மோடி பேச்சின் நஞ்சு

உலகின் எந்த ஒரு தலைவருக்குமே கிடைக்காத சிறப்பு பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டு. மோடியின் பொய்கள் என்று அவர் கூறிய பொய்களை மட்டுமே தொகுத்து நூலாக கொண்டு வந்திருக்கிறார்கள். உலகின் எந்த தலைவருக்கு இது போன்ற சிறப்பு கிடைத்திருக்கிறது? மோடியின் பேச்சில் நஞ்சு கலந்திருக்கிறதா? அல்லது மோடியின் பேச்சே நஞ்சு தானா? இதை பட்டிமன்ற தலைப்பாக வைக்கலாம். அந்த அளவுக்கு அவர் பேச்சு நஞ்சூறிப் போய் இருக்கும். எடுத்துக் காட்டாக குஜராத் முதல்வராக இருந்த போது அவர் பேசிய, ‘ஹம் பாஞ்ச் ஹமாரா பச்சீஸ்’ எனும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சு, அவ்வளவு வெறுப்பும் வன்மமும் நிறைந்தது. பிரதமராக ஆனபோதும் கூட, ‘குற்றவாளிகளை அவர்கள் அணியும் ஆடைகளைக் கொண்டு அடையாளம் காணலாம்’ என்றார்.

கடந்த அக்டோபர் 27ம் தேதி ஹரியானாவில் நடந்த மாநில உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் காணொளி வாயிலாக மோடி பேசிய பேச்சு, மெய்யாகவே சமூக அமைதியின் மீது அமிலம் தெளிக்கும் பேச்சாகவே இருந்தது. இந்த மாநாட்டுக்கு சிந்தன் சிவிர் என்று பெயராம். அதாவது சிந்தனை இருக்கை. நச்சுப் பாம்புக்கு நல்ல பாம்பு என்று சொல்வது போல் எவ்வளவு அழகான பெயர். போகட்டும், சொல்லி வைத்தாற்போல் அனைத்து ஊடகங்களும் இந்தப் பேச்சை காவல்துறைக்கு நாடு முழுவதும் ஒரே சீருடை வேண்டும் என்று மோடி பேசியதாக மக்கள் பார்வைக்கு வைத்தன. ஆனால் தேர்தலுக்காக மேடைகளில் பேசும் பேச்சுக்கும், அரசின் கூட்டங்களில் (கவனிக்கவும் அரசாங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டாலும் அது அரசாங்க கூட்டம் அல்ல) பேசும் பேச்சுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது அல்லவா?

அந்தக் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு, ஒரே சீருடை, காவல்துறை மேம்பாடு என பல சேதிகளை பொதுவாக பேசி இருந்தாலும் மூன்று இடங்களில் அது ஊன்றிக் கவனிக்க வேண்டிய பேச்சாக இருந்தது.

முதலாவதாக, “துப்பாக்கி அல்லது பேனாவால் தூண்டிவிடப்படும் நக்சல் தீவிரவாதத்தின்  ஒவ்வொரு வடிவமும், நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதைத் தடுக்க, அவை வேரோடு அழிக்கப்பட வேண்டும்” என்று பேசியிருப்பதை எடுத்துக் கொள்ளலாம். நக்சல் இயக்கம் என்றால் என்ன? மேற்கு வங்கத்தில் நக்சல்பரி எனும் சிற்றூரில் தொடங்கப்பட்ட பொதுவுடமை இயக்கம். இந்த இயக்கம் அரசின் கொள்கைகள் மக்களுக்கு எதிராக இருக்கின்றன என்று கூறி மக்களிடையே பரப்புரை செய்தன. மக்களுக்கு எதிரான அரசின் கொள்கைகளை உள்ளூர் அளவில் செயல்படுத்தும், பாதுகாக்கும் உறுப்பாக இருக்கும் அன்றைய நிலக்கிளார்களுக்கு எதிராக ஆயுதமேந்திய கலகத்தைச் செய்தன. பின்னர் அதுவே இந்த இயக்கங்களுக்கு பெரும் பின்னடைவையும், எதிர் விளைவையும் கொண்டு வந்தன. இவைகளெல்லாம் எழுபதுகளில் நடந்தவை. இதன் விளைவாக அதன் பல குழுக்கள் ஆயுதத்தைக் கைவிட்டுவிட்டு, தேர்தல் அரசியல் வரையிலும் வடிவம் மாறி விட்டன. அண்மை ஆண்டுகளில் ஆயுதக் கிளர்ச்சி என்று எதுவுமே நடந்ததில்லை. அந்த அளவுக்கு அவை சமகால நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டு மாறி விட்டன. என்றாலும் ஆயுதம் என்ற உடனேயே பீதி அடைய வேண்டியதில்லை. மக்களுக்கு எதிராக அரசு ஆயுதங்களையே முன்னிருத்துகிறது. தடியடி தொடங்கி துப்பாக்கிச் சூடு வரை அரசுகள் மக்களுக்கு எதிராக ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்துகிறது. மக்களுக்கு மேலாக நிலவும் அதிகாரமே ஒருவகை ஆயுதம் தான்.

இப்போது மோடி பேசியதை கவனித்துப் பாருங்கள். துப்பாக்கியால் மட்டுமல்ல பேனாவால் இயங்கும் நக்சல் இயக்கங்களும் அழிக்கப்பட வேண்டும் என்கிறார். அதாவது அரசுக்கு எதிராக யார் எழுதினாலும் பேசினாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்கிறார். இதை ஜனநாயகம் என்பீர்களா? ஆயுத அரசு என்பீர்களா? இது ஜனநாயகம் அல்ல என்பவர்கள் இந்தப் பேச்சுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் அல்லவா?

இரண்டாவதாக, ”எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் மாற்றுக் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக” மோடி குறிப்பிட்டிருக்கிறார். இதன் பொருள் என்ன? என்பது குறித்த எந்த விளக்கத்தையும் தன் பேச்சில் அவர் முன்வைக்கவில்லை. மாற்றுக் குடியேற்றம் என்று மோடி எதைக் குறிப்பிடுகிறார் என்று அவரோ அரசோ விளக்கும் வரையும் எதையும் நம்மால் ஊகிக்க மட்டுமே முடியும். பொதுவாக ஆர்.எஸ்.எஸ் அகண்ட பாரதம் எனும் அபாயத்தை தொடர்ந்து பேசி வருகிறது. அந்த இலக்கை எட்ட முடியும் என்று அந்த இயக்கம் நம்புகிறதோ இல்லையோ, அதைக் கொண்டு கல்வியற்ற, சூழல் புரிதலற்ற, வேலையற்ற மக்களை ஒன்று திரட்டி மதவெறியேற்ற முடிந்திருக்கிறது. இதன் விளைவாக ஒட்டுமொத்த இந்தியாவிலும் மத அடிப்படையில் கூடுதலாகவோ குறைவாகவோ பிளவு மனோநிலையை  திணித்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை நீக்கி இருக்கிறார்கள். மாற்றுக் குடியேற்றம் என்பதை இந்தப் பின்னணியில் இருந்து புரிந்து கொள்ள கூடுமா? இதை யார் விளக்குவார்கள்.

மூன்றாவதாக, ” தேசியக் கண்ணோட்டத்துடன் நாம் முன்னோக்கிச் சென்றால், ஒவ்வொரு சவாலும் நம் முன்னால் வீழ்ச்சியடையும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தேசியக் கண்ணோட்டம் என்று மோடி எதைக் குறிப்பிடுகிறார். இந்தியா எனும் ஒற்றைத் தேசியம் எனும் பொருளில் கூறியிருக்கிறார் என்றால், வேற்றுமையில் ஒற்றுமை என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதன் பொருள் என்ன? ஒவ்வொரு மாநிலமும் ஒரு தேசியம் எனும் பொருளில் குறிப்பிட்டார் என்றால், நாட்டில் இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும், ஒரே வரிவிதிப்பு, ஒரே அடையாள அட்டை, ஒரே ரேசன், ஒரே சீருடை, ஒரே சட்டம் என பல ’ஒரே’க்களுக்கு பொருள் என்ன? ஆக மோடி குறிப்பிடும் வீழ்ச்சியடையும் சவால்கள் என்பது மாநிலங்களுக்கான உரிமைகள். மாநிலங்களுக்கென்று ஒன்றிய அரசை மீறிய உரிமைகளோ அதிகாரங்களோ இருக்கக் கூடாது என்பது இதன் பொருள்.

ஆர்.எஸ்.எஸ், பாஜக பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்துக்கு வந்த நாளிலிருந்து நாட்டை இரட்டை அழிவுப் பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளுக்காக நாட்டின் ஒட்டு மொத்த வளங்களையும் வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்காக மக்களின் மீது பல மடங்கு வரிச் சுமையை ஏற்றி இருக்கிறது.

இன்னொரு பக்கம் இந்தியா பல கட்சிகள் சுதந்திரமாக செயல்படும் உரிமை கொண்ட ஜனநாயக நாடு என்பதை மறுக்கும் விதமாக அரசின் அனைத்து துறைகளையும் பாஜகவுக்கு எதிராக இருப்பவர்கள் அனைவர் மீதும் ஏவி பிற கட்சிகளே செயல்பட முடியாத அளவுக்கு நாட்டில் கொஞ்சமேனும் ஒட்டி இருக்கும் உரிமைகளின் மீது கரையான்களைப் போல் அரித்துக் கொண்டிருக்கிறது.

வேறொரு பக்கம் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் எல்லா வேலைகளையும் வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கிறது. சிறுபான்மை மதத்தினர் நாட்டில் இரண்டாம்தர குடிமக்கள் தான் எனும் நிலையை மக்களின் மனதில் பதித்து வருகிறது.

இன்னுமொரு பக்கம் அச்சு காட்சி ஊடகங்கள் தொடங்கி, சமூக ஊடகங்கள் வரை அனைத்தையும் பொய்யால் நிரப்பி வருகிறது. அமைச்சர்கள் தொடங்கி, ஆளுனர்கள் வரை அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகளையும், குற்றவியல் சட்டத்துக்கு எதிராக தீண்டாமையை, சாதியப் படிநிலையை ஆதரித்தும் பேசச் செய்து வருகிறது. அந்த நிலையிலேயே பொய்ச் செய்தியை தடுக்க வேண்டும் என்றும் பேசுகிறது.

இந்த பின்னணியிலிருந்து மோடியின் அந்த பேச்சுக்கான பொருளை பகுத்துப் பார்த்தால் மக்கள் புறத்திலிருந்து பெரும் போராட்டங்கள் எழுந்தால் ஈவு இரக்கமற்று அதை முறியடிக்கக் கூடிய மானோநிலையில் உள்துறையை குறிப்பாக காவல் துறையை மாற்றி அமைக்கும் நோக்கில் அமைந்திருப்பது புலப்படும். ஏற்கனவே காவல்துறை அப்படித்தான் இருக்கிறது என்றாலும், மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டையும் மீறி அதன் செயல்பாடு இருக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடு தான் அந்தப் பேச்சு.

அரசாங்க அதிகாரம், பெருமுதலாளிகளின் ஆதரவு, பெரும்பணம் இந்த மூன்றின் மீது அமர்ந்து கொண்டு தான் ஆர்.எஸ்.எஸ், பாஜக இந்த அழிவு வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. அரசாங்க அதிகாரம் எனும் தேர்தல் வெற்றியை அவர்களிடமிருந்து பறித்தெடுப்பதில் இருந்து தான் நாட்டின் வளங்களையும், மக்களையும் காக்கும் பணியை தொடங்க முடியும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்