காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும்

ஜவஹர்லால் நேருவுடன் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் முகம்மது அப்துல்லா

இரண்டாம் கட்டுரை : காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும்

நாட்டுப் பிரிவினை என்பது நிகழ்ச்சி நிரலுக்கு வந்தபோது பிரிட்டிஷ் இந்தியாவின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள் தவிர, இங்கே ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன.  அவற்றுள் காஷ்மீரும் ஒன்று. இந்த சமஸ்தானங்கள் எல்லாம் யாரோடு சேர்வது என்ற கேள்வி எழுந்தது. இதற்காக அன்று இந்தியச் சுதந்திரச் சட்டம் 1947 (India Independence Act 1947) என்ற சட்டம் பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்டது. அதில் முக்கியமாக இரண்டு விதிகள் இடம் பெற்றிருந்தன. ஒரு குறிப்பிட்ட சமஸ்தானத்து மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருந்தால், அது இந்தியாவின் பக்கம் என்றும் பெரும்பான்மையினர் முஸ்லீம்களாக இருந்தால், பாகிஸ்தான் பக்கம் என்றும் அந்த குறிப்பிட்ட  நிலப்பரப்பு இந்தியாவை அல்லது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாக இருக்க வேண்டும் என்றும் பொது வரையறைகள் வகுக்கப்பட்டன.

சில இடங்களில் மன்னர் முஸ்லீமாகவும் மக்கள் இந்துக்களாகவும் இருந்தனர்; உதாரணமாக ஹைதராபாத் நிஜாம். ஜுனாகத் சமஸ்தானம். திருவிதாங்கூரில் இந்து மன்னர், இந்து, முஸ்லீம்,- கிறிஸ்தவர் எனக் கலவையாக மக்கள் தொகையினர். காஷ்மீரை எடுத்துக்கொண்டால், அங்கு இந்து மன்னர், மக்கள் முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் பவுத்தர்கள்.

பிரிவினைக்கு வகுக்கப்பட்ட மேற்கூறிய பொது வரையறையின்படி பார்த்தோமானால், முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் பாகிஸ்தானோடு இணைந்திருக்க வேண்டும். ஆனால், 1947 ஆகஸ்டு 14, 15 தேதி வரை காஷ்மீரின் இந்து மன்னர் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளோடும் இணைய விரும்பவில்லை. ஸ்டாண்ட்ஸ்டில் அக்ரீமென்ட்” (Standstill Agreement) என்றொரு ஒப்பந்தத்தைத் தயாரித்துத் தற்போதைய தனது நிலையை அங்கீகரிக்குமாறு நேருவிடமும் ஜின்னாவிடமும் கோரினார். ஜின்னா அதில் கையெழுத்திட்டார். நேரு கையெழுத்திடவில்லை.

கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து காஷ்மீரை விலைக்கு வாங்கியவர்கள்தான் டோக்ரா என்றழைக்கப்படும் இந்து மன்னர் பரம்பரையினர். 1846 பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கை கிழக்கிந்திய கம்பெனி போரில் தோற்கடித்தது. ரஞ்சித் சிங்கின் கவர்னராக காஷ்மீரில் இருந்த குலாப் சிங், கிழக்கிந்திய கம்பெனியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு,  அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 75 இலட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய தேசம்தான் காஷ்மீர்.

அந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மையான நிலப்பகுதி மன்னனுக்கும், பண்டிட்டுகள், டோக்ராக்கள் போன்ற ஆதிக்க சாதியினருக்குமே சொந்தமாயிருந்தது. ஆகப் பெரும்பான்மையான நிலமற்ற விவசாயிகள் இஸ்லாமியர்கள். அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டவர்கள். விவசாயிகள் விளைவித்த ஆப்பிள், குங்குமப்பூ முதல் கம்பளிகள், சால்வைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 85% வரை வரி வசூலிக்கப்பட்டது. காஷ்மீர் மன்னராட்சி விலைமாதர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களிடமும் வரி வசூலித்து, அரசாங்க விலைமாதர்கள் என்ற உரிமமும் வழங்கியிருக்கிறது. அரசுப் பதவிகளில் அமர்ந்திருந்த பண்டிட்டுகளும் பிற ஆதிக்க சாதியினரும் ஊழலிலும் உல்லாசத்திலும் ஊறித் திளைத்ததாகவும் அன்றைய ஆங்கிலேய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.  (Dogra raj in Kashmir)

இப்படி நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்களால் ஒடுக்கப்பட்ட, 90 விழுக்காட்டுக்கு மேல் முஸ்லீம் மக்கள் நிரம்பிய காஷ்மீர் பள்ளத்தாக்கு பாகிஸ்தானுடன் சென்றுவிடும் என்பதுதான் ஹரிசிங்கின் கருத்து. மன்னனால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பான பிரஜா பரிஷத் என்ற கட்சியின் எண்ணமும் அப்படித்தான் இருந்தது. எனவே, ஜம்முவை மட்டுமாவது தக்கவைத்துக் கொள்ளவே அவர்கள் விரும்பினர்.

ஆனால், ஜம்முவிலும் பெரும்பான்மையினர் (61%) முஸ்லீம்களாகவே இருந்தனர். எனவே, ஜம்முவை இந்துப் பெரும்பான்மையாகவோ அல்லது முஸ்லீம்களுக்குச் சமமான எண்ணிக்கை கொண்டதாகவோ மாற்றினாலொழிய, தமது எண்ணம் ஈடேறாது என்பதால் ஒரு சதித்திட்டத்தை அரங்கேற்றினர். 1948- மாணவராக இருந்தவரும் பின்னாளில் காஷ்மீர் டைம்ஸ் என்ற நாளேட்டை நிறுவியவருமான வேத் பாசின் இதனை விளக்கியிருக்கிறார். (The killing fields of Jammu: How Muslims become a minority in the region)

ஜம்முவில் இருந்து கணிசமான முஸ்லீம்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு மன்னரின் படைகளும் மன்னருக்கு உதவியாக வந்த பிற இந்து சமஸ்தானங்களின் படைகளும் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கு முன்னதாக மன்னரின் படையில் இருந்த முஸ்லீம்  சிப்பாய்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன.

இவ்வாறு தாக்கி விரட்டப்பட்ட முஸ்லீம்கள்  இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படும் பகுதியை நோக்கி உயிர் தப்பி ஓடினர்.  உயிரைக் காப்பாற்றி விடுகிறோம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான லாரிகளில் முஸ்லீம் மக்களை ஏற்றி சியால்கோட் பகுதிக்கு கொண்டு சென்று, அங்கே பச்சைப் படுகொலை செய்தனர். இந்தப் படுகொலை நடந்த 5 நாட்களுக்குப் பின்னர்தான் பத்தான்கள் காஷ்மீர் மீது படையெடுக்கின்றனர். அடுத்த 4 நாட்களில் (26.10.1947) மன்னன் ஹரிசிங் இந்திய அரசுடன் இணைந்து கொள்கிறார்.

இந்தப் படுகொலை குறித்து அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேலுக்கு ஷேக் அப்துல்லா எழுதிய கடிதம் படேல் கடிதப் போக்குவரத்துகளின் முதல் தொகுதியில் வெளியாகியிருக்கின்றன. மன்னனின் முழு ஆதரவுடன், மன்னனின் படைகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இணைந்து இந்தப் படுகொலையை நடத்தின என்றும் இது குறித்து காந்திக்கும் நேருவுக்கும் தான் கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

வெளியிலிருந்து காஷ்மீரில் சென்று குடியேறிய இந்துக்களும், சீக்கியர்களும் முஸ்லீம்களைப் படுகொலை செய்தனர் என்றும் பெண்களை மானபங்கம் செய்தனர் என்றும் இவற்றுக்கெல்லாம் காஷ்மீர் மன்னன்தான் பொறுப்பு என்றும் 25.12.1947 அன்று காந்தி எழுதியிருக்கிறார் (தொகுதி ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை 2 இலட்சம் என்று இலண்டனின் ஸ்பெக்டேடர் பத்திரிகையும் 2,37,000 என்று  இலண்டன் டைம்ஸ் நாளேடும்  பதிவு செய்திருக்கின்றன. முஸ்லீம்களுக்கு எதிராக இப்படி ஒரு தாக்குதலை அந்த மன்னனே முன்னின்று நடத்தியதாக அன்று காந்தியும் பதிவு செய்திருக்கிறார்.

இத்தகையதொரு கொடிய இனப்படுகொலை நம்முடைய கண்களில் இருந்து முற்றிலுமாக மறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு படுகொலை நடந்த பிறகும் முஸ்லீம்கள் 90 சதவீதத்திற்கு மேல் வாழ்கின்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு பண்டிட்கூடக் கொலை செய்யப்படவில்லை என்று பதிவு செய்கிறார்.  இன்று காஷ்மீர் பண்டிட்டுக்களுக்காக நியாயம் கேட்கின்ற யோக்கியர்கள் இந்த இனப்படுகொலைக்குப் பதில் சொல்லவேண்டும்.

முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் படுகொலையைப் பயன்படுத்திக்கொண்டு காஷ்மீர் மக்களைத்  தன் பக்கம் திருப்பி விட முடியும் என்று நம்பித்தான் அன்று பாகிஸ்தான் அரசு பழங்குடிப் படையை காஷ்மீருக்குள் அனுப்பியது.  தனது படையை முஸ்லீம்கள் வரவேற்பார்கள் என்று எண்ணியது. ஆனால், அதன் எண்ணம் நிறைவேறவில்லை.

பண்டிட்டுகள் மற்றும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான ஒரு கலவரமாக இது மாறிவிடக்கூடாது என்ற காரணத்தினால்தான் ஷேக் அப்துல்லா, ஜம்முவில் நடந்த இந்த இனப்படுகொலையை காஷ்மீர் முஸ்லீம்கள் மத்தியில் அரசியல் ஆக்கவில்லை என்று அன்றைய காலகட்டத்தைப் பற்றி எழுதும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிறப்பால் முஸ்லீமான ஷேக் அப்துல்லா மட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த ஆகப் பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் ஏன் பாகிஸ்தானுடன் சேரவில்லை? இன்று காஷ்மீரின் சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டதைக் கொண்டாடும் தேசபக்தர்கள் யோக்கியமாகவும் நாணயமாகவும் இதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காஷ்மீர் மக்கள் பின்பற்றிய சுஃபி இஸ்லாம் என்பது சன்னி இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து அடிப்படையிலேயே வேறுபட்டது. சுஃபி மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள்  ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்து பார்ப்பனிய சாதிக் கொடுமையின் காரணமாக மதம் மாறியவர்கள்.  எனவே, மதம் மாறிய இந்த இஸ்லாமியர்களுக்கும் மதம் மாறாமல் இந்து மதத்திலேயே நீடிக்கின்ற ஒடுக்கப்பட்ட சாதியினருக்குமிடையே அன்று முதல் இன்று வரை ஒரு தோழமையான உறவு நீடிக்கவே செய்கிறது. இந்த உறவின் வெளிப்பாடாகத்தான்   நாகூர் முதல் அஜ்மீர் வரையிலான தர்ஹாக்களுக்குத்தான்  ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்துக்களும் இன்றுவரை செல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல,  ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி முன்வைத்த காஷ்மீரி தேசியம் என்பது மதச்சார்பற்ற தேசியமாகும்.  எனவேதான், இஸ்லாமியக் குடியரசு என்று அறிவித்துக் கொண்ட பாகிஸ்தானை  அக்காரணத்துக்காகவே ஷேக் அப்துல்லா நிராகரித்தார்.  மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய கொள்கைகளைப் பின்பற்றப் போவதாக இந்திய அரசு கூறியதால், இந்தியாவைத் தெரிவு செய்வதாக அவர் கூறினார்.

காஷ்மீர் முஸ்லீம்கள் சுஃபி மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் என்பது மட்டுமல்ல, காஷ்மீரி முஸ்லீம்களில் 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள் நிலமற்ற ஏழை விவசாயிகள்,  நெசவாளர்கள், உழைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்கள். டோக்ரா ஆட்சியில் முஸ்லீம் என்றாலே சூத்திரன், பஞ்சமன் என்று கருதும் நிலையிலேயே அவர்கள்   ஆதிக்க சாதியினரால் நடத்தப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பழங்குடியினப் படை.

காஷ்மீர் மக்களின் தேசிய உணர்வுக்கு மன்னர் ஆட்சிக்கு எதிரான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புணர்வு உள்ளடக்கமாக இருந்தது.   தேசிய மாநாட்டுக் கட்சியின் கொள்கை அறிக்கையில் இது பிரதிபலித்தது.  உழுபவனுக்கு நிலம், பெண் கல்வி, பெண்களுக்குச் சமமான சொத்துரிமை, பெண்களுக்குச் சம வேலைவாய்ப்பு –  சம ஊதியம், மதச்சார்பின்மை, கருத்துரிமை,  ஆலைகள் அரசுடமை, கல்வி- ஓய்வு ஆகிய அடிப்படை உரிமைகள் எனத்  தாங்கள் உருவாக்கவிருக்கும் அரசமைப்புச் சட்டம் பற்றி அந்தக் கொள்கை அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகின்றது.  இந்தக் கொள்கைகளுக்கும் விழுமியங்களுக்கும் பாகிஸ்தான் பொருந்தி வராது என்ற காரணத்தினால்தான் பாகிஸ்தானை நிராகரித்தது தேசிய மாநாட்டுக் கட்சி.

இதன் காரணமாகத்தான் தேசிய மாநாட்டுக் கட்சியின் தொண்டர்களும், ஆயுதமேந்திய முஸ்லீம் பெண்களும் பாகிஸ்தானிலிருந்து ஆக்கிரமிக்க வந்த பழங்குடிப் படையை எதிர்த்துப் போராடி விரட்டியடித்தனர். இப்படி நம்பிக்கையோடு  இந்தியாவுடன் இணைந்திருக்க விரும்பிய மக்களுக்கு  இந்திய அரசு செய்த வஞ்சகம்தான் காஷ்மீரின் வரலாறு.

மேற்சொன்ன வரலாற்றுப் பின்புலத்திலிருந்து தான் சட்டப்பிரிவு 370, 35 ஆகியவற்றை நாம் பரிசீலிக்க வேண்டும். மேற்கூறிய சட்டப்பிரிவுகள் காஷ்மீருக்கு மட்டும் வழங்கப்பட்ட சலுகைகள் அல்ல. ஒரே நாடு ஒரே சட்டம் என்று அன்றைக்குப் பேசியிருந்தால், இந்தியா என்ற ஒரு நாட்டையே இரும்பு மனிதர் படேல் உருவாக்கியிருக்க முடி யாது. தனித்தனியாக பல மன்னர்களிடம் பேரம் பேசி சேர்க்கப்பட்டதுதான் இந்திய தேசம். ஆளும் வர்க்கங்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் பெரும்பான்மை மதத்துக்கும் சலுகை வழங்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டதுதான் இந்திய அரசியல் சட்டம்.

இன்று ஆசாதி என்று முழங்கும் காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் கைக்கூலிகள் என்று அவதூறு செய்கிறது பா.ஜ.க. ஆனால், 1947- இந்து சமஸ்தானமான திருவிதாங்கூரை இந்தியாவுடன் சேரவேண்டாம் என்றும் தனிநாடாகப் போகுமாறும் ஆலோசனை வழங்கியவர் ஆர்.எஸ்.எஸ்.-ன் குருநாதரான சாவர்க்கர். இந்தியாவில் சேராமல் தனிநாடாகப் போவதென்று முடிவு செய்தமைக்காக ஜின்னாவால் பாராட்டப்பட்டவர் திருவிதாங்கூர் திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யர்.

ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதை இன்று பா.ஜ.க. தேசபக்தர்கள் எதிர்க்கின்றனர். ஆனால், குஜராத்தில் இருந்த ஜுனாகத் சமஸ்தானத்தின் நவாப் இந்தியாவுடன் இணைய மறுத்த காரணத்தினால், அங்கே 20.2.1948 அன்று ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை மக்கள் இந்தியாவுடன் இணைவதற்கு வாக்களித்ததன் அடிப்படையில்தான் அது இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தனி நாடாகத் தேர்தல் நடத்தி முடித்து அரசமைப்புச் சட்ட முடியாட்சி என்று தன்னை அறிவித்துக் கொண்ட மணிப்பூர் அரசு 1948-ல் கட்டாயப்படுத்தி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

சிறப்புரிமை என்பது காஷ்மீருக்கு மட்டும் வழங்கப்பட்டதல்ல. 371 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திய அரசியல் சட்டம், வட கிழக்கிந்திய மாநிலங்களுக்குப் பல சிறப்புரிமைகளை அளிக்கிறது. அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்பு சட்டப்பிரிவு 370 (அன்று 306A)  ஐ எதிர்த்து சியாமா பிரசாத் முகர்ஜியோ பா.ஜ.க. வின் மூதாதையர்களோ யாரும் வாக்களிக்கவில்லை. அதற்கு எதிராக வாக்களித்த ஒரே ஒரு நபர் மவுலானா ஹஸ்ரத் மொகானி. இவர்தான் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை வடித்தவர். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினர். சட்டப்பிரிவு 370- கீழ் சுயாட்சி உரிமை காஷ்மீருக்கு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இவர் தெரிவித்த ஆட்சேபம். (An Existential Crisis for Jammu & Kashmir and Danger to Indias Federal Structure)

1953 – ஜவஹர்லால் நேரு சிங் கூட்டணியால் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி ஜம்மு காஷ்மீரில் நடந்த போராட்டம்.

பிரிவு 370- கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் அனைத்தும் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு, அது காலிப் பெருங்காய டப்பாவாக்கப்பட்டுவிட்டது. 1953- ஷேக் அப்துல்லாவைக் கைது செய்ததில் தொடங்கிப் பல்வேறு விதமான அரசியல் சதிகள், ஊழல்படுத்தும் நடவடிக்கைகள், தேர்தல் தில்லுமுல்லுகள், நம்பிக்கைத் துரோகங்கள் ஆகியவற்றின் மூலம் டில்லி இதனைச் சாதித்தது. நாற்காலி அரசியலால் ஊழல்படுத்தப்பட்ட தேசிய மாநாட்டுக் கட்சியினர் உள்ளிட்ட காஷ்மீரின் அரசியல்வாதிகள் காஷ்மீர் மக்களிடையே மதிப்பிழந்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக 1980- இறுதியில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலிருந்தும் விடுதலை கோரும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற அமைப்பு தோன்றியது. மதச்சார்பின்மையை முன்வைத்த அந்த அமைப்பை இந்திய, பாக். அரசுகள் இரண்டுமே வெறுத்தன.  இந்த அமைப்பை ஒழித்துப் போராட்டத்தை மதச்சார்புள்ளதாக மாற்றும் பொருட்டு இசுலாமிய மதவெறி தீவிரவாத அமைப்புகளை இந்திய உளவுத்துறையே ஊக்குவிக்க, இதனை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது. தீவிரவாத அமைப்புகளைப் பயிற்றுவித்து காஷ்மீருக்குள் அனுப்பத் தொடங்கியது.

1990 முதல் இன்று வரை இந்திய இராணுவத்தின் ஆட்சி என்பதுதான் நடைமுறையில் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் சிறப்புரிமை. பாகிஸ்தானைப் போல அல்லாமல், இந்தியா மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும்  பின்பற்றும் என்று நம்பித்தான் முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது. காஷ்மீர் மக்களின் முதுகில் குத்தியது காங்கிரசு. நெஞ்சில் குத்தியிருக்கிறார்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள்.

முதற்பதிவு : வினவு

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s