சட்டபூர்வமானது கல்விக் கட்டணக் கொள்ளை

தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டம், மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கொண்டுவந்துள்ள கட்டண முறைப்படுத்தும் சட்டத்தின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தி, புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டம்

தமிழகத்திலுள்ள தனியார் “மெட்ரிக்” பள்ளிகளின் கட்டணக் கொள்கைக்குக் கடிவாளம் போடப்போவதாகக் கூறிக்கொண்டு, தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது, தமிழக அரசு. இந்தக் கல்வியாண்டு முதலே இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துவருகிறது.

இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கோவிந்தராசன் கமிட்டி, ஆரம்பப்பள்ளிகள் அதிகபட்சமாக ரூ. 3500 வரையிலும், நடுநிலைப் பள்ளிகள் ரூ. 5000 வரையிலும், உயர்நிலைப்பள்ளிகள் ரூ. 8000 வரையிலும், மேனிலைப்பள்ளிகள் ரூ. 11000 வரையிலும் ஆண்டு கல்விக்கட்டணமாக வசூலிக்கலாம் என நிர்ணயித்திருக்கிறது. பேருந்துக் கட்டணம், விடுதிக்கட்டணம் தவிர்த்து, பிற கட்டணங்கள் அனைத்தும் சேர்த்து இந்த வரம்பைத் தாண்டக் கூடாதென்றும், இந்த உத்தரவை மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்; அதன் நிர்வாகிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மெட்ரிக் பள்ளி முதலாளிகள் இந்தச் சட்டமும், இந்தக் கட்டண நிர்ணயமும் தங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகக் கூறி, இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். அதாவது, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களைக் கொள்ளையடிப்பது தங்களின் அடிப்படை உரிமை என்பது அவர்களின் வாதம். இதன் அடிப்படையில் இச்சட்டத்தை எதிர்த்து உயர்நீதி மன்றத்திலும், பின்னர் உச்சநீதி மன்றத்திலும் வழக்குப் போட்டு தோற்றுப்போனார்கள். இதன்பின், பள்ளிகளை திறக்கமாட்டோம் என மிரட்டத்தொடங்கினார்கள்.

தனியார் முதலாளிகள் பள்ளிகளைத் திற்க்காவிட்டால், அந்தச்சுமை முழுவதும் தன்மீது விழுந்துவிடும் என “உணர்ந்து” கொண்ட தமிழக அரசு, “கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்துள்ள கட்டணம் தமக்குக் கட்டுபடியாகாது” எனக் கருதும் பள்ளி நிர்வாகங்கள், கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக் கோரி விண்ணப்பிக்கலாம் எனத் தற்போது அறிவித்திருக்கிறது.

பள்ளிகளைத் திறக்கவேண்டிய பருவம் நெருங்கிவிட்ட இவ்வேளையில், ஒருபுறம் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசு பேரம் நடத்திக்கொண்டிருக்க, இன்னொரு புறமோ, மெட்ரிக் பள்ளிகள் பழையபடியே மாணவர்களைச் சேர்ப்பதற்கு கட்டணக்கொள்ளையை நடத்திக்கொண்டிருப்பதாக முதலாளித்துவப் பத்திரிக்கைகளே அம்பலப்படுத்தி எழுதி வருகின்றன. கட்டணக் கொள்ளையை தடுக்க வந்ததாகக் கூறப்பட்ட சட்டமோ, தனது கண்களைக் கருப்புத்துணியால் கட்டிக்கொண்டு, இருட்டறையில் சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்கிறது.

மெட்ரிக் முதலாளிகள், “தரமான கல்வியைக் கொடுப்பதற்குத் தாங்கள் போட்டுள்ள முதலீட்டுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை” என அரசின் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள். இதுவொரு அப்பட்டமான பொய். கோவிந்தராசன் கமிட்டி, பெற்றோர்களையோ, சமூக அக்கரை கொண்ட கல்வியாளர்களையோ கலந்து ஆலோசித்து இக்கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. மாறாக, தமிழகத்திலுள்ள அனைத்து மெட்ரிக் பள்ளி முதலாளிகளிடம், அவர்களது வரவு செலவுக் கணக்கையும், தரமான கல்வியைக் கொடுக்க ஒவ்வொரு பள்ளியும் என்னென்ன வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது என்ற விபரத்தையும் கேட்டு, அவற்றின் அடிப்படையில் தான் ஒவ்வொரு பள்ளிக்கும் ஏற்றவாறு, மேலே குறிப்பிட்ட வரம்புக்குள் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது.

கோவிந்தராசன் கமிட்டி பள்ளி முதலாளிகள் கொடுத்த அறிக்கையை ஏ/சி அறைக்குள் உட்கார்ந்துகொண்டு ஆய்வு செய்துதான் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறதேயொழிய ஒவ்வொரு பள்ளிக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்திக் கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. தாங்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் தான் கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிந்தபிறகு, பள்ளி முதலாளிகள் அதற்றபடி கணக்கு வழக்குகளில் விளையாடி இருக்கமாட்டார்களா? அக்கமிட்டியில் உள்ள அதிகார வர்க்கத்தை இலஞ்சப்பணத்தால் குளிப்பாட்டி இருக்கமாட்டார்களா?

நெல், கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை நிர்ணயிக்கும்போழுது, அரசு விவசாயிகளிடம் நீங்கள் போட்ட முதலீடு எவ்வளவு என்றெல்லாம் ஆலோசனை நடத்துவதில்லை. கல்வியும் அதுபோன்ற அத்தியாவசிய சேவைதானே? இதற்குக் கட்டணம் நிர்ணயிக்கும் போது மட்டும், முதலாளிகளிடம் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமென்ன?

மெட்ரிக் பள்ளி முதலாளிகள் போட்டுள்ள முதலீட்டுக்கு ஏற்ப  குறிப்பிட்ட அளவு இலாபம் கிடைக்கும்படிதான் கட்டணத்தை நிர்ணயிஒத்திருக்கிறது, அரசு. இந்த லாபம் போதாது என்பது தான் பள்ளி முதலாளிகளின் புலம்பல். தமிழக அரசு பொதுமக்களின் ‘நலனில்’ இருந்து தான் இப்பிரச்சனையை அணுகியிருப்பதாகக் கூறுவது உண்மையானால், “இந்த இலாபத்திற்குள் நடத்த முடியாதென்றால், கடையை மூடிவிட்டுப் போங்கள்” எனப் பள்ளி முதலாளிகளிடம் கறாராகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அரசோ, கட்டணத்தை மறு நிர்ணயம் செய்வதற்கு முதலாளிகளை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது.

+2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும், தனியார் கல்லூரிகள் கேட்கும் பணத்தைக் கட்டமுடியாமல் பரிதவித்து நிற்கும் ஏழை மாணவிகள்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்படும் எனச் சட்டத்தில் காட்டப்பட்டுள்ள சலுகை, இப்போது முதலாளிகளின் வசதிக்கேற்ப கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்படும் என்ற திசையில் செல்லத் தொடங்கிவிட்டது.

எனவே, இந்தச் சட்டத்தைக் கறாராக நடைமுறைப் படுத்தினால், மெட்ரிக் பள்ளிகள் நடத்திவரும் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்திவிடலாம் எனக் கூறப்படுவதெல்லாம் வெறும் மாயை தான். உண்மையைச் சொன்னால், மெட்ரிக் பள்ளிகள் நடத்திவரும் கட்டணக் கொள்ளையைச் சட்டப்பூர்வமாக்கிவிட்டது, தமிழக அரசு. தமிழக அரசிற்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கும் இடையே கட்டண நிர்ணயம் தொடர்பாக நடக்கும் யுத்தம், மெட்ரிக் பள்ளிகள் கொள்ளைக் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக அல்ல; மாறாக கொள்ளையை எப்படித் தொடருவது என்பது குறித்துத்தான்.

சென்னையிலுள்ள மாதா பொறியியல் கல்லூரி அதிகக் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து, தமிழக அரசின் கண்காணிப்புக் குழுத் தலைவர் ராமசாமி (இடமிருந்து மூன்றாவது) அக்கல்லூரியில் கடந்த ஆண்டு நடத்திய திடீர் சோதனை நாடகம்

தங்களின் பிள்ளைகளை மெட்ரிக் பள்ளிகளில் படிக்கவைத்துவரும் பெற்றோர்கள் தான் இச்சட்டம் பற்றியும், அதன் அமலாக்கம் பற்றியும் அதிக அக்கரை செலுத்த வேண்டும். ஆனால் அவர்களோ, எருமை மாட்டில் மழைபெய்த கதையாக, இன்றும் கூட இப்பிரச்சனை பற்றி சொரணையற்றுத்தான் இருக்கிறார்கள்.

“தாங்களே விரும்பி அதிகக் கட்டணம் செலுத்துவதாகப் பெற்றோர்களிடம் எழுதி வாங்குவது; வாங்கப்படும் அதிகக் கட்டணத்திற்கு உரிய ரசீது தராமல் துண்டுச்சீட்டில் கட்டணத்தையும் சேர்க்கை விபரத்தையும் எழுதிக்கொடுப்பது” உள்ளிட்ட பலவழிகளில் மெட்ரிக் பள்ளிகள் தங்கள் கட்டணக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இது சட்டவிரோதமானது எனத் தெரிந்திருந்தும் கூட, நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ‘எதிர்காலம்’ கருதி முணுமுணுப்போடு அடங்கிப் போய்விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை, பீச், பார்க், சினிமா, ஹோட்டல் போன்ற சுகங்களைத் தியாகம் செய்துவிட்டு, பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்துவிட வேண்டும் என்பது தான் குறிக்கோள்.

இதற்குப் பெயர் தியாகம் அல்ல; தவறை எதிர்க்கத் துணியாத, நியாயத்துக்காகப் போராட விரும்பாத தன்னலம். இந்தத் தன்னலமும், ஆங்கில வழிக் கல்விமீது அவர்களுக்கு இருக்கும் முட்டாள்தனமான மோகமும் தான் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு அடிப்படையாக இருக்கிறது. தமிழக அரசு சமச்சீர் கல்வித்திட்டத்தைக் கொண்டுவர முயன்றபோட்ய்கு, கல்வியின் ‘தரம்’ தாழ்ந்து போகும் என மெட்ரிக் பள்ளிகளின் முதலாளிகளோடு சேர்ந்து கொண்டு சாமியாடியவர்களும் இவர்கள் தான். இப்போது அதே ‘தரத்தைக்’ காரணமாகக் காட்டித்தான், மெட்ரிக் பள்ளிகளின் முதலாளிகள் தங்களின் கட்டணக் கொள்ளையை நியாயப் படுத்தி வருகிறார்கள். மெட்ரிக் பள்ளிகளின் தரத்தின் பின்னே உள்ள தகிடுதத்தங்களைப் பற்றிப் பேசினால், அப்பள்ளிகளின் வணவாளம் தண்டவாளம் ஏறிவிடும்.

அரசுப் பளிகள் தரத்தில் மின்னுகின்றன என்பதல்ல நமது வாதம். ஆனால், அரசுப் பள்ளிகளுக்கு மாற்றாகக் கல்வியில் தனியார்மயம் புகுத்தப்படுவதும், அதை ஆராதிப்பதும் அபாயகரமானது என்பதைத்தான் நாம் குறிப்பிட விரும்புகிறோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூல் வேட்டை நடத்திய தனியார் பொறியியல் கல்லூரிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும், இக்குற்றத்திற்க்காக எத்தனை பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டன, எத்தனை முதலாளிகள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன என ஒரு விரலையாவது மடக்கமுடியுமா? எம்.பி, எம்.எல்.ஏ க்களே பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்திவரும் பொழுது, இந்தச் சட்டம் நூல் பிசகாமல் நடைமுறைப் படுத்தப்படும் என்பதற்கு ஏதாவது உத்திரவாதம் உண்டா? ஆரம்பக் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி முடிய அனைத்து மட்டங்களிலும் தனியார் மயத்தை புகுத்த வேண்டும் அரசின் கொள்(ளை)கையாக இருக்கும் போது, கட்டணக் கொள்ளையை இக்கேடுகெட்ட அரசு தடுத்து நிருத்திவிடும் என நம்ப முடியுமா?

கல்வி வள்ளல்கள் நடத்திவரும் கட்டணக் கொள்கையைச் சட்டம் போட்டுத் தடுத்துவிட முடியும் என்பது, கடப்பாரையை முழுங்கிவிட்டு அது செரிக்க சுக்குக் கசாயம் குடிப்பது போன்றது. அரசுப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் தரமாக நடத்தக் கோருவதும், தாய்மொழி வழியாகவே உயர்கல்வி வரை கொடுக்கக் கோருவதும்தான் இப்பிரச்சனைக்கு ஒரே மாற்று. தனியார்மய மோகத்தாலும், ஆங்கில வழிக் கல்வி மீது இருக்கும் குருட்டுத்தனமான பக்தியின் காரணமாகவும் நடுத்தரவர்க்கம் இவ்வுண்மையைப் புரிந்து கொள்ள மறுக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு கல்வியைத் தனியார் மயமாக்குவதை எதிர்த்துப் போராடாதவரை, இந்தக் கட்டணக் கொள்ளை என்ற சிலுவையை அவ்வர்க்கம் சுமந்துதான் தீரவேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல் ஒட்டி வாக்கத்திலுள்ள ஆதி திராவிட மற்றும் பழங்குடி இன நல நடுநிலைப் பள்ளியின் அவலத் தோற்றம்; கல்வியைக் கைகழுவும் அரசின் அயோக்கியத்தனம்

நீர்த்துப் போன சமச்சீர் கல்வித் திட்டம்!


“சமச்சீர் கல்வித்திட்டத்தைக் கொண்டுவந்தாலும் மெட்ரிக் கல்வி வாரியத்தைக் கலைக்கமாட்டோம்; ஆங்கிலவழிக் கல்வித் திட்டத்தைக் கைவிட மாட்டோம்; தமிழகத்தில் மையக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் (சி.பி.எஸ்.சி) இயங்கும் பள்ளிகளில் சமச்சீர் கல்வித்திட்டம் அமலாகாது” இப்படி பல சமரசங்கலைச் செய்துகொண்டுதான் சமச்சீர் கல்வித்திட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனாலும் மெட்ரிக் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வித்திட்டத்தால் கல்வியின் தரம் தாழ்ந்து போகும் என ஒப்பாரி வைத்து, இத்திட்டத்தைத் தடை செய்யக் கோரி வழக்கு தொடுத்தார்கள். சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டாலும், தமிழக அரசின் சமச்சீர் கல்வித்திட்டத்தை மேலும் நீர்த்துப் போகச்செய்யும் வண்ணம் பல நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

  • சமச்சீர் கல்வித்திட்டம் பொதுப்பாடங்களுக்கு மட்டுமே பொருந்துமே தவிர துணைப் பாடத் திட்டங்களுக்குப் பொருந்தாது. மெட்ரிக் பள்ளிகள் தங்கள் விருப்பம் போல துணைப் பாடங்களைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
  • சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழக அரசு வெளியிடும் பாடநூல்களைத்தான் மெட்ரிக் பள்ளிகள் வாங்கவேண்டும் எனக் கட்டாயப் படுத்தக்கூடாஅது. அரசு அங்கீகரித்துள்ள பாடத்திட்டத்தின் படி தனியார் வெளியிடும் பாட நூல்களை வாங்கிக் கொள்ளும் உரிமை மெட்ரிக் பல்ளிகளுக்கு உண்டு. இந்த நிபந்தனை சமச்சீர் கல்வித்திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைத்து விடுமென்றும், மெட்ரிக் பள்ளிகளின் நோட்டுப் புத்தகக் கொள்ளைக்கு அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரம் என்றும் கல்வியாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
  • சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழக அரசு வகுக்கும் அனைத்து விதிகலையும் மெட்ரிக் பள்ளிகள் பின்பற்றவேண்டிய அவசியமில்லை; தங்களால் முடிந்த விதிகளை மட்டும் அப்பள்லிகள் பிபற்றலாம். விதிகளைப் பின்பற்றவில்லை என்ற காரணத்தைக்கூறி மெட்ரிக் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.

சென்னையிலுள்ள டி.ஏ.வி பள்ளியில் மாணவர்களுக்கு நடத்தப்படும் சதுரங்கப் பயிற்சி: மாணவர்களின் பல்திறனை வளர்ப்பது என்ற பெயரில் நடந்து வரும் கொள்ளை

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சமச்சீர் கல்வித்திட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் அமலாவதை விரும்பாத உயர்நீதி மன்ற நீதிபதிகள், அதனை அடுத்த கல்வியாண்டுக்கு ஒத்திப்போடும் நரித்தனத்தில் இறங்கினார்கள். தமிழக அரசு இக்கல்வித்திட்டத்தை இந்த ஆண்டே அமலாக்கவில்லை என்றால், பாடப் புத்தகங்களை அச்சிட்ட வகையில் அரசுக்குப் பலகோடி ரூபாய் நட்டமேற்படும் என வாதாடியது. இதனையடுத்து, சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டத்தையும், அக்கல்வித்திட்டத்திற்கான விதிமுறைகளையும் மே 15 2010க்குள் தங்களிடம் காட்டினால், இந்தக் கல்வியாண்டு முதல் அமல்படுத்த ஒப்புதல் அளிப்பதாக இறங்கி வந்துள்ளனர், ‘நீதி’பதிகள்.

புதிய ஜனநாயகம் ஜூன் 2010 இதழிலிருந்து

தொடர்புடைய இடுகை:

கலைஞரின் சமச்சீர் கல்வி: அசுரப்பசிக்கு அல்வா மிட்டாய்

One thought on “சட்டபூர்வமானது கல்விக் கட்டணக் கொள்ளை

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s