குரானின் காலப்பிழைகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨

குரான் என்பது எல்லாவற்றின் மீதும் அனைத்துவித ஆற்றலையும் கொண்டிருக்கும் மீபெரும் சக்தியான அல்லா முகம்மதுவுக்கு வழங்கியது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. அதனால்தான் அதில் எந்தஒரு முரண்பாடும் இருக்கமுடியாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைப் பாத்திரமான குரானிலிருந்து சில வசனங்கள்,

………உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன் என்று கூறினான். குரான் 7:124

…….. மற்றவரோ, சிலுவையில் அறையப்பட்டு அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித்திண்ணும் ……….. குரான் 12:41

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்து ……… குரான் 7:54

பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை ……….. அதில் அவறின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்……. இரண்டு நாட்களில் அவறை ஏழு வானங்களாக ஏற்படுத்தினான்……… குரான் 41:9,10,12

இந்த வசனங்களில் ஒன்றுக்கு இன்னொன்று முரணான கால அளவீடுகள் இடம்பெற்றிருக்கின்றன. முரணான காலங்களை குறித்ததனால் இந்த வசனங்களைப் புனைந்தது, குரானை எழுதியது அனைத்தும் அறிந்த ஒருவராக இருக்கமுடியாது அதாவது அல்லா என்ற ஒரு சக்தி கிடையாது முகம்மது தன்னுடைய ஆக்கங்களை எற்புடையதாக ஆக்குவதற்காக பயன்படுத்திய கற்பனைதான் அல்லா என்பது வெளிப்படுகிறது.

இவற்றில் முதல் இரண்டு வசனங்களில் சிலுவை பற்றிய குறிப்பு இருக்கிறது. 7:124 வசனம் எகிப்தில் மன்னனாய் இருந்த ஃபிர் அவ்ன் கூறுவதாக வருகிறது. அந்த நேரத்து இறைவனின் தூதரான மூஸாவுடன் (மோசஸ்) போட்டியிட சில வித்தைக்காரர்களை வரவழைக்க, அவர்களோ மூஸாவின் வித்தையைப் பார்த்து நீயே பெரியவன் என்று மூஸாவை ஏற்றுக்கொள்ள அந்த ஆத்திரத்தில் அவர்களை எச்சரிக்கும் விதமாக அம்மன்னன் இப்படி கூறுகிறான். 12:41 வசனம் இன்னொரு இறைத்தூதரான யூசுப் (ஜோசப்) சிறையில் அடைபட்டிருக்க, அவருடன் சிறையிலிருந்தவர்கள் தங்கள் கண்ட கனவுக்கு விளக்கம் கேட்க, அவர்களின் கனவுக்கு யூசுப் கூறும் விளக்கமாக வருகிறது. இவர் மூஸாவைவிட காலத்தால் முந்தியவர்.


இந்த இரண்டு வசனங்களிலும் சிலுவை தண்டனையாக சொல்லப்பட்டிருக்கிறது. பண்டைய காலத்தில் சிலுவைத்தண்டனை என்பது மரண தண்டனையை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்ட ஒரு வழிமுறை. இந்த தண்டனையைப் பற்றி குரான் எந்தக் காலத்தில் குறிப்பிடுகிறது என்பதில் தான் பிழை இருக்கிறது.  ஃபிர் அவ்ன் என்று மதவாதிகளால் அழைக்கப்படும் இரண்டாம் ரமோஸஸ் எனும் மன்னனின் காலம் கிமு 1279ல் இருந்து கிமு 1213 வரை. யூசுப் என்பவரின் காலம் குறித்து அறிந்து கொள்ள வழி எதுவும் இல்லை என்றாலும் இரண்டாம் ரமோஸஸ் காலத்திற்கு சற்றேறக்குறைய 300 ஆண்டுகள் முந்தியதாக இருக்கலாம். தோராயமாக கிமு 1600 க்கும் கிமு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை முறை இருந்தது என்று குரான் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அறியப்பட்ட முதல் சிலுவைத்தண்டனை பெர்சியர்களால் ஏற்படுத்தப்பட்டது. பெர்சிய (இன்றைய ஈரான்) மன்னனான முதலாம் டேரியஸ் எனும் மன்னனால் கிமு 519 ல் தரப்பட்டதுதான் வரலாற்றில் அறியப்பட்ட முதல் சிலுவைத்தண்டனை. ஆனால் குரான் இதற்கு சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சிலுவைத் தண்டனை இருந்ததாகக் குறிப்பிடுகிறது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஏசு என்று ஒருவர் இருந்ததாகவும், அவர் மக்களினிமித்தம் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கதைப்பது கிருஸ்தவர்களின் நம்பிக்கை. இதைச் செவியுற்ற முகம்மது, தன்னுடைய குரானில் தகுந்த இடத்தில் பயன்படுத்திக்கொண்டார். காலம் குறித்த தெளிவு அவரிடம் இல்லாததால்தான் குரானில் காலக் குறிப்புகள் பெரும்பாலும் இடம்பெறவில்லை. அதே தெளிவின்மையால் பிற்காலத்தில் செவியுற்ற சிலுவைத் தண்டனை முறையை காலத்தால் முற்பட்ட சிலருக்கு பொருத்திவிட்டார்.

அடுத்த இரண்டு வசனங்களில் 7:54 ல் வானங்களையும் பூமியையும் படைக்க ஆறு நாட்களை எடுத்துக்கொண்டதாகவும், அடுத்து குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களில் தனித்தனியாக பூமியை படைக்க இரண்டு நாட்களும், அதில் உணவு வகைகளை படைக்க நான்கு நாட்களும் வானங்களைப் படைக்க இரண்டு நாட்களும் என்று மொத்தம் எட்டு நாட்களும் குறிப்பிடப்படுகிறது. அதாவது மொத்தமாக கூறுமிடத்தில் ஆறு நாட்கள் என்றும் தனித்தனியாக கூறுமிடத்தில் எட்டு நாட்கள் என்றும் இருக்கிறது.

வானங்கள் பூமி என்று மட்டும் இவ்வசனங்களில் கூறினாலும் வேறு சில வசனங்களில் வானங்களும் பூமியும் அதற்கு இடையிலுள்ளதும் என்றும் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் மொத்த பிரபஞ்சமும் ஆதிமுதல் ஆறு நாட்களில் படைத்து முடிக்கப்பட்டுவிட்டது என்பது. ஆனால் பிரபஞ்சத்தில் இன்னும் கூட புதுப்புது விண்மீன்களும், கோள்களும் தோன்றிக்கொண்டிருக்கின்றன; நெபுலாக்கள் சிதறிக்கொண்டிருக்கின்றன; கருந்துளைகள் பருப்பொருட்களை இல்லாமல் செய்துகொண்டிருக்கின்றன. ஆறு நாட்களிலோ, எட்டு நாட்களிலோ தொடக்கத்தில் படைத்து முடித்துவிடப்பட்டது என்றால் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் கோள்களையும், பருப்பொருட்களையும் எந்த நாட்கணக்கில் சேர்ப்பது? அல்லது படைப்பது தொடர்கிறது என்றால் ஆறு நாள் எட்டு நாள் என்பது எந்தக்கணக்கில் கூறப்பட்டது?

முதல் இரண்டு நாட்களில் பூமி படைக்கப்பட்டது என்றால் எந்த அடிப்படையில் நாட்கள் கணக்கிடப்பட்டது? ஏனென்றால் பூமி படைக்கப்பட்டு அதில் உணவு வகைகளுக்காக நான்கு நாட்களைச் செலவு செய்து அதன்பிறகுதான் வானமும் ஏனையவையும் வருகின்றன. வானம் படைக்கப்படாமல் அதில் சூரியன் படைக்கப்படாமல் எந்த மையத்தில் பூமி சுழன்று நாட்கள் கணக்கிடப்பட்டது? (வானமா பூமியா எது முதலில் படைக்கப்பட்டது என்பது குறித்து ஏற்கனவே எழுதப்பட்டதையும் இதனுடன் சேர்த்து படித்துக்கொள்ளவும்) பூமி உருவாகி பல கோடி ஆண்டுகள் நெருப்புக்கோளமாக சுற்றிக்கொண்டிருந்ததை எந்தக்கணக்கில் சேர்ப்பது?

குரானில் பல இடங்களில் ஆறு நாட்களில் அனைத்தும் படைக்கப்பட்டது என்று முகம்மது கூறியிருந்தாலும், தனித்தனியாக கூறும் போது இரண்டு நாட்களை அதிகமாக கூறி முரண்பட்டிருக்கிறார், காரணம் குரானை அவர் சீராக ஒரே தடவையில் சொல்லி முடித்துவிடவில்லை. பல தடவைகளில் சற்றேறக்குறைய இருபத்து மூன்று ஆண்டுகளில் படிப்படியாக கூறியதுதான், அதிலும் அறிவியலோடு ஒரு தொடர்பும் இல்லாமல்.

ஆக எல்லாம் அறிந்த ஒரு சக்திதான் முகம்மதுவுக்கு குரானைக் கொடுத்தது என்பது கற்பனையானது. அவர் தன் கற்பனையை குரானாகத் தந்தார் என்பதே மெய்யானது.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

35 thoughts on “குரானின் காலப்பிழைகள்

  1. //குரானில் பல இடங்களில் ஆறு நாட்களில் அனைத்தும் படைக்கப்பட்டது என்று முகம்மது கூறியிருந்தாலும், தனித்தனியாக கூறும் போது இரண்டு நாட்களை அதிகமாக கூறி முரண்பட்டிருக்கிறார், // இந்த ஆறு நாள் படைப்பு என்பது பைபிளில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஆதியாகமம் – அதிகாரம் 1 (Genesis – Chapter 1) பார்க்கவும்.

    //ஆக எல்லாம் அறிந்த ஒரு சக்திதான் முகம்மதுவுக்கு குரானைக் கொடுத்தது என்பது கற்பனையானது. அவர் தன் கற்பனையை குரானாகத் தந்தார் என்பதே மெய்யானது// குரானின் பெரும்பகுதி பைபிளிலிருந்து கலவாடப்பட்டதுதான். முகமது செவிவழியாகக் கேள்விப்பட்டத்தாலும் தனக்கு ஏற்றார்போல சில திருத்தங்களைச் செய்ததாலும்தான் இத்தனை குளறுபடி.

  2. //அல்லா என்ற ஒரு சக்தி கிடையாது முகம்மது தன்னுடைய ஆக்கங்களை எற்புடையதாக ஆக்குவதற்காக பயன்படுத்திய கற்பனைதான் அல்லா என்பது வெளிப்படுகிறது.//
    அல்லா என்பவர் அன்றைய அரேபியா பாகன் கடவுள்களில் ஒருவர். இந்த அல்லாவைத்தான் முகமது தன வசதிக்கேற்பப் பயன்படுத்திக்கொண்டார்.

    http://www.faithfreedom.org/Articles/skm30804.htm

  3. //செங்கொடி, மேல் ஜனவரி8, 2010 இல் 10:34 AM சொன்னார்:

    செங்கொடி தளத்திற்கும் பிஜே அவர்களின் தளத்திற்கு பாலமாக செயல்பட்ட நண்பர் இனிமை அவர்களுக்கு நன்றி.

    நேரடி விவாதத்தின் குறைகளாக நான் குறிப்பிட்டிருந்தவைகளை நேர்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யலாம் என அறிவித்ததற்கும், பரிசீலனைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்கும் பிஜே அவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி.

    நான் இந்தியாவில் இல்லை என்பதாலும், தேதி குறித்து ஊர்வரும் அளவிற்கு நான் மேல்நிலை ஊழியனாக இல்லாததாலும், விடுப்பிற்கான காலம் இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் இருப்பதாலும் இப்போது நாள் குறிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். என்றாலும் இன்னும் ஆறு மாதத்திற்குள் ஊர் வர முயற்சிக்கிறேன். அது சமயம் நண்பர் இனிமைக்கோ அல்லது நேரடியாக பிஜே அவர்கள் தளத்திற்கோ தகவல் தெரிவிக்கிறேன்.

    இப்படி ஒரு ஏற்பாட்டிற்கு முனைந்த தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    தோழமையுடன்
    செங்கொடி//

    தோழர் செங்கொடி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்..

    தாங்கள் மேலே குறிப்பிட்டதன் படி ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஊர் வரும் யோசனையில் இருக்கிறீர்களா. எப்போது என்பதை தெரிவித்தால் மேற்கொண்டு விவாத சம்பந்தமாக நாம் சில முன்னேற்பாடுகளை செய்து கொள்ள ஏதுவாக இருக்கும். அதாவது விவாத தலைப்பு, இடம், நாள் மற்றும் தாங்கள் தயங்கிய சில குறைகளை நிவர்திசெய்துகொள்ளல் போன்றவைகளை முறைபடுத்திகொள்ள வசதியாக இருக்கும்.

    இன்னும் தாமதமாகும் என்றாலும் பரவாயில்லை விவாத ஒப்பந்தத்தை இப்போதே நாம் செய்துகொள்ளலாம்.

    தங்கள் பதிலை இங்கு தெரிவித்தாலோ அல்லது பீஜெயையோ, TNTJ நிர்வாகிகளையோ தொடர்புகொண்டு ஏற்பாடு செய்துகொண்டாலும் நல்லது.

    தங்கள் மறுமொழியை மிக்க ஆவலுடன் எதிபார்த்து,

    இனிமை.

  4. தோழர் செங்கொடி!

    சூரியன் கிழக்கில் உதிப்பதையும், மேற்கில் மறைவதையும் ஒரே திசையில் நடந்த ஒருவர் பார்த்ததாக பீஜே ஒரு உரையில் உளரி வைத்திருக்கிறார்!, பார்த்து சிரிப்பு தாங்க முடியல!
    அவரெல்லாம் ஒரு ஆள்ன்னு நேர்ல பார்க்கனுமா?
    நான் தான் ஈரோட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டுகிட்டே இருக்கேனே! ஒருத்தரும் வரக்காணோம்!

  5. வால்,

    அன்றே சுமார் 6 மாதத்திற்கு முன்பே TNTJ அலுவலகத்திற்கு நேரில் செல்லும் என்று முகவரியெல்லாம் தந்தேனே. இன்னுமா நீர் செல்லவில்லை.

    வேலைவெட்டி இல்லாமல் தனிஒருவர் தானே நேரில் சென்னை சென்றுருக்கலாமே என்று நினைத்தேன். பரவாயில்லை. TNTJ யை நேரில்வர கேட்டுக்கொள்கிறேன்.

  6. //வேலைவெட்டி இல்லாமல் தனிஒருவர் தானே நேரில் சென்னை சென்றுருக்கலாமே என்று நினைத்தேன். பரவாயில்லை. TNTJ யை நேரில்வர கேட்டுக்கொள்கிறேன்.//

    நான் தனி ஆள் தான், ஆனா சுயமரியாதை அதிகம், நான் யாரையும் தேடி போக வேண்டியதில்லை, தேவைன்னா என்னை பார்க்க இங்க வரணும்!

  7. வால்,

    பின் வாய்ச்சவடால் விடாமல் பொறுத்திரும். விரைவில் பதில் தருகிறேன்.

    உம்மை அன்றே கூப்பிட்டதற்கு ஆதாரமாக கீழேயுள்ள சுட்டியை ஒருமுறை
    பார்த்துவையும். யாரும் வரவில்லை என்று கூப்பாடுபோடாதீர். உம்முடைய உளறல்களுக்கு விரைவில் முடிவு கட்டுவோம்.

    http://onlinepj.com/vimarsanangal/nonmuslim_vimarsanam/nathikarin_kelviyum_namathu_pathilum/

  8. அது பதிலாக்கும்!

    ஒரு அணு உண்டானதற்கும், ஆறே நாளில் உலகை படைத்ததற்கும் என்னாய்யா சம்பந்தம் இருக்கு! உளருவது நானா, பிஜேவா!?

  9. நண்பர் செங்கொடி அவர்களுக்கு,

    இறைவனின் அருள் கிடைக்கட்டும். இப்படியே மறைந்து மறைந்து எழுதுவதை விடுத்து நேரில் விவாதிக்க வாருங்கள்.TNTJ தலைமை உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் வந்து செல்லும் செலவு, தங்கும் செலவு, உணவு ஆகிய அனைத்தையும் இறைவன் நாடினால் நானே ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் விவாதம் செய்வதற்கு முன்னாள் நேரடியாக மாநகர கமிஷ்னரைச் சந்திக்க நானே ஏற்பாடு செய்கிறேன். நாம் இருவரும் ஆணையாளரைச் சந்தித்து அதே இடத்தில் நீங்கள் என் மீது முன் புகார் அளிக்கலாம் அல்லது TNTJ தலைமை மீது முன்புகார் அளிக்கலாம். அதாவது என் மீது சிறுகீறல் விழுந்தாலும் இவர்கள் தான் பொறுப்பு என்ற ரீதியில் அந்த புகார் அமையவேண்டும். நீங்களே இடத்தை தேர்வு செய்யுங்கள். எத்தனை பேரை வேண்டுமானாலும் உங்களுடன் விவாதிக்க‌ இணைத்துக் கொள்ளுங்கள். விவாதத்தை பொருத்தவரை இரு அணியிலும் சமஅளவில் பார்வையாளர்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். உங்களின் இதுபோன்ற கேள்விகளையெல்லாம் அடுக்கிவையுங்கள். நேரடியாக களமிறங்குங்கள்.அதை விடுத்து சிவப்புக்கொடிக்குள் மறைந்து கொண்டு தேவையான இடத்தை மட்டும் எடிட் செய்து கொண்டு உங்களின் வழக்கமான வேலைகளைச் செய்யாதீர்கள். இப்படி நீங்கள் செய்வதால் நீங்கள் செங்கொடியை போர்த்திக் கொண்டு திரியும் காவிக்குழும செயலாளர் என்ற எங்களின் சந்தேகம் மேலும் வலுவடைகிறது.

    விவாதம் முழுக்க முழுக்க நேரங்காட்டியுடன் ஒளிப்பதிவு செய்யப்படும். அதிலே ஒரு பிரதி உங்களுக்கும் வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு என் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

    mail2nijam@gmail.com

    எந்த விமானம் என்பதையும், என்ன தேதி என்பதையும் முன்கூட்டியே தெரியப்படுத்தி நீங்கள் உண்மையாளர் என நிறுபிக்கவும்.

    அல்லது TNTJ அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
    30, அரண்மனைக்காரன் தெரு,
    மண்ணடி, சென்னை-1
    போன்- 91 044 25215226

  10. குரானுக்கும் காலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.குரான் தோன்றிய காலத்தையே அதில் இருந்து காட்ட முடியாது .சம காலத்து அரசியல் நிகழ்வுகள் எதுவும் ஐயத்திற்கு இடமில்லாமல் காட்டப் படவில்லை.
    ச‌ரி க‌ட‌ந்த‌ கால‌ம் ,ச‌ம‌ கால‌ம் விடுங்க‌ள்.எதிர்கால‌ம் குறித்து பேசுவோம்.

    யூதர்களின் இனவெறி பிடித்த கடவுளை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்வது எப்படி என்றெ தெரியவில்லை.கி பி 600 வரை யூதர்களுக்கு அடியாள் ஆக இருந்த ஒரு கடவுள் எப்படி அரபிக்களுக்கு(நண்பர்கள் முஸ்லிம்கள் என்பார்கள்)ரட்சகன் ஆனார்?.
    குரான் யூதர்களை மிக வருந்தி அழைத்தும்(இன்று வரை) அவர்கள் அதை கண்டு கொள்ள வில்லை.

    சரி இஸ்ரேல் குறித்து கிறித்தவர்களும் யூதர்களும் தீர்க்க தரிசனத்தில் கூறியதாக கூறிகிறார்கள்.மனித விரோதக் கொள்கையான‌ zionism கொண்டவர்களும் அதே கடவுளின் பெயரால் பாலஸ்தீனர்களின் நாட்டை அபகரிக்கிறார்கள். அர‌பிக்க‌ள் இஸ்ரேல் யுத்த‌த்தில் கூட‌ அந்த‌ அடியாள் அவ‌ர்க‌ளுக்கு உத‌வி செய்த‌தாக‌ கூறுகிறார்க‌ள்.
    அந்த‌ க‌ட‌வுள் ஏதாவ‌து பால‌ஸ்தின‌ர்கள்,இஸ்ரேல் (யூதர்கள் என்று பொது வாக சொல்லக்கூடாது) நாடு குறித்து ஏதாவது கூறியிருக்கிறாரா?.

  11. நான் இட்ட பின்னூட்டம் எங்கே தோழரே?? இதிலிருந்தே தெரிகிறதே உங்களின் காவி எஜமான விசுவாசம். அடச்சீ.. வெக்கக்கேடு. தைரியமிருந்தால் என் பின்னூட்டத்தை வெளியிட்டு அதற்கு பதில் கூறுங்கள் தோழரே! அல்லது செங்கொடியை காவிக்கொடி என மாற்றிக்கொள்ளுங்கள். என் முந்தைய பின்னூட்டத்தை வெளியிடாவிட்டால் அதை வைத்து நான் ஒரு பதிவு போட நேரிடும்..

  12. நண்பர் இனிமை,

    நான் ஊர் திரும்புவது இன்னும் முடிவாகவில்லை. முடிவானதும் நீங்கள்தான் அப்போதும் பாலமாக இருக்கப்போகிறீர்கள். நானும் மிக ஆர்வமாகவே இருக்கிறேன். விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன்.

    நண்பர் நிஜாம்,

    நீங்கள் செங்கொடி தளத்தில் இப்போது தான் முதன் முதலில் பின்னூட்டம் இடுகிறீர்கள் என கருதுகிறேன். அல்லது வேறு பெயரில் இட்டிருக்கலாம். முதல் பின்னூட்டம் நான் ஒப்புதல் தராதவரை வெளிவராது. ஒரு முறை ஒப்புதல் தந்துவிட்டால் பின்னர் என் ஒப்புதலின்றியே வெளிவரும். எளிய விதியான இது உங்களுக்கு தெரியாதது ஆச்சரியம் தான். மற்றப்படி உங்கள் உணர்ச்சி வசப்படல் கண்டு நகைக்கலாம், பதிலளிக்க அதில் ஒன்றுமில்லை.

    நண்பர் வால் பையன்,

    என்ன செய்வது? நமது நண்பர்கள் தான் அவரைச் சென்று பார்க்காவிட்டால் அது கோழைத்தனம் என்று வீரத்திற்கு புது இலக்கணம் படைக்கிறார்களே. திராவிடர் கழக நண்பர்களுக்கு கூட முதலில் எழுத்தில்தான் பதில் சொன்னார்கள், இன்னும் யார் யாருக்கெல்லாமோ பதில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நேரில் வந்தால் தான் ஆயிற்று என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். மறைந்திருந்து, ஒழிந்திருந்து, காவிக்கொடி, காழ்ப்புணர்ச்சி, அறைகுறை அறிவு, அறியாமை, கோழைத்தனம், பிரபலமடையும் முயற்சி என்று வார்த்தைகளை தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் பதிலை மட்டும் கவனமாக தவிர்த்து விடுகிறார்கள்.

    தோழமையுடன்
    செங்கொடி

  13. நண்பர் செங்கொடி,

    தங்கள் பதிலுக்கு நன்றி.

    வாலின் ஓவர் அலட்டலுக்கு அவர் போக்குலேயே பதிலளித்தேன். மற்றபடிக்கு நான் அதிகமாக வார்த்தையில் விளையாடவில்லை. எப்பொழுதோ கூப்பிட்டதற்கு வராமல் கூக்குரலிட்டது அவர் தான். ஆன்லைன் பீஜேயில் இது சம்பந்தமாக வைத்திருக்கிறேன். பதில் வந்ததும் தெரிவிப்பேன்.

  14. ஆஹா, அருமையான பதிவு.
    //ஆறு நாட்களிலோ, எட்டு நாட்களிலோ தொடக்கத்தில் படைத்து முடித்துவிடப்பட்டது என்றால் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் கோள்களையும், பருப்பொருட்களையும் எந்த நாட்கணக்கில் சேர்ப்பது? அல்லது படைப்பது தொடர்கிறது என்றால் ஆறு நாள் எட்டு நாள் என்பது எந்தக்கணக்கில் கூறப்பட்டது?//

    முக்கியமான கேள்வி. இந்த கேள்வி பைபிளுக்கும் பொருந்தும். ராபின் இதற்கு பதில் கூறுவாரா? அல்லது பைபிள் உளறல் என்று ஒத்துகொள்வாரா?

    //முதல் இரண்டு நாட்களில் பூமி படைக்கப்பட்டது என்றால் எந்த அடிப்படையில் நாட்கள் கணக்கிடப்பட்டது? ஏனென்றால் பூமி படைக்கப்பட்டு அதில் உணவு வகைகளுக்காக நான்கு நாட்களைச் செலவு செய்து அதன்பிறகுதான் வானமும் ஏனையவையும் வருகின்றன. வானம் படைக்கப்படாமல் அதில் சூரியன் படைக்கப்படாமல் எந்த மையத்தில் பூமி சுழன்று நாட்கள் கணக்கிடப்பட்டது? (வானமா பூமியா எது முதலில் படைக்கப்பட்டது என்பது குறித்து ஏற்கனவே எழுதப்பட்டதையும் இதனுடன் சேர்த்து படித்துக்கொள்ளவும்) பூமி உருவாகி பல கோடி ஆண்டுகள் நெருப்புக்கோளமாக சுற்றிக்கொண்டிருந்ததை எந்தக்கணக்கில் சேர்ப்பது?//

    மிக அருமையான கேள்வி. பிரபஞ்சம் தோன்றி பல கோடி ஆண்டுகளாக பூமி தோன்றவே இல்லை. அதுமட்டுமல்ல, சூரியனும் தோன்றவே இல்லை. தற்போதைய சூரியன் முன்பு இருந்த ஒரு சூரியன் வெடித்து உடைந்து மீண்டும் சேர்ந்ததினால்தான் உருவானது. முன்பு இருந்த சூரியன் வெடித்ததில் சிதறிய தனிமங்களே அங்கங்கு சேர்ந்து இப்படி கிரகங்களாக ஆகியிருக்கின்றன.

    ஆனால் பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்தே மாதங்கள் பன்னிரண்டு என்று குரான் உளறுகிறது. மாதம் என்பது சந்திரன் பூமியை சுற்றிவரும் காலம். சூரியனே இல்லை, பூமியே இல்லை. சந்திரனே இல்லை என்னும்போது மாதம் எங்கிருந்து வந்தது?

    பாவம் முகம்மது.

  15. //முக்கியமான கேள்வி. இந்த கேள்வி பைபிளுக்கும் பொருந்தும். ராபின் இதற்கு பதில் கூறுவாரா? அல்லது பைபிள் உளறல் என்று ஒத்துகொள்வாரா?// இந்தக் கேள்வி பைபிளுக்கும் பொருந்தும், ஆனால் இந்தப் பதிவு குரானைப் பற்றியது, எனவே இஸ்லாமியர்கள் முதலில் பதிலளிக்கட்டும். நான் இதில் பின்னூட்டமிட்டது குரானின் பெரும்பகுதி என்பது பைபிளிருந்து திருடப்பட்டது என்ற கருத்தை பதிவு செய்யவே. இங்கே இதைக் கூற காரணம் இஸ்லாமியர்கள் தங்கள் போதனையை ஆரம்பிக்கும்போதே பைபிள் மாற்றப்பட்டுவிட்டது என்கிற குற்றச்சாட்டுடந்தான் தொடங்குகிறார்கள். கிறிஸ்தவர்கள் அனைவரின் புனிதநூல் பைபிள் என்ற உணர்வு கிஞ்சித்துமின்றி சேறுவாரி இறைப்பதால் குரானைப் பற்றி பேசவேண்டியதாகிவிட்டது. பைபிள் உளறலா இல்லையா என்பதைப் பற்றி தகுந்த நேரம் வரும்போது விவாதிக்கலாம்.

  16. அல்லா என்ற வார்த்தை இஸ்லாமிற்கு முந்திய அராபியர்கள தங்கள் சந்திரக் கடவுளை குறிக்க பயன் படுத்தினர்.அவருக்கு நண்பர்கள்,குழந்தைகள் உண்டு(அவர்கள் நம்பிக்கையின் படி).

    “இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் – அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.” (6:100)
    அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர் ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள். (37:158)
    நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? (53:19)
    மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?) (53:20)
    உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா? (53:21)
    அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும். (53:22)

    இந்த 53:19_22 வசனங்கள்தான் சாத்தானின் கவிதைகள் நூலுக்கு ஆதாரம் ஆயிற்று.
    இதனால் இஸ்லாமின் எல்லாப் காலம் சார்ந்த கடமைகளும் சந்திரனை மையமாக வைத்தே நடை பெறுகிறது.

    இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். (84:16)
    மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும், (84:17)
    பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்). (84:18)

  17. தோழர் செங்கொடி உங்களுக்கு ரொம்ப நண்பர்கள் ஆகிவிட்டார்கள்,

    எத்தனை பேர் உங்களாஇ விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள் இங்கே. இந்த பீஜே தான் முசுலீம் மக்களின் பிரதிநிதி அல்ல. சரி பீஜே தோற்று விட்டால் ஒட்டுமொத்த பீஜே ரசிகர்களெல்லாம் மதத்தை மாற்றிக்கொள்வார்களா என்ன? அவருக்கு வேலையே தேர்தலுக்கு சில மாதம் மும்பு மாநாடு நடத்துவார் அதிலே யார் எங்களுக்கு இட ஒதுக்கீடு தருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு என்பார்.

    முன்பு கும்பகோணம் இப்போது தீவுத்திடல். எல்லாம் முசுலீம் மக்களை வைத்து பொறுக்கித்தின்னும் கும்பலே. இந்த மூஞ்சிக்கு நேரில் வந்துதான் சொல்ல வேண்டுமாம். அது சரி அவரு வரட்டும். இந்த நாட்டு மக்கள் இவ்வ்ளவு துன்பத்திற்கு ஆளாகிறார்களே அதைப்பார்த்து அத்தனையும் மூடிக்கொண்டு இருக்கிறானே அந்த இறைவனையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும்.

    (கேட்டால் இவர்கள் தானே எல்லாவற்றுக்கும் இறைவன் முக்கியமாக அல்லாதான் காரணாம் என்கிறர்கள் ).

    ஒரு படிக்காதவர் கண்மணி நாயகம் நபியிடத்திலே அமைச்சார் பெரு மக்கள் மத்தியிலே கேட்டாராம் “நபி மானே சொர்க்கத்தில் எப்படி ஆடை கிடைக்கும்” அதற்கு எல்லோரும் சிரித்தார்களாம். உடனே அச்செயலை கண்டித்த நபி (ஸல்) அவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லவேண்டும் என்று கூறி சொன்னார் பதிலை “பருத்தி இருக்கிறதே பருத்தி அது வெடிக்கும் போதே உனக்குத்தேவையான அளவான உடையில் வரும்”

    இதைக்கேட்டவுடன் நான் அந்த அரங்கத்தில் சிரித்துவிட்டேன். மற்றவர்கள் எல்லாம் அந்த அல்லா போலவே மூடிக்கொண்டிருந்தார்கள் போல.

    ஏனுங்க வால்பையன் நம்ம கண்மணி நாயகம் சொன்னதைகேட்டு நீங்க ஒண்ணும் பயந்துடலையே. நம்ம அப்துல்லா மாதிரி தூங்கும் போது ஏதாவது அசரீரீ வந்து கத்தப்போவுதுங்கோ

    கலகம்

  18. செய்வது வாதம் அல்ல பிடிவாதம்.

    1.குரான் vs வரலாறு:ஒரு குறிப்பும் இல்லை.எது எப்ப நடந்தது சொல்ல முடியாது.

    2.குரான் vs அறிவியல் :எந்த புதிய கண்டுபிடிப்பு வந்தாலும் அதை ஒட்டி ஒரு வசனம்.

    3.குரான் vs மனித நாகரிகம்: 1400 வருடத்திற்கு முன்பே மனிதன் வாழும் முறை முழுமையாக கூறப் பட்டு உள்ளது.அத‌ற்கு மாறுப‌ட்டால் த‌வ‌று.

    4.குரான் vs ஹ‌திஸ்: முர‌ண்பாடுக‌ள் இருந்தாலும் க‌ண்டு கொள்வ‌து இல்லை.

    5.குரான் vs இஸ்லாமின் பிரிவுக‌ள்:ஒரு குறிப்பும் இல்லை.அந்த‌ பிரிவின‌ருக்கு அவ‌ர்க‌ள் சொல்வ‌தே ச‌ரி.

    இந்த வ‌கையான‌ ம‌னித‌ர்க‌ளிட‌ம் வாத‌ம் செய்வ‌து நேர‌த்தை வீனடிப்ப‌தாகும்.

  19. >>>நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்து ……… குரான் 7:54

    பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை ……….. அதில் அவறின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்……. இரண்டு நாட்களில் அவறை ஏழு வானங்களாக ஏற்படுத்தினான்……… குரான் 41:9,10,12>>>

    மேற்கண்ட உங்களின் சந்தேகத்திற்கு டாக்டர்.ஜாகிர்நாயக் அவர்கள் அளித்த பதிலை இங்கு பதிவு செய்கிறேன்.

    வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் (அதாவது ஆறு நீண்ட நாட்களில்) படைக்கப்பட்டன என அருள்மறை குரான் சொல்கிறது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இது பற்றிய விபரம் அருள்மறை குர் ஆனின் கீழ்க்குறிப்பிட்ட அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது

    அத்தியாயம் 7 -ஸூரத்துல் அராபின் 54 வது வசனம்
    அத்தியாயம் 10 -ஸூரத்துல் யூனுஸின் 3 வது வசனம்
    அத்தியாயம் 11 -ஸூரத்துல் ஹூதுவின் 7 வது வசனம்
    அத்தியாயம் 25 -ஸூரத்துல் புர்கானின் 59 வது வசனம்
    அத்தியாயம் 32 -ஸூரத்துல் ஸஜ்தாவின் 4 வது வசனம்
    அத்தியாயம் 50 -ஸூரத்துல் கப்வின் 38 வது வசனம்
    அத்தியாயம் 57 -ஸூரத்துல் ஹதீதின் 4 வது வசனம்

    தாங்கள் சொல்வது போன்று வானங்களையும் பூமியும் எட்டு நாட்களில் படைக்கப்பட்டன என்கிற அர்த்தத்தில் வருகின்ற வசனம் அருள்மறை குரானின் 41 அத்தியாயம் ஸூரத்துல் புர்ஸிலாத்தின் 9வது வசனம் முதல் 12வது வசனம் வரையிலானது. மேற்படி வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

    ‘பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்ப்படுத்துகிறீர்கள்?. அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன் என்று (நபியே) நீர் கூறுவீராக.’
    (அத்தியாயம் 41 ஸூரத்துல் புர்ஸிலாத்தின் 9வது வசனம்)

    ‘அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்: அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான். இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான். (இதைப்பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்)
    (அத்தியாயம் 41 ஸூரத்துல் புர்ஸிலாத்தின் 10வது வசனம்)

    ‘பிறகு அவன் வானம் புகையாக இருந்த போது (அதைப் படைக்க) நாடினான்: ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும், அல்லது வெறுப்புடனாயினும், வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் ” நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
    (அத்தியாயம் 41 ஸூரத்துல் புர்ஸிலாத்தின் 11வது வசனம்)

    ”ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக உயர்த்தினான். ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான். இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகள் கொண்டு அமைத்தோம். இன்னும் நாம் அதனை பாதுகாப்பானதாகவும் ஆக்கினோம். இது யாவரையும் மிகைத்தவனும், ஞானமிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
    (அத்தியாயம் 41 ஸூரத்துல் புர்ஸிலாத்தின் 12வது வசனம்)

    மேற்படி வசனங்களை மேலோட்டமாக படித்துப் பார்த்தால் வானங்களும் – பூமியும் எட்டு நாட்களில் படைக்கப்பட்டன என்கிற அர்த்தம்தான் தொனிக்கும்

    மேற்படி வசனங்களை நீங்கள் கூர்ந்து ஆராய்ந்தால் இரண்டு வித்தியாசமான் படைப்புகளான பூமி மற்றும் வானம் இவைகளைப்பற்றி சொல்வதை அறியலாம். மலைகள் இல்லாத பூமி இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது. பூமி அசையாது நிலையாக இருக்கும் பொருட்டு பூமியின் மீது மலைகளை நான்கு நாட்களில் படைத்தான். ஆக பூமியும் – அதன் மீது நிருத்தப்பட்டிருக்கும் மலைகளும் நான்கு நாட்களில் படைக்கப்பட்டன என்பதை அருள்மறை குரானின் 41வது அத்தியாயம் ஸூரத்துல் புர்ஸிலாத்தின் 9 மற்றும் 10வது வசனங்களின் பொருளாகும். மேற்படி அத்தியாயத்தின் 11 மற்றும் 12வது வசனம் கூறுவது என்னவெனில் அத்துடன் கூடி வானங்களும் இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது என்பதாகும். மேற்படி அத்தியாயத்தின் 11வது வசனத்தின் ஆரம்ப வார்த்தையான ‘ஸும்ம’ என்கிற அரபி வார்த்தைக்கு
    ‘மேலதிகமாக” அல்லது பின்னர்’ என இரு அர்த்தங்கள் கொள்ளலாம். குரானின் ஆங்கில மொழியாக்கங்கள் சிலவற்றில் ‘ஸும்ம’ என்கிற அரபி வார்த்தைக்கு ‘பின்னர்’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘பின்னர்’ என்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டால், பூமியும், அதன் மீது மலைகளும் 6 நாட்களில் படைக்கப்பட்டு பின்னர் இரண்டு நாட்களில் வானங்கள் படைக்கப்பட்டது என்கிற தவறான் பொருளைத்தான் தரும். மேற்படி பொருள் அறிவியல் சொல்லும் பெரும் வெடிப்பு விதியோடு (Big Bang Theory) முரண்படுவதோடு, அருள்மறை குரானின் 21வது அத்தியாயம் ஸூரத்துல் அன்பியாவின் 30வது வசனமான, வான்ங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம்’ என்கிற வசனத்தோடும் முரண்படும்.

    எனவே மேற்படி வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஸும்ம’ என்கிற அரபி வார்த்தைக்கு ‘மேலதிகமாக’ என்று பொருள் கொள்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். அருள்மறை குரானை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த அப்துல்லா யூசுப் அலி அவர்கள் ‘ஸும்ம’ என்கிற அரபி வார்த்தைக்கு ‘மேலதிகமாக’ என்றுதான் மொழியாக்கம் செய்துள்ளார். அவ்வாறு மொழியாக்கம் செய்யப்பட்ட மேற்படி அருள்மறை குரானின் வசனத்திற்கு ‘மலைகளுடன் கூடிய பூமியை ஆறு நாட்களில் படைத்தான். மேலதிகமாக வானங்களையும் படைத்தான்’ என்று தான் பொருள் கொள்ளவேண்டும். இவ்வாறு பொருள் கொள்ளும்பொழுது, எட்டு நாட்கள் என்கிற தவறான கருத்து கொள்வது தவிர்க்கப்பட்டு, ஆறு நாட்கள் என்கிற சரியான கருத்து நிலை நிறுத்தப்படுகிறது.

    கீழ் குறிப்பிடும் உதாரணத்தின் மூலம் மேற்படி கருத்தை மேலும் சரியான முறையில் புரிந்து கொள்ளலாம்:

    ஒரு கட்டிடத்தை கட்டுபவர் அவர் கட்டிய 10 மாடி கட்டிடத்தையும், கட்டிடத்தை சுற்றியுள்ள சுற்றுச் சுவரையும் கட்டி முடிக்க 6 மாதங்கள் எடுத்துக் கொண்டதாக குறிப்பிடுகிறார். முழு கட்டிடத்தையும் கட்டி முடித்த பின்பு – கட்டிடம் கட்டியது பற்றிய தனது அறிக்கையில் கட்டிடத்தின் அடிப்பகுதிகளை கட்டி முடிக்க இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டதாகவும் – கட்டிடத்தின் மேற்பகுதியை கட்டி முடிக்க நான்கு மாதங்கள் எடுத்துக்கொண்டதாகவும் – அத்துடன் சேர்த்து கட்டிடம் கட்டிக்கொண்டிருக்கும் பொழுதே கட்டிடத்தின் சுற்றுச்சுவர்களையும் இரண்டு மாதங்களில் கட்டி முடித்ததாக தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மொத்த கட்டிடமும் கட்டி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட காலம் 6 மாதங்கள் என்பதை மேற்படி அறிக்கையிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். அவர் சொன்ன முதலாவது அறிக்கை – அவர் சொன்ன இரண்டாவது அறிக்கையோடு முரண்படுவதில்லை. மாறாக கட்டிடம் கட்டி முடித்த காலத்தை பற்றிய அதிக விபரங்களைத்தான் தெரிவிக்கிறது…

    அப்துல் லத்தீப் – கடையநல்லூர்
    .

  20. நண்பர் அப்துல் லத்தீப்,

    மீண்டும் ஒருமுறை அந்த வசனங்களை படித்துப் பார்க்குமாறு உங்களைக் கோருகிறேன். நீங்கள் தந்திருக்கும் ஜாஹிர் நாயக் விளக்கத்தில் ஆறு நாட்கள் தாம் என்பதை இப்படியாக வரையறை செய்திருக்கிறீர்கள், \\மேற்படி அருள்மறை குரானின் வசனத்திற்கு ‘மலைகளுடன் கூடிய பூமியை ஆறு நாட்களில் படைத்தான். மேலதிகமாக வானங்களையும் படைத்தான்’ என்று தான் பொருள் கொள்ளவேண்டும். இவ்வாறு பொருள் கொள்ளும்பொழுது, எட்டு நாட்கள் என்கிற தவறான கருத்து கொள்வது தவிர்க்கப்பட்டு, ஆறு நாட்கள் என்கிற சரியான கருத்து நிலை நிறுத்தப்படுகிறது// ஆனால் அந்த வசனங்களில் மலை பிரச்சனைக்குறியதாக இல்லை. குரான் வசனத்தில் வரிசைக்கிரமமாக தெளிவாகவே இருக்கிறது. \\பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து// இங்கு பூமியை படைக்க இரண்டு நாட்கள் குறிப்பிடப் படுகிறது, \\அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்// கவனியுங்கள் மலைகளை அமைப்பதற்கான நாட்கணக்கு சொல்லப்படவே இல்லை. அதாவது பூமி அதன் மீது மலைகள் இரண்டுமே இரண்டு நாட்களில் முடிந்து விடுகிறது. முதலில் பூமி இரண்டு நாட்கள் அதன் பிறகு மலை என்பதாக நான் பொருள் எடுத்துக்கொள்ளவில்லை. மலையுடன் சேர்த்து பூமி இரண்டு நாட்கள் என்றே நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். குரான் வசனமும் அப்படித்தான் கூறுகிறது. \\அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்// அதாவது பூமியை படைத்து விட்டு அதில் உணவு வகைகளை படைப்பதற்கு நான்கு நாட்கள். இதில் சீராக எனும் வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதை கவனிக்கவும். இந்த நான்கு நாட்களில் பூமியை படைத்த இரண்டு நாட்களும் அடக்கம் என்றால், சீரான எனும் வார்த்தை பொருளற்றுப் போகும். பரந்து விரிந்த பூமியின் நிலப்பரப்பில் பரவலாக (கடல் பரப்பிலும் கூட) உணவுக்கான ஏற்பாடுகள் என்பதைத்தான் சீராக எனும் பதம் குறிக்கிறது. ஆக மலைகளுடன் பூமியை இரண்டு நாட்களில் படைத்து சீராக உணவு வகைகளை படைக்க நான்கு நாட்களை எடுத்துக்கொண்டு வானத்தை இரண்டு நாட்களில் படைக்கிறான் என்பது தான் அதில் தெளிவாக தெரிகிறது.

    ஒரு வேளை நீங்கள் (அதாவது ஜாஹிர் நாயக்) குறிப்பிடுவதுபோல் \\மேற்படி அருள்மறை குரானின் வசனத்திற்கு ‘மலைகளுடன் கூடிய பூமியை ஆறு நாட்களில் படைத்தான். மேலதிகமாக வானங்களையும் படைத்தான்’ என்று தான் பொருள் கொள்ளவேண்டும்// என்று எடுத்துக் கொண்டால் அது வேறு கேள்விகளை எழுப்பும். வானம் என்பதற்கு குரானுக்கு அறிஞ்சொற்பொருள் விளக்கம் சொன்ன எல்ல அறிஞர்களும் பிரபஞ்சம் என்பதாகத்தான் பொருள் சொல்லியிருக்கிறார்கள். பிரபஞ்சத்தின் அளவோடு பூமியை ஒப்பிட்டால் நிர்ணயம் செய்யமுடியாத அளவுக்கு பூமி அற்பமான அளவுடையது. இந்த அற்பமான அளவுடைய பூமியை படைக்க ஆறு நாட்கள் எடுத்துக்கொண்ட இறைவன் ஏனைய மொத்த பிரபஞ்சத்தையும் ‘சும்மா’ படைத்து விட்டானா அதாவது நாட்களாக கணக்கிடத் தேவையற்ற பூமியுடன் சேர்ந்த துணைப்படைப்பாக படைத்து விட்டானா?

    \\மலைகள் இல்லாத பூமி இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது. பூமி அசையாது நிலையாக இருக்கும் பொருட்டு பூமியின் மீது மலைகளை நான்கு நாட்களில் படைத்தான். ஆக பூமியும் – அதன் மீது நிருத்தப்பட்டிருக்கும் மலைகளும் நான்கு நாட்களில் படைக்கப்பட்டன// என்று எழுதியிருப்பதும் நீங்கள் தான். \\மலைகளுடன் கூடிய பூமியை ஆறு நாட்களில் படைத்தான்// என்று எழுதியிருப்பதும் நீங்கள் தான். மலைகளுடன் சேர்த்து பூமியை படைக்க நான்கு நாட்களா? ஆறு நாட்களா?

    இப்படி வெட்டி ஒட்டுவதற்கு முன்னால் அது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடியதாக இருக்கிறதா என்று ஒருமுறை படித்துப் பாருங்கள். அது சரி இந்தக்கட்டுரையில் எழுப்பப் பட்டிருக்கும் மற்ற கேள்விகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

    செங்கொடி

  21. நண்பர் செங்கொடி அவர்களுக்கு,

    1. ‘படைக்கப்பட்ட நாள்’ எனக் குறிப்பிடுகிறீர்களே அது ஒரு இரவும் ஒரு பகலும் கொண்ட நாளைத்தானா ?

    2. பூமி, சூரியனை சுற்றிய வண்ணம் தன்னைத்தானே ஒரு முறை சுழற்றிக்கொள்ள எடுக்கும் நேரக்கணக்குதானா ?

    3.அப்படியெனில் ‘இந்த நாள் கணக்கு’ பூமி உருப்பெற்ற பிறகுதானே வரும் ?
    பூமியை உருவாக்கும் போதே அந்த கணக்கு எவ்வாறு வருகிறது ?

    4. அல்லது பிரபஞ்சத்தை உருவாக்கிய கணக்கு எனில், பிரபஞ்சத்தை உருவாக்க எடுத்துக்கொண்ட ‘நாள்’ என்பது எந்த அளவை குறிக்கும் ?

    விளக்கம் தருக.

    அறிவாளன்.
    USA

  22. நண்பர் அறிவாளன்,

    பூமி, வானங்கள் படைக்கப்பட்டதாக குரான் குறிப்பிடும் வசனங்களில் ‘யவ்ம்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச்சொல்லுக்கு நாள் என்பது பொருள். இந்தப் பொருளில் தான் அந்தச் சொல் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகம்மது தான் செவியுற்ற விசயங்களைக் கொண்டும், அந்த நேரத்தில் நிலவில் இருந்த புராணிய நம்பிக்கைகளைக் கொண்டும்தான் குரானைச் செய்திருக்கிறார். அந்த நேரத்தில் வழக்கில் இருந்த ஆறு நாளில் படைக்கப்பட்டது உலகம் என்பதைத்தான் குரானிலும் அவர் பிரதிபலித்திருக்கிறார். அன்றைக்கு இதற்கு மேல் விபரங்கள் தேவைப் பட்டிருக்கவில்லை. ஆனால் இன்றைக்கு தேவைப்படுவதால் அந்த யவ்ம் எனும் சொல்லுக்கு ஒரு காலகட்டம் என்றும் பொருள் கொள்ளலாம் என்று விளக்கமளிக்கிறார்கள். அதேநேரம் இப்படி விளக்கமளிப்பவர்கள் யாரும். முன்னர் இலக்கியங்களிலோ, இலக்கணங்களிலோ அப்படி பொருள் கொண்ட சான்று எதையும் எடுத்துக்காட்டுவதில்லை.

    பொதுவாக தமிழில் கூட நாள் எனும் சொல்லுக்கு ஒரு காலகட்டம் எனும் பொருள்கொள்ள இடமிருக்கிறது. ஆனால் அந்த ஒரு காலகட்டம் என்பதன் வரையறை என்ன என்பதுதான் முக்கியமானது. ஏனென்றால் பிரபஞ்சம் ஒரு படைப்பு என்று கொண்டால் அந்தப் படைப்பு முடிவடைந்துவிடவில்லை, இன்னும் தொடர்கிறது. பூமி உருவாக பலகோடி ஆண்டுகள் ஆயின என்பது அறிவியல். இதை ஒன்றிரண்டு நாட்களாக சொல்கிறது வேதம். வேதம் மனிதனால் எழுதப்படவில்லை அது இறைவனால் அருளப்பட்டது என்று நம்ப(!)வேண்டுமானால் யவ்ம் எனும் சொல்லுக்கு 24 மணி நேரம் என்று பொருள் கொள்ள இயலாது. எனவே காலகட்டம் என்றோ அல்லது இன்னும் பொருத்தமான வேறு பொருளோ கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. மற்றப்படி அந்த வார்த்தையில் விரித்துப் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை.

    செங்கொடி

  23. ………உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன் என்று கூறினான். குரான் 7:124

    Dear Senkodi,
    can u tell me the arabic word (used in the Qur’an) for cross?????

  24. போங்கடா போய் வேலைய பாருங்கட அறிவு ஜீவிகள

  25. //மேற்படி வசனங்களை நீங்கள் கூர்ந்து ஆராய்ந்தால் இரண்டு வித்தியாசமான் படைப்புகளான பூமி மற்றும் வானம் இவைகளைப்பற்றி சொல்வதை அறியலாம். மலைகள் இல்லாத பூமி இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது. பூமி அசையாது நிலையாக இருக்கும் பொருட்டு பூமியின் மீது மலைகளை நான்கு நாட்களில் படைத்தான். //
    மலைகள் இருப்பது பூமியை அசையாமல் நிலையாக பிடித்துக் கொள்ளவா?

    மிகவும் மலைப்பாக‌ இருக்கிறது. பூமிக்கு மலை ஒரு பேப்பர் வெயிட் போல.

    1.மலைகள் இருப்பது பூமியை அசையாமல் நிலையாக பிடித்துக் கொள்ளவா?

    2.மலைகள் என்பது குரானின் படி என்ன?

    3.அப்ப பூமி தட்டை என்று குரான் சொல்லுகிறதா?

    4.பூமி தன்னைதானே சுற்ற வில்லையாம்சூரியனை சுற்றி வர வில்லையா?

    5.மலைகள் பூமியின் அடித்தளம் வரை செல்கிறதா?

    6.பூமி பல் அடுக்குகளால் ஆனது. அந்த அடுக்குகள் நக‌ர்ந்து கொண்டு இருக்கின்றது என்பது உண்மையா?

    7.எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளிவருகின்றது? இதை பற்றி

  26. your analysis were nothing but stupid , how did you compare history with quran and you were saying that you dont know the era of yousuf and again you were trying to mock yourself all are stupid my friend. please again and again i am saying first go study arabic before comment on that. six days you can mean six stages also .

  27. வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்ததாக 7:54, 10:3, 11:7, 57:4 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.

    இதன் பொருள் வானங்கள், பூமி மட்டும் அல்ல. வானங்களுக்கும் பூமிக்கும் இடைப்பட்டவைகளையும் சேர்த்தே அல்லாஹ் கூறுகிறான்.

    25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்களில் வானங்களையும், பூமியையும் என்பதுடன் இடைப்பட்டவைகளையும் சேர்த்து ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.

    பூமியைப் படைக்க இரண்டு நாட்கள் (திருக்குர்ஆன் 41:9), வானங்களைப் படைக்க இரண்டு நாட்கள் (திருக்குர்ஆன் 41:12), என்று கூறப்படுவதை இதற்கு முரணானது என்று கருதக் கூடாது.

    பூமியைப் படைத்து அதில் மலைகளை நிறுவியது, உணவுகளை அதில் நிர்ணயித்தது ஆகியவற்றுக்கு நான்கு நாட்கள் என்று 41:10 வசனம் கூறுகிறது.

    பூமியைப் படைக்க இரு நாட்கள், அதில் மனிதன் வாழத் தேவையான ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள், வானங்களைப் படைக்க இரு நாட்கள் என ஆறு நாட்களில் அனைத்தையும் அல்லாஹ் படைத்தான்.

    (இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 7:54, 10:3, 11:7, 41:9,10, 41:12, 25:59, 32:4, 50:38, 57:4)

  28. மாஷா அல்லாஹ்.. இதிலிருந்து ஓன்று மட்டும் நன்றாக உணர முடிகிறது, எவனோ வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு இஸ்லாமுக்கும் அல்குர்ஹனுக்கும் மாறாக அவதூறு செய்து செயல்பட்டு வருவதையும் இறைவன் இதுபோல் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து விடுகிறான். இதுவும் இறை ஆதாரம்.. எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.!

  29. http://www.tamilquran.in/vilakkangal.php?id=179

    வானங்களும், பூமியும் படைக்கப்பட்டது குறித்து இவ்வசனங்கள் (7:54, 10:3, 11:7, 25:59, 32:4, 41:9,10, 41:12, 50:38, 57:4) பேசுகின்றன. இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒன்றுக்கொன்று முரண்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் இதில் முரண்பாடு ஏதும் இல்லை.

    வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்ததாக 7:54, 10:3, 11:7, 57:4 வசனங்களில் கூறப்படுகிறது.

    41:9 வசனத்தில் பூமியை இரண்டு நாட்களில் படைத்ததாகவும், 41:12 வசனத்தில் வானத்தை இரண்டு நாட்களில் படைத்ததாகவும் கூறப்படுகிறது. அப்படியானால் வானமும் பூமியும் நான்கு நாட்களில் படைக்கப்பட்டது என்று ஆகின்றது.

    ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டதற்கு இது முரணாக அமைந்துள்ளது என்ற சந்தேகம் இதில் எழலாம். திருக்குர்ஆனில் குறை கண்டுபிடிக்க முயல்பவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டும் வருகின்றனர்.

    மேலோட்டமாகப் பார்த்தால் இது முரண் போல் தோன்றினாலும் வேறு வசனத்தில் இந்த முரண்பாட்டை நீக்கும் வகையில் திருக்குர்ஆனே விளக்கம் சொல்லி விடுகிறது.

    பூமியைப் படைத்தல் என்பது இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. பூமி என்ற கோளைப் படைத்தது இரண்டு நாட்கள். மனிதன் வாழ்வதற்காக பூமியைப் படைத்ததால் அதில் நிறைய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தாவரங்கள் முளைப்பதற்கேற்ற ஏற்பாடுகள், மலைகளை முளைகளாக நிறுவுதல், நிலத்தடி நீர் போன்ற ஏராளமான ஏற்பாடுகளை பூமிக்குள் அமைக்க வேண்டும். இது போன்ற ஏற்பாடுகளுக்கு இரண்டு நாட்கள் என்று திருக்குர்ஆன் பின்வரும் வசனத்தில் விளக்குகிறது.

    நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே என்று 41:10 வசனம் கூறுகிறது.

    வானம் பூமியைப் படைக்க ஆறு நாட்கள் என்று சொல்லப்படுவதன் பொருள் இது தான் என்று திருக்குர்ஆனே விளக்கி விட்டது.

    வானத்தைப் படைக்க இரண்டு நாட்கள்,

    பூமியைப் படைக்க இரண்டு நாட்கள்,

    பூமிக்குள் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள்

    ஆக ஆறு நாட்கள் என்பது இதன் பொருள். பூமியை மட்டும் தனியாகச் சொல்லும்போது இரண்டு நாட்கள் என்று சொல்லப்பட்டால் சிறப்பு ஏற்பாடுகளை நீக்கி விட்டு இரண்டு நாட்கள் என்று பொருள்.

    படைப்பைப் பற்றி கூறும் இவ்வசனங்களில் வானம் மற்றும் பூமி படைக்கப்பட்டது பற்றியே பேசப்படுகிறது. அப்படியானால் பூமி தவிர மற்ற கோள்களை அல்லாஹ் படைக்கவில்லையா என்றும் சிலர் கேள்வி எழுப்புவதுண்டு.

    இந்தக் கேள்விக்கான விடையும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டு விட்டது. வானத்தைப் படைத்தது என்பதில் வானத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்டவைகளும் அடங்கும் என்று 25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்கள் சொல்கின்றன.

    மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் மற்ற கோள்களுக்குத் தேவை இல்லை என்பதால் அவற்றையும் வானத்தையும் படைக்க சேர்த்து இறைவன் எடுத்துக் கொண்டது இரண்டு நாட்களாகும்.

    ஆகு என்று சொன்னால் ஆகிவிடும் என்ற அளவுக்கு வல்லமை பொருந்திய இறைவனுக்கு ஏன் உலகைப் படைக்க ஆறு நாட்கள் என்ற கேள்வியையும் சிலர் கேட்கின்றனர். ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை மிக்கவன் என்பதும், படைப்பதற்கு ஆறு நாட்களை எடுத்துக் கொண்டான் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனவும் சிலர் கேட்கின்றனர்.

    இதிலும் முரண்பாடு ஏதும் இல்லை. ஒரு உதாரணத்தின் மூலம் இதை நாம் புரிந்து கொள்ளலாம்.

    உலக மல்யுத்த சாம்பியன் 200 கிலோவைத் தூக்குவார் என்று சொல்கிறோம். 200 கிலோ பொருளை அவர் 25 கிலோவாக எட்டு தடவை தூக்கி இடம் மாற்றி வைத்தார் என்றும் சொல்கிறோம். இவ்விரண்டும் முரண் என்று சொல்ல மாட்டோம். அவர் நினைத்தால் ஒரே மூச்சில் 200 கிலோ தூக்க முடியும் என்பதில் மாற்றம் இல்லை. அவர் எப்போது தூக்கினாலும் 200 கிலோ தான் தூக்குவார் என்பது இதன் பொருளல்ல. தூக்க முடியும் என்பது தான் இதன் பொருள்.

    அது போல் இறைவன் எதைப் படைத்தாலும் ஆகு என்ற சொல்லி அதே நொடியில் படைப்பான் என்று இதற்கு அர்த்தம் இல்லை. அவன் நினைத்தால் ஆகு என்று சொல்லி படைக்க முடியும். அவன் நினைத்தால் தாமதமாகவும், நிதானமாகவும் கூட படைப்பான். எனவே இதில் ஒரு முரண்பாடும் இல்லை.

  30. எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் என்பது மறுக்க முடியாத உண்மை 🙂

  31. அல் குர்ஆன் இல் தவறில்லை என்பது உண்மை
    அதன் வசனங்களை புரிந்து கொள்வதில் நீங்கள் தவறிவிட்டீர்.
    பிழையான புரிதலினால் கருத்துக்கள் தவறாக தெரிகிறது.
    அல் குர்ஆன் ஐ முழுமையாக விளங்கிக் கற்றுக் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் அருள் புரியவேண்டும்
    என்று பிரத்திக்கின்றேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்