
தில்லியில் மூன்றாவது நாளாக வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 17 பேர் கொலை செய்யப்பட்டு விட்டனர். ஆம்புலன்ஸ்கள் கூட விடாமல் தாக்கப்படுகின்றன. காணொளிக் காட்சிகளைப் பார்க்கும் போது மனம் பதறுகிறது என்று தங்களை சாதாரண மக்களாக கருதிக் கொள்வோர் தெரிவிக்கிறார்கள். மீண்டும் மீண்டூம் பிடிவாதமாக இரண்டு தரப்புக்கும் இடையே நடக்கும் கலவரம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் உண்மை என்ன?
கொலைவெறி ஆட்டம் ஆடுவதொன்றும் காவி பயங்கரவாதிகளுக்கு புதியதல்ல. அதன் விளைவை அரசு, ஊடகங்கள் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக திருப்புவதும் புதியதல்ல. இஸ்லாமியர் உடமைகள் குறிவைத்து தாக்கப்படுவது, பள்ளிவாசலை தாக்குவது, காயம்பட்டவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸை தாக்குவது என்று காவி பயங்கரவாதிகளின் அத்தனை முத்திரைகளும் தில்லியிலும் கிடைக்கின்றன. ஆனாலும் இது கலவரம். ஒரு பத்திரிக்கையாளர் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது தான் பாதுகாப்பு என உணர்த்தப்படும் அளவுக்கு நிலமை கைமீறி இருக்கிறது. ஆனாலும் இது கலவரம்.
இன்னும் மூன்று நாட்களில் இந்தப் போராட்டத்தை காவல்துறை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், அப்புறம் போலீஸ் எங்களை தடுக்கக் கூடாது நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பாஜக எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா வெளிப்படையாக அறிவித்த போது காவல்துறை என்ன செய்து கொண்டு இருந்தது?

துப்பாக்கி வைத்துக் கொண்டு மிரட்டும் ஒருவன் ஷாருக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவிக்கிறது. அந்தக் காணொளியில் அவன் வெளிப்படுத்தும் உடல் மொழி ஒரு காவி பயங்கரவாதிக்கே உரிய திமிர்த்தனத்துடன் வெளிப்படுகிறது. அடுத்து இந்தச் செய்தியை ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன. மட்டுமல்லாது, அவன் கபில் மிஸ்ராவுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. இவைகளை பார்க்கும் போது விருத்த சேதனம் செய்து கொண்டு, கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருந்த கேட்சே நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இதுவரை வெளியாகி இருக்கும் காணொளிகளைப் பார்க்கும் போது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருப்பது அதிகபட்சம் 150 பேருக்குள் தான் இருக்க முடியும் எனத் தெரிகிறது. இவர்களை காவல் துறையால் மூன்று நாட்களாக அடக்க முடியவில்லை என்பது ஏற்கும் படியாக இல்லை.
உயிரிழர்ந்தவர்கள், காயமடைந்தவர்களில் பெரும்பாலானோருக்கு துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயங்கள் இருக்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆக இது திட்டமிட்டு, அரசின் முன்முயற்சியுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்களை முடித்து வைப்பதற்காக நடத்தப்படுகிறது என்பது தெளிவு.
தங்கள் எல்லையை மீறிப் போகும் போராட்டங்களை முடித்து வைக்க அரசு ஒவ்வொரு முறையும் இந்த உத்தியைத் தான் கையாளுகிறது. மெரீனா எழுச்சியை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை நேரடியாக வன்முறையில் இறங்கியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை நேரடியாகவும், ஸ்டெர்லைட் தனக்கு ஆதரவான குண்டர்கள் மூலமும் வன்முறைகளில் இறங்கின. மஹாராஷ்டிராவில் விவசாயிகள் விலை கட்டுபடியாகாமல் ரோட்டில் கொட்டி போராடிய போதும் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இப்போதும் கடந்த இரண்டு மாதங்களாக அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர ஆதரவுப் போராட்டம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை இறக்கி முடிவுக்கு கொண்டுவர முயல்கிறது. இது தான் தில்லி கலவரம் என்று ஊடகங்களால் காட்டப்படுகிறது.

இந்த வன்முறை வெறியாட்டத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, உடமையிழப்பு, உளவியல் இழப்புகள் ஆகியவைகளைத் தாண்டி சில உண்மைகள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. குஜரத்தைப் போல வெகு மக்களின் உளவியலை தில்லியில் காவி பயங்கரவாதிகளால் வெற்றி கொள்ள முடியவில்லை. கொந்தளிப்பான காலகட்டத்தில் அமைதியும் அபாயகரமானது தான் எனும் உண்மையை உணராமல் மௌனமாய் இருக்கிறார்களே தவிர இது இந்து பெருமித்ம் என உணரவில்லை. இந்து அவமானம் என்றே உணர்கிறார்கள். அந்த வகையில் காவி பயங்கரவாதிகளுக்கு இது படு தோல்வி. அடுத்து, எதை நோக்கமாகக் கொண்டு இந்த வெறியாட்டத்தை நடத்துகிறார்களோ அந்தப் போராட்டத்தை நிறுத்த முடியவில்லை. தொடர்கிறார்கள். எனவே, கலங்க வேண்டாம். களத்தில் இறங்குவோம், காவிகளை கலங்கடிப்போம்.