குடும்பம்

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 6

மார்கன் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதியை இராகோஸ் மக்கள் மத்தியில் கழித்தார். அவர்கள் நியூயார்க் மாநிலத்தில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் (செனீகா என்ற) ஒரு இனக் குழுவினர் அவரைச் சுவீகரித்து ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே இருந்த இரத்த உறவுமுறை அவர்களுடைய மெய்யான குடும்ப உறவுமுறைக்கு முரண்பட்டிருந்தது என்பதை அவர் கண்டார். திருமணம் ஒவ்வொரு ஜோடிக்கிடையே நடைபெற்றது. இரு தரப்பினரும் திருமண உறவைச் சுலபமாக ரத்து செய்து விடலாம். இதை “இணைக் குடும்பம்” என்று மார்கன் குறிப்பிட்டார். அவர்களிடம் இத் திருமண முறை விதியாக இருந்தது. இத் திருமண ஜோடியின் குழந்தைகளை எல்லாரும் அறிந்திருந்தார்கள், அடையாளம் கண்டு கொண்டிருந்தார்கள். தகப்பனார், தாயார், மகன், மகள், சகோதரன், சகோதரி என்று யார், யாரைக் குறிப்பிட வேண்டும் என்பது பற்றிச் சந்தேகம் எதுவும் எழ முடியாது. ஆனால் அச் சொற்கள் எதார்த்தத்தில் உபயோகிக்கப்பட்டதோ வேறுவிதமாக இருந்தது. ஓர் இராகோஸ் தனது சொந்தக் குழந்தைகளை மட்டும் மகன், மகள் என்று அழைப்பதில்லை; அவர் தனது சகோதரனின் குழந்தைகளையும் தன்னுடைய மகன், மகள் என்றே அழைக்கிறார். அவர்களும் அவரை அப்பா என்றே அழைக்கிறார்கள். மறுபக்கத்தில், அவர் தனது சகோதரியின் குழந்தைகளை மருமகன், மருமகள் என்று அழைக்கிறார்; அவர்கள் அவரை மாமா என்று அழைக்கிறார்கள். இதற்கு எதிரிடையாக, ஓர் இராகோஸ் பெண் தனது சகோதரிகளின் குழந்தைகளைத் தனது சொந்தக் குழந்தைகளுடன் சேர்த்துத் தன் மகன், மகள் என்றே அழைக்கிறாள்; அவர்களும் அவளை அம்மா என்றே அழைக்கிறார்கள். மறுபக்கத்தில், அவள் தன்னுடைய சகோதரர்களின் குழந்தைகளை மருமகள், மருமகன் என்று அழைக்கிறாள். அவர்கள் அவளை அத்தை என்று அழைக்கிறார்கள். இதைப் போலவே சகோதரர்களின் குழந்தைகள் ஒருவரையொருவர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று அழைத்துக் கொள்கிறார்கள்; சகோதரிகளின் குழந்தைகள் இதைப்போலவே நடந்துக் கொள்கிறார்கள். இதற்கு எதிரிடையாக, ஒரு பெண்ணின் குழந்தைகளும் அவளுடைய சகோதரனுடைய குழந்தைகளும் ஒருவரையொருவர் தமது பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் என்று அழைக்கிறார்கள். இவை அர்த்தமில்லாத வெறும் சொற்களல்ல; ஆனால் இரத்த உறவுமுறையின் நெருங்கிய மற்றும் விலகிய தன்மை, சமத்துவம் மற்றும் சமத்துவமின்மையைப் பற்றி நடைமுறையில் அமுலில் இருக்கின்ற கருத்துகளைக் குறிக்கின்ற சொற்களாகும். இக் கருத்துகள் முழுமையாக உருவாக்கப்பட்ட இரத்த உறவுமுறைக்கு அடிப்படையாகப் பயன்படுகின்றன. ஒரு தனி நபரது நூற்றுக்கணக்கிலே வேறுபட்ட உறவுகளை இது குறிப்பிட்டுச் சொல்ல முடியும். மேலும், இம் முறை எல்லா அமெரிக்க செவ்விந்தியர்களிடையிலும் முழு சக்தியுடன் அமுலில் இருப்பது மட்டுமன்றி (இதற்கு விதி விலக்கு ஏதேனும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை) இந்தியாவின் ஆதிக் குடியினர் மத்தியிலும், தக்காணப் பிரதேசத்திலுள்ள திராவிட இனக்குழுக்கள், இந்துஸ்தானத்திலுள்ள கௌரா இனக்குழுக்கள் ஆகியோர் மத்தியிலும் அநேகமாக மாற்றமின்றி நிலவி வருகிறது. தென்னிந்தியாவிலுள்ள தமிழர்கள் மத்தியிலும் நியூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா இராகோஸ்கள் மத்தியிலும் இரத்த உறவுமுறையைக் குறிக்கும் சொற்கள் இருநூற்றுக்கு மேற்பட்ட உறவுகள் விஷயத்தில் இன்றும் கூட ஒன்றையே குறிக்கின்றன. எல்லா அமெரிக்க செவ்விந்தியர்களிடையிலும் இருப்பதைப் போல, இந்தியாவிலுள்ள இந்தக்குழுக்களிடையில் இருக்கின்ற குடும்ப வடிவத்திலிருந்து தோன்றும் உறவுகள் இரத்த உறமுறைக்கு முரண்பட்டிருக்கின்றன.

இதை விளக்குவது எப்படி? காட்டுமிராண்டி நிலையிலும் அநாகரிக நிலையிலும் எல்லா மக்களினங்களின் சமூக அமைப்பிலும் இரத்த உறவுமுறை நிர்ணயமான பாத்திரம் வகிக்கிறது. அதுவே அவ்வளவு விந்து பரந்து கிடக்கின்ற ஓர் அமைப்பை வெறும் சொற்றொடர்களினால் விளக்கி விட முடியாது. பொதுவாக அமெரிக்கா முழுவதிலும் இருந்து வருகின்ற ஓர் அமைப்பு அது. ஆசியாவில் முற்றிலும் வேறுபட்ட இனத்தைச் சேர்ந்த மக்களினங்களிடையிலும் அது இருக்கிறது. அதன் ஏறத்தாழ வித்தியாசப்பட்ட வடிவங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதிலும் மண்டிக் கிடக்கின்றன. அப்படிப்பட்ட அமைப்பை வரலாற்று ரீதியாக விளக்குவது அவசியம். உதாரணமாக, மாக்லென்னான் முயற்சி செய்ததைப் போல அதைக் தட்டிக் கழிக்க முடியாது. தந்தை, குழந்தை, சகோதரன், சகோதரி என்னும் சொற்கள் வெறும் மரியாதையைக் குறிக்கின்ற பட்டங்கள் அல்ல. அவை முற்றிலும் திட்டவட்டமான, மிகவும் கறாரான பரஸ்பரக் கடைமைகளைத் தாங்கியுள்ளன. அந்தக் கடமைகளின் முழுமை இந்த மக்களினங்களின் சமூக அமைப்பில் முக்கியமான பகுதியாக இருக்கிறது. அதற்குரிய விளக்கமும் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் பிந்திய காலமான இந்த நூற்றாண்டின் முதற் பாதியில் கூட சாண்ட்விச் (ஹவாய்) தீவுகளில் ஒரு குடும்ப வடிவம் நிலவியது. அமெரிக்க மற்றும் பண்டை இந்திய இரத்த உறவுமுறைகள் கோருகின்ற அதே மாதிரியான தாய், தந்தையர்களையும் சகோதரர், சகோதரிகளையும் மருமகன், மருமகள்களையும் அது கொண்டிருந்தது. ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால், ஹவாய்த் தீவுகளில் நிலவிய இரத்த உறவுமுறையும் அங்கு எதார்த்தத்தில் நிலவிய குடும்ப வடிவத்துடன் முரண்பட்டிருந்த்து தான். அங்கே, சகோதரர், சகோதரிகளின் குழந்தைகள் எல்லோரும் விதிவிலக்கின்றி சகோதரர், சகோதரிகளாகவும் தங்களுடைய தாயார் மற்றும் அவளுடைய சகோதரிகளுடைய அல்லது தங்களுடைய தகப்பனார் மற்றும் அவருடைய சகோதரர்களுடைய பொதுவான குழந்தைகளாக மட்டுமன்றி தமது பெற்றோர்களின் எல்லாச் சகோதரர், சகோதரிகளுடைய பொதுவான குழந்தைகளாகவும் கருதப்பட்டனர். அமெரிக்க ரகத்தைச் சேர்ந்த இரத்த உறவுமுறைக்கு முன்னால் மிகவும் தொன்மையான குடும்ப வடிவம் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று கூறினால் – அது அமெரிக்காவில் இப்பொழுது இல்லை, ஆனால் ஹவாய்த் தீவுகளில் இன்னும் மெய்யாகவே இருந்து வருகிறது – மறு பக்கத்தில், ஹவாய் ரகத்தைச் சேர்ந்த இரத்த உறவுமுறை இன்னும் அதிகத் தொன்மையான ஆதிமனிதக் குடும்ப வடிவத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அது எங்காவது இன்னும் நிலவுவதாக நிரூபிக்க முடியாதென்றாலும் அது இருந்திருக்க வேண்டும்; ஏனென்றால், அது இல்லாமல் அதற்குப் பொருத்தமான ஒரு இரத்த உறவுமுறை தோன்றியிருக்க முடியாது.

“குடும்பம் என்பது இயக்கமுள்ள கோட்பாட்டைக் குறிக்கிறது. அது ஒருபோதும் இயங்காதிருப்பதில்லை. சமூகம் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு முன்னேறுகின்ற பொழுது அதுவும் கீழான நிலையிலிருந்து மேலான வடிவத்துக்கு முன்னேறுகிறது. அதற்கு மாறாக, இரத்த உறவுமுறைகள் இயக்கமற்றவை. அவை குடும்பம் அடைகின்ற முன்னேற்றத்தை நீண்ட இடைவெளி விட்டுக் குறித்து வைக்கின்றன. குடும்பம் தீவிரமாக மாற்றமடைந்து விட்ட பொழுது மட்டுமே அவையும் தீவிரமாக மாறுகின்றன” என்று மார்கன் கூறுகிறார்.

“இது அரசியல், சட்ட, சமய மற்றும் தத்துவஞான அமைப்புகளுக்கும் பொதுவாகவே பொருந்தும்” என்று மார்க்ஸ் இத்துடன் சேர்த்துச் சொல்கிறார். குடும்பம் தொடர்ந்து வளர்ந்து வரும் பொழுது இரத்த உறவுமுறை கட்டி தட்டிப் போகிறது. பின்னால் சொல்லப்பட்டது வழக்கமான வடிவத்தில் தொடர்ந்து இருக்கும் பொழுது குடும்பம் அதை மீறி வளர்ச்சியடைகிறது. பாரிஸ் நகரத்துக்கு அருகில் கண்டெடுத்த ஒரு மிருகத்தின் எலும்புக் கூட்டின் வளர்ப்புப் பை எலும்புகளைக் கொண்டு அது வளர்ப்புப் பையில் குட்டிகளை வைத்துப் பாலூட்டும் மிருகத்தின் எலும்புக் கூடு என்றும் தற்காலத்தில் இல்லாத வளர்ப்புப் பையுறுப்புள்ள அந்த மிருகம் ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் குவியே எப்படி உறுதியாக முடிவு செய்தாரோ, அதைப் போல நாமும் வரலாற்று வழியே மாற்றித் தரப்பட்ட ஒரு இரத்த உறவுமுறையைக் கொண்டு அதற்குப் பொருத்தமாக உள்ள, இன்று வழக்கில்லாத ஒரு குடும்ப வடிவம் ஒரு காலத்தில் இருந்தது என்று அதே உறுதியுடன் முடிவு செய்ய இயலும்.

இரத்த உறவுமுறைகள் என்றும் குடும்ப உறவுமுறைகள் என்றும் குடும்ப வடிவங்கள் என்றும் மேலே குறிப்பிட்டோமே, அவை இக் காலத்தில் இருந்து வருவனவற்றிலிருந்து மாறுபட்டுள்ளன. எப்படி என்றால், ஒவ்வொரு குழந்தைக்கும் சில தகப்பனார்களும் தாயார்களும் உண்டு. ஹவாய்த் தீவுகளிலுள்ள குடும்பத்துடன் பொருந்துகின்ற அமெரிக்க இரத்த உறவுமுறைப் படி, சகோதரனும் சகோதரியும் ஒரே குழந்தைக்குத் தந்தையாகவும் தாயாகவும் இருக்க முடியாது. அதற்கு மாறாக, ஹவாய்த் தீவுகளின் இரத்த உறவுமுறைப்படி பார்த்தால், இதுவே விதியாக இருந்த ஒரு குடும்பம் இருந்திருக்க வேண்டும். இது வரை பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த குடும்ப வடிவங்களுக்கு நேர் முரணாக இருக்கின்ற குடும்ப வடிவங்களின் வரிசை நம் முன்னே எதிர்ப்படுகின்றது. மரபு வழிப்பட்ட கருத்தோட்டத்துக்கு ஒருதார மண முறையும் அத்துடன் தனிப்பட்ட ஆண்கள் தரப்பில் பலதார மண முறையும் ஒருவேளை தனிப்பட்ட பெண்களின் தரப்பில் பல கணவர் மண முறையும் மட்டுமே தெரியும். அதிகாரச் சார்புள்ள சமூகம் விதிக்கின்ற வரம்புகள் நடைமுறையில் சந்தடியில்லாமல் வெட்கமில்லாமல் மீறப்படுகின்றன என்ற உண்மையை அது பேசாமல் மறைக்கிறது. ஒழுக்கம் பேசுகின்ற ஃபிலிஸ்தைன்களின் வழக்கமே இது தான். இதற்கு மாறாக, பூர்விகச் சமூகத்தின் வரலாறு பற்றிய ஆராய்ச்சி நமக்குக் காட்டுவதென்ன? ஆண்கள் பலதார மண முறையிலும் அதே சமயத்தில் பெண்கள் பல கணவர் மண முறையிலும் வாழ்கின்ற நிலைமைகளை இது வெளிப்படுத்துகிறது. ஆகவே அவர்கள் ஒவ்வொருடைய குழந்தைகளும் அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள் என்று கருதப்படுகிறது. இந்த நிலைமைகளும் தம் முறைக்கு ஒரு முழு வரிசையான மாற்றங்களுக்கு ஆளாகி, இறுதியில் ஒருதார மண முறையில் வந்து முடிகின்றன. இந்த மாற்றங்களின் தன்மை எப்படிபட்டதென்றால், பொது மணம் என்ற பிணைப்பில் உள்ள மக்கள் வட்டம் – ஆதியில் இது மிகவும் விரிவாக இருந்தது – மேன்மேலும் குறுகிக் கொண்டே வந்து கடைசியில் ஒரு ஜோடி தம்பதிகள் மட்டுமே மிஞ்சுகிறார்கள். இந்த நிலைதான் இன்று மேலோங்கியிருக்கிறது.

இவ்வாறு பின்னோக்கிச் சென்று குடும்பத்தின் வரலாற்றை நிர்மாணித்த மார்கன், தன்னுடைய சகாக்களில் பெரும்பான்மையோருடைய கருத்துக்கிணங்க, ஓர் ஆதிக் கட்டத்துக்கு வந்து சேர்ந்தார். அக்கட்டத்தில் ஒரு இனக்குழுவிற்குள் வரைமுறையற்ற புணர்ச்சி நிலவியது. ஆகவே, ஒவ்வொரு பெண்ணும் சம அளவில் ஒவ்வொரு ஆணுக்கும் சொந்தமாக இருந்தாள். அதே போல் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியவராக இருந்தான். ஆதியில் இப்ப்டிப்பட்ட நிலைமை இருந்ததைப் பற்றி சென்ற நூற்றாண்டிலிருந்தே பேச்சு இருந்திருக்கிறது. ஆனால் அது மிகவும் பொதுப்படையான பேச்சாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த நிலைமையில் அக்கறை காட்டி அதன் அடையாளக் குறிகளைப் பரம்பரையான சரித்திரக் கதைகளிலும் சமயக் கதைகளிலும் முதலில் தேடியவர் பாஹொஃபென் ஆவார். இது அவர் ஆற்றிய மாபெரும் பணிகளில் ஒன்றாகும். அவர் கண்டுபிடித்த அடையாளக் குறிகள் வரைமுறையற்ற புணர்ச்சி நிலவிய ஒரு சமூகக் கட்டத்துக்கு நம்மை இட்டுச் செல்லவில்லை, அதற்கு மிகவும் பிற்காலத்தில் நிலவிய குழுமணம் என்ற வடிவத்துக்குத்தான் நம்மை இட்டுச் சென்றன என்பதையும் இன்று நாம் அறிவோம். அந்த ஆதிகாலச் சமூகக் கட்டம் மெய்யாகவே இருந்தது என்றால் அது முன்னர் நிலவியதற்குரிய நேரடி சாட்சியங்கள் பிற்பட்ட காட்டுமிராண்டிகள் மத்தியில், சமூகப் புதை படிவங்களில் கிடைக்கும் என்று சிறிதும் எதிர்பாக்க முடியாதபடி அது அவ்வளவு தொன்மையான சகாப்தத்தைச் சேர்ந்ததாகும். இந்தப் பிரச்சினையை ஆராய்ச்சியின் முன்வரிசையில் வைத்த பெருமை பாஹொஃபெனைச்சேரும். [பாஹொஃபென் தான் கண்டுபித்த அல்லது அனுமானித்த விஷயத்தை எவ்வளவு குறைவாகப் பிரிந்து கொண்டார் என்பதற்கு இந்த ஆதிகால நிலையை அவர் பொதுமகளிர் முறை என்று வர்ணித்ததே சான்றாகும். திருமணமாகாத அல்லது ஒருதார மணம் புரிந்து கொண்ட ஆண்களுக்கும் திருமணமாகாத பெண்களுக்கும் நடந்த கலவியைக் குறிப்பதற்கு கிரேக்கர்கள் இச்சொல்லை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். சமூகத்தில் நிச்சயமான ஒரு மணமுறை வழக்கிலிருப்பதாகவும் அதற்குப் புறம்பாக இத்தகைய கலவி நிகழ்வதாகவும் இந்தச் சொல் எப்பொழுதும் உணர்த்தி வந்திருக்கிறது; குறைந்தபட்சம், நடப்பில் சாத்தியமானது என்ற அளவில் விபசார முறையையும் இச்சொல் குறிக்கும். வேறு எந்தப் பொருளிலும் இச்சொல் ஒருபோதும் உபயோகிக்கப்பட்டதில்லை. மார்கனைப் போலவே நானும் இந்தப் பொருளில்தான் இதை உபயோகிக்கிறேன். வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் ஏற்பட்ட ஆண்பெண் உறவுகள் அவ்வக்காலத்தில் மக்களுடைய வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளிலிருந்தே தோன்றின என்று பாஹொஃபென் கருதினார். ஆகவே அவ்ருடைய மிகவும் முக்கியமான கண்டுபிடிப்புகள் அவருடைய விசித்திரமான நம்பிக்கையினால் எல்லா இடங்களிலும் நம்ப முடியாத அளவுக் குழப்பப்பட்டிருக்கின்றன. (ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.)]

மனிதகுலத்தின் பாலியல் வாழ்க்கையில் இந்த ஆரம்பக் கட்டம் இருந்ததை மறுப்பது சமீப காலத்தில் வழக்கமாகி விட்டது. மனிதகுலத்தை இந்த “அவமானத்திலிருந்து” பாதுகாப்பது இதன் நோக்கமாகும். இதற்கு நேரடி சாட்சியங்கள் இல்லை என்று கூறுவதுடன் மற்ற மிருகராசிகளின் உதாரணத்தையும் குறிப்பிடுகிறார்கள். லெதூர்னோ மிருகங்களிலிருந்து எண்ணற்ற விவரங்களை திரட்டினார் (திருமணம், குடும்பம் ஆகியவற்றின் பரிணாமம், 1888). மிருகராசியிலும் கூடப் பூரணமாக வரைமுறையற்ற புணர்ச்சி என்பது அதன் கீழ்நிலைக் கட்டத்துக்கு உரியது என்று அந்த விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றனவாம். எனினும் இந்த விவரங்கள் அனைத்தையும் கொண்டு நான் செய்யக் கூடிய ஒரே முடிவு இதுதான்; மனிதனையும் அவனுடைய ஆதிகால வாழ்க்கை நிலைமைகளையும் பொறுத்தமட்டில் இந்த விவரங்கள் எதையும் சிறிதளவும் நிரூபிக்கவில்லை. முதுகெலும்புள்ள மிருகங்கள் நெடுங்காலம் ஜோடியாக இணைந்திருப்பதை உடலியல் காரணங்களைக் கொண்டு விளக்கி விட முடியும். உதாரணமாக, பறவைகளில், பெண் பறவைக்கு அடை காக்கும் காலத்தில் துணை தேவைப்படுகிறது. மாறாத ஒரு தார மணத்துக்குப் பறவையினத்திலிருந்து உதாரணங்கள் தருவது மனிதர்களைப் பொறுத்தமட்டில் எதையும் நிரூபிக்காது; ஏனென்றால் மனிதர்கள் பறவையினத்திலிருந்து தோன்றவில்லை. மாறாத ஒரு தார மணம் தான் நற்பண்பின் உச்சியைக் குறிக்கும் என்று கருதுவதனால் அப்பொழுது நாடாப்புழுக்குத்தான் முதல் பரிசு கொடுக்க வேண்டும். அதன் உடம்பு முழுவதும் ஐம்பது முதல் இருநூறு வரை தனிப்பகுதிகளாக அமைந்திருக்கிறது; அந்த ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியே ஆண் பிறப்புறுப்பு, பெண் பிறப்புறுப்பும் ஜோடியாக இருக்கின்றன. நாடாப்புழு தன் ஒவ்வொரு பகுதியிலும் தனக்குள்ளே புணர்ச்சி செய்தபடி தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்கிறது. பாலூட்டி வளர்க்கும் மிருக இனத்தை மட்டும் எடுத்துக் கொள்வதென்றால், அவற்றிடையே வரைமுறையற்ற புணர்ச்சி, குழு மணத்தின் சூசகங்கள், பலதார மணம், ஒருதார மணம் ஆகிய பாலியல் வாழ்க்கை சம்பந்தப்பட்ட எல்லா வடிவங்களையும் நாம் காண்கிறோம். பல கணவர் மணமுறை ஒன்று மட்டுமே இல்லை. இதை மனித இனம் ஒன்று தான் சாதிக்க முடிந்தது. நமது மிக நெருங்கிய உறவினர்களான நான்கு கைக் குரங்குகளும் கூட ஆணும் பெண்ணும் குழுவாக இணைவதில் சாத்தியமான சகல வேறுபாடுகளையும் புலப்படுத்துகின்றன. மேலும், இன்னும் நெருங்கி வந்து நான்கு மனிதக் குரங்கு வகைகளை மட்டும் எடுத்துக் கொள்வதென்றால், அவை சில சமயங்களில் ஒருதார மண முறையிலும் சில சமயங்களில் பலதார மண முறையிலும் வாழ்கின்றன என்று மட்டுமே லெதூர்னோவினால் சொல்ல முடிகிறது. ஆனால் ஜிரோடெய்லோன் மேற்கோள் காட்டிய சோஸ்யூர் அவை ஒருதார மண வாழ்க்கையில் இருக்கின்றன என்று வலியிறுத்துகிறார். வெஸ்டர்மார்க் என்பவர் தான் எழுதிய மனித இனத் திருமணத்தின் வரலாறு (லண்டன், 1891) என்ற நூலில் மனிதக் குரங்குகளிடையில் ஒருதார மண முறை இருப்பதாக சமீப காலத்தில் வலியுறுத்தியவையும் எவ்விதத்திலும் நிரூபணம் ஆகி விட முடியாது. சுருக்கமாகச் சொன்னால், “மற்றபடி, பாலூட்டி வளர்க்கும் பிராணிகளிடையில் அறிவு வளர்ச்சியின் அளவுக்கும் பாலுறவு வடிவத்துக்கும் இடையில் கறாரான சம்பந்தம் எதுவும் அறவே இல்லை” என்று நேர்மையான லெதூர்னோ ஒத்துக் கொள்கின்ற முறையில்தான் அந்தச் செய்திகள் உள்ளன.

மேலும், எஸ்பினாஸ் என்பவர் (மிருகச் சமூகங்கள், 1877) பட்டவர்த்தனமாகச் சொல்லி விடுகிறார்: “மிருகங்களிடையே பார்க்கக் கூடிய உன்னதமான சமூகக் குழு மந்தை என்பதாகும். அது குடும்பங்களைத் தன்னுள் கொண்டு அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது; ஆனால் ஆரம்ப முதலாகவே குடும்பமும் மந்தையும் ஒன்றுக்கொன்று முரண்பாட்டில்தான் இருக்கின்றன; குடும்பம் வளர்ந்தால் அந்த அளவுக்கு மந்தை சுருங்குகிறது, மந்தை வளர்ந்தால் அந்த அளவுக்கு குடும்பம் சுருங்குகிறது.” மனிதக் குரங்குகளின் குடும்பங்கள், இதர சமூகக் குழுக்கள் சம்பந்தமாக நமக்கு இறுதி முடிவாக எதுவுமே தெரியாது என்பதை மேற்கூறியவை எடுத்துக் காட்டுகின்றன. செய்திகள் ஒன்றுக்கொன்று நேர்முரணாக இருக்கின்றன. இதில் ஆச்சரியப்படுதற்குமில்லை. காட்டுமிராண்டி நிலையிலுள்ள மனித இனக்குழுக்களைப் பற்றி நமக்குக் கிடைத்துள்ள செய்திகள் கூட எவ்வளவு முரண்பாடாகவும், விமர்சன முறையில் பரீசீலிக்க வேண்டியவையாகவும் சலித்துப் பார்க்க வேண்டியவையாகவும் இருக்கின்றன! ஆனால் குரங்குச் சமூகங்களை ஆராய்வது மனிதச் சமூகங்களை ஆராய்வதை விட அதிகக் கடினமாகும். ஆகவே இப்படிப்பட்ட அறவே நம்ப முடியாத செய்திகளிலிருந்து பெறக் கூடிய ஒவ்வொரு முடிவையும் நாம் தற்சமயத்துக்கு நிராகரிக்க வேண்டும்.

எனினும் எஸ்பினாசிடமிருந்து காட்டிய மேற்கோள் இன்னும் சிறப்பான குறிப்பு ஒன்றைத் தருகிறது. உயர்தர மிருகங்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற பொறாமை கூடிவாழும் ஒவ்வொரு மந்தையையும் எப்படி கட்டுத்தளரச் செய்கிறது அல்லது தற்காலிகமாகக் கலைத்து விடுகிறது என்று எஸ்பினாஸ் துல்லியமாக வர்ணிக்கிறார். “எங்கே குடும்பம் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறதோ, அங்கே மந்தைகள் அபூர்வமான விதிவிலக்குகளாக இருக்கின்றன. மறு பக்கத்தில், எங்கே சுயேச்சையான புணர்ச்சி அல்லது பலதார மணம் நிகழ்வது விதியாக இருக்கிறதோ, அங்கே அநேகமாக இயல்பாகவே மந்தை சேர்கிறது.. .. .. மந்தையாகச் சேர வேண்டுமென்றால், அதற்குக் குடும்ப உறவுகள் தளர்த்தப்பட்டிருக்க வேண்டும், தனிப்பட்ட சுதந்திரம் மறுபடியும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் நாம் பறவைகள் மத்தியில் ஒன்று சேர்ந்த கூட்டங்களைப் பார்ப்பது அபூர்வம்.. .. .. மறுபக்கத்தில், பாலூட்டி வளர்க்கும் மிருகங்களிடையில் அநேகமாக ஒன்றுதிரண்ட சமூகங்களைப் பார்க்கிறோம். இங்கே தனி மிருகம் குடும்பத்திற்குள் ஐக்கியமாகி விடுவதில்லை என்பதே இதற்குக் காரணம்.. .. .. ஆக, அது தொடங்கும் பொழுது மந்தையின் கூட்டு உணர்ச்சிக்குக் குடும்பத்தின் கூட்டு உணர்ச்சியைக் காட்டிலும் பெரிய எதிரி வேறு இருக்க முடியாது. நாம் பின்வருமாறு சொல்லத் தயங்க வேண்டியதில்லை: குடும்பத்தைக் காட்டிலும் உயர்ந்த சமூக வடிவம் பரிணமித்திருக்கிறது என்றால், அது அடிப்படையான மாற்றங்களுக்கு உள்ளான குடும்பங்களைத் தன்னுள் சேர்த்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையே அதற்கு ஒரே காரணமாகும். இதே காரணத்தினால் தான் இந்தக் குடும்பங்கள் முன்னை விட மிகவும் சாதகமான சூழ்நிலைமைகளில் பின்னர் தம்மைத் திருத்திக் கொள்ள முடிந்ததும் சாத்தியமாயிற்று” [எஸ்பினாஸ் எழுதிய முன்குறிப்பிட்ட நூல்; இதை ஜிரோ-டெய்லோன் தாம் எழுதிய திருமணம், குடும்பம் ஆகியவற்றின் தோற்றம் (1884) என்ற நூலில் 518-520 ஆம் பக்கங்களில் மேற்கோள் காட்டுகிறார்].

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
  4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
  5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s