செய்தி வாசிப்பு:
இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும் டி.ஜி.பி. தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ”தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் அணிவகுப்பு ஊர்வலம் அல்லது உள்அரங்கில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும்” என்று கூறி அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, 24 இடங்களில் போலீஸ் ஏன் அனுமதி வழங்கவில்லை? என கேள்வி எழுப்பினார். அதற்கு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ”ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்குப்பிறகு தமிழ்நாட்டில் வேறு மாதிரியான சூழல் நிலவுகிறது. அதை கருத்தில் கொண்டே 3 இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக போலீசாரும், வருவாய்த்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி போன்றவை மனித சங்கிலி நடத்தவே அனுமதி கோரியது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரவில்லை. இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது” என்று விளக்கம் அளித்தார்.
செய்தி வாதிப்பு:
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஏன் இந்த அளவுக்கு அக்கரை கொள்கிறது? முதலில் அக்டோபர் 2 ஊர்வலத்துக்கு தமிழ்நாடு அரசு மறுத்த போது நடந்த விவாதத்தில், ஆர்.எஸ்.எஸ் கோராமலேயே வேறு ஒரு தேதிக்கு ஊர்லத்தை மாற்றினால் அனுமதி வழங்கப்படுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின் அவராகவே நவம்பர் 6ல் நடந்திக் கொள்ளலாம் என்றும், அதற்காக மீண்டும் முறைப்படி அனுமதி கோருங்கள் என்றும் உத்தரவிட்டார். இன்னும் ஒருபடி மேலே சென்று, அனுமதிக்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்றார். மனுதாரர் கோரிக்கை வைக்காத போது நீதிபதிக்கு ஏன் இந்த அக்கரை? அனுமதி வழங்கவில்லை என்றால் ஏன் அதை நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்வோம் என மிரட்ட வேண்டும்?
இப்போது மீண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்திருக்கிறது. அதாவது மூன்று இடங்களுக்கு மட்டும் அனுமதி, 24 இடங்களுக்கு அனுமதி இல்லை, 23 இடங்களில் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை, வேண்டுமென்றால் உள்ளரங்க நிகழ்ச்சியாக நடத்திக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறது. மனுதாரர்கள் ஊர்வல அனுமதி தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். நீதிபதி உளவுத்துறை அறிக்கையை கேட்கிறார். அறிக்கையை படித்துப் பார்த்து அனுமதிக்க வேண்டுமா வேண்டாமா என்று வெள்ளிக்கிழமை (4ஆம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார் நீதிபதி.
வெள்ளிக்கிழமையில் மூன்று இடங்கள் என்பதை அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஏன் நீதிபதிகள் சட்டம் ஒழுங்கு வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டும்? ஆர்.எஸ்.எஸ் அல்லாத வேறு இயக்கங்கள் இது போல் அனுமதி கோரி நீதி மன்றங்களுக்கு வந்தால் இது போன்ற பரிவுடன் கூடிய பரிசீலனை அந்த இயக்கங்களுக்கும் கிடைக்குமா? ஒருவேளை சட்டம் ஒழுங்கில் சிக்கல் ஏற்பட்டால் அதற்கு நீதி மன்றம் பொறுப்பேற்குமா? ஏற்கனவே நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்து விட்டு அதை மீறி பாபர் பள்ளியை இடித்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் என்பதை நீதிபதி கவனத்தில் கொள்வாரா?
செய்திகள் வாசி(தி)ப்பது: 1/22