இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம்

மூன்றாம் கட்டுரை : காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம்

ம்மு காஷ்மீருக்குத் தனிச் சிறப்புரிமைகள் வழங்குவதாகக் கூறப்படும் அரசியல் சாசனப் பிரிவு 370- செயலற்றதாக்கியதன் மூலம், ஜம்மு காஷ்மீருக்கென பெயரளவில் இருந்துவந்த தனிக் கொடி, தனி அரசியல் சாசனச் சட்டம், கிரிமினல் சட்டங்கள் அனைத்தும் ரத்தாகிவிட்டன. இனி, இந்திய அரசமைப்புச் சட்டம் மட்டுமின்றி, மைய அரசின் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் எவ்வித மாறுதலும் இன்றியும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் இன்றியும் அம்மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துவிடும். அதேபொழுதில், இனி அங்கு அமையவுள்ள அரசுதான், தனது திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் மைய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். ஒரேயொரு அரசுத் தலைவர் ஆணை மூலம் நிலைமையைத் தலைகீழாக மாற்றிவிட்டது, மோடி அரசு.

370-ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்குப் பெயரளவில் இருந்துவந்த சிறப்பு உரிமைகள் அனைத்தையும் அடியோடு ரத்து செய்ததற்குத் தீவிரவாதம், வளர்ச்சியின்மை என வாய்க்கு வந்த காரணங்களை அடுக்குவதோடு, அந்தப் பிரிவே தற்காலிகமானதுதான். அதனால் அவ்வுரிமைகளை ரத்து செய்தது சட்டப்படி சரிதான்” என வாதாடி வருகிறது, சங்கப் பரிவாரக் கும்பல். இப்பிரிவு அரசியல் சாசனத்தில் தற்காலிகமான, இடைக்காலத்துக்குரிய மற்றும் சிறப்பு வழிமுறைகள் (Temporary, Transitional and Special Provisions)” என்ற தலைப்பின் கீழ் வருவதைத் தமது வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள், சங்கப் பரிவார அறிவாளிகள். இந்த வாதம் பாபர் மசூதியின் கீழே ராமர் கோவில் இருந்ததாகக் கூறப்படுவதற்கு இணையான மாபெரும் பித்தலாட்டம், வரலாற்று மோசடி.

370- வரலாற்றுப் பின்னணி

இந்திய அரசியல் சாசனத்தில் கையெழுத்திடும் அரசியல் சாசன சபை உறுப்பினர்கள். (கோப்புப் படம்)

இந்தியா பிரிவினை நடந்து, அவ்விரு நாடுகளும் சுதந்திரமான” தனித்தனி நாடுகளாக மாறிய 1947, ஆகஸ்டில், ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் ஆட்சியின் கீழ் தனி நாடாக இருந்தது. அன்று காஷ்மீர் மக்கள் ஷேக் அப்துல்லாவின் தலைமையில் இருந்த ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சியின் கீழ் அணிதிரண்டு மன்னராட்சிக்கு எதிராகப் போராடி வந்ததோடு,  மதச்சார்பற்ற, சுதந்திரமான காஷ்மீர் அமைவதைத்தான் விரும்பினார்களேயொழிய, இந்தியாவோடோ, பாகிஸ்தானோடோ இணைய விரும்பவில்லை.

இத்தகைய அரசியல் சூழ்நிலையில்தான், 1947 அக்டோபர் அன்று பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பழங்குடிகள் ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மீது தாக்குதல் தொடுத்து, வடக்குப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். அந்த ஆக்கிரமிப்பை முறியடிக்க வேண்டிய தேவையையொட்டி, ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் முடிவை மன்னர் ஹரி சிங் எடுத்தார். இம்முடிவுக்கு ஷேக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சியும் ஆதரவளித்தது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தாலும், மற்ற மன்னராட்சிப் பகுதிகள் இந்தியாவுடன் இணைந்ததைப் போல இந்த இணைப்பு நடக்கவில்லை. பாதுகாப்பு, தொலைதொடர்பு, வெளியுறவு ஆகிய மூன்று துறைகளில் மட்டுமே இந்திய அரசிற்கு அதிகாரம் உண்டு; மற்ற அனைத்துத் துறைகளும் ஜம்மு காஷ்மீர் அரசியல் சாசனச் சட்டம் 1939-ன் படி ஜம்மு காஷ்மீரை ஆள்பவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில்தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. இந்திய அரசும் இந்நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுதான் இணைப்பு ஒப்பந்தத்தில் (Instrument of Accession) கையெழுத்திட்டது.

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்த அதேசமயத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்திய அரசுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தன. அச்சமயத்தில் ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அமைப்போ, அரசியல் நிர்ணய சபையோ இல்லை. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் இருந்தது. ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம் குறித்த பொது வாக்கெடுப்பை இனிதான் நடத்த வேண்டி யிருந்தது. இத்தகைய நிலையில் அதிகாரப் பகிர்வு குறித்து நிரந்தரமான ஒப்பந்தத்தை உருவாக்கும் சாத்தியமில்லை. எனவே,  இடைக்கால ஏற்பாடு குறித்து இந்திய அரசின் சார்பில் நேருவும் படேலும்; ஜம்மு காஷ்மீரின் சார்பில் ஷேக் அப்துல்லாவும் மிர்ஸா அப்சல் பேக்கும் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில்தான் 370- உருவாக்கப்பட்டு (அப்பொழுது அப்பிரிவு 306 என அழைக்கப்பட்டது) இந்திய அரசியல் சாசனத்தில் அக்.17, 1949 அன்று சேர்க்கப்பட்டது.

1949 ஆண்டு சிறீநகரில் நடந்த ஜம்மு காஷ்மீர் தேசிய
மாநாட்டுக் கட்சியின் மாநாட்டில் ஷேக் அப்துல்லாவுடன் (இடது)
ஜவஹர்லால் நேரு. (கோப்புப் படம்)

இந்த இடைக்கால ஏற்பாடான 370 பிரிவு, ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்படும் வரை அதிகாரப் பகிர்வு குறித்து இந்திய அரசுத் தலைவருக்குச் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தற்காலிகமான அதிகாரங்களை வழங்கியது. இதன்படி, ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அரசிடம் கையளிக்கப்பட்ட பாதுகாப்பு, வெளியுறவு, தொலைதொடர்பு ஆகியவை தொடர்பான சட்டங்களை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு முன்பாக, அரசுத் தலைவர் ஜம்மு காஷ்மீர் அரசிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

இம்மூன்று துறைகளுக்கு அப்பால் உள்ள விடயங்கள் தொடர்பான சட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்படும் வரை ஜம்மு காஷ்மீர் அரசு இந்த ஒப்புதலை வழங்கலாம். ஆனால், ஜம்மு காஷ்மீர் அரசு அளிக்கும் ஒப்புதல்களுக்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை அங்கீகாரம் அளித்தால் மட்டுமே அவை செல்லுபடியாகும்.

இந்த இடைக்கால ஏற்பாடான 370 செயலற்றதாக்கவோ அல்லது மாற்றங்களோடு தொடரவோ இந்திய அரசுத் தலைவர் உத்தரவிடலாம். ஆனால், ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 370 ரத்து செய்வது குறித்தோ, மாற்றங்களோடு தொடருவது குறித்தோ இந்திய அரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தால் மட்டுமே அவர் அவ்வாறு உத்தரவிட முடியும். இதன் பொருள், ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை இல்லாமல் இந்திய அரசுத் தலைவர் 370 ரத்து செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, அப்பிரிவில் மாற்றங்களைக்கூடச் செய்ய முடியாது என்பதாகும்.

காங்கிரசின் துரோகங்கள்

ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபைக்கான அறிவிப்பு 1951- ஆண்டு மே தினத்தன்று வெளியிடப்பட்டு, அவ்வாண்டிலேயே அச்சபையின் 75 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடைபெற்றன. இத்தேர்தலில் ஷேக் அப்துல்லா தலைமையில் இயங்கிவந்த ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சி 75 இடங்களிலும் வெற்றி பெற்றது.

ஜம்மு காஷ்மீர் அரசியல் சாசன சபை உறுப்பினர் பதிவேட்டில்
கையெழுத்திடும் ஷேக் அப்துல்லா. (கோப்புப் படம்)

ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 31.10.1951 தொடங்கி 26.01.1957 வரை செயல்பட்டு, 27.01.1957 அன்று சட்டபூர்வமாகக் கலைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அச்சபை ஜம்மு காஷ்மீருக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கியது, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் இணைந்ததை உறுதி செய்தது என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, இதேகாலக்கட்டத்தில், நேருவின் தலைமையில் இருந்த இந்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மீது தனது அதிகாரத்தை விரிவாக்கும் நோக்கில் பல சதிகளையும் அரங்கேற்றியது.

ஜம்மு காஷ்மீரின் பிரதம மந்திரியாக இருந்த ஷேக் அப்துல்லா, 1953 ஆகஸ்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கு புனையப்பட்டது. அப்பொழுது ஜம்மு காஷ்மீரின் அரசுத் தலைவராக இருந்த கரண் சிங் (மன்னர் ஹரி சிங்கின் மகன்) இந்திய அரசின் ஏஜெண்டாக இருந்து அப்துல்லாவைக் கைது செய்ததோடு, அவரது அமைச்சரவையையும் கலைத்தார். இதன் பின் பக்ஷி குலாம் முகம்மது என்ற கைக்கூலி காஷ்மீரின் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட்டு, புதிய அரசும் அமைக்கப்பட்டது.

இதேசமயத்தில், 1950, 1952 மற்றும் 1954 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசின் அதிகாரத்தை விரிவாக்கும் அரசுத் தலைவரின் ஆணைகள் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்டன. இவற்றுள் 1954 ஆணை முந்தைய இரண்டு ஆணைகளையும் நீக்கியதோடு, காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த மூன்று துறைகளுக்கு அப்பாலும் சென்று, மைய அரசுப் பட்டியலில் உள்ள இனங்களுள் பெரும்பாலானவை ஜம்மு காஷ்மீருக்குச் செல்லுபடியாகும் என்ற நிலையை உருவாக்கியது.

306 ஏ அவசியம் குறித்து
இந்திய அரசியல் சாசன சபையில்உரையாற்றிய காஷ்மீர் அரசின்திவான் கோபாலசுவாமி அய்யங்கார்.
(கோப்புப் படம்)
This image has an empty alt attribute; its file name is patel-238x300.jpg
ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன்
இணைந்தபோது இந்தியாவின்
துணைப் பிரதமராகவும் உள்துறை
அமைச்சராகவும் இருந்த
வல்லபாய் படேல். (கோப்புப் படம்)

ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 1954 பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீர் இந்தியாவோடு இணைந்ததை அங்கீகரித்ததோடு, ஷேக் அப்துல்லாவிற்கும் நேருவிற்கும் இடையே கையெழுத்தாகியிருந்த டெல்லி ஒப்பந்தத்தையும் ஏற்றுக் கொண்டது. இந்த டெல்லி ஒப்பந்தம்தான் மைய அரசு தனது அதிகாரத்தை விரிவாக்கும் வண்ணம் வெளியிட்ட 1954 அரசாணைக்கு அடிப்படையாக அமைந்தது. அதேசமயம், ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புரிமைகள் வழங்கக்கூடிய அரசியல் சாசனப் பிரிவு 306  (தற்பொழுது 370), மாற்றங்களோடு தொடருவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து இந்திய அரசிற்கு எந்தவொரு பரிந்துரையும் செய்யாமலேயே ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை ஜனவரி 27, 1957- கலைக்கப்பட்டது.

370 மற்றும் அதன் உட்கூறுகளின்படி, ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கூட்டப்படும் வரைதான், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசு இயற்றும் சட்டங்கள் மற்றும் ஆணைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு உண்டு. அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்ட பின் அந்த அதிகாரத்தை ஜம்மு காஷ்மீர் அரசு இழந்துவிடுகிறது. மேலும், அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசு இயற்றிய சட்டங்கள் மற்றும் வெளியிட்ட ஆணைகளுக்கு அங்கீகாரம் வழங்கிக் கலைக்கப்பட்ட பிறகு, இந்திய அரசிற்கு அல்லது நாடாளுமன்றத்திற்கு அதன் பிறகு புதிதாக எந்தவொரு சட்டமோ, ஆணையோ வெளியிடும் அதிகாரமும் கிடையாது. அதாவது, ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கூடி, ஜம்மு காஷ்மீருக்கும் இந்திய அரசிற்கும் இடையேயான அதிகாரப் பகிர்வை முடிவு எடுத்துக் கலைந்த பிறகு, இந்திய அரசிற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அதிகாரம் தானாகவே ரத்தாகிவிடுகிறது.

மேலும், 370- பிரிவை மாற்றங்களோடு தொடர்வது தொடர்பாகவோ அல்லது ரத்து செய்வது தொடர்பாகவோ அரசியல் நிர்ணய சபை இந்திய அரசுத் தலைவருக்கு எந்தவொரு பரிந்துரையையும் அளிக்காமல் கலைந்து போனதால், அப்பிரிவை நீக்கும் அதிகாரம் மட்டுமல்ல, அதில் எந்தவொரு சிறு மாற்றத்தையும் செய்யும் அதிகாரமும் அரசுத் தலைவருக்குக் கிடையாது. இவ்வாறாக, அரசியல் சாசனப் பிரிவு 370 இந்திய அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யமுடியாத நிரந்தர உறுப்பாகிவிடுகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் நிலை இவ்வாறிருக்க, பா.ஜ.க. அரசிற்கு முன்பிருந்த காங்கிரசு அரசுகள், அம்மாநிலத்தை ஆண்ட தமது கூட்டாளிகளைப் பயன்படுத்திக்கொண்டு, அம்மாநில அரசின் ஒப்புதலைப் பெற்று, ஜம்மு காஷ்மீர் மீது இந்திய அரசின் அதிகாரத்தை மென்மேலும் விரிவுபடுத்தின. இந்த விரிவாக்கத்திற்கு 1954- வெளியிடப்பட்ட அரசாணையை அடிப்படையாக இந்திய அரசு பயன்படுத்திக் கொண்டது எனக் கூறும் அரசியல் சாசனச் சட்ட வல்லுநர் ஏ.ஜி.நூரானி, 1954 1996- இடைப்பட்ட ஆண்டுகளில் 1954 அரசாணையில் 44 திருத்தங்களை இந்திய அரசு மேற்கொண்டதாகச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆகஸ்டு 5- முன்பாகவே, இந்திய அரசியல் சாசனத்தில் அடங்கியிருக்கும் 395 பிரிவுகளுள் 260 பிரிவுகளும், மைய அரசின் பட்டியலில் உள்ள 97 இனங்களில் 94 இனங்களும் ஜம்மு காஷ்மீரிலும் செல்லுபடியாகும்படி இந்திய அரசின் அதிகாரம் விரிவாக்கப்பட்டுவிட்டது. அதாவது, ஆகஸ்டு 5- முன்பாகவே 370- பிரிவு செத்த பாம்பாகிவிட்டது என்பதே உண்மை. அந்தச் செத்த பாம்பை அடித்த வீரர்கள்தான் மோடி ஷா கும்பல். அந்தச் செத்த பாம்பைக்கூடச் சட்டப்படி எதிர்கொள்ள முடியாமல், பார்ப்பனக் கும்பலுக்கே உரிய நரித்தனங்கள் மற்றும் கிரிமனல்தனமான வழியில் செயலற்றதாக்கி, அம்மாநிலத்தை இரண்டாக உடைத்து, ஆட்சிக் கவிழ்ப்புக்கு இணையான தாக்குதலை அம்மக்களின் மீது நடத்தியிருக்கிறது.

மோடி – ஷா கும்பலின் ஆட்சிக் கவிழ்ப்பு

ஒரு நாடு மற்றொரு நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தால், அந்நாட்டை காலனிய எஜமானர்கள் என்போம். ஜம்மு காஷ்மீரின் பெயரளவிலான சிறப்புரிமைகளைப் பறித்தும், மாநிலத் தகுதியை நீக்கி அதிகாரமற்ற யூனியன் பிரதேசமாக மாற்றியிருப்பதன் மூலமும் ஜம்மு காஷ்மீரை டெல்லியின் காலனியாக மாற்றிவிட்டது, மோடி ஷா கும்பல். இதற்கு அரசியல் சாசனப் பிரிவுகள் 3, 370 மற்றும் 367 ஆகியவற்றைக் கேடாகவும், கிரிமினல்தனமாகவும், அப்பிரிவுகளின் உட்கிடக்கைக்கு எதிராகவும் பயன்படுத்தியிருக்கிறது, மோடி அரசு.

பிரிவு 370 செயலற்றதாக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா. பின்புலத்தில் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த ஆகஸ்டு அன்று மோடி அரசு நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புரிமைகளை வழங்கும் 370 செயலற்றதாக்கக் கோரும் தீர்மானத்தையும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரும் மசோதாவையும் முன்மொழிந்தது. இதனையடுத்து, இந்திய அரசியல் சாசனம் முழுமையும் எவ்வித மாறுதலும் இன்றி ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும் என்ற அரசாணையை 370(1) பிரிவின் கீழ் வெளியிட்டார், ராம்நாத் கோவிந்த். மேலும், இவ்வாணை 1954 அரசாணையை நீக்குவதாகவும் (Supersede) அறிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் தொடர்பான ஆணைகளை வெளியிட அரசுத் தலைவருக்கு 370(1) அதிகாரம் அளித்தாலும், அவ்வாணை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் அரசோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் கூறுகிறது. மேலும், 370 பிரிவின் கூறு 3, ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை பரிந்துரைக்காமல் இந்திய அரசுத் தலைவர் தன்னிச்சையாக 370- பிரிவில் மாற்றங்களைச் செய்யவோ, அதனைச் செயலற்றதாக்கவோ ஆக்க முடியாது எனக் குறிப்பிடுகிறது. 370 பிரிவு இந்திய அரசுத் தலைவருக்குச் சட்டப்படி விதித்திருக்கும் இந்த வரம்புகளை மீறுவதற்கு பிரிவு 367- கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது, மோடி அரசு.

இந்த 367 பிரிவு அரசியல் சாசனத்தின் கூறுகளுக்கு வியாக்கியானம் அளிக்கும் கூறாகும். அரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  வெளியிட்ட ஆணை 367- பிரிவில் புதிய உட்கூறு ஒன்றைச் சேர்க்கிறது. இப்புதிய உட்பிரிவு, 370- பிரிவில் ஜம்மு காஷ்மீரின் பிரதம அமைச்சர் (Sadar-i- மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு என வரும் இடங்களிலெல்லாம் ஆளுநர் என்றும் ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை என வரும் இடங்களிலெல்லாம் ஜம்மு காஷ்மீர் மாநிலச் சட்டமன்றம் என்றும் பொருள் கொள்ளவேண்டுமென புதிய விளக்கத்தை அளித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலச் சட்டமன்றம் ஓராண்டுக்கு முன்பாகவே கலைக்கப்பட்டுவிட்டது. தற்பொழுது அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சிதான் நடந்துவருவதால், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர்தான், குடியரசுத் தலைவரின் சார்பாக அம்மாநிலத்தை ஆண்டு வருகிறார். அரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தன்னால் ஆளுநராக நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக்கோடு ஆலோசனை நடத்தி, இந்திய அரசியல் சாசனத்தின் அனைத்துக் கூறுகளும் எவ்வித மாற்றமும் இன்றி அம்மாநிலத்திற்கு இனிப் பொருந்தும் என உத்தரவிடுகிறார்.

ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும், சட்டமன்றமும் கலைக்கப்பட்டுவிட்டதால், அவை செய்யவேண்டிய பணிகளுக்கு இப்பொழுது நாடாளுமன்றம்தான் பொறுப்பு. நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு, 370- செயலற்றதாக்கும்படி தீர்மானமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, உடனடியாக அரசுத் தலைவரை ஆணை வெளியிடச் செய்துவிட்டது, மோடி அரசு. மேலும், அம்மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் மசோதாவையும் நிறைவேற்றிவிட்டது.

இவை அனைத்துமே ஏதோ சட்டப்படி நடந்தவை போலத் தெரிந்தாலும், உண்மையில் இது அரசியல் சாசனச் சட்டத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் மோசடிகளாகும். அரசியல் சாசனப் பிரிவு 367 கொண்டு தெளிவற்ற கூறுகளுக்கோ சொற்களுக்கோதான் விளக்கம் அளிக்க முடியும். ஆனால், 370 பிரிவின் உட்கூறுகளில் கூறப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை, ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, மாநிலச் சட்டமன்றம் ஆகியவை தெளிவற்றதாகவோ, சந்தேகத்திற்குரியதாகவோ இல்லாதபோது, அவற்றுக்குப் புதுவிளக்கம் அளிக்க முடியாது” என்கிறார், நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஃபைசான் முஸ்தபா.

மேலும், அரசமைப்புச் சட்டத்தின் மற்ற கூறுகளை ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்துவதற்குத்தான் 370 பிரிவு தந்திருக்கும் தற்காலிக அதிகாரத்தை அரசுத் தலைவர் பயன்படுத்த முடியுமே தவிர, 370- திருத்துவதற்கு 370- பயன்படுத்துவது அரசமைப்புச் சட்டத்தின்படி தவறானது என்று உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் ஷதான் ஃபராஸத் குறிப்பிடுகிறார்.

ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றியமைக்கும் முன்பாக, அது தொடர்பாக அம்மாநிலச் சட்டமன்றத்தோடு ஆலோசிக்க வேண்டும் என அரசியல் சாசனப் பிரிவு 3 தெரிவிக்கிறது. சட்டமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், அம்மாநிலம் தொடர்பான சில மசோதாக்களை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு உண்டு. ஆனால், அரசியல் சாசனப் பிரிவு 3 தொடர்பான விடயங்களில், அப்பிரிவே நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு வரம்பிட்டு அம்மாநிலச் சட்டமன்றத்தோடு ஆலோசிக்க வேண்டும் எனக் கூறும்போது, நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்திருப்பது அரசியல் சாசனத்திற்கு முரணாகும்” என்றும் சுட்டிக் காட்டுகிறார், ஷதான் ஃபராஸத்.

இவ்விளக்கங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டாலும்கூட, 2018- 370 பிரிவு குறித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அப்பிரிவு தற்காலிகமானது என்ற தலைப்பின் கீழ் உள்ளதென்றாலும்கூட, அப்பிரிவு தற்காலிகமானதல்ல” எனக் குறிப்பிட்டிருக்கிறது. 1969 370- தற்காலிகமானது என ஏற்றுக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம், அதனைச் செயலற்றதாக்க முடியாது எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

மோடி அரசு 370 செயலற்றதாக்கியதைக் கண்டித்து பஞ்சாபிலும், பெங்களூருவிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்.

ஆளுநரின் அதிகார வரம்பு தொடர்பாக பீகாரில் சிக்கல் எழுந்தபோது, அது தொடர்பான பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, சட்ட மன்றத்தின் நேரடி ஒப்புதலோடு செய்ய முடியாத ஒரு செயலை, சட்டமன்றம் கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி இருக்கும்போது செய்வது அரசமைப்புச் சட்ட மோசடி யாகும். இது சட்டநெறிமுறை ஆகாது” எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

எனவே, அரசமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கும் நெறிகளுக்கும் எதிராக, முரணாக, அவற்றைத் திருத்தி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புரிமைகளை வழங்கும் 370- பிரிவைச் செயலற்றதாக்கியிருப்பதும், அம்மாநிலத்தை இரண்டாக உடைத்து, ஒன்றியப் பிரதேசமாக மாற்றி தகுதி இறக்கம் செய்திருப்பதும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை போன்றதொரு கிரிமினல் குற்றமாகும். இக்கிரிமினல் குற்றத்தைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரால் நியாயப்படுத்த முயலுகிறது, ஆர்.எஸ்.எஸ்.

காஷ்மீர் மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். இழைத்திருக்கும் அநீதியை மற்ற மாநில மக்கள் கண்டும் காணாது போல நடந்துவருவது தம் தலை மீது தாமே கொள்ளிவைத்துக் கொள்வதற்கு ஒப்பானதாகும். ஏனென்றால், 370- பிரிவை நீக்க வேண்டும் என்பது மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கை அல்ல. மாநில அரசின் மையமான உரிமைகளைப் பறித்து, அவற்றை பஞ்சாயத்து போர்டுகளைப் போல ஆக்க வேண்டும் என்பதுதான் இந்து ராஷ்டிரத்தின் திட்டம். ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு, என்.ஐ.ஏ.விற்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்பன வழியாக தனது நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது.

குஜராத் மாநிலத்தை இந்துத்துவாவின் சோதனைக் களமாகப் பயன்படுத்தியதைப் போல, மாநில உரிமைகளைப் பறிப்பதற்கு ஜம்மு காஷ்மீரைச் சோதனைக் களமாகப் பயன்படுத்தியிருக்கிறது, மோடி அரசு. எனவே, காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை எதிர்த்துக் குரல் கொடுப்பதன் வழியாகத்தான் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில மக்களும் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

முதற்பதிவு : வினவு

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்