மாவீரர் நாள் எனும் சடங்கு

நவம்பர் மாத இறுதியில் ஒருவார காலத்திற்கு போரில் மடிந்த வீரர்களை நினைவுகூறும் பொருட்டு மாவீரர் நாள் கொண்டாட்டங்களை 1989 லிருந்து நடத்தி வருகிறார்கள் விடுதலைப் புலிகள். இதன் இறுதி நாளன்று புலிகள் தலைவர் பிரபாகரன் உரை நிகழ்த்துவார். ஆனால் இலங்கை அரசு நடத்திய இன அழிப்புப் போரில் விடுதலைப்புலிகள் அமைப்பு நிர்மூலமாக்கப் பட்டதுடன் தலைமைப் பொருப்பில் இருந்தவர்களையும் அது நரவேட்டையாடியது. இதனால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பிரபகரனோ வேறு புலித்தலைவர்களோ உரையேதும் நிகழ்த்தவில்லை. ஆனால் இந்த ஆண்டு நாடுகடந்த அமைப்பிலிருந்து மாவீரர் நாள் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

ஈழத்தமிழகம் இன்று இனவழிப்பாளர்களின் கைகளில் கடைசிக்கட்ட உயிர்ப்பை இழுத்துப் பிடித்துக்கொண்டு கிடக்கிறது. முள்வேலிகள் இன்னும் மாறவில்லை, தமிழர்களை மீள்குடியேற்ற பொய்க்காரணங்கள் புனைந்து தாமதிக்கப்படுகிறது, சிங்களக் குடியேற்றங்கள் விரைந்து நடத்தப்படுகிறது. தமிழர்களின் வீடுகளும் நிலங்களும் சிங்களவர்களாலும், இராணுவத்தினராலும் ஆக்கிரமிக்கப்படுகிறது, கலாச்சாரம் தொடங்கி ஆன்மீகம் வரையில் அனைத்தும் சிதைவுக்கும் மாற்றத்திற்கும் உள்ளாக்கப்படுகிறது. வேதனைகளும், இழப்புகளும் இடியாய் இறங்கியிருந்தாலும், போராட்டங்கள் துளிர்த்தேயாக வேண்டிய காலமிது. ஆனாலும் தகர்க்கப்பட்டுவிட்ட புலிகள் அமைப்பின் தொடர்ச்சி இன்னும் நீடிக்கிறது என காட்டியாகவேண்டிய கட்டாயமிருப்பதாக கற்பித்துக்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் தனித்தனியே மோதிக்கொள்வது வலியுடன் கிடக்கும் மக்களை முன்னிலும் வீழ்த்துகிறது.

 

புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நினைவு எனும் பெயரில் ஆடம்பரமாக கொண்டாட்டங்கள் நடத்துவது அதைவைத்து பொருள் ஈட்டுவதற்குத்தான் என்றும், இராணுவத்திடம் கையுயர்த்தி சரணடைந்தவர்களுக்கு போராட்டம் பற்றி பேசும் தகுதியில்லை என்றும் மாவீரர் சடங்கை முன்வைத்து பிழைப்புவாத அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புறமென்றால் தமிழகத்தின் மாவீரன்களும், போர்வாள்களும் இன்னமும் பிரபாகன் தோன்றுவார், பாவங்களை வாங்கிக்கொள்வார் என்று உயிர்த்தெழும்பு சுவிசேஷங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

 

இலங்கை அரசின் இனவழிப்பு முயற்சிகளை எதிர்கொண்டு பலகாலம் களத்தில் நின்று போரிட்டவர்கள் என்றாலும், புலிகள் தமிழர்களின் விடுதலை எனும் நோக்கில் சரியான அரசியல் பார்வையை கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. சர்வதேச அரசுத்தலைமைகளை சமாதனம் செய்து ஆதரிக்கவைப்பதன் மூலமும், இந்தியாவை அனுசரித்துச் செல்வதன் மூலமும் தனி ஈழத்திற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்பதே அவர்களின் பார்வையாக இருந்தது. முதலாளித்துவ அரசுகளை நம்பிய அளவுக்கு அவர்கள் மக்களை நம்பவில்லை.

 

பழைய புலிகளின் இந்தப் பாதையிலிருந்து சற்றும் விலகாமல் புதிய புலிகளும் நடைபோடுகிறார்கள் என்பதை அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை காட்டுகிறது.

 

“நாம் பயங்கரவாதிகளோ அன்றி இனச் சுத்திகரிப்பை சித்தாந்தமாகக் கொண்ட பிரிவினைவாதிகளோ அல்லர். நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அரசியல் சுதந்திரத்திற்காக, ஐக்கிய நாடுகள் சபையும், உலகின் வளர்ச்சியடைந்த தாராண்மைத்துவ நாடுகளும் போற்றிப் பேணும் தேசிய தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் எமது தேசத்தின் இறைமையை நிலைநாட்டுவதற்காகப் போராடும் ஒரு தேசிய விடுதலை இயக்கம். இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு எமது தேசத்தின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, தமிழீழத் தனியரசுக்கான புறநிலைகளை தோற்றுவித்து எமது மக்களின் விடிவிற்கு வழிவகை செய்யுமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதேநேரத்தில் எமது மக்கள் மீது இனவழிப்புப் போரைத் திணித்த சிங்கள ஆட்சியாளர்களை போர்க் குற்றவாளிகளாக்கித் தண்டிக்குமாறும் உலக சமூகத்தை நாம் வலியுறுத்துகின்றோம்”

என்று கோரியிருப்பதன் மூலம் இலங்கை தனியாக நின்று ஈழப் போராட்டத்தை சிதைத்ததைப்போன்ற உருவகத்தைக் கொண்டுவருகிறார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை நடத்திய போரில் பன்னாட்டு ஏகாதிபத்திய அரசுகளுக்கு எந்தவித பங்களிப்பும் இல்லை எனும் கருத்தை ஏற்படுத்துகிறார்கள். அப்பட்டமாக நடந்த இனவழிப்புப் போரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பன்னாட்டு சமூகம், போர்க்குற்றங்களுக்காக இலங்கை அரசை தண்டிக்கும் என்று மத நம்பிக்கையைப் போல நம்புகிறார்கள். உலகில் இதுவரை தனிநாடாய் பிரிந்துபோன எந்த ஒரு நாடும் சந்தைப் பொருளாதார நலனை முன்னிட்டே பிரிந்திருக்கிறது அல்லது பிரிக்கப்பட்டிருக்கிறது. ஏகாதிபத்திய நலன்களுக்கு உட்படாத எந்தஒரு தேசிய இனமும் தனிநாடாக பிரிவதற்கு ஏகாதிபத்தியம் அனுமதிக்காது என்பதுதான் உலகின் நடைமுறையாக இருந்துவந்திருக்கிறது. ஆனால் ‘தமிழீழத் தனியரசுக்கான புறநிலைகளை தோற்றுவித்து எமது மக்களின் விடிவிற்கு வழிவகை செய்யுமாறு’ இவர்கள் உலகைக் கோருகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? சந்தைப் பொருளாதார நலன்களுக்கு முன்னால் நாங்கள் அடிபணியத்தயார், ஈழம் ஒரு தனிநாடாய் அமைந்தால் போதும் என்பதா? உலகம் முழுவதும் அந்த நலன்களுக்காக மக்கள் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தனி நாடாய் எங்களுக்குத் தந்துவிடுங்கள் நாங்களும் அதுபோல தமிழ் மக்களை வதைக்கிறோம் என்றால் தமிழ் மக்களுக்கான விடுதலை என்பது போலித்தனமாகத்தான் இருக்கும். எந்த ஏகாதிபத்திய நலன்களுக்காக தமிழர்களின் மீது இனவழிப்புப் போர் நடத்தப்பட்டதோ அதே காரணத்திற்காக தனியீழம் என்றால் இனவழிப்புப் போருக்கும் அதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்திற்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்லை.

 

இலங்கை மண்ணில் புலிகள் அமைப்பு துடைத்தழிக்கப்பட்டிருப்பது தமிழீழ விடுதலைப் போருக்கு மீப்பெரும் பின்னடைவு என்றால், புலிகளின் மக்கள் திரள் போராட்டத்தின் பங்களிப்பு இல்லாத இராணுவவாத அரசியல் கண்ணோட்டமும் பின்னடைவுதான். இன்றைய நிலையில், மீளமர்வுப் பணிகளை துரிதப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளைத் தடுத்து தமிழர்களின் சொந்த இடங்களிலேயே அவர்களை வாழவைப்பதும் மிகுந்த இன்றியமையாததாயிருக்கிறது. அதற்கான பணிகளில், எல்லாவற்றையும் இழந்து சோர்ந்து கிடக்கும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை மீண்டும் போராட வைப்பதுதான் இன்றைய அவசியமாக இருக்கிறது. இதை சரியான திசையில் புரட்சிகர இடதுசாரி இயக்கங்களாலேயே செயல்படுத்த முடியும். அந்த வகையில் அத்தகைய விழிப்புணர்வுடன் மக்களை அணிதிரட்டுவதே செய்யவேண்டிய பணியாக இருக்கிறது.

 

மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌


 

2 thoughts on “மாவீரர் நாள் எனும் சடங்கு

  1. உண்மைதான் பிரபாகரன் கடவுளாக்கப்பட்டு விட்டார்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்