வறுமை சூழுது… ஜாக்கிரதை!

மக்கள் என்ன தேவையைக் குறைத்தாலும் குறைக்க முடியாத தேவை உணவுத் தேவை என்று சொல்லப்படுவது உண்டு. அதேசமயம், சமூகத்தில் என்ன மாற்றம் நடந்தாலும் அது உடனடியாகப் பிரதிபலிப்பதும் உணவுச் சந்தையில்தான். உணவுப் பொருட்கள் விற்பனை எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டின் செல்வந்த நகரமான கோவை வியாபாரிகளிடம் பேசினேன்.

சையது – ஜாகீர் உசேன் சகோதரர்கள், அரிசி வணிகர்கள்.

ஊரடங்கு வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் மக்கள் கூட்டம் அலைமோதியதை வெச்சு, அரிசி யாவாரிங்க காட்ல அடைமழைதான்னு சொன்னாங்க. ஆரம்பத்துல அப்படித்தான் இருந்துச்சு. ஆனா, என் அம்பது வருஷ அனுபவத்துல சொல்றேங்க, அழிமானம் தொடங்கிருச்சு. பொன்னி, கிச்சடி சம்பா மாதிரியான உயர்ரக அரிசி வியாபாரம் ரொம்ப விழுந்திடுச்சி. சாதாரண ரகம் போகுது, ஆனா, குறைஞ்சுடுச்சு. அதாவது, புதுசா ஒரு கூட்டம் ரேஷன் அரிசியையும், நிவாரணமா கொடுக்கிற அரிசியையும் சாப்பிடத் தொடங்கியிருக்காங்கன்னு பட்டவர்த்தனமா தெரியுது. அரிசி வியாபாரம் குறைஞ்சதால பாதிப்பு எங்களுக்கு மட்டுமில்லீங்க. கடைக்காரர்கள், மொத்த வியாபாரிகள், மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்கள், தரகர்கள்னு ஒரு பெரிய கூட்டத்துக்கே பாதிப்பு.

எம்.காஜா, காய்கறி வணிகர்.

தமிழ்நாடு முழுக்க ஒரு விஷயத்தை நீங்க கவனிக்கலாம். காய்கறிக் கடையில கூட்டம் குறைஞ்சிக்கிட்டேபோகுது. அதேபோல தற்காலிகச் சந்தைகள்ல கடைகளோட எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைஞ்சிக்கிட்டே போகுது. வீடு வீடா போய் காய்கறி விக்கிறவங்களும் குறைய ஆரம்பிச்சிட்டாங்க. மக்கள்கிட்ட பணப்புழக்கம் இல்லாததுதான் காரணம். ஒருபக்கம் விவசாயிங்க விலை இல்லைனு காய்கறிகளைக் குப்பையில கொட்டுறாங்க. இன்னொருபக்கம் நாங்க விக்காம குப்பையில கொட்டுறோம். நம்ம பண்றது மொத்த வியாபாரம். கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃபிளவர்னு இங்கிலீஷ் காய்கறி உட்பட எல்லாக் காய்கறிகளும் விக்கிறேன். இருபத்தஞ்சு வருஷ அனுபவம். முந்தி ஆயிரம் கிலோவுக்குக் குறையாம காய்கறி வித்தவன், இப்ப இருநூறு கிலோகூட விக்க முடியாமத் தவிக்கிறேன். முந்தி மீதமாகிற காய்கறிகள ஓட்டல்கள், விடுதிகள்னு கொடுப்பேன். இப்ப அதுக்கும் வாய்ப்பே இல்லை. எல்லா வியாபாரிகளுக்கும் இதுதான் நிலைமை. கடும் நஷ்டம். மாநகராட்சி இங்கே 110 கடைகளுக்கு அனுமதி தந்திருக்குன்னாலும் தினம் 20 பேருகூட கடை திறக்கிறதில்ல. ஊரடங்குக் கட்டுப்பாடுங்கிற பேர்ல மக்களோட பொருளாதாரம் நாசமாகிக்கிட்டு இருக்கு. மக்களை விழிப்புணர்வோடு இயல்பு வாழ்க்கைக்கு அனுமதிக்கணும். இப்படியே போனா சாமானிய மக்கள் வாழ்க்கை நாசமாகிடும்.

ஃபுல்ஜன், எண்ணெய் வணிகர்.

முப்பது வருஷமா தொழில் செய்யறோம். ஊரடங்குக்கு முன்னே சமையல் எண்ணெய் மட்டும் தினசரி ரெண்டு டன் போகும். இப்ப ஒரு டன்னுக்கே இழுக்குது. இந்தக் காலகட்டத்துல வழக்கமா பண்டிகை, திருவிழா, முகூர்த்தம்னு கூட்டம் அலைமோதும். எண்ணெய் டின்கள் ராத்திரி பகல்னு இல்லாம சப்ளை கொடுக்க வேண்டியிருக்கும். இப்ப அதுலாம் சுத்தமா இல்லை. கடைக்கு வர்றவங்க தனிநபர் இடைவெளி விடணும், சானிடைசர் கொடுக்கணும், காய்ச்சல் சோதனை பண்ணணுங்கிறதுலாம் எங்களுக்கு இல்லவே இல்லை. அந்த அளவுக்கு நெருக்கியடிச்சுட்டு மக்கள் வந்தால்தானே அதைச் செய்யணும்? தொடக்கத்துல கையில இருந்த பணத்தை வெச்சி ஜனங்க சமாளிச்சாங்க. கையிருப்பு குறையுறதை இப்ப உணர முடியுது.

மஜீத், கருவாடு வணிகர்.

கரோனாவுல கன்னாபின்னானு வியாபாரம் ஆறது கருவாடுதாங்க. முன்னத்தைவிட நாலு மடங்கு இப்ப கருவாடு விக்குது. இது எங்களுக்கு நல்ல சேதி; ஆனா, மொத்த சமூகத்துக்கும் நல்ல சேதியான்னு சொல்லத் தெரியலை. ஏன்னா, ‘கருவாடு அதிகம் வித்துச்சின்னா, பஞ்சம் நெருங்கிக்கிட்டிருக்கு’ன்னு கிராமங்கள்ல சொல்வாங்க. இருபது ரூபாய்க்குக்கூட காய்கறி வாங்க முடியாத நிலையிலதான் அஞ்சு ரூபாய் கருவாடு அதிகம் செலாவணி ஆகும். ஏன்னா, ரெண்டு துண்டு கருவாட்டைப் போட்டு, மொத்தக் குடும்பமும் கருவாட்டு வாசத்துலயே சாப்பிட்டு முடிச்சுடலாம். இப்போ அந்தச் சூழல் உருவாகிட்டு இருக்கிறதை உணர முடியுது. கருவாட்டுக்கு ஏற்பட்டிருக்கிற கிராக்கி, அதோட விலையையும் ஏத்திவிட்டுடுச்சு. நெத்திலி, கூடு, அயிலை, வாளை, குண்டு, செம்மீன், கூன்கெடி, சின்னமாந்தல் எல்லாமே ரெட்டிப்பு விலை ஆயிருச்சு. ஊரடங்குக் கட்டுப்பாடுகள் அன்றாட வியாபாரத்தை, அன்றாடங்காய்ச்சிகளைப் பெருசா முடக்கிருச்சு. வறுமை சூழுது… சீக்கிரம் இந்த ஊரடங்குக் கொடுமையிலேர்ந்து வெளியே வரணும்.

செங்கோல், கோழி வணிகர்.

உக்கடத்துலயே இருக்கிற பெரிய கடைகள்ல நம்மது ஒண்ணு. எங்க கடையில ஞாயிற்றுக்கிழமைகள்ல ஐயாயிரம் முட்டை, ஒன்றரை டன் பிராய்லர் கோழிக் கறி போகும். சாதாரண நாட்கள்ல நூறு கிலோ கறி, ஆயிரம் முட்டை போகும். கரோனா வந்தவுடனே பிராய்லர்லதான் நோய் வருதுன்னு கிளப்பிவிட்டுட்டாங்க. அதனால கிலோ நூறு ரூபாய்க்கும் கீழே போயிடுச்சி. பின்னாடி மக்கள் உண்மையை உணர்ந்து பழையபடி வாங்கினாங்க. இப்போ கறி கிலோ இருநூத்தியெண்பது ரூவாய்க்குப் போச்சு. மக்கள் வாங்குறாங்க. ஆனா, அளவு குறைஞ்சுக்கிட்டே இருக்கு. ஆட்டுக்கறி வியாபாரம் இன்னும் மோசம்கிறாங்க.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s