நிலைகுலைக்கப்படும் தெற்காசியா

எண்ணெயைப் பின்புலமாகக்கொண்டு கட்டப்பட்டதுதான் ‘பெட்ரோ டாலர் மூலதனக் கோட்டை’ என்பதும் அந்த டாலர் நிதி மூலதனம் உலக முழுக்க பாய்வதற்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டதுதான் ‘ஒற்றை துருவ உலக ஒழுங்கு விதி’ (Monopoly rules based world order) என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே இந்தக் கோட்டை, விரிசல்களைக் கண்டு வந்திருந்தாலும் 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு விரிசல்கள் பெரிதாகி, ஓட்டைகள் வெளியே தெரிய ஆரம்பித்தது. டாலரைத் தவிர்த்துவிட்டு ஓட்டைகளின் வழியே ஒழுகி ஓட முயன்ற எண்ணெயைத் தடுத்து நிறுத்த நடந்த இராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா உள்ளிட்ட போர்களின் வரிசையில் இப்போது உக்ரைன் போர் நடந்துகொண்டிருக்கிறது. முன்பு டாலருக்கு அடங்க மறுத்த இரான், வெனிசுவேலா நாடுகளைப் பொருளாதாரத் தடை எனும் டாலர் வர்த்தகக் கட்டமைப்பில் இருந்து விலக்கி தனிமைப்படுத்தி ஒடுக்கும் நவீன நிதிய – ஏவுகணை இப்போது ரஷ்யாவின் மீதும் ஏவப்பட்டுள்ளது.

மேற்கின் இனவாத ஒற்றுமையும் கிழக்கின் பாதிப்பும்…

இதுவரையிலுமான இதுபோன்ற பொருளாதாரத் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் வேறுவழியின்றி உடன்பட்டே வந்திருக்கின்றன. அதனால் அவ்வாறான முயற்சிகள் வெற்றிபெற்றும் வந்தன. இப்போது ரஷ்யாவைக் கண்டித்து ஐநாவில் கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தில் பெரும்பாலான மேற்குலக நாடுகள் ஆதரித்து நின்றன. முன்பு ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் மீதான போர்களின்போது வந்த அகதிகளை ஏற்க மறுத்து போராடிய ஐரோப்பியர்கள், இன்று உக்ரைனிய அகதிகளுக்கு மனமார்ந்த வரவேற்பை அளித்து அவர்களின் ஆழ்மனதில் குடிகொண்டிருக்கும் வெள்ளையின நிறவெறியை வெளிப்படுத்தினார்கள். இம்மாதிரியான பதிலிப் போர்களில் பாதிக்கப்பட்டு பாடம் கற்றிருக்கும் ஆசிய – ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகள் கண்டன தீர்மானத்துக்கு உடன்பட மறுத்து நின்றன.

ரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தாக்குதலை எதிர்கொள்ள யுரோ டாலருக்கு வெளியே சொந்த நாணய வர்த்தக முயற்சிகளுக்கு இந்த நாடுகள் ஆதரவு அளித்து, அந்த நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியை தோல்வியடையச் செய்திருக்கின்றன. இதை ஏதோ ஒருங்கிணைந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்பதாகப் புரிந்துகொள்ள தேவையில்லை. ரஷ்யாவின் கோதுமை, எரிபொருள், உலோகங்கள், ஆயுதங்கள் இந்த நாடுகளின் உணவு, உற்பத்தி, பாதுகாப்பு ஆகியவற்றில் வகிக்கும் இன்றியமையாத தேவை கருதி இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு இந்த நாடுகள் தள்ளப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. மற்ற நாடுகளைவிட எரிபொருள் உற்பத்தியாளர்களான அராபிய மத்திய கிழக்கு நாடுகள், எரிபொருள் நுகர்வு மற்றும் பொருள் உற்பத்தியாளர்களான சீன, இந்திய நாடுகளின் ஒற்றை ஒழுங்கு விதியை மீறிய ‘நடுநிலை’ உலகப் பேரரசால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இவர்களின் இந்த ஒற்றுமை அவ்வளவு உறுதியானதோ, உடைக்கப்பட முடியாததோ அல்ல.

கடல் வர்த்தகமும் இலங்கையும் பாகிஸ்தானும்…

இந்த நாடுகளின் எரிபொருள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் கடல் வர்த்தகப் போக்குவரத்துக்கு அரபிக்கடலும், இந்தியப் பெருங்கடல் பகுதியும் இந்தப் பொருளாதார உடலில் ஓடும் முக்கிய ரத்த நாளங்கள். அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருக்கும் பாகிஸ்தானும், இலங்கையும் பசிபிக்கடல் பகுதியில் இருக்கும் சிங்கப்பூரைப்போல வர்த்தகப் பொருட்கள் வந்து உலகின் பல பகுதிகளுக்குப் பிரிந்து செல்லும் துறைமுக இதயங்களாக மாற முற்படுபவை அல்லது மாறிக்கொண்டிருப்பவை. இந்தத் தேவை கருதி முந்தைய பனிப்போர்க்கால தொடர்ச்சியான சிங்கள – தமிழ் தேசிய இன மக்களின் பிரச்சினையை இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து கொண்டு சிங்களப் பேரினவாதத்தைத் துணையாகக்கொண்டு ராணுவ ரீதியாக முடித்து வைத்தன. பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வை எட்டி இருக்க முடியும் என்றாலும் இந்த முதலாளித்துவ – ஏகாதிபத்திய நாடுகள் எப்போதும் எந்த உடைப்பும் தடையுமற்ற ஒருங்கிணைந்த சந்தையை வழங்கும் ராணுவ தீர்வையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த ஆதரவின் நோக்கம் சீன, இந்திய நாடுகளுக்கு இலங்கையில் துறைமுகமும் அமெரிக்காவுக்கு இந்த வர்த்தகத்தைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் ராணுவக் கட்டமைப்பையும் பெறுவது. இந்தப் போரில் கிடைத்த வெற்றி பேரினவாதத்துக்குத் தலைமை தாங்கிய ராஜபக்சே சகோதரர்களின் அரசியல் பிடியை இறுக்கி, சிறு கும்பலின் பொருளாதார ஆதிக்கத்துக்கு வித்திட்டது. பொருளாதாரப்பசை அதிகம் கொண்ட சீனாவுக்கு முதலில் துறைமுகத்தைக் கொடுத்து அந்த நாட்டுடன் இவர்கள் காட்டிய நெருக்கம் இந்திய, அமெரிக்க நாடுகளைக் கூட்டாக சேர்ந்து கொண்டு அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர காரணமானது. அதை உடைத்து அவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இந்த அரசியல் குளறுபடிகள் அந்த நாட்டை சரியான பொருளாதார திசையில் செல்லவிடாமலும் போருக்கு பிந்தைய சீன – அமெரிக்க மோதல் எதிர்பார்த்த அளவு வர்த்தகப் பெருக்கத்தைக் கொண்டுவராமலும் சிக்கலை உண்டாக்கியது. சீனாவுக்கான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நாட்டின் துறைமுகச் சொத்தை அவர்கள் பல ஆண்டுகள் பயன்படுத்தக் கொடுத்து சமாளித்தது.

இலங்கையர்களைத் திருப்பித் தாக்கும் ஆயுதக்கடன்!

எதிர்பாராமல் வந்த கொரோனா பெருந்தொற்று தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி, சுற்றுலாப் பயணிகளின் வருகை, புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் அந்நியச் செலாவணி டாலர் வரவு ஆகியவற்றை குறைத்து அதன் டாலர் கையிருப்பை இல்லாமல் ஆக்கியது. இந்த நெருக்கடி சூழலை பயன்படுத்திக்கொண்ட இந்தியா, நிதி உதவி அளித்து ஒன்றிய பாஜகவின் புரவலரான அதானிக்கு துறைமுகத்தை இறுதியாகப் பெற்றுக்கொண்டது. கடன் தள்ளுபடி கோரிய இலங்கைக்கு இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் தமது சொந்த நாணயவழி கடனை மேலும் கொடுத்து, தங்களது வணிக நலனை பாதுகாத்துக் கொண்டிருந்தன. இந்த நிலையில் முன்பு இலங்கை வாங்கிய கடனுக்கு இரண்டு பில்லியன் டாலர் அளவுக்குத் திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு நெருங்கிக்கொண்டிருந்தது. 81 பில்லியன் டாலர் உள்நாட்டு உற்பத்தி கொண்ட இலங்கை, 51 பில்லியன் டாலர் அளவு கடனை கொண்டிருக்கிறது. இப்போது டாலர் கடனைக் கொடுத்தால் அத்தியாவசிய பொருள் வர்த்தகத்துக்கு டாலர் இருக்காது; கடனை கொடுக்காமல் நிறுத்தினால் வர்த்தகம் செய்து டாலர் ஈட்டுவது பிரச்சினைக்கு உள்ளாகும்.

இந்த டாலர் கொடுப்பனவு பிரச்சினையைத் தீர்க்க இயற்கை வேளாண்மையை அறிமுகப்படுத்தி விவசாய உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்திய ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சி டாலரை சேமிக்க பொருள் இறக்குமதியைக் குறைத்தார்கள். அது பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மக்களை வீதிக்குக் கொண்டு வந்திருக்கிறது. பேரினவாத வெறியுடன் இலங்கை ராணுவம் நவீன ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை வென்றதை வெற்றிக்களிப்புடன் கொண்டாடிய சிங்கள மக்கள் இந்த ஆயுதங்கள் இலவசமாகக் கொடுக்கப்படவில்லை என்பதை அப்போது தெரிந்து வைத்திருந்திருக்க வாய்ப்பில்லை. 2006இல் சுமார் 11.85 பில்லியன் டாலராக இருந்த இலங்கையின் கடன் 2021இல் 50 பில்லியன் டாலருக்கும் மேலாக அதிகரித்ததை அவர்கள் கவனித்திருக்கவும் மாட்டார்கள். இலங்கை கடனை கட்ட முடியாமல், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அவர்களை வீதியில் நிறுத்தி, அப்போது வாங்கிய ஆயுதங்கள் கடனாக மாறி, அவர்களையே திருப்பித் தாக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கவும்கூட மாட்டார்கள்.

ஐஎம்எஃப்பின் குறியும் இலங்கையின் நகர்வும்…

இப்போது எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருமித்த குரலில், எல்லாம் ராஜபக்சே குடும்ப ஆட்சியின் விளைவு; அவர்கள் பதவி விலக வேண்டும் என்று போராடுகின்றன. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதை எப்படிச் சமாளிப்பார்கள் என்று யாரும் பேசுவதைக் கேட்க முடியவில்லை. பிரச்சினையைத் தீர்க்க ஐஎம்எஃப்பிடம் மேலும் டாலர் கடன் பெற்று கடனைச் செலுத்தி இயல்பான வர்த்தகத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வாய்ப்பிருக்கிறது. அதற்கு ஐஎம்எஃப் அரசின் நலத்திட்ட செலவினங்கள் மற்றும் மானியங்களைக் குறைத்தல், வரிவிதிப்பைக் கூட்டுதல், அரசின் சொத்துகளை விற்று தனியார்மயமாக்குதல் போன்ற பொருளாதார நிபந்தனைகளோடு இலங்கை அரசின் நடுநிலை கொள்கையில் மாற்றம், இந்திய – சீன நெருக்கத்தைக் குறைத்தல், மேற்குடனான பாதுகாப்பு ஒப்பந்தம் போன்ற அரசியல் நிபந்தனைகளை விதிக்கலாம்.

அது இந்திய – சீன நாடுகளின் ஆதரவைக் குறைத்து பிரச்சினையை மேலும் தீவிரமாக்கி, எதிர்க்கட்சிகளை வலுப்படுத்தி, ராஜபக்சே சகோதரர்களின் அரசியல் வலுவைக் குறைத்து, அவர்களின் பின்னுள்ளவர்களின் பொருளாதார நலன்களை பாதிக்கும். ராஜபக்சே நிதியமைச்ச சகோதரரின் பதவி விலகலுக்குப்பின் பதவியேற்ற சபரி, “ஆறு மாதங்களில் வரியை அதிகரிப்பது, எரிபொருள் விலையை உயர்த்துவது, நஷ்டத்தில் இயங்கும் பொதுச்சொத்துகளை விற்பது போன்றவற்றை செய்வோம்; நாங்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள்; ஐஎம்எஃப்புடன் பேசி பிரச்சினையைத் தீர்ப்போம்” என்று ‘தி இந்து’ நாளிதழில் பேசியிருந்தார். பின்பு பேச்சுவார்த்தைக்குச் செல்வதற்கு முன்பே இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்த இயலாது என அறிவித்து, ரூபாயில் கடனைத் திருப்பிச் செலுத்த விருப்பம் தெரிவித்து இருக்கிறது. சீனா, இந்தியா இடையே ஏற்கனவே சொந்த நாணயப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் நடைமுறையில் உள்ளன. இவர்கள் தங்கள் நாட்டு வணிக நலனைக் கருத்தில்கொண்டு இந்த ஏற்பாட்டை மறுக்கப்போவதும் இல்லை.

வரவிருக்கும் மாற்றமும் தமிழர்களின் பாதையும்…

ஆதலால் இந்த நகர்வை ஐஎம்எஃப்பை நோக்கிய நகர்வாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இப்போது ஐஎம்எஃப் டாலர் கடனைப்பெற இலங்கையுடன் சற்று விட்டுக்கொடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. பதிலாக அதிகம் இறுக்கினால், கொடுத்த கடனும் திரும்பி வராது. அதோடு மேற்குடனான இலங்கையின் வர்த்தகம் நின்று இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடனான சொந்த நாணயத்தில் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கும். மேற்கின் இந்தியக் கடல்வழி வர்த்தகப் பகுதியில் செல்வாக்கு செலுத்தும் நோக்கத்தையும் அது தடுக்கும். இப்போதைய உலகச் சூழலை இலங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்து காய்களை நகர்த்துகிறது. வரவிருக்கும் ஐஎம்எஃப் உடனான பேச்சுவார்த்தையின்போது இலங்கை எதை விட்டுக்கொடுத்து டாலரைப் பெறப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எந்தவிதமான உடன்படிக்கையும் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்காது. அது ராஜபக்சே சகோதரர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குவது தவிர்க்க இயலாதது. தமிழகத்தின் உதவியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மறுத்ததன் மூலம் இந்தியாவின் எதிர்க்கட்சிகளைப் பிரித்தாளும் அரசியலையும், அதை வைத்து ராஜபக்சே குடும்பம் இனவாத அரசியல் செய்யும் வாய்ப்பையும் தவிர்த்து சரியான அரசியலை மேற்கொண்டிருக்கிறது. சிங்கள மக்களுடன் இணைந்த தமிழர்களின் இந்தப் போராட்டம், வரவிருக்கும் ஆட்சி மாற்றத்தின்போது அவர்கள் சுயமரியாதையுடனும் சுயாட்சி சம உரிமைகளோடும் அந்த மண்ணின் மைந்தர்களாக சமாதான சகவாழ்வு வாழ வழிவகுக்கும் என்று நம்புவோம்.

தொடரும்.

பாஸ்கர் செல்வராஜ்

முதற்பதிவு : மின்னம்பலம்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்