மோடியும் வக்கிர எண்ணமும்

பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. ஏற்கனவே தேனீர் விற்ற பட்டறிவு(!) (அனுபவம் என்பதற்கு ஈடான தமிழ்ச் சொல்) கொண்ட, தேர்தல் காலங்களில் வடை சுடுவதில் வல்லவரான மோடி பஞ்சாப் சென்றிருக்கிறார். பெரோஸ்பூரில் 42,750 கோடிக்கு வடை சுடுவதாக மன்னிக்கவும் 42,750 கோடிக்கு நலத்திட்ட அறிவிப்புகள் செய்வதாக திட்டமிட்டு பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பஞ்சாப் மாநில அரசின் கூற்றுப்படி தில்லியிலிருந்து விமானம் மூலமும் பின்னர் எழுவூர்தி மூலம் பெரோஸ்பூருக்கும் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலையினால் கடைசி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்டு சாலை வழியாக பயணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மறுபக்கம், பெரோஸ்பூர் வரும் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது என பஞ்சாப் விவசாயிகள் சங்கம் முடிவு செய்திருந்தது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தளவு விலைக்கு சட்ட உறுதி, ஓராண்டுக்கும் அதிகமாக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு போன்றவை அவர்களின் கோரிக்கைகள். ஆனால் மோடி சாலை வழியாக மோடி வருகிறார் எனத் தெரிந்ததும் ஆர்ப்பாட்டத்தை சாலை மறியலாக மாற்றி இருக்கிறார்கள்.

பஞ்சாப் விவசாயிகள் சங்கம் செய்த அந்த சாலை மறியலால் மோடி இருபது நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்தது. அவ்வளவு தான் பொதுக் கூட்டத்தை வேண்டாம் என நீக்கம் செய்து விட்டு திரும்ப தில்லி செல்வதற்காக விமானநிலையம் சென்று விட்டார். விமானநிலையம் சென்ற மோடி, “என்னை உயிரோடு விமானநிலையம் வர அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி” என்று டுவிட்டி இருக்கிறார். அவ்வளவு தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் முருகன் தொடங்கி கலவரம் செய்வதையே துடிப்பாக வைத்திருக்கும் சங்கிகள் வரை பிரதமரை கொல்ல சதி என்பது வரை தாறுமாறாக உருவகப் படுத்தி சமூக ஊடகங்களில் பரப்பத் தொடங்கினார்கள். என்ன ஒரு பித்தலாட்டம்?

பொய் சொல்வது தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒருவருக்கு அழகா? என்றெல்லாம் சிந்தித்து விடாதீர்கள். ‘மோடியின் பொய்கள்’ என்று ஒருவர் புத்தகமே போட்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மோடி பொதுக்கூட்டத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் திரும்பியதற்கு வேறு காரணம் இருக்கிறது என்று பஞ்சாப் முதல்வர் தொடங்கி பலரும் கூறி விட்டார்கள். 70,000 பேர் வரை திரட்டுவதாக திட்டமிடப்பட்டிருந்த கூட்டத்திற்கு 700 பேர் வரை தான் திரட்ட முடிந்திருக்கிறது. இது தான் கூட்டத்தை வேண்டாம் என கூறி திரும்பச் சென்றதற்கான காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். மோடியின் உயிர் பயமோ, கூட்டம் சேராததோ எது வேண்டுமானாலும் மெய்யான காரணமாக இருந்து விட்டுப் போகட்டும், நாம் முதன்மையான கேள்விக்குத் திரும்பலாம்.

20 நிமிடங்கள் வரை மோடி சாலையில் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதைத் தவிர அவர் பயணத்தில் என்ன இடையூறு நேர்ந்து விட்டது? குண்டு துளைக்காத கார் என்பதையும் தாண்டி வெடிகுண்டு வெடித்தால் கூட பெரிய அளவில் சேதமாகாத 12 கோடி காரில் பயணம் செய்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கனரக துப்பாக்கிகளுடன் பாதுகாப்புக்காக உடன் வருகிறார்கள். காத்திருந்த நேரத்தில் காரை விட்டு மோடி கீழே இறங்கக் கூட இல்லை. அப்படி இருக்கும் போது மோடி தன் உயிருக்கு ஆபத்து என்று பொருள்படும் படி கூற வேண்டிய தேவை என்ன?

என்ன ஒரு வில்லத்தனம்,

என்ன ஒரு கொடூர எண்ணம்,

என்ன ஒரு வக்கிரம்,

இவ்வளவு இழிவான எண்ணம் கொண்ட ஒருவர் மனிதராக இருக்க முடியுமா? தன்னுடைய விருப்பத்துக்கு எதிராக ஒரு இருபது நிமிடம் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதற்காக தன்னை உயிரோடு திரும்பி அனுப்பிய முதல்வருக்கு நன்றி என்று கூறினால், அதன் பொருள் என்ன? இழிவான இரக்கம் தேடி அதை எதிர்வரும் தேர்தலில் வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதைத் தவிர வேறு ஏதாவது இதற்கு பொருள் இருக்க முடியுமா? இதே இந்த மனிதர் தான் ஓரிரு நாட்களுக்கு முன்னால் தில்லி விவசாயிகள் போராட்டத்தில் ஐனூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறப்பட்ட போது, அவர்கள் எனக்காகவா இறந்தார்கள்? என்று கேட்டார். (மேகாலயா ஆளுனர் சத்யபால் மாலிக் கூறியது)

அதாவது, ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தது இவருக்காக இல்லை என்பதால் அது இவருக்கு ஒரு பொருட்டல்ல. அதேநேரம் தன்னுடைய எதிரபார்ப்புக்கு அப்பாற்பட்ட சிறிது நேரம் காத்திருக்க வேண்டி வந்தது இவருக்கு உயிர் போக்கக் கூடிய அளவுக்கு பொருட்டானது. எந்த அளவுக்கு மனிதத்தன்மையற்ற பித்தலாட்டம் இது. இவர் தான் நமக்கு தலைமை அமைச்சராக இருக்கிறார் .. .. ..

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்