
பெருவெளியின் விரிவில்
ஒரு தூசில் ஒட்டிக் கொண்டிருக்கும்
தூசு நான்.
பெருங்கடலின் பரப்பில்
மழையின் இடையே பறந்து கொண்டிருக்கும்
ஒரு கொசு நான்.
மலர்த் தோட்டத்தின் அண்மையில்
கோடி மலர்களின் மணங்களூடே
ஒற்றை மலரில் நிறைந்து போகும்
ஒரு தேனீ நான்.
என்னை நான் எப்படிப் பார்ப்பது?
எப்படிப் பார்க்க நான் அனுமதிப்பது?
பேரண்டத்தின் நுணுக்கமே ஆனாலும்
என் அடைவுக்கும் பொருள் உண்டென்று
அறிவித்து விடட்டுமா?
துளிகளிடையே புகுந்து பறந்தாலும்
நனைந்து விட்டால் தலை துவட்டுங்களென்று
கோரிக்கை வைக்கட்டுமா?
நான்கு மலர்களை பார்க்கும் முன்பு
மது அருந்துதல் என் அடையாளமல்லவென்று
அம்பலப்படுத்திக் கொள்ளட்டுமா?
எப்படிப் பார்த்தாலும்
என் வண்ணம் எனக்கு
வெளுத்ததாகவே தெரிகிறது.
இருள் கவ்விய பின்பான வயலில்
புது வெள்ளம் நுரைக்கும் ஆற்றில்
சுடு பாலை மணலின் வெம்மையில்
திகைத்து நிற்கிறேன்.
நான் மின்மினியா?
பழுத்துதிர்ந்த இலையா?
திமிலும் சப்பாத்திக் காலும் கொண்ட ஒட்டகையா?
என் தேடல் முடிவற்று
நீண்டு போகுமோ
என் காதல் ஒற்றைக் கூடலில்
வடிந்து போகுமோ
எல்லாம் அலைபோல் மோதிக் கொண்டிருக்கலாம்
ஆனாலும் நான்
உடைந்து போக மாட்டேன்.
சிறுவனின் குதூகலத்துடன்
வயோதிகனின் அமைதியுடன்
தழும்பிக் கடந்தே போவேன்.
பேருவகையுடன்
பெருங்காதலுடன்
தழும்பிக் கடந்தே போவேன்.
ஏனென்றால்
என்னில் அழுக்கில்லை
நான் பெருவெளியின் தூசு.