குடும்பம் 8

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 13

சட்டங்கள் இயற்றுதல் முன்னேறுகின்ற பொழுது பெண் புகார் செய்வதற்குரிய எல்லாக் காரணங்களும் மேன்மேலும் நீக்கப்படுகின்றன என்று நமது சட்டவியல் நிபுனர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். நவீன கால நாகரீக சட்ட அமைப்புகள் இரண்டு விஷயங்களை மேன்மேலும் அங்கீகரிக்கின்றன; முதலாவதாக, திருமணம் வெற்றி பெற வேண்டுமென்றால் அது இரு தரப்பினரும் விருப்ப பூர்வமாகச் செய்து கொண்ட ஒப்பந்தமாக இருக்க வேண்டும்; இரண்டாவதாக, மண வாழ்க்கையில் உரிமைகள், கடைமைகள் விஷயத்தில் இரு தரப்பினரும் சமநிலையில் இருக்க வேண்டும். இவ்விரண்டு கோரிக்கைகளும் முரணில்லாமல் நிறைவேற்றப்பட்டால் பெண் கேட்கக் கூடிய எல்லாமே கிடைத்து விட்ட்தாகவே இருக்கும்.

இது வெறும் வக்கீலின் வாதமே. இதே போன்ற வக்கீலின் வாதத்தைக் கொண்டுதான் தீவிரக் குடியரசுவாதியான முதலாளியும் பாட்டாளியை நிராகரிக்கிறான். உழைப்பு ஒப்பந்தம் என்பதும் இரு தரப்பினரும் விருப்ப பூர்வமாக செய்து கொண்ட ஒப்பந்தம் என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் சட்டம் அந்த இரண்டு தரப்பினரையும் ஏட்டளவில் சமநிலையில் வைத்த உடனே தான் அது விருப்ப பூர்வமாகச் செய்து கொண்ட ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. ஒரு வர்க்கத்தின் நிலைமையினால் அதற்குக் கிடைக்கின்ற அதிகாரம், அது மறு தரப்பின் மீது பிரயோகிக்கின்ற நிர்ப்பந்தம், இரு தரப்பினருடைய உண்மையான பொருளாதார நிலைமை ஆகியவற்றை பற்றி சட்டத்துக்கு அக்கறையே கிடையாது. மேலும், அந்த உழைப்பு ஒப்பந்தம் முடிகின்ற வரை இரு தரப்பினருக்கும் சம உரிமைகள் – ஏதாவது ஒரு தரப்பு அவற்றை வெளிப்படையாக வற்புறுத்தாமல் கைவிட்டாலொழிய – இருப்பதாகச் சொலப்படுகிறது. பொருளாதார நிலைமை சம உரிமைகளின் சாயலைக் கூடக் கைவிடுமாறு தொழிலாளியைக் கட்டாயப்படுத்துகிறதே, இதைப் பற்றி சட்டம் எதுவும் செய்ய இயலாது.

திருமணத்தைப் பொறுத்தமட்டில் இரு தரப்பினரும் திருமணம் செய்து கொள்ளத் தமது சுயேச்சையான விருப்பத்தைப் பதிவு செய்த உடனே மிகவும் முற்போக்கான சட்டம் கூட முழுமையாக திருப்தி அடைந்து விடுகிறது. சட்டத் திரைகளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது – அங்கு தானே எதார்த்த வாழ்க்கை நடைபெறுகிறது – இந்த சுயேச்சையான ஒப்பந்தத்துக்கு எப்படி வந்தார்கள் ஆகியவை பற்றி சட்ட்த்துக்கும் சட்ட நிபுணருக்கும் கவலை கிடையாது. எனினும் இந்தச் சுயேச்சையான ஒப்பந்தம் உண்மையில் எப்படிப்பட்ட்து என்பது சட்ட நிபுணர் பல்வேறு நாடுகளின் சட்டங்களை மிகவும் சாதாரணமாக ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்து விடும். பெற்றோர்களுடைய உடைமையில் குழந்தைகளுக்குப் பங்கு கிடைப்பது சட்டத்தால் உத்தரவாதம் செய்யப்பட்டு, வாரிசுரிமையை மறுக்க முடியாதபடிச் செய்துள்ள நாடுகளில் – ஜெர்மனி, பிரெஞ்சுச் சட்டத்தை பின்பற்றுகின்ற நாடுகள், இதரவற்றில் – திருமண விஷயத்தில் பெற்றோர்களுடைய ஒப்புதலைக் குழந்தைகள் பெற்றாக வேண்டும். ஆங்கிலச் சட்டத்தின் கீழுள்ள நாடுகளில் – இங்கே திருமணத்துக்குப் பெற்றோர்களுடைய ஒப்புதல் சட்டப்படி அவசியமல்ல – பெற்றோர்கள் தங்கள் உடைமையில் உயில் மூலம் யாருக்கு எழுதி வைக்கலாம் என்பதில் முழு சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் விரும்பினால், தம் குழந்தைகளுக்கு ஒரு பைசா கூடக் கொடுக்காதிருக்கலாம். ஆகவே, அப்படி இருந்த போதிலும், இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அப்படி  இருப்பதனால்தான் வாரிசுரிமையாகப் பெறக் கூடிய சொத்துள்ள வர்க்கங்களிடையில் திருமண சுதந்திரம் என்பது பிரான்ஸ், ஜெர்மனியை விடக் கடுகளவேனும் அதிகமாக பிரிட்டனிலோ, அமெரிக்காவிலோ இல்லை.

மண வாழ்க்கையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சட்டரீதியான சமநிலை குறித்தும் அதே நிலைதான் இருக்கிறது. சட்டத்திற்கு முன்பாக இருவரும் சமமற்ற நிலையில் இருக்கிறார்கள். இது முந்திய சமுதாய நிலைமைகள் விட்டுச் சென்ற மரபுரிமைச் செல்வமாகும். இச் சமமற்ற நிலை பெண்களைப் பொருளாதார ரீதியுல் ஒடுக்குவதனால் ஏற்படுகின்ற விளைவு ஆகும், அதற்கு அது காரணமல்ல. பற்பல தம்பதிகளையும் அவர்களுடைய குழந்தைகளையும் கொண்டிருந்த புராதனப் பொதுவுடைமைக் குடும்பத்தில் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்ட வீட்டு நிர்வாகமும் ஆண் உணவு தேடித் தருவது எப்படி சமுதாய ரீதியில் அவசியமான தொழிலாளக இருந்ததோ, அதே போலப் பொதுத் தன்மையான, சமுதாய ரீதியில் அவசியமான தொழிலாக இருந்தது. தந்தைவழிக் குடும்பத்தில் இந்த நிலைமை மாறிவிட்டது; ஒருதார மண வகைப்பட்ட, தனிப்பட்ட குடும்பத்தில் இன்னும் அதிகமாகவே மாறி விட்டது. வீட்டு நிர்வாகம் தனது பொதுத்தன்மையை இழந்தது. அது சமூகத்தின் அக்கறையைப் பெற்ற விவகாரமாக இனிமேல் இருக்கவில்லை. அது தனிப்பட்ட சேவை ஆகி விட்டது. மனைவி முதல் வீட்டு வேலைக்காரியாக மாறினாள். அவள் சமூக உற்பத்தியிலிருந்து வெளியே தள்ளப்பட்டாள். நவீன காலப் பெரிய அளவுத் தொழில்துறை மட்டுமே அவளுக்கு – அதிலும் பாட்டாளி வர்க்கப் பெண்ணுக்கு மட்டுமே – சமூக உற்பத்தியில் பங்கெடுக்கின்ற வழியை மறுபடியும் திறந்து விட்டது. ஆனால் எவ்விதத்தில் என்று பார்த்தால், அவள் குடும்பச் சேவையில் தன் கடமைகள் எல்லாவற்றையும் முடிக்கின்ற பொழுது சமூக உற்பத்தியிலிருந்து விலக்கப்பட்டு எதுவும் சம்பாதிக்க முடியாதவளாகிறாள்; சமூகத் தொழிலில் பங்கெடுத்து சுயேச்சையாக சம்பாதித்து வாழ்வதற்கு அவள் விரும்புகின்ற பொழுது குடும்பக் கடமைகளை நிறைவேற்ற முடிகின்ற நிலையில் இருப்பதில்லை. பாக்டரியில் வேலை செய்கின்ற பெண்ணுக்கு ஏற்படுவதுதான் மருத்துவம், சட்டம் உட்பட மற்ற வேலைகளில் உள்ள பெண்களுக்கும் ஏற்படுகிறது. பகிரங்கமாகவோ, மறைவாகவோ உள்ள பெண்ணின் வீட்டு அடிமைத்தனத்தின் அடிப்படையில் தான் நவீன கால தனிப்பட்ட குடும்பம் இருக்கிறது. நவீன காலச் சமுதாயம் என்பதும் தனிப்பட்ட குடும்பங்களை அலகுகளாக கொண்டிருக்கின்ற மொத்தமே. இன்று, மிகப் பெரும்பாலான சமயங்களில் ஆண் குடும்பத்துக்குச் சம்பாதிப்பவனாக, உணவு அளிப்பவனாக இருக்க வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் உடைமை வர்க்கங்களில் இப்படித்தான். இது அவனுக்கு ஆதிக்க நிலையை தருகிறது. அதற்கு விசேஷமான சட்ட ரீதியான சலுகைகள் அவசியமில்லை. குடும்பத்தில் அவன் தான் முதலாளி; அவன் மனைவி பாட்டாளி வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறாள். எனினும் தொழில்துறை உலகில், முதலாளி வர்க்கத்தின் விசேஷமான, சட்ட ரீதியான சலுகைகள் எல்லாம் ஒரு புறம் ஒதுக்கப்பட்டு, இரண்டு வர்க்கங்களின் சட்ட ரீதியான சமநிலை ஸ்தாபிக்கப்பட்ட பிறகே பாட்டாளிவர்க்கத்தை அழுத்திக் கொண்டிருக்கின்ற பொருளாதார ஒடுக்குமுறையின் குறிப்பான தன்மை மிகவும் கூர்மையாக வெளித்தெரிகிறது. இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான பகைமையை ஜனநாயகக் குடியரசு ஒழிப்பதில்லை. அதற்கு மாறாக, அதைச் சண்டை போட்டு முடிவு காண்பதற்குத் தான் களம் அமைத்துக் கொடுக்கிறது. நவீனக் குடும்பத்தில் பெண் மீது ஆணுக்குள்ள ஆதிக்கத்தின் அலாதித் தன்மையும் அவர்களிடையில் உண்மையான சமூக சமத்துவத்தை நிறுவுவதற்குரிய அவசியமும் வழிமுறையும் அதே போன்றதே. அவ்விருவரும் சட்டத்திற்கு முன்பாக முழுமையான சமநிலையில் இருக்கும் பொழுதே அவை முழு உருவத்தில் வெளிக்காட்டப்படும். பெண்ணினம் முழுவதையும் சமூக உற்பத்தியில் மீண்டும் புகுத்துவது தான் பெண்களின் விடுதலைக்குரிய முதல் நிபந்தனை என்பது அப்பொழுதுதான் தெளிவாகும். தனிப்பட்ட குடும்பம் சமுதாயத்தின் பொருளாதார அலகு என்னும் தன்மையை ஒழிக்க வேண்டும் என்பதை இது மீண்டும் கோருகிறது.

மனிதகுல வளர்ச்சியின் மூன்று முக்கியமான கட்டங்களுடன் பொதுவாகவும் மொத்தமாகவும் பொருந்துகின்ற மூன்று முக்கிய மண வடிவங்கள் உள்ளன: காட்டுமிராண்டி நிலை – குழு மணம்; அநாகரிக நிலை – இணை மணம்; நாகரிக நிலை – ஒருதார மணம், இதற்குத் துணையாக கள்ளக் காதல் நாயக முறையும் விபச்சாரமும். அநாகரிகத்தின் தலைக்கட்ட்த்தில் இணை மணத்துக்கும் ஒருதார மணத்துக்கும் இடையில் பெண்ணடிமைகள் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதும் பலதார மண முறையும் உள்ளன.

இந்தத் தொடரில் குறிக்க வேண்டிய முன்னேற்றம், குழு மணத்திலுள்ள பாலுறவுச் சுதந்திரம் பெண்களிடமிருந்து மேன்மேலும் பறிக்கப்படுகிறதே தவிர ஆண்களிடமிருந்து பறிக்கப்படவில்லை என்ற பிரத்யேகமான உண்மையுடன் இணைகப்பட்டுள்ளது என்பதை நமது மொத்த விளக்கமும் எடுத்துக்காட்டியிருக்கிறது. எதார்த்தத்தில் ஆண்கள் விஷயத்தில் குழு மணம் இன்று வரை இருந்து வருகிறது. சட்ட ரீதியிலும் சமுதாய ரீதியிலும் பெண்ணுக்குக் கொடிய விளைவுகளை உண்டாக்கத்தக்க அதே குற்றம் ஆணை பொறுத்தமட்டில் கௌரவமானதாகக் கருதப்படுகிறது; அதிகமாகப் போனால், அவனுடைய ஒழுக்கத்துக்கு அது அற்பமான கறை; அதை அவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறான். நம் காலத்தில் முதலாளித்துவப் பண்ட உற்பத்திமுறை பழைய பரம்பரையான பொதுமகளிர் முறையை எவ்வளவு அதிகமாக மாற்றித் தகவமைக்கிறதோ, எவ்வளவு அதிகமாக பகிரங்கமான விபச்சாரமாக மாறுகிறதோ அந்த அளவுக்கு அதன் விளைவுகள் மேன்மேலும் சீர்குலைவானவையாக இருக்கின்றன. மேலும், பெண்களை விட ஆண்களையே இது அதிகமாக சீர்குலைக்கிறது. பெண்களிடையில், விபச்சாரம் தன் வலையில் சிக்கிக் கொள்கின்ற பரிதாபத்துக்கு உரியவர்களையே தாழ்த்தி விடுகிறது. அவர்களும் பொதுவாக நம்பப் படுகின்ற அளவுக்குத் தாழ்ந்து விடவில்லை. மறு பக்கத்தில், ஆண் உலகம் முழுவதின் தன்மையையே தாழ்த்தி விடுகிறது. ஆக, பத்தில் ஒன்பது உதாரணங்களில் நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடையே உள்ள நீண்ட காலம் அநேகமாக ஆணுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் துரோகம் செய்வதற்குரிய தயாரிப்புப் பள்ளியாகவே இருக்கிறது.

நாம் ஒரு சமூகப் புரட்சியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அதில், இதுவரை இருந்துள்ள ஒருதார மணத்தின் பொருளாதார அடிப்படைகள் அனைத்தும், ஒருதார மணத்தின் பிற்சேர்க்கையான விபச்சாரத்தின் அடிப்படைகளைப் போல மறைந்துவிடுவது நிச்சயமாகும். ஒரு நபரிடம் அதாவது ஒரு ஆணிடம் கணிசமான அளவுக்குச் செல்வம் குவிந்ததிலிருந்துதான், இச்செல்வத்தை மற்ற குழந்தைகளுக்கு அல்லாமல் தன்னுடைய சொந்தக் குழந்தைகளுக்கு விட்டுச்செல்ல வேண்டும் என்ற விருப்பத்திலிருந்து தான்  ஒருதார மணம் தோன்றியது. இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு பெண் ஒருதார மணமுறையில் இருக்க வேண்டும், ஆனால் ஆணுக்கு அது அவசியமல்ல. எனவே பெண்ணுக்குரிய இந்த ஒருதார மணம் ஆணுடைய பகிரங்கமான அல்லது மறைமுகமான பலதார மணத்துக்குத் தடையாக இருக்கவில்லை. எனினும் வரப் போகின்ற சமூகப் புரட்சி, குறைந்தபட்சம் நிரந்தரமான, மரபுவழிச் செல்வத்தின் பெரும் பகுதியை – உற்பத்தி சாதனங்களை – பொதுச் சொத்தாக மாறிவிடுவதன் மூலம் வாரிசு முறை பற்றிய கவலைகளை யெல்லாம் அதிகமாகக் குறைத்து விடும். பொருளாதரக் காரணங்களிலிருந்து ஒருதார மணம் தோன்றியதால், இக்காரணங்கள் மறைந்து விடுகின்ற பொழுது அதுவும் மறைந்து விடுமா?

அது மறைவதற்கு பதிலாக நடைமுறையில் முழுமையாக ஈடேறுதல் ஆரம்பமாகும் என்று பதில் கூறினால் அது தவறாகாது. ஏனென்றால் உற்பத்தி சாதனங்களை பொது உடைமையாக மாற்றும் பொழுது கூலியுழைப்பும் பாட்டாளி வர்க்கமும் மறைந்து விடுகின்றன; அத்துடன் குறிப்பிட்ட – புள்ளிவிபரப்படி கணக்கிடத்தக்க – எண்ணிக்கையிள்ள பெண்கள் பணத்திற்காக தம்மை விற்க வேண்டிய அவசியமும் மறைந்து விடுகிறது. விபசாரம் நலிந்து போவதற்கு பதிலாக – ஆணுக்கும் சேர்த்து – முடிவில் எதார்த்தமாகிறது.

எப்படி இருந்தாலும், ஆணின் நிலைமை கணிசமாக மாறி விடுகிறது. ஆனால் பெண்ணின் நிலைமை, எல்லாப் பெண்களின் நிலைமை முக்கியமான மாற்றங்களுக்கு உள்ளாகிறது. உற்பத்திச் சாதனங்கள் பொதுசொத்தாக மாற்றப்படுகின்ற பொழுது தனிப்பட்ட குடும்பம் சமுதாயத்தின் பொருளாதார அலகாக இருப்பதும் முடிவடைகிறது. தனிப்பட்ட வீட்டு நிர்வாகம் சமூகத் தொழிலாக மாற்றப்படுகிறது. குழந்தைகள் பராமரிப்பும் கல்வியும் பொது விவகாரம் ஆகி விடுகின்றன. எல்லாக் குழந்தைகளையும் – அவர்கள் மண உறவில் பிறந்தவர்களாயினும் சரி மண உறவுக்கு வெளியே பிறந்தவர்களாயினும் சரி – சமுதாயம் சமமாக கவனித்துக் கொள்கிறது. எனவே விளைவுகளைப் பற்றிய கவலை – இதுவே பெண் தான் காதலிக்கின்ற ஒருவனுக்குத் தன்னை சுதந்திரமாக கொடுப்பதை தடுக்கின்ற தார்மிக, பொருளாதார ரீதியான, மிகவும் முக்கியமான சமூகக் காரணியாகும் – மறைந்து விடும். கட்டுப்படுத்தப்படாத உடலுறவு மேன்மேலும் படிப்படியாக அதிகரிப்பதற்கு இது காரணமாகாதா? அத்துடன் பெண்ணின் கற்பைப் பற்றியும் மானக்கேட்டைப் பற்றியும் பொது மக்கள் கருத்து முன்னைவிட அதிக நயமான முறையில் மேலோங்குவதற்கு இது காரணமாகாதா? முடிவாக, நவீன உலகில் ஒருதார மணமும் விபசாராமும்  எதிர்மறைகளாக இருப்பினும் அவை ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாத எதிர்மறைகளாக, அதே சமுதாயத்தின் இரண்டு துருவங்களாக இருப்பதை நாம் பார்க்கவில்லையா? தன்னுடன் ஒருதார மணத்தையும் படுகுழிக்குள் இழுத்துச் செல்லாமல் விபசாரம் மறைந்து விட முடியுமா?

இங்கே ஒரு புதிய காரணி செயல்படத் தொடங்குகிறது. அது ஒருதார மணம் வளர்ந்த காலத்தில் – அதிகபட்சமாக சொன்னால் – கருவடிவத்தில் இருந்தது; அதுதான் தனிப்பட்ட காதல். மத்திய காலத்துக்கு முன்னால் தனிப்பட்ட காதல் என்று எதுவும் இருக்கவில்லை. அழகு, நெருக்கமான பழக்கம், ஒத்த விருப்பங்கள் முதலியவை ஆண், பெண் இடையில் பாலுறவு வேட்கையை ஏற்படுத்தின; யாரிடம் இந்த நெருக்கமான உறவில் ஈடுபடுவது என்ற கேள்வி குறித்து ஆணோ, பெண்ணோ முற்றிலும் அலட்சியமாக இருக்கவில்லை என்பவை வெளிப்படையாகும். ஆனால் நம் காலத்திய காதலுக்கும் இதற்கும் தூரம் அதிகம். பண்டைக்காலம் முழுவதும் பெற்றோர்கள் தான் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். இரு தரப்பினரும் மறுத்துப் பேசாமல் உடன்பட்டனர். பண்டைக்காலத்தில் இருந்த அற்பமான கணவன், மனைவி காதல் கூட அகநிலை விருப்பமல்ல, புறநிலைக் கடமையே. அது திருமணத்துக்குக் காரணமல்ல, மண வாழ்க்கையின் தொடர்புப் பொருளே. நவீன கால அர்த்தத்தைக் கொண்ட காதல் உறவுகள் பண்டைக்காலத்தில் அதிகார பூர்வமான சமுதாயத்துக்கு வெளியில் மட்டுமே நிகழ்ந்தன. எந்த இடையர்களின் காதல் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை பற்றி தியோக்ரிடசும் மோஸ்கசும் பாடினார்களோ அல்லது லோங்கசும் எழுதிய டாஃப்னிசும் குளோவும் என்ற காவியம் பாடியதோ அவர்கள் வெறும் அடிமைகளே; சுதந்திரமான குடிமகனின் துறையான அரசு விவகாரங்களில் அவர்களுகுப் பங்கு இல்லை. எனினும் அடிமைகளிடம் இருப்பதைத் தவிர, காதல் உறவுகள் நலிந்து கொண்டிருக்கின்ற பண்டை உலகின் சீர்குலைவுப் பொருட்களாகத்தான் காணப்படுகின்றன. அந்தக் காதல் உறவுகளும் அதிகாரப்பூர்வமான சமுதாயத்துக்கு வெளியிலிருக்கின்ற பெண்களுடந்தான், அதாவது பொதுமகளிருடன் தான், அதாவது அந்நியப் பெண்கள் அல்லது சுதந்திரமளிக்கப்பட்ட பெண்களுடன் தான் இருந்தன. ஏதன்சில் அதன் வீழ்ச்சிக் கட்டத்தில் இவை நடந்தன. ரோமாபுடியில், சக்கரவர்த்திகளின் காலத்தில் இவை நடந்தன. சுதந்திரமான ஆண், பெண் குடிமக்களிடையில் காதல் உறவுகள் கள்ளக் காதல் நாயக வடிவத்தில் தான் நடைபெற்றன. நம் கால அர்த்தத்தில் காதல் என்பது பண்டைக்கால மூலச்சிறப்பான மரபைச் சேர்ந்த காதல் கவிஞராகிய வயதான அனாக்ரியோனுக்கு ஒரு பொருட்டல்ல. காதலிக்கப்படுகின்ற நபர் பெண்ணாகவோ, ஆணாகவோ இருக்க வேண்டும் என்பது அவருக்குச் சிறிதும் முக்கியமில்லை.

நமது காதல் வெறும் பாலுறவு வேட்கையிலிருந்து, பண்டைக்காலத்து மக்களின் erosஇலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது. முதலாவதாக, அது பரஸ்பரக் காதலாக இருக்க வேண்டும். இந்த அம்சத்தில் ஆணுக்குச் சமமாகப் பெண் இருக்கிறாள்.  பண்டைக் காலத்தில் பாலுறவு வேட்கையின் போது எல்லா சமயங்களிலும் பெண்ணின் அனுமதியைப் பெறவில்லை. இரண்டாவதாக, இரு தரப்பினரும் அன்புடையவர் அருகில் இல்லாததை அல்லது பிரிவைப் பெரிய – எல்லாவற்றிலும் பெரியதாக இல்லாவிட்டாலும் – துன்பம் என்று கருதுகின்ற பொழுதுதான் காதல் தீவிரமும் நிரந்தரமும் பெற்று விளங்குகிறது; அவர்கள் ஒருவரையொருவர் அடைவதற்கு மாபெரும் அபாயங்களைச் சந்திக்கிறார்கள், உயிரைப் பணயம் வைப்பதற்குக் கூட முன்வருகிறார்கள். அதிகமாகச் சொல்வதென்றால், பண்டைக்காலத்தில் இது கள்ளக் காதலில்தான் நடைபெற்றது. கடைசியாக, பாலுறவை மதிப்பிடுவதற்கு ஒரு புதிய தார்மீக அளவுகோல் கிடைக்கிறது. பாலுறவு சட்டபூர்வமானதா, இல்லையா என்று மட்டும் கேட்கப்படவில்லை; அது பரஸ்பரக் காதலிலே விளைந்ததா, அல்லவா என்றும் கேட்கப்படுகிறது. நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளித்துவ நடைமுறையில் இதர தார்மிக அளவுகோலுகளுக்கு ஏற்படுவதைக் விட மேலான கதி இதற்கு ஏற்படவில்லை – இதை அப்படியே புறக்கணித்து விடுகிறார்கள். அதே சமயத்தில், அதன் கதி மோசமும் அல்ல. இதரவற்றைப் போல அது தத்துவரீதியில், ஏட்டளவில் அங்கீகரிக்கப்படுகிறது. இதற்கு மேல் தற்சமயம் எதிர்பார்க்க முடியாதுதான்.

பண்டைக்காலம் காதலின் தொடக்கத்துடன் எங்கே முடிந்ததோ அதில், அதாவது கள்ளக் காதலுடன் மத்திய காலம் தொடங்கியது. நாம் வீரக் காதலை ஏற்கெனவே கவனித்தோம்; அக்காதல் அருணோதய கீதங்களைப் படைத்தது. இப்படிப்பட்ட காதலின் நோக்கம் மண வாழ்க்கையை முறிப்பதே; இதற்கும் மண வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் சக்தியுள்ள காதலுக்கும் இடையில் பெரும் பள்ளம் இருக்கிறது. வீர யுகம் இந்தப் பள்ளத்தைக்  கடப்பதற்கு முழுமையான பாலம் அமைக்கத் தவறியது. நாம் விளையாட்டுத்தனமான லத்தீன்காரர்களை விட்டு அறப்பண்புடைய ஜெர்மானியர்களிடம் வருகின்ற பொழுது கூட எதைப் பார்க்கிறோம்? நிபலுங்குகளைப் பற்றிய பாடலில் கிரீம்ஹில்ட் என்பவள் ஸிக்ஃபிரிட் தன்னைக் காதலிப்பதைப் போல சிறிதும் குறையாமல் அவனை இரகசியமாகக் காதலிக்கிறாள், ஆனால் தன்னை ஒரு போர்வீரனுக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருப்பதாக குந்தர் தெரிவித்த போது (அந்தப் போர்வீரனுடைய பெயரை குந்தர் தெரிவிக்கவில்லை) அதற்குப் பின்வருமாறு பதிலளிக்கிறாள்:

“தாங்கள் என்னைக் கேட்க வேண்டிய அவசியமில்லை; நான் உங்கள் கட்டளைப்படியே என்றும் நடப்பேன்; பிரபுவே, தாங்கள் என் கணவனாக யாரைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அவரையே நான் மணம் செய்து கொள்வேன்.” [நிபலுங்குகளைப் பற்றிய பாடல், பத்தாம் பாடல்.]

இந்த விஷயத்தில் அவர் அவளுடைய காதலையும் கணக்கிலெடுத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் அவளுக்குச் சிறிதும் ஏற்படவில்லை. குந்தர் புரூன்ஹில்டைக் கண்ணால் பார்க்காமலேயே அவளைத் திருமணம் செய்து கொள்ள முயல்கிறான். அதே போல ஏட்ஸெலும் கிரீம்ஹில்டை மணக்க முயல்கிறான்.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

 1. மாமேதை ஏங்கல்ஸ்.
 2. 1884 ல் எழுதிய முன்னுரை
 3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
 4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
 5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
 6. குடும்பம் – 1
 7. குடும்பம் – 2
 8. குடும்பம் – 3
 9. குடும்பம் – 4
 10. குடும்பம் – 5
 11. குடும்பம் – 6

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

2 thoughts on “குடும்பம் 8

 1. எழுத்து எல்லாம் தமிழ்ல தான் இருக்கு… ஆனாலும் படிச்சா புரிய மாட்டுக்கு…🤔

 2. ஆம் நண்பரே,

  அப்படி ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும் தவிர்க்க முடியாது. ஏனென்றால், இது ஆழமான விதயங்களைப் பேசுகிறது. என்றாலும் முயற்சி செய்யுங்கள். குறிப்பாக எந்த இடத்தில் உங்களுக்கு புரிதலில் சிக்கல் ஏற்படுகிறது என தெரிவித்தால், அதை அவிழ்ப்பதற்கு நான் உதவுகிறேன்.

  நன்றி.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s