
ஊரடக்கின் மூன்றாம் நாள் இன்று. கொரோனாவின் தாக்குதல் மிகக் கடுமையாய் இருக்கிறது. பன்னாட்டளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தொடுகிறது. 22,000க்கும் அதிகமானோர் மரணமடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் அறுநூறுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தாக்குதல் கண்டறியப் பட்டிருக்கிறது. பத்து பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இதுவே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் 30 பேராகவும் மரணமடைந்தது இரண்டு பேராகவும் இருக்கிறார்கள். கொரோனா பரவும் வேகம் அச்சமூட்டக் கூடியதாக இருக்கிறது. சற்றேறக் குறைய 90 நாளில் ஐந்து லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது.
இந்தப் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த மக்கள் பொது இடங்களுக்கு வராமல் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி இருப்பது இன்றியமையாததாகிறது. உலகில் பல நாடுகள் இதை செயல்படுத்திக் கொண்டுள்ளன. இந்தியாவும் 25ம் தேதியிலிருந்து மூன்று வாரங்களுக்கு ஊரடங்கை அறிவித்திருக்கிறது. இது மிகவும் தேவையான நடவடிக்கை என்பதிலோ, இன்னும் முன்னதாகவே இது போன்ற நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மக்கள் இந்த ஊரடக்கிற்கு எந்த அளவுக்கு ஆயத்தமாகி இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. மக்கள் இந்த ஊரடக்கை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது வேறு, அதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பது வேறு.
கடந்த டிசம்பர் கடைசியில் இந்த நோய் நம்முடைய அண்டை நாடான சீனாவில் கண்டறியப்பட்டதில் இருந்து, இந்தியாவில் இதற்கு எதிரான நடவடிக்கைகள் என்ன என்று பார்த்தால், எதுவுமே இல்லை என்பதே பதில். துல்லியமாக சொன்னால் பிப்ரவரி வரை குறிப்பிடத் தகுந்த எந்த நடவடிக்கையும் இல்லை. மார்ச் மத்தியில் செல்லிடப்பேசி அழைப்போர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களை ஒலிக்க விட்டதே குறிப்பிடத்தகுந்த முதல் நடவடிக்கை.
இந்தியா தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிராத நாடல்ல, “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்” என்று அனைவரும் நினைவைச் சுமக்கும் நாடு இது. ஆனால் தன்னோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாட்டில் ஒரு தொற்று நோய் கடும் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய மக்களைக் காக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? சீனாவுக்குச் செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்ட பின்பு, சீனாவுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா. அதன் பிறகும் கூட தேவையான மருத்துவப் பொருட்களை சேமித்து வைக்கும் திட்டம் எதுவும் இங்கு இல்லை. இருந்திருந்தால் மருத்துவர்களே என்95 வகை முகமூடி கேட்டு போராடும் நிலை வந்திருக்காது.
அப்போதிலிருந்தே உள்வரும் பன்னாட்டு விமானப் போக்குவத்தை கண்காணிப்பு உள்ளாக்கி உள்வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கையை தொடங்கி இருந்தால், தேவைப்பட்டால் பன்னாட்டு விமானப் போக்குவரத்தை நிறுத்தி இருந்தால், ஒப்பீட்டு அளவில் நாம் மூன்றாம் கட்டத்தில் இருக்கிறோமா? நான்காம் கட்டத்தில் இருக்கிறோமா? என பதற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

எடுத்துக்காட்டாக சீனாவின் அண்டை நாடான தென் கொரியாவில் சீனாவில் வேகமாக பரவுகிறது எனத் தெரிந்ததும் கொரோனா நோய்த் தொற்றை கண்டறியும் கருவிகளை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். பிப்ரவரி 7ம் தேதி அக்கருவிகளைப் பயன்படுத்தி சோதனைகளை மேற்கொள்ள தென்கொரிய அரசு அனுமதி அளித்தது. இப்போது, உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இதுவரை 2,70,000 மக்களுக்கு சோதனை நடத்தி பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தி கண்காணிக்கிறது. ஆனால் இங்கு நாட்டிலுள்ள 16 ஆய்வுக் கூடங்களில் சோதனை நடத்திக் கொள்ள மார்ச் 15ல் தான் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் முறைப்படி அனுமதி வழங்கியது. ஆனால் ஜனவரி இறுதியிலேயே சீனா அனைத்து நாடுகளுக்கும் கொரோனா வைரஸை மேப் செய்வதற்கான பிரைமர்களை அனுப்பி விட்டது. இந்த தாமதத்திற்கு காரணம் என்ன? இதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மூன்று முறைகளை உலக நாடுகள் கடைப்பிடிக்கின்றன. ஒன்று சீன முறை, பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாகவும் முற்றாகவும் தனிமைப்படுத்தி முழுமையாக சோதனை நடத்தி அவர்களை தனிமைப் படுத்தவும், தொடர் கண்காணிப்புக்கு உள்ளாக்கவும், சிகிச்சையளிக்கவும் தேவையான அனைத்தையும் விரைந்து ஏற்பாடு செய்து பரவலைக் கட்டுப்படுத்துவது. அடுத்து, தென்கொரிய முறை மக்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டு வேண்டியவர்களை தனிமைப்படுத்தி வசதிகளை ஏற்படுத்தி கண்காணித்து சிகிச்சையளிப்பது. மூன்றாவது உலகின் பெரும்பாலான நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுவது. நாட்டையே ஒட்டு மொத்தமாக முடக்கி சமூக விலக்கம் செய்வதன் மூலம் பரவலை கட்டுப்படுத்துவது. இந்த முறையைத் தான் இந்திய அரசு செயல்படுத்துகிறது.
அரசு செயல்படுத்தும் இந்த சமூக விலக்கலில் மக்களுக்கு என்ன பங்களிப்பு இருக்கிறது? இன்று 99 விழுக்காடு மக்கள் சமூக விலக்கலை ஏற்றுக் கொண்டு தத்தமது வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். அயோத்தியில் ராமன் பொம்மையை மாற்றி வைக்கும் விழாவில் லட்சக் கணக்கானோர் திரண்டதாக சமூக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் போக்குவரத்து முடக்கத்தை அறிவித்த அன்று பிற்பகல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆயிரக் கணக்கானோர் திரண்டனர். உட்புற கிராமங்களில் அரசின் பிரச்சாரம் இன்னும் சென்றடையவில்லை. இது போன்ற ஒன்றிரண்டு முட்டாள்தனமான அரசு நிர்வாகத்தால் நேர்ந்த மீறல்களை தவிர மக்கள் அனைவரும் தங்களை சமூக விலக்கத்துக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு கொள்ளை நோய்க்கு எதிராக அரசின் நடவடிக்கைகள் எப்படி மக்களை கவனத்தில் கொள்ளாதவைகளாக இருக்கின்றன என்பதற்கு மக்கள் அரசின் முகத்தில் அறைந்து கூறியிருக்கும் பதில் இது.
முதலில், 21 நாட்கள் முடக்கத்துக்கு அரசு மக்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள என்ன காலம் வழங்கியது. இரவில் எட்டு மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள், வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் என்பது எவ்வளவு கொடூரமானது. முரண்பாடானது. நோக்கம் சமூக விலக்கம், ஆனால் அதை அறிவித்த பின் மக்கள் சந்தைகளிலும் பேருந்து நிலையங்களிலும் ஆயிரக்கணக்கில் கூடினார்கள். இது தான் இந்த கொள்ளை நோய் பரவல் குறித்து அரசு புரிந்து கொண்டிருக்கும் விதம்.

இந்தியாவில் 80 விழுக்காடு மக்கள் அன்றாடம் உழைத்து பெறும் பணத்திலிருந்து உண்பவர்கள். இவர்கள் 21 நாட்கள் வீட்டில் முடங்கி இருக்க வேண்டும் என்றால் அதற்கு என்னென்ன முன் தயாரிப்புகள் செய்ய வேண்டியிருக்கும்? அன்றாடம் உழைத்தால் மட்டுமே சாப்பிட முடியும் எனும் நிலையில் இருக்கும் இவர்களின் வருமான வாய்ப்பான, கட்டிட வேலை தொடங்கி சிறு குறு கடைகள், தொழிற்சாலைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன. சிறு குறு கடை உரிமையாளர்களின் நிலையும் இது தான். இரண்டாம் நாளிலேயே பழங்கள் அழுகி விட்டன என்ன செய்வதென்றே தெரியவில்லை என்கிறார்கள். சொல்லில் அழுகையும், பார்வையில் கண்ணீரும் வழியும் தருவாயில் இருக்கின்றன. எளிய தொழிற்சாலை உரிமையாளர்களோ வாங்கிய மூலப் பொருளின் தவணைக்கும், நீக்கம் செய்யப்படும் விற்பனை ஆணைக்கும் இடையில் அல்லாடுகிறார்கள். அரசு அறிவித்திருக்கும் இடர்கால உதவிகள் அனைத்தும் வாய்க்கு எட்டி வயிற்றுக்கு எட்டாத நிலையிலேயே அமைந்திருக்கின்றன.
அனைத்தையும் தொகுத்துப் பாருங்கள், தொடக்க இரண்டு மாதங்களில் அரசு செய்திருக்க வேண்டிய எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், முன் தயாரிப்புகளையும் முறைப்படி செயல்படுத்தவில்லை. இப்போதும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தியாக வேண்டிய – தனிமைப்படுத்த தேவையான மருத்துவ வசதிகள், கருவிகள், இடவசதி, ஆள்பலம், தனியார் மருத்துவ மனைகளுக்கு ஆணைகள் வழங்குவது உள்ளிட்ட – எவையும் திட்டமிட்ட வகையில் செயல்படுத்த வில்லை. தம் மக்களின் பொருளாதார நிலை என்ன? அவர்களை தனிமைப்படுத்தினால் அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையானவற்றை சேமிக்க தேவைப்படும் காலம் வழங்க அல்லது அவைகளை அரசே ஏற்பாடு செய்ய எந்த முன்னேற்பாடும் இல்லை. இதில் காவல்துறையின் செயல்பாடுகள் வழக்கம் போல் ரவுடித்தனமாக இருக்கின்றன. ஆனால் ஒற்றை சொல்லில் ஊரடங்கு என அறிவித்து விட்டார்கள். கோடிக்கணக்கில் பிச்சைக்காரர்களும், வீடற்ற சாலையோர வாசிகளும் இருக்கும் ஒரு நாட்டின் அரசு சொல்வதன் சுருக்கம் கொரோனாவில் சாக வேண்டியதிருக்கும் எனவே பட்டினியில் சாகுங்கள் என்பது தானா? தன்னார்வலர்களும், மக்கள் ஆர்வலர்களும் இவைகளை சொந்த முயற்சிகளில் சாத்தியப்படுத்தும் செய்திகள் வந்திருக்கின்றன. என்றாலும், இதில் அரசின் அக்கரை என்ன என்பது தான் முதன்மையான கேள்வி.
இவைகளை மக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று அரசு விரும்புகிறது?