிய பகுதிகளை மீட்பதற்கான அறைகூவலாகட்டும், சீனாவிலிருந்து வந்த வைரஸைவிட ‘இந்திய வைரஸ்’, ‘அதிக அளவில் கொல்லும் திறன்’ படைத்தது என்றதாகட்டும், இந்தியாவின் அசோகச் சக்கரத்தில் உள்ள சிங்கங்களை மேலாதிக்கத்தின் குறியீடுகள் என்று கூறியதாகட்டும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒலீயின் கூற்றுகள் இந்தியாவில் உள்ள பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின (நேபாள நாடாளுமன்றத்தில் ‘சத்யமேவ ஜயதே’ என்பதற்குப் பதிலாக ‘சிங்கம் ஜயதே’ என்று ஒலீ குறிப்பிட்டார்). மற்றவர்களைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கம் நல்லுறவு கொள்ள முடியாதவர் ஒலீ என்ற எண்ணம் வலுப்பட்டிருக்கிறது.

இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு

இதில் முரண்நகை என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் ஒலீ இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்துவருகிறார் என்கிறார்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகள். “2015-க்கு முன்பு இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு எந்த நேபாள அரசியல்வாதி தொடர்ந்து பாடுபட்டுவந்தார் என்ற கேள்விக்கு, கே.பி.ஷர்மா ஒலீ என்பதுதான் பதிலாக இருக்கும்” என்கிறார் நேபாளத்துக்கான முன்னாள் இந்தியத் தூதர் ராகேஷ் சூட். எடுத்துக்காட்டாக, மஹாகாளி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில், நேபாள-இந்திய ஒப்பந்தத்தை ஆதரிப்பதற்காக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த மாவோயிஸ்ட்-லெனினிஸ்ட் (சிபிஎன்-யூஎம்எல்) பிரிவை இரண்டாக உடைத்தார். ஒலீ நேபாளத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவிலிருந்து தப்பி நேபாளத்தில் தஞ்சம் புகுந்த தேடப்படும் குற்றவாளிகளை இந்தியாவுக்கே அனுப்புவதற்கு அவர் எந்த அளவுக்கு ஒத்துழைத்தார் என்பதைத் தூதரக அதிகாரிகள் நினைவுகூருவார்கள். நேபாளத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடையே பிளவு ஏற்பட்ட பிற்காலத்தில்கூட அங்குள்ள வெவ்வேறு அரசியலர்களுக்கு இந்தியா அளித்துவரும் ஆதரவு குறித்து இந்தியாவை நேபாளமும் நேபாளத்தை இந்தியாவும் மாறிமாறிக் குற்றஞ்சாட்டிய நிலையிலும் ஒலீ இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்காமல்தான் இருந்தார்; மேலும், அடிக்கடி இந்தியாவுக்கு வருகையும் தந்தார்.

“அந்த நிலைப்பாடு 2015-ல் மாறியது” என்று நேபாள அரசமைப்புச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்குக் காரணமாக இருந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி சூட் கூறுகிறார். நேபாள அரசமைப்புச் சட்டம் தெற்கில் வாழும் மாதேசிகளுக்குப் பாரபட்சமாக இருப்பதாகவும், நேபாளத்தில் தனது நலன்களை அது பிரதிபலிக்கவில்லை என்றும் இந்தியா உணர்ந்தது. அரசமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் ஒலீக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நேபாளி காங்கிரஸ் தலைவர் சுஷில் கொய்ராலாவுக்குப் பதிலாகத் தன்னைப் பிரதமராக்கினால் அரசமைப்புச் சட்டத்தைத் தான் ஆதரிப்பதாக ஒரு பேரத்தில் ஒலீ ஈடுபட்டார். கடைசி நேரத்தில், ஒலீயை நாடாளுமன்றத் தேர்தலில் சந்திப்பதாக கொய்ராலா முடிவெடுத்தார். இந்த முடிவுக்குப் பின்னால், இந்தியா இருந்ததாகப் பலரும் நம்பினார்கள். 2015 அக்டோபரில் நடந்த தேர்தலில் கொய்ராலாவை ஒலீ தோற்கடித்தார். எனினும், புதுடெல்லியிலிருந்து மற்றுமொரு சவால் அவருக்குக் காத்திருந்தது. நிலத்தால் சூழப்பட்டிருக்கும் நேபாளத்துக்குப் பொருட்கள் கொண்டுவரப்படும் இந்திய-நேபாள எல்லை பல மாதங்கள் மூடப்பட்டன. மிக மோசமான நிலநடுக்கத்தை நேபாளம் எதிர்கொண்ட சில மாதங்களில் இந்திய-நேபாள எல்லை மூடப்பட்டது புதிய பிரதமருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

“அப்போதுதான் ஒலீக்கு ஆதரவாக சீனா களமிறங்கியது” என்கிறார் நேபாள எழுத்தாளர் சுஜீவ் சாக்கியா. அவர் சுட்டிக்காட்டுவது, எட்டு முனை போக்குவரத்து தொடர்பாக 2016-ல் நேபாளம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை. இந்த ஒப்பந்தம் முதன்முறையாக சீனாவில் இருக்கும் சரக்கு முனையங்களுக்கும் ரயில்வழிப் பாதைகளுக்கும் நேபாளத்துக்கு இணைப்பை வழங்கியது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் அச்சத்தைப் போக்கவில்லை; ஏற்கெனவே சீனாவின் ‘பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்’ (BRI) குறித்து இந்தியா சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், அடுத்த நான்கு மாதங்களுக்குள் ஒலீ மற்றுமொரு சவாலைச் சந்தித்தார். நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பிரசந்தா, ஒலீ அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டார். இதற்கு புதுடெல்லிதான் காரணம் என்று ஒலீ குற்றஞ்சாட்டினார். ஓராண்டு கழித்து செயலூக்கத்துடன் திரும்பவும் களமிறங்கினார் ஒலீ. இம்முறை தன்னோடு தயாள், மாதவ் நேபாள், ஜலனாத் கானல், பாம்தேவ் கௌதம் உள்ளிட்ட எல்லா மூத்த தலைவர்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியுடன் களமிறங்கினார். 2017 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில், இந்திய எதிர்ப்பை மையப்பொருளாகக் கொண்டு மூன்றில் இரண்டு பங்கு அளவு தொகுதிகளில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைத் தனது புதிய கட்சியைப் பெறச்செய்தார்.

புதிய வரைபடம்

எதிர்க்கட்சி சக்தியிழந்துபோனது; மாதேசி செயல்பாட்டாளர்கள் ஒன்று ஆதரவாளர்களானார்கள், அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர்; ஊடகமும் அரசை விமர்சிப்பதில்லை. இப்படியே முதல் இரண்டு ஆண்டுகளை ஒலீ கடத்திவிட்டார். பிறகு, கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரிலிருந்து லடாக்கைப் பிரிக்கும் வகையில் சட்டப்பிரிவு 370-ஐ இந்தியா நீக்கி, அரசியல்ரீதியிலான புதிய இந்திய வரைபடத்தை வெளியிட்டபோதுதான், காத்மாண்டில் போராட்டங்கள் வெடித்து, மக்களின் எதிர்ப்பை ஒலீ சந்தித்தார். அவரது அரசியல் எதிரிகள் முழங்கிய கோஷங்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு இந்தியக் கையாள் என்று முழங்கப்பட்ட கோஷங்களை நினைவுபடுத்தின. அவரது கட்சியின் நிலைக்குழு சந்திப்பிலேயே அவர் தூக்கியெறியப்படும் சாத்தியங்கள் இருக்கும் நிலையில், ஒலீயின் குரல் உச்சஸ்தாயியை எட்டியது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

“பிரதமர் ஒலீயைப் பொறுத்தவரை தற்போது அவர் இடும் இந்தத் தேசிய முழக்கம் என்பது தனது செல்வாக்கைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு. நேபாளத்துக்கு ஜனநாயகத்தைக் கொண்டுவந்த பெருமை நேபாளி காங்கிரஸையே சேரும்; அரசாட்சியை அகற்றிய பெருமை பிரசந்தாவையே சேரும்” என்கிறார் நேபாளத்துக்கான முன்னாள் தூதர் மஞ்சீவ் சிங் பூரி.

ஒலீ மீதான நிலைப்பாட்டை இந்தியாவும் கடுமையாக்கியுள்ளது. காலாபாணி, சுஸ்டா விவகாரங்கள் தொடர்பாக வெளியுறவுச் செயலர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று 2014-ல் மோடி ஒப்புக்கொண்டிருந்தாலும் இந்த விவகாரங்கள் குறித்து, ஆறு ஆண்டுகளாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எல்லைப் பிரச்சினைகள் குறித்துச் சில தீர்வுகளைப் பரிந்துரைக்கும் ஒரு ‘எமினெண்ட் பெர்ஸன்ஸ் குரூப்’பின் அறிக்கையை வெளியிடும்படி ஒலீ விடுத்த கோரிக்கையையும் இந்திய அரசாங்கம் மறுத்துவிட்டது. கடந்த டிசம்பரில் ஒலீயின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகைதரவிருந்தார்கள். அந்த வருகையை இந்தியா ரத்துசெய்துவிட்டது. டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான நேபாளத் தூதர் இந்திய வெளியுறவுத் துறை சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டும் அந்தச் சந்திப்பு நிகழவில்லை.

தூண்டில் வீசும் சீனா

இதற்கிடையே அமெரிக்காவும் சீனாவும் நேபாளத்தில் இருக்கும் தங்கள் தூதரகச் செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த இரண்டு நாட்டின் தூதரக அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக்கொண்டு காத்மாண்டு மக்களுடன் இரண்டறக் கலந்து, அவர்களுடன் ஆடியும் பாடியும் காணொலிகளைப் பதிவுசெய்துவருகிறார்கள். நேபாளக் கட்டமைப்புக்கு நிதியுதவி செய்வதாக ஒலீக்கு சீனா தூண்டில் வீசுகிறது; அமெரிக்க அரசின் ‘மில்லினியம் சேலன்ஞ் கார்ப்பரேஷன்’ பொருளாதார உதவிகள் என்ற வகையில், இந்திய மதிப்பில் ரூ.3,773.23 கோடியை நிதியாக வழங்கியது. அமெரிக்காவும் சீனாவும் தங்கள் திட்டங்களை நேபாளத்தில் செயல்படுத்த நினைக்கும் வேளையில், நீண்டகால தன்னாட்சியைப் பின்பற்ற தற்போது பிரதமர் ஒலீ முயன்றுகொண்டிருக்கிறார். அவர் நீட்டும் கரங்களை இந்தியா புறக்கணித்துக்கொண்டிருக்கிறது” என்கிறார் ‘காத்மாண்டு போஸ்ட்’ இதழின் அனில் கிரி. அந்த வகையில், நிலவரைபடங்கள் குறித்த ஒலீயின் சமீபத்திய நகர்வென்பது முன்கூட்டியே தெரிந்த ஒன்றுதான். இப்போது முடிவெடுக்க வேண்டியது புதுடெல்லிதான்.

சுஹாசினி ஹைதர். தமிழில்: ஆசை

முதற்பதிவு: தமிழ் இந்து நாளிதழ்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s